Saturday, January 30, 2016

கோத்தபாய, சிங்க ரத்தம் அமைப்பின் முடிக்குரிய இளவரசர் – உபுல் ஜோசப் பெர்னாண்டோ வின் அதிர்ச்சி தகவல்

தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாய ராஜபக்‌ஷவைக் கொண்டு வருவதற்கான ஆபத்தான வேலைத் திட்டமொன்று தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.

மிக விரைவில் கோத்தபாய, சிங்க ரத்தம் அமைப்பின் முடிக்குரிய இளவரசனாக மாறுவார் என சிலோன் ருடே இதழில் உபுல் ஜோசப் பெர்னாண்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தலதா மாளிகைக்கு எதிராக அண்மையில் சிங்க லே அமைப்பால் வழிபாட்டு நிகழ்வொன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஏந்திய தேசியக் கொடியில் நாட்டின் சிறுபான்மை இனத்தவரைக் குறிக்கும் குறியீடுகள் மறைக்கப்பட்டிருந்தன என ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன.

இதற்கு முன்னர், தேசியக் கொடியில் சிறுபான்மை இனத்தவர்களின் அடையாளங்களை மறைத்த சம்பவமொன்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ, ஊழல் மோசடி ஆணைக்குழுவின் முன்னால் நிறுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுபான்மை இனத்தவர்களைப் புறக்கணிக்கும் வகையில் தாம் ஏந்திய தேசியக் கொடிகளில் அவர்களது அடையாளங்களை மறைத்தனர்.

இது சிங்க ரத்தம் அமைப்பின் கொடி என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்றது.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடியைத் தமது கைகளில் ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னால் கோத்தபாய உரை நிகழ்த்தியிருந்தார். உருமாற்றப்பட்ட தேசியக் கொடி விவகாரம் தொடர்பாக கறுவாத்தோட்டம் காவற்துறையினர் கொழும்பு பிரதம நீதவானிடம் முறையிட்டனர்.

குறித்த சர்ச்சைக்குரிய தேசியக் கொடி தொடர்பான காணொளியை சமர்ப்பிக்குமாறு பிரதம நீதவான் காவற்துறையிடம் உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குரிய தேசியக் கொடியை எதிர்த்து பொதுமக்கள் கிளர்ந்தெழுந்த போதிலும் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடியை தயாரித்தமை மற்றும் இவ்வாறான கொடியை ஏந்தியமை போன்ற குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

சர்ச்சைக்குரிய தேசியக் கொடி தொடர்பாக கறுவாத்தோட்டம் காவற்துறையினரால் பிரதம நீதிவானிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடும் இன்னமும் விசாரணை செய்யப்படவில்லை.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடி மீண்டும் தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மை இனங்களின் அடையாளங்கள் நீக்கப்பட்ட தேசியக்கொடி மீண்டும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதானது கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தெளிவாகிறது.

ஆகவே, கோத்தபாயவுக்கும் சிங்க ரத்தம் அமைப்பிற்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில், கோத்தபாய மற்றும் பொதுபலசேனா அமைப்பிற்கும் இடையிலான தொடர்பானது உறுதிப்படுத்தப்பட்டது.

பொதுபல சேனாவால் ஒழுங்குபடுத்தப்பட்டு அதன் தலைவராக இருந்த புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வொன்றிற்கு கோத்தபாய ராஜபக்‌ஷ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டமையானது கோத்தாவுக்கும் பொதுபல சேனவுக்கும் இடையில் எவ்வாறானதொரு தொடர்பு காணப்பட்டது என்பதற்கு போதியளவு சான்று பகர்கிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ, பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினார்.

இவர் பொதுபல சேனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக களுத்துறையில் இடம்பெற்ற சமூக மோதல்களில் ஈடுபட்ட பொதுபல சேனாவைப் பாதுகாத்தார்.

மஹிந்தவின் கூட்டணியான ஹெல உறுமயவிற்கு பௌத்த சிங்கள சமூகத்திற்கு மத்தியில் காணப்பட்ட ஆதரவு குறைந்துள்ளதாகவும், இதனால் பொதுபல சேனாவிற்கு ஆதரவளித்து அதன் மூலம் பௌத்த சிங்களவர்களின் ஆதரவைத் தனதாக்கிக் கொள்ளலாம் எனவும் கோத்தபாய கருதினார்.

அந்த வேளையில், பௌத்த சிங்களவர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக கோத்தபாய புகழாரம் பாடினார்.

இவரது இந்தப் புகழாரமே மஹிந்த அரசாங்கத்திடமிருந்து ஹெல உறுமய விலகிக் கொள்ளத் தீர்மானித்ததற்கான காரணமாகும்.

2015 ஜனாதிபதி தேர்தலில் பௌத்த சிங்களவர்களின் பலத்தை மஹிந்தவிற்கு ஆதரவாகப் பயன்படுத்த முடியும் என கோத்தபாய திட்டமிட்ட போதிலும், மைத்திரியின் எதிரணியானது கோத்தாவின் கனவைச் சிதைத்தது.

கோத்தபாய தனது இலக்கை இன்னமும் கைவிடவில்லை என்பதற்கு சிங்க ரத்தம் அமைப்பின் எழுச்சி சான்றாக அமைகிறது.

மஹிந்தவிற்குப் பின்னர் சிறிலங்காவின் தலைவராகத் தான் வரவேண்டும் என்பதற்கான ஒரு அடித்தளமாக கோத்தபாயவால் பொதுபல சேனா வளர்க்கப்பட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து புதியதொரு அரசியற் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் கோத்தபாய உறுதியாக நிற்கிறார்.

ஆனால் கோத்தபாயவின் நிலைப்பாட்டிற்கு மஹிந்த ஆதரவளிக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகத் தான் ஒரு பலமான அரசியல்வாதியாக உருவாகுவது மிகவும் கடினமானது என்பது கோத்தபாயவுக்கு நன்கு தெரியும்.

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய கட்சியில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த சார்பு அணியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு கோத்தபாய திட்டமிடலாம்.

தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம், மகிந்த மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

கோத்தபாய போன்றவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

இவர் மைத்திரி மற்றும் ரணிலுடன் தனித்தனியாக மிகவும் இரகசியமான முறையில் தொடர்பைப் பேணிவருகிறார்.

இவ்விரு தலைவர்களும் கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கான அனுமதியை வழங்கமாட்டார்கள்.

தனது கைதைத் தடுக்கும் முகமாக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைக் கையளித்த முதலாவது நபர் கோத்தபாய ஆவார்.

இது தொடர்பாக முதலில் ரணில் விசாரணை செய்த போதிலும், பின்னர் கோத்தாவைக் கைது செய்வது தொடர்பாக ரணில் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வென்றெடுத்த போர்க் கதாநாயகனான கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கு ஒருபோதும் தான் அனுமதியளியேன் என நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

கோத்தபாயவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரியதொரு சர்ச்சையாக அவன்கார்ட் ஆயுத விவகாரம் அமைந்துள்ளது.

கோத்தபாய பாதுகாப்புச் செயலராகக் கடமையாற்றியபோது மேலதிக பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த தமயந்தி ஜெயரட்னவிடம் அவன்கார்ட் ஆயுத விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய முற்பட்ட போதிலும் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

ஊழல் மோசடி ஆணைக்குழுவானது இவரைக் கைது செய்ய முற்பட்ட தருணத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவன்கார்ட் உடன்பாடானது கோத்தபாயவின் கட்டளையில் கீழேயே தமயந்தியால் நிறைவேற்றப்பட்டது.

கோத்தபாயவைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மேற்கூறிய விடயங்கள் தெளிவுபடுத்துகின்றன.

தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாயவைக் கொண்டு வருவதற்கான பாரியதொரு ஆபத்தான நிகழ்ச்சி நிரல் தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அமைப்பால் 2015 ஏப்ரலில் உருமாற்றப்பட்ட தேசியக் கொடி ஏந்தப்பட்டதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

தற்போது இது ஒரு அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. மிக விரைவில் கோத்தபாய, சிங்க லே அமைப்பின் முடிக்குரிய இளவரசராக மாறுவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com