ஐ.எஸ்.-ல் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளியாக அறிவிப்பு.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் திங்களன்று வெளியிடப்படுகிறது.
பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவர் தரீனா ஷகீல் (26). கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 2 வயதில் மகன் உள்ளார். கடந்த 2014 அக்டோபரில் துருக்கிக்கு சுற்றுலா செல்வதாக கைக்குழந்தையுடன் தரீனா ஷகீல் புறப்பட்டார். அங்கிருந்து சிரியா எல்லையில் உள்ள காஸியன்டப் நகருக்கு சென்றார்.
அவரையும் அவரது குழந்தையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள விடுதியில் தரீனா தங்க வைக்கப்பட்டார். சுமார் 30 பெண்கள் அந்த விடுதியில் இருந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மனைவிகளக மாற அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது.
அந்த காலகட்டத்தில் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் தரீனாவும் அவரது குழந்தையும் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கொடூரமாக இருந்ததால் அங்கிருந்து தப்பி 2015 ஜனவரியில் அவர் பிரிட்டனுக்கு திரும்பினார். அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் மீதான வழக்கு பர்மிங்ஹாம் நீதிமன்றத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
ஐ.எஸ். அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்றது நான் செய்த மிகப்பெரிய தவறு. ட்விட்டரில் என்னை தொடர்பு கொண்ட ஐ.எஸ். தீவிரவாதி, நான் லண்டனில் வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு செல்ல மாட்டேன் என்றும் சிரியாவில் ஜிகாத் போரில் இணையுமாறும் அறிவுறுத்தினார்.
அதை நம்பி சிரியாவுக்கு சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் விபரீதம் புரிந்தது. ஒரு டாக்ஸி டிரைவருக்கு அதிக பணம் கொடுத்து துருக்கி எல்லைக்குள் நுழைந்து அங்கிருந்து பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், தரீனா 3 மாதங்கள் சிரியாவில் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணையவே கைக்குழந்தையுடன் அவர் சிரியா சென்றிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்கிறேன். அவருக்கான தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த சுமார் 56 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களின் நடமாட்டம் குறித்து அந்த நாட்டு உளவு அமைப்பு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
0 comments :
Post a Comment