Sunday, May 17, 2015

பாரம்பரியத்திற்குள் இருக்கும் போதை, ஆக்குமா? அழிக்குமா?

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது.

பாக்கு, வெத்திலை வைத்து கொடுத்து வரவேற்பது தமிழினத்தின் பண்டைய பண்பாடும், காலாசாரப்படிமம் ஆகும். இது இலட்சுமி கடாச்சமானது என்றும், தெய்வீகமானது என்றும் கருதப்பட்டது. வாக்குச் சொல்பவர்கள் கூட பாக்கு உருட்டியும், வெத்திலை நாடி பார்த்தும் குறி சொன்னார்கள். இப்படி இருந்த பாக்கு இன்று போக்குமாறி, வாக்குமாறி இனத்தையே பலவீனப்படுத்தும் தாக்கு பொருளாக மாறியுள்ளது.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. இதை அரசோ, குற்றத்தடுப்புப்பிரிவோ, அரசவதிகாரிகளோ இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? சமூக ஆவலர்கள் இது குறித்து விசனப்பட்டு, புகார் செய்தாலும் இதைக் அரசு கண்டு கொள்ளாதிருப்பதும், தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்பதும், பெற்றோர், சமூக ஆவலர்கள்,காலசாரக்காவலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பல வேறுபட்ட வகுப்பினர்கள் விசனத்துக்குள்ளாகி உள்ளார்கள்.

அண்மையில் இந்த மாவாப்பாக்கை மல்லாகத்திலுள்ள உயர்தரவகுப்பில் பயிலும் இருமாணவர்கள் பாவித்தமை நேரடியாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மாணவசமூகத்தினுள் இளைஞர், யுவதிகள் மத்தியில் இப்படிப்பட்ட போதைப்பாக்கு வகைகளைப் பாவிக்கும் நிலை சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் வருகிறது. இது எப்படி வருகிறது? இதன்பின்னணி என்ன? எதிர்கால இலக்கு என்ன? என்பது பற்றி ஆராயவுள்ளோம்.

பாக்கு

பாக்கை சிங்கப்பூர், சில மத்தியகிழக்கு நாடுகள் போதைப் பொருளாகவே பார்க்கின்றனர். விமானநிலையங்களில் பாக்குடன் பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கையாகவே போதைப் பொருள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இது தமிழ், சிங்கள மக்களிடையோ சர்வசாதராணமாக பாவிக்கும் பாவனைப் பொருளாகவே அன்று இருந்தது. வல்லுவம் என்ற சிறுபையில் பாக்கு வெத்திலை சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு திரிந்தார்கள். அதில் கொட்டைப்பாக்கு நாறல்பாக்கு எனபலவகையில் பதப்படுத்தி சீவலாக்கிப பயன்படுத்துவார்கள். பல்லும்போனவர்களும் பாக்கை சிறு உரலில் இடித்துத் தூளாக்கிப் பயன்படுத்துவார்கள். இன்று சூவீங்கள் எனும் இறப்பறை சப்புவதுபோல் அன்று பாக்கு வெத்திலை என்பது பொழுதுபோக்காகப் பொருளாக சமூகவிணைப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இது தேனீர்இ காப்பி போன்ற சமூகதொடர்பு உண்டிகள் போல் இதுவும் பயன்படுத்தப்பட்டது. பழக்கமில்லாதவர்கள் இதை உண்ணும் போது தலைசுற்றும். இமமதில் சிறு போதைத்தன்மை இருக்கிறது என்பதற்கு இந்த உதாரணம் போதுமானது.

போதைப்பொருட்கள்

போதை என்று பார்க்கும் போது தேனீர், காப்பி போன்றவைகளும் போதைப் பொருக்களே. போதையின் அளவை, தாக்கு வீரியத்தை வைத்தே போதைவஸ்து எது என்றும் மென்போதைப் பொருள் எது என்பதும் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதிறன் குறைந்த தங்குதன்மையற்ற காப்பி ,தேனீர் போன்றன ஊக்கம் தரும் சமூகப்பாவனைப் பொருட்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதை ஏற்றும், தங்கிவாழப்ப்பண்ணும் பொருக்களான கஞ்சா ,அபின் ,கரோயின், கொக்கோயின் போன்றன தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களாகக் கொள்ளப்பட்டன. இப்போதைப் பொருட்கள் மனிதனை, மனிதமூளையை தாக்கு தங்கிவாழச் செய்வதால் இதை தடைசெய்யப்பட்டன.

வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து எம்மை தம்மில் தங்கிவாழப்பண்ணினான். இதில் ஒருவடிவமே தேயிலை, காப்பி அறிமுகமாக இருந்தது. எமக்கு அதைப் பழக்கி, எமக்கே விற்றுப் பணம் சம்பாதித்தான். இதனால் பாக்கின் பயன்பாடும் குறையத்தொடங்கியது. இதை புதுமுறையில் உயிர்பிக்க பீடா என்று இதேபாக்கை சீனி, வாசனைப் பொருட்களுடன் கலந்து விற்கத் தொடங்கினார்கள். இது இளைஞர் யுவதிகள் மத்தியில் ஓரளவு வளர்ந்தாலும் அங்கிகரிக்கப்பட்டதும் சமூகவந்தஸ்துப் பெற்ற கோப்பி தேனீருடன் போட்டி போட முடியவில்லை. இன்று கோப்பி தேனீருக்கென்றே பல கடைகள் உருவாயிருப்பதை அனைவரும் அறிவர்.

போதைப்வஸ்துக்கள் மனிதனை அதில் முழுமைகாகத் தங்கி வாழப்பண்ணுகிறது என்பதுடன் அழித்தும் விடுகிறது. இதனால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையாளர்களையும் விற்பனையாளர்களையும் தண்டிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படடுத்தப்பட்டது. வன்போதைப் பொருட்கள் பாவனை திறனற்ற சமூகத்தை உருவாக்க வழிகோலும் என்பது திண்ணம். உலகிலேயே தடைசெய்யப்பட்ட வன்போதைப் பொருட்கள் சமூகமயப்படுத்துவது அடிப்படையில் தமிழினத்தை அழிக்கும் ஒருசெயலாகவே பார்க்கப்படவேண்டும். இது ஒரினத்தின் அத்திவாரத்தை ஆணிவேரை பிடுங்குவதாக அமையும். இளையவர்களே ஒரினத்தின் எதிர்காலம். இவர்கள் போதையில் தங்கி வாழ்ந்தால் சமூகம் கட்டுப்பாடு இழந்து வன்செயல்களைத் தொடர்ந்து அறிவிலிகளாக, வல்லுறவாளர்களாக வாழத்தொடங்குவார்கள்.

இப்பாக்கப் போதைப் பொருளை யார்விற்பனை செய்கிறார்கள்? எப்படி நாட்டுக்குள் நுளைகிறது? என்ற கேள்விகளுக்கு விடை அரச அனுமதியுடனே இவை புளக்கத்துக்கு வருகிறது என்பதாகும். வன்போதைப் பொருக்களை பாக்கு என்ற சமூகவந்தஸ்துப் பெற்ற சப்புபொருளை போதைப் பொருட்களுடன் கலந்து இராணுவத்தினூடு இலவசமாக முக்கியமாக இளைஞர் யுவதிகளைக் குறிவைத்தே அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகிறது. சுயமாகச் சிந்திக்கும் விவேகமுள்ள இளைஞர்களே நாட்டின் நாடி நரம்பாகவும் இனத்தின் காப்பரண்களாகவும் அமைகிறார்கள். இக்காப்பரண்களைச் சிதைப்பதன் ஊடாக ஒரு இனத்தையே அழித்து புரட்சி, போராட்டம் என்ற சொற்களையே அர்த்தமற்றதாக்கி விடலாம் என்பதில் அரசு குறியாக உள்ளது. இப்போதைவஸ்துக்களால் பாலியல் வல்லுறவுகள், விபச்சாரம், சுயசிந்தனை அழிப்பு, இனவேற்றுமை உடைப்பு, தேசிய அறுப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வன்போதைப் பொருட்கள் இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கப் பெறும் போது அதன் பாவனை வீதம் அதிகரிப்பதற்கும் வன்செயல்கள் உயர்வதற்கும் ஏதுவாக அமைகியும்.

அரசின் சாதகமான முயற்சியோ, உதவியோ கிடைக்காத பட்சத்தில் இதைத்தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். நாட்டின் சட்டம் என்பது கோட்டில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் காலாசாரச்சட்டம் என்பது மனங்களில் உறுதியாக்கப்படுவது. இதனால் இப்போதை வஸ்துக்கள் பற்றிய விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும். இதன் தீமைகளை எடுத்துரைப்பதும், இப்பானையாளர்களை விற்பனையாளர்களை சமூகவிரோதியாக பார்ப்பதற்கு தமிழ்சமூகத்தை உந்துவதும் இப்படியான வன்போதைப் பொருள் பாவனையை முளையிலேயே கிள்ளுவதற்கான யோசனைகளாகும். சட்டத்தால் முடியாதவற்றை சில காலாசாரங்கள் திறமையாகவே செய்யும்.

ஒருவினத்தை அழிக்கவேண்டுமானால் அவ்வினத்தின் மொழி,கலை, கலாசாரம், ஆழ்நிலம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றை அழிப்பதனூடாகவே மிக இலகுவாக இனவழிப்பை நிறைவேற்றலாம். இதில் இளையவர்களை சுயசிந்தனையற்றவர்களாக உருவாக்கும் போது ஒரினமே தனக்குத் தானே தீயிட்டுக் கொள்கிறது. இதில் இந்த மாவா பாக்கு பெரும்பங்கை ஆற்றுகிறது. காலாசாரம், கல்வி, பொருளாதாரம் என்பற்றை ஒரேநேரத்தில் குறிவைத்துத் தாக்குகிறது. இனவிடுதலை, தேசியம், போராட்டம், விடுதலை பற்றி வாயறக்கத்தும் பெருமக்களே! இப்போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதும் போராட்டமே என்பதை அறியுங்கள். ஆயுதம் எடுத்துப் போராடுவதும், கூட்டங்கள் போடுவதும், மேடையில் பேசுவதும், ஊர்வலங்கள் நடத்துவது மட்டல்ல போராட்டம். ஒரினத்தை அதன் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் போராடுவதும் மனிதநேயத்துடன் கூடி இரட்டிப்பான இனவிடுதலைப் போராட்டம் என்பதை உணர்க. தேசியம் சுயநிர்ணயம் பேசுபவர்கள் அடிப்படையில் சுயமாகச் சிந்திக்க முடியாத மக்களிடம் அது குறித்து எப்படிப் பேசுவீர்கள். சுயமாகச் சிந்திக்கும் மனிதனால் மட்டுமே தன்னினம், மக்கள், தன்னிலம், தேசம் என்று சிந்திக்க முடியும். சுயநினைவுடன் ஆரோக்கியமாக சிந்திக்கும் மனிதனாலும் மக்களாலுமே ஒரு இனவிடுதலையை வென்றேடுக்க முடியும். புலத்தில் இருந்து சுயநலனுக்காக போராட்டம், இனம், சுயநிர்ணயம் என்று பேசுபவர்கள் அம்மண்ணின் மக்களின் நிலையை சிந்திக்கவே மாட்டார்கள். ஏதாவது சாட்டுகச் சொல்லிப் பணம் பறிப்பதே குறியாக இருக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியே சுயநலன்களின் விஸ்வரூபமே என்பதை அறிக.

எம்மினத்தை ஆரோக்கியமாகவும், கல்வி, கேள்வி, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடல் உளநலன்களுடன் வாழவைத்தாலே போதும் விடுதலை, சுதந்திரம் என்பது தானாகவே வந்துசேரும். தமிழ்தேசியம் தானாகவே காப்பாற்றப்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்குத்தான். சுயம்பன் கொடியும் பணம் சுருட்டலே நடப்பு. எம்மினம் சிந்திக்குமா? இதற்கான முதலடியை எடுத்து வைக்குமா? கால் முழுமையாக முறிவதற்குமுன் பத்தைக் கட்டிவிடுங்கள். சமூகம் தானாகவே நடக்கும்.

Read more...

Saturday, May 16, 2015

மலைகத்தில் ஜனநாய புரட்சிக்கு ஆயத்தம்!

20 ஆவது திருத்தச்சட்டம் மலையக மக்களை பாதிக்குமாயின் அதற்காக மலையகத்தில் 'ஜனநாயக புரட்சயை' ஏற்படுத்தவும் சாத்வீக ரீதியிலான போராட்டங்களை அண்ணல் மகாத்மாகாந்தி அமரர் சௌமியமூரத்தி தொண்டமான் வழியில் மேற்கொள்ள சௌமிய இளைஞர் நிதியம் முன்வந்துள்ளது. இதன் முதற் கட்டமாக வரும் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரஅடையாள சத்தியாகிரகம் மௌனவிரதத்துடன் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்தூல் அனுஸ்டிக்கவும் இம்மாதம் 30 ம் திகதிக்கு முன்பு நல்ல முடிவு கிடைக்காவிடின் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் சாகும் வரையிலான சத்தியாகிரகத்தை அந்தோனிமுத்துவின் தலைமையிலான பலர் மேற்கொள்ள உள்ளதாக நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கண்டி பன்விலை மாவட்டத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சொல்லால் மாத்திரமின்றி செயலாலும் இந்த ஜனநாய புரட்சியை நடாத்தி மலையக மண்ணில் ஜனநாயத்தை நிலைநாட்ட தமது அமைப்பு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதியம் 19ம் திகதி நிகழ்வு எட்டியாந்தோட்டையிலும் ஜுன் முதல் ஆரம்பமாகும் நிகழ்வு பன்விலையிலும் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பும் காலனித்துவ காலந்தொட்டு மலையக மக்களது உரிமைகளுக்காக உருளவள்ளி போராட்டம் , அல்கொல்லை வலையல் போராட்டம் போன்ற பல போராட்டங்களை நடாத்தி வெற்றிக்கொண்ட எட்டியாந்தோட்டையில் 19ம் திகதி ஆரம்பிக்கப்புடும் போராட்டம் ஜுன் மாதம் மலையக மெங்கும் மட்டுமின்றி தமிழகத்திலும் சர்வதேச சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தினதும் பல சிவில் அமைப்புக்களினது ஒத்துழைப்புடன் உலகின் பல பகுதியிலும் ஆதரவு அலைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Read more...

Friday, May 15, 2015

„சல்லி' மீன்களின் கண்ணிற் படுவது மலம் மட்டுமே! - ஜேர்மனிலிருந்து லோகநாதன் -

கடலே பாலாக மாறினாலும் பால் அருந்தாமல் மலம், புழு, பூச்சிகளையே தம் விருப்பமிக்க உணவாகத் தேடும் சில மீன் வகைகளுண்டு. அதில் தனித்துவமானது சல்லி மீன்கள். இவை வேறு நல்ல இரை கிடைத்தாலும் கண்டுகொள்வதில்லை. இந்தச் சுவை தான் அவற்றின் தேர்வுச் சுவை. மனிதர் மலம் கழிக்கின்ற கரையோரங்களில் எல்லாம் இவற்றின் கண்ணோட்டமும் ஆரவாரமான புழக்கமும் அதிகமாகக் காணப்படும்.

பாற் கடல் போன்ற ஊடகவியல் துறையிலும் குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறையில் சல்லி மீன் குணவியல்பில் ஓரிரு சில்லறைகள் உலாவருகின்றன. ஊடகவியல் மக்களை முன் நகர்த்தும் ஒரு அரிய பணி, அரிய இயந்திரம்! ஆரோக்கியமான, தேர்ந்த செய்திகள், கட்டுரைகள், முன்மாதிரிகளை மக்களிடம் கொண்டு சென்று மக்களைப் பக்குவமாகப், பண்பாக வளர்க்கவேண்டிய தார்மீகப் பொறுப்புக்குரிய துறை ஊடகத்துறை.

நல்ல பிரஜைகளாகத் தம் பிள்ளைகள் வளர வேண்டுமென விரும்பும் பொறுப்புள்ள தாயும் தந்ததையும் பிள்ளைகளை எது அணுகவேண்டும் எது அணுகக்கூடாது என்று எண்ணுவார்களோ அதே உணர்வும் பொறுப்பும் பத்திரிகைகள், இணையத்தளங்கள், தொலைக்காட்சி, சினிமா . . . எனும் அத்தனைக்கும் இருந்தே ஆக வேண்டும். இல்லாதவைகள் மக்களால் புறந்தள்ளப்பட வேண்டும்.

அந்தவகையில் தமிழ் மக்களை வழி நடத்துவதாகப் பீத்திக்கொண்டு தவறான, வக்கிரமான, திரிவுக்கு உட்புகுத்தப்பட்ட, ஒரு பக்க சார்பான செய்திகள் கருத்துக்களைத் தந்து ஊடகப் பாற்கடலில் விஷம் கலக்கின்ற எவராயினும் உடனடியாகக் கிள்ளி எறியப்பட வேண்டிய சல்லிகளே!

விடிவாக்கி அழிக்கவேண்டிய பொய்யிருளையே முதலாக்கி யாழ்பாணத்திலிருந்து உதயமாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகையும், ஐரோப்பாவிலிருந்து வயிறு வளர்ப்புக்கு(சாவிலையே-வாழவும்) அரங்கேறும் ஒரு சாவீட்டு இணையத்தளமும் சமூகத்தைப் பாழடிக்கும் ஊடக உதாரணங்களில் உச்சத் தேர்வாயுள்ளன.

• 07.05.2015 நான் தினமும் மதிப்பளித்துப் பார்க்கின்ற இணையத் தளங்களில் ஒன்றில் ஆனந்த விகடன் தொலைக்காட்சியில் வெளியான நடிகர் ராஜ்கீரனின் பேட்டி முழுமையாகப் பார்க்க வசதி செய்து தரப்பட்டிருந்தது.

அதன் முழுமையையும், உண்மைத் தன்மையையும் மக்கள் அறியவேண்டும் என்ற உயர்வான நோக்கத்துடனான அச் செயற்பாட்டை நான் மதிக்கத் தவறவில்லை. அது மட்டுமல்லாமல் அதே இணையத்தில் அதே நாள் அதே தலைப்பினை அடுத்து . . . .

„விகடனில் ராஜ்கிரன்' என்ற பிறிதொரு தலைப்பிட்டு . . . . „பேட்டியில் எல்லாம் சரி பிரபாகரன் பற்றிய புரிதல் மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. ராஜ்கீரன் மட்டுமல்ல சேரன், அமிர் போன்றவர்களிடமும் இந்தத் தெளிவற்ற நிலையைக் காணமுடிகிறது'

என்று ஓரிரு வரிகளில் அருமையான குறுகிய விமர்சனமொன்றைத் தோழர் „சாகரன்' முன்வைத்திருந்தார்.

„வேஷ்டி விளம்பரத்துக்குக் கேட்டு வந்தார்கள் மறுத்தேன். கடன் தனியோடு உள்ள உங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை எவ்வளவு உதவியாக அமையும் என்று நிர்ப்பந்தித்தார்கள். அப்போதும் நான் ஏற்கவில்லை! அவர்களிடம் கேட்டேன் எனக்குத் தரும் இந்தப் பணத்தையும் அந்த ஏழை விசாயிகளிடம் தானே திரும்ப அறவிடப் போகிறீர்கள்' என ராஜ்கீரன் வேஷ்டி விளம்பரத்து மறுத்ததான செய்தியும் பேட்டியிலடங்கியிருந்தது.

இதுபோல் பல அதிக நல்ல செய்திகள்! நடிகர் ராஜ்கீரனின் நேர்மையையும், சமூக நேயத்தையும் வெளிப்படுத்தும் கடைந்தெடுத்த மதிப்புள்ள அதிக வெண்ணெய் அந்தப் பேட்டிப் பாற்கடலில் மிதந்துகொண்டிருக்க . . . . .

மலத் துளியாக மிதந்த பிரபாகரன் பற்றிய ஓரிரு வரிகள் மட்டுமே சாவு வீட்டு இணையத்தளத்திற்கு சாவுறா அமுதமானது. அவரவர் புரிதலுக்கும் உணர்வுக்கும் ஏற்பத் தானே அவரவர் நாடும் சுவையும் அமையும். இது ஒன்றும் புதிதல்லவே.

இருந்தும் நடிகர் ராஜ்கீரனின் சமூகப் பார்வையையும் நேர்மையையும் கேலியும் கேள்விக்குறியுமாக்கிய வரிகளை மட்டுமே தேர்வு செய்தது மட்டுமல்லாமல் இராணுவ உடையுடன் பிரபாகரன் அருகில் ராஜ்கீரன் அமர்திருந்தது போல் படத்துடன் அச் செய்தி இணையத்தில் பிரசுரமாகியிருந்தது. ராஜ்கீரனுக்கு எப்படியோ? உண்மையில் எங்களுக்கு வேதனை! அவரைப் பற்றிய மதிப்பைக் கேள்விக்குள் தள்ள எம்மை தூண்டியது போல் இன்னும் எத்தனை பேரைத் தூண்டியிருக்கும்?

இப்படி நேர்மையற்ற செய்தித் தேர்வால் வாசகனைக் தவறாக வழி நடத்துவதும், பேட்டியாளனைக் கொளரவக் குறைவாக்கி ஊடகத்தில் காட்டுவதும் நோக்கமற்றதோ, அல்லது பிரபாகரன் மேல் இவர்கள் கொண்ட பாசமோ மதிப்போ அல்ல. இவர்கள் பிழைப்புக்கு இன்னும் பிரபாகரன் பயன்படுத்தப்படுகிறான் என்பது தான் வெளிச்சமான உண்மை.

இதே பயன்பாட்டுக் கிடங்கு இன்னும் தூர்ந்துபோகவில்லை! தூர்ந்து போகும், தூர்ந்துபோகும் வேளையில் பிரபாகரனைத் தூற்றத் தொடங்கும் முதல் ஊடகக்காரர்களும் இவர்களாகத் தான் இருப்பார்கள்! அன்று இவர்கள் சந்தை அதுவாகத்தான் இருக்கும்! இதுவும் இவர்களுக்கு விரைவில் வசமாகும்.

இவர்கள் சந்தையில் விலை போகும் பொருட்கள் எதுவோ அது அன்றே மனிதனைக் கொல்லும் பொருளாக இருந்தாலும்? இவர்களுக்குரிய நோக்கம் இவர்கள் சட்டைப் பைகள் மட்டுமே! இந்த நோக்கம் மாறப்போவதும் கிடையாது. இவர்கள் மனிதர்களாவதற்கும் சாத்தியப்பாடே இல்லை.

• யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் பிரபல இந்துக் கோவிலொன்றில் அண்மையில் சுமார் இரு மாதங்கள் இடைவெளியிருக்கும் ஒரு பெண்ணின் தாலிச் சங்கிலியை இன்னொரு பெண் திருட முயற்சித்ததாக ஒரு செய்தி . . . !

இதே சாவீட்டு இணையத்தில் பிரசுரமாகிருந்தது.

„யாழ்பாணம் வண்ணார் பண்ணைக் கோவிலொன்றில் தாலிக்கொடியைத் திருட முயன்ற பெண் கையுங் களவுமாக பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்'

செய்தி! இதேடு நிற்கவில்லை! „இவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.' இது தேவையா?

ஏன் இதுவரை வடக்கு மாகாணத்தில் எந்தப் பெண்ணும் திருடியதாக வரலாறே கிடையாதா? வடமாகாணமோ மற்ற மாகாணங்களில் திருட்டுக்களே இடம்பெறவில்லையா? குறிப்பாக இவர் கிழக்கு மாகாணம் என்று அழுத்தி சொல்லும் செய்தியின் மூலம் எதை மக்களுக்குக் கொண்டுசொல்ல விரும்புகிறது இந்த ஊடகம்?

எம்பி சிறீ உட்பட்ட தழிழ்க் கூட்டமைப்பும், அரசியல் வாதிகளும் செய்த, செய்கின்ற திருட்டுக்கள் கொலைகள், மோசடிகளை விடவா ஏதுமறியாத ஏதிலிகளான இந்த அப்பாவிப் பெண்களில் ஒருத்தி திருட எத்தனித்தது? இது உங்களுக்கு உழைப்பு தேடித் தரும் செய்தியாயமைகிறதோ? பதவியை, அதிகாரத்தை வைத்து கொலை செய்து, திருடி, ஏமாத்திப் பிழைப்பு நடத்தும் கொடிய திருடர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் குற்றம் தூசுக்கும் சமனில்லை.

இந்த சிறிய புறக்கணிக்க வல்ல ஒரு செய்தி . . . . . ? மாவட்டத்துக்கு மாவட்டம் தமிழருக்கு இடையே ஏற்படுத்தம் பாரிய இடைவெளிக்கு எவ்வளவு பங்களிக்கிறது என்பது தெரியும் தெரிந்தாலும் கவலைப்படமாட்டீர்கள். பிணமழை தான் உங்கள் பணமழை என நாக்கைத் தொங்கவிட்டு அலையும் நாதாரிகள்..

போரால் விதவைகளாகி வாழ்வாதாரங்கள் எதுவும் இன்றித் தனித்தும் பிள்ளைகளோடும் ஒரு வேளைக் கஞ்சிக்கும், உடு கந்தலுக்கும் அவலம் என்ற நிஜத்தின் அபலைகளாக எத்தனை ஆயிரமாயிரம் பெண்கள்? களவு, விபச்சாரம் இயல்பாகிறதொன்றும் அவர்கள் குற்றமல்ல! அரசும் மக்களும் சிந்தித்து இந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அடிப்படைத் திட்டங்கள், அவற்றை செயலாக்கும் வழிகள் பற்றி அறியவைக்கும் நேர்மையான ஊடகப் பணியை மறந்து சமூகத்தின் பலவீனங்களைச் செய்திகளாக்கி குளிர் காய்கிறீர்கள். காயம் ஆறிவிட்டால் பிச்சை எடுக்கமுடியாது தானே?

இன்றுள்ள பொருட்களின் விலைவாசி, பிள்ளைகளின் பராமரிப்பு, அவர்களின் கல்வித் தேவை, உணவு, உடை என எதையும் நிறைவு செய்ய முடியாது வாழும் சூழலில் கொடுமை என்னவென்றால்? அத்தனை சமுதாய அடுக்கிலும் பொருளாதார அவலமும் பொறுப்பும் பெண்களைத் தான் அதிகம் சாடியிருக்கிறது என்பது தான் இன்றைய அவதானிப்பில் உண்மையாகவுள்ளது.

இந்நிலையை சற்று அதிகமாக எதிர்கொள்ள நேர்ந்தால் பெண்கள் உயிரை மாய்க்கவேண்டும் இல்லை உயிர் வாழ்வதாயின் உழைப்புக்கு உத்தரவாதமற்ற சூழலில் களவோ, விபச்சாரமோ தான் அவர்களது தேர்வாகவுள்ளது. இதைப் புரிந்துகொள்ளாத ஊடகங்களின் செய்தியின் பக்கங்களைப் பார்த்தால் பெண்ணினம் எரிவதை பார்த்துக்கொண்டு பிடில் வாசிக்கிறார்கள்.

„சிறுமியோடு சில்மிசம்', „திரிசாவுக்கு நின்று போனது தனூசாலா', „கலிபோர்னியக் கடற்கரையில் பலர் பார்வையில் பாலுறவு,' 'ஆவி வந்து அருகில் படுத்தது' இப்படிக் கிழுகிழுப்பும் திகிலும் தரும் செய்திகளின் நிழலில் சமூகம் பற்றிய அக்கறையை எதிர்பார்ப்பது சாதுவிடம் சீப்பு கேட்பது போல . .

„பாம்பு இறைச்சி விற்கும் கடை! இதயம் பலவீனமானவர் பார்க்காதீர்கள்' இது இதே இணையத்தின் இரவல் பிரசுரம், இரவலாயினும் தேர்வு வேண்டும். பாதிப்பை மீறியும் பலனிருந்தால் வெளியிடலாம். இங்கே பாதிப்பு யாருக்கு? பலன் யாருக்கு? விளங்க முடியாதவர்களா வாசகர்கள்!

இவ்வாறான பிழைப்பு நோக்கிய பயணத்தை விட்டு செப்பனிட்ட செய்திகள் கருத்துக்களோடு சமூகத்துக்கு உதவுவதே ஊடக தார்மீகம். இதை இனியாவது நன்றே செய்ய முனையுங்கள் என வேண்டுகிறோம்.

இதைவிட எம்மவர் மரண செய்திகளும் இணையத்தளம், வானொலி, தொலைக்காட்சிகளில் அறிவித்தலாகின்றன. இலங்கையர் பரந்துவாழும் பாங்கில் இது வரவேற்புக்குரிய பணியே மறுப்பதற்கில்லை!

எதிரியின் மரணமாயினும் மரணமென்பது அனுதாபத்துக்குரிய ஒன்று! இனிமேல் சந்திக்க வாய்ப்பற்ற இறுதி சந்தர்ப்பம் மனிதனின் மரணம்! இவ்வகை மரணச் செய்தியைக் கூட முள்ளி வாய்கால் அனர்த்த அவல வேளைகளிலும் கறாரான கட்டணம் அறவிட்டுப் பிரசுரித்துக்கொண்ட இணையமும், தொலைக்காட்சியும் மறுபுறத்தில் தழிழர் அழிவு தாழாமற் நீலிக் கண்ணீர் வடித்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பதிந்து வைத்திருக்கும் கணனித் திரையில் பெயர்களும் திகதியும் மட்டுமே மாற்றுவதோ, தொடர்ந்து திரையில் ஓரிரு நாள் நிற்கவிடுவதோ பாரிய கஸ்டமான, அதிக செலவான பணியொன்றுமில்லை. இருந்த போதும் இதற்கென ஒரு சந்தையை உருவாக்கி அதற்கென ஒரு கட்டணம் வைத்து ஒட்டுமொத்த மரணக் குத்தகையை ஒரே இணையமோ ஒரே தொலைக்காட்சியோ எடுத்துவிட்டால் மரணித்தவனுக்குக் கூட வேறு போக்கிடமற்றுப் போகிறது.

எமது கிராமங்களில் மரணச் செய்தியை மேளத்தில் அடித்து அறிவிக்கும் வழமை அண்மையில் தான் அருகிப்போனது. இந்த செயலில் ஒழிந்திருந்த பாரிய மனித அபிமானமொன்று உங்களில் எத்தனை பேரறிவீர்களோ தெரியாது!

குறிப்பிட்ட கிராமத்தில் எத்தனை குறிச்சிகளோ, பறை அறையும் அந்த ஏழை எத்தனை மைல்கள் நடந்தானோ, பசி ஆறியிருந்தானோ, பசித்திருந்தானோ எது எப்படியிருந்தாலும் மரணத்தை அறிவிப்பதற்கு கூலி பெறுவதில்லை என்ற கொள்கைப் பற்றில் பரம ஏழைகளிடமே பரம்பரை தாண்டிய இறுக்கம் இருந்தது.

மரணத்தைக் கூடப் பணம் பண்ண யோசிக்கும் போது ஊடகங்களின் வரலாற்றுப் புகழ் வறுமையாகிப் போகாதா?

உழைப்பை மட்டும் குறியாக்கி ஊடகம் நடத்தும் திருடர்கள் உருசி கண்டவர்கள். செய்திக்காக பல்வேறு பாணியில் கலவரங்கள் உருவாக்கவும் தயங்காதவர்கள். இவர்கள் தாமாகத் திருந்துவது அரிதிலும் அரிது. முடிந்தால் நாமாக முயலவேண்டும்.!

யாருக்கு இக்கட்டுரை விளங்குதோ இல்லையோ! யாரை எதிர்வினையாக்கியிருக்கிறேன் என்பது இவ்வகை ஊடகங்களுக்கு நன்றாகவே விளங்கும்.

விமர்சனங்களிருப்பின். . . . . . delft@hotmail.de

கருத்துடன் உடன் பட்டால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . . . . . .

Read more...

Friday, May 1, 2015

மரணதண்டனை சாதித்தது....? நோர்வே நக்கீரா

மன்னர் ஆட்சியில் இருந்து இன்றைய மக்கள் ஆட்சிவரை குற்றம் கண்டு பிடிப்பதும், குற்றங்களுக்குத் தண்டனை வகுப்பதும், நிறைவேற்றுவதும், வளமையாக இருந்து வருகிறது. எது குற்றம் எது குற்றம் இல்லை என்பதை வகுப்பது யார்? தண்டனை வகுப்பாளர்கள் குற்றம் செய்தாதவர்களாக இருந்தார்களா? இத்தண்டனைகளால் குற்றங்கள் குறைக்கப்பட்டனவா? தண்டனைகள் வேண்டாம் என்றால் மாற்றுவழி என்ன? நீதிமன்றங்கள் எதற்கு? குற்றங்களே சட்டமாக்கப்பட்டால் குற்றங்களே நடக்காது இருக்குமல்லவா? சமூகத்தில் தண்டனைகளின் பங்கு என்ன? இது நல்லதா கெட்டதா? ஆய்வு கொள்கிறது இப்படைப்பு

மயூரன் சுகுமாரன் இலங்கைத் தமிழ்வம்சாவளி சேர்ந்த லண்டனில் பிறந்த ஆஸ்திரேலியக்குடிமகனாவார். இவர் 17.4.2005ல் தனது 24ஆவது பிறந்தநாளன்று அன்ரு என்ற இன்னுமொரு ஆஸ்த்திரேலிய குடிமகனுடன் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். 17.02.2006ல் இந்தோனேசிய நீதிமன்றத்தால் மரணதண்டனை தீர்ப்பானது. இதை எதிர்த்து மேன்முறையீடு செய்தபோதும் 2011ல் மரணதண்டனை தான் தீர்வு என்பது உறுதியானபின் 29.04.2015ல் அதாவது அவரின் 34ஆவது பிறந்துநாளின் பின் 11நாட்களுக்குப்பின் மரணதண்டனை நிறைவேற்றப்பட் டது. இவர் பிடிபடும்போது அலட்சியமாக இருந்த எம்சமூகம், அனைத்துலகம் மரணதண்டனை எனத்தீர்ப்பு அளிக்கப்பட்டபோது கூட வாழாதிருந்தது. மரணதண்டனை நிறைவேற்றும் காலம் நெருங்கியதும் தன் பார்வையின் கோணத்தை மாற்றிக் கொண்டது. இரக்கம், காருணியம், அன்பு, பாசம், நீதி, நேர்மை என்ற உணர்வூற்றுக்கள் பீறிடத் தொடங்கின. மரணதண்டனை என்ற செயற்பாட்டின் பின்னால் ஏதோ ஒருதாங்கமுடியாத தாக்கு சக்தி உள்ளது என்பது புலனாகிறது. இந்த தாக்குசக்தியை வைத்தே குற்றங்களைத் குறைந்துவிடலாம் என்று சட்டம் நம்புகிறதா?

மனிதசமூகத்தையே கெடுக்கும் போதைப்பொருட்களை மயூரன் கடத்திப் பிடிபட்டபோதும், மரணதண்டனை எனத்தீர்ப்பழித்தபோதும் தண்டனை சரியானது என கூறியவர்கள் மரணதண்டனையை நிறைவேற்றும் நாட்நெருங்கியபோது தம்கருத்துக்களை கருணையாக மாற்றியவர்கள் பலர் உண்டு. இது எமக்குக் காட்டும் சமிஞ்ஞை என்னவெனில் தண்டனை தேவை என்பதில் எந்தச் சந்தேகமும் அற்ற சமூகம் மரணதட்டனையை ஏற்ற மறுக்கிறது. மரணம் தண்டிக்கப்படுபவர்களை அச்சுறுத்தாத போதிலும் பார்ப்பவர்கள், கேட்பவர்களை அச்சுறுத்துகிறது. இதன் விளைவே மரணதண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதற்குக் காரணமாக உள்ளது.

இனி மரணதண்டனை பெற்ற அனைவரும் குற்றவாளிகளா என்ற கேள்விக்கு ஆம் என்று யாராலும் அறிதியிட்டுச் கூற இயலாது. கொலை செய்வது குற்றம் என்று எந்தச்சட்டம் சொல்கிறதே அதே சட்டம்தான் கொலை செய்ய மரணதண்டனையை ஏவுகிறது. இது எப்படி நியாயமாக முடியும்? நானும் நீங்களும் கொலைசெய்தால் குற்றம் இராணுவம் செய்யலாம் அது சட்டம். பக்கத்துவீட்டானின் நிலத்தை நீங்கள் அபகரித்தல் குற்றம் ஊராச்சியாளரோ அரசே அபகரிக்கலாம் அது சட்டம். ஆக சட்டம் சமநிலையற்றே இருக்கிறது. இதற்குள் மதங்கள் வேறு.

இஸ்லாத்தைத் தவிர எல்லாமே இறைவன் என்று காணும் மதங்கள் தண்டனையை இறைவனிடம் விட்டு விட்டுகிறார்கள். ஆனால் எல்லாமே கடவுள் அல்லாவே எல்லாம் எனும் இஸ்லாம் மட்டும் தண்டனை கொடுப்பதிலும், தண்டிப்பதிலும் அகோரமாக இருக்கிறது. ஒரு சிருஸ்டியையே செய்ய முடியாத அற்ப பதரான மனிதன் கடவுளின் சிருஸ்டியை அழிப்பதற்கு எத்தகைய தகுதி உடையவன்? கடவுளை எவனுமே இதுவரை கண்டது கிடையாது. காணாத கடவுளைக் கண்டதாக, கடவுள் சொன்னதாக கடவுளின் பெயரால் பொய்கூறி கொலைகள், பலிகள் நடக்கின்றன. இது பொய்மையின் போலிப்பித்தலாட்டமே. ஆக மரணதண்டனை என்பது மன்னிக்கப்பட முடியாத கொலையாகும்.

இன்று நடைமுறைப்படியும், சட்டப்படியும் பிழையான அனைத்தும் நாளை, எதிர்காலத்தில் சரியென அமைகிறது. இன்று சட்டவிரோதம் எனப்பட்டது நாளை சட்டமாகும். ஆகா சமனிலையற்ற உறுதியற்ற சட்டமானது அறுதியும் உறுதியுமாக உயிரை எடுப்பது எப்படி நியாயமாகும். பூமி உருண்டை என்ற விஞ்ஞானியை தூக்கிலிட்டார்கள். இறுதியில் பூமி உருண்டை என்பதே முடிவான ஒன்றாகியுள்ளது. தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிக்கும், அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள்தானே? அவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படாது இருந்திருந்தால் சிறையில் இருந்தாவது தமது கூற்று சரி என நிரூபித்திருப்பார்கள். சிலவேளை இன்னும் புதிய கண்டுபிடிப்புக்களை உலகிற்குத் தந்திருப்பார்கள். நாம் இன்னும் எத்தனையோ படிகள் முன்நோக்கி இருந்திருப்போம். சமூகமும் சட்டமும் இதற்கான சந்தர்பத்தை வழங்கியதா? சரி தண்டித்தவர்களை யார் தண்டித்தார்கள்? நீதி என்ற பெயரில் எத்தனை அநீதிகள் நடந்தேறியுள்ளன? சட்டமோ தண்டனைகளோ திருத்துப்படலாம் மரணதண்டனை கொடுத்தால் கொடுத்ததுதான். சமூகநலனுக்காக மரணதண்டனை என்ற மாயப்பூச்சு சமூகத்தில் எந்த நல்மாற்றங்களையும் உருவாக்கவில்லை. இது வெறும் சமூகத்தினதும் சட்டத்தினதும் பழிவாங்கலாகவே உள்ளது.

இப்படிக் கடுமையான சட்டங்களால் சிலமனிதர்களை, சமூகங்களை சிலகாலம் பயமுறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் அது நிலையானது அல்ல. நீயூட்டனின் முன்றாவது விதி எல்லாவிடங்களிலும் பாவிக்குமாறே உள்ளது. தாக்கத்துக்கு சமனும் எதிருமான மறுதாக்கங்கள் எங்கும் உள்ளது. எங்கு மிகக்கடுமையான சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகிதோ. அங்கேதான் சட்டமீறல்களும் அத்துமீறல்களும் அதிகமாக உள்ளன. பயமுறுத்தி ஒருமனிதனையோ, ஒரு சமூகத்தையே திருத்திவிட முடியாது. மயூரன் போன்றவர்களுக்கு பிடிபட்டால் என்ன தண்டனை என்பது நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் கடத்தலைச் செய்யாது இருந்தார்களா? இல்லையே

குற்றங்கள் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து அதைத் தடுப்பதன் மூலமாகவே குற்றங்களைத் தடுக்க முடியும். தண்டனைகளால் குற்றங்களை சட்டமீறல்களைத் தடுக்க முடியாது. குற்றத்தின் சட்டமீறல்களின் காரணிகளாக அமைவன வளர்ப்பு, சூழல், தொடர்பு, வாய்ப்பு. பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பதற்கான அறிவு பெற்றோர்களுக்கு அரசால் கொடுக்கப்படுகிறதா? இல்லை. சூழல், தொடர்வு, வாய்ப்பு எப்படி உருவானது? இவற்றை உருவாக்கிக் கொடுத்ததே சமூகமும், சட்டமும் தானே. இப்படி இருக்கும் போது முழுப்பிழையையும் ஒரு தனிமனிதனில் போட்டு அவனின் வாழ்வை விலைமதிப்பற்ற உயிரைக் பறிக்கிறீர்கள்.

பக்தி கூடப் பயத்தில் தான் வருகிறது, பயமுறுத்தித்தான் நீதியை நிலைநாட்ட முடியும், மரணபயம் இருக்கும் போதுதான் உயிருக்குப் பயந்தாவது குற்றம் செய்யாது இருப்பார்கள் என எண்ணலாம். சரி காலங்காலமாக தண்டனை கொடுத்து சமூகத்தை முழுமையாகச் சீர்திருத்த முடிந்ததா? குற்றங்களே மறைந்துவிட்டதா? இனிக்குற்றங்களே நடக்காதா? மரணதண்டனை என்று களையெடுத்தார்களே ஆனால் களைகளை அடியோடு களைய முடிந்ததா? போதைவஸ்துப்பாவிப்பவர்களுக்கும், கடத்துபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் மரணதண்டனை கொடுத்துவரும் இதே இந்தோனேசியாவில்தான் 14நிமிடத்துக்கு ஒருவர் போதை வஸ்துப்பாவித்து இறக்கிறார். இவர்களின் மரணதண்டனைகள் செய்த நற்கைங்கரியம் என்ன? போதைப் பொருள் என்று கருதினால் காப்பி தேநீர் சிகரெட் எல்லாமே தொங்கி வாழச்செய்யும் போதைப் பொருட்களே. சிகரெட் பிடிப்பது உடலுக்குக் கேடு என்று சிகரெட் பெட்டியில் எழுதிவிட்டு விற்பனையை அனுமதித்து பணம் பண்ணுகிறார்கள். அதேபோல் போதைப் பொருளுக்கும் செய்யலாமே. மது செய்யும் அதே வேலையைத்தான் போதைவஸ்துக்களும் செய்கின்றன. போதைவஸ்துப் பாவனையின் தாயாக அமைவது மது. மதுவே வல்லுறவு வன்கொடுமை பாலியல்வல்லுறவு போன்ற கொடுமையான காரியங்களுக்குத் துணைபோகும். போதைவஸ்து உட்கொண்டவர் முளை மனத்துடன் அது நின்றுவிடும். அந்த வஸ்துக்கிடைக்காது போது அதைத்தேடியே வேகம் கொள்வார்களே தவிர போதை வஸ்துப்பாவித்தவர்கள் பாலியல்வல்லுறவு கொள்வதில்லை. இதன்தாக்கம் மூளைக்கு மட்டுமுரியதே தவிர உடல்ரீதியானது அல்ல. சமூகத்தின் நீதி நீதியற்றே இருக்கிறது. இதற்காக போதைவஸ்துக்களைப் பாவியுங்கள் என்று கூறவில்லை. சமூக அக்கறை இருந்தால் மற்றை தங்குதன்மை கொண்ட வஸ்துக்களையும் தடுத்து நிறுத்துங்கள்.

மரணதண்டனைக்கெதிரான மாற்றுவழி என்ன? மாற்றுவழி என்பது சிந்திக்கப்பட வேண்டியது. ஆனால் மரணதண்டனை ஒருபோதும் ஒரு நல்ல மனிதனையோ சமூகத்தையோ உருவாக்காது என்பது ஐயம் திரிபற்றது. மரணதண்டனை வளங்கப்படும் நாடுகளில் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் எவரும் தாம் பிடிபடுவோம் என்று எண்ணிச் செய்வதில்லை. செய்தபின்னர் வருந்திப் பிரயோசனமும் இல்லை. இம்மரண தண்டனைகள் சாதித்தது என்ன? மயூரனுடன் கொலை செய்யப்பட்டவர்களை மட்டுமா சட்டம் தண்டித்தது? இவர்களை நேசித்த உறவுகள், நட்புகள், அனைவரையும் சேர்த்தல்லவா தண்டித்தது. மயூரனுக்கு மரணதண்டனை அது முடிந்துவிட்டது அவனும் முடிந்துவிட்டான். ஆனால் அவன் குடுப்பத்தினருக்கும், உறவுகளுக்கு, நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஆயுள்தண்டனை அல்லவா இது எதற்கு? குற்றமே செய்யாதவர்களுக்குத் தண்டனை எதற்கு? இதைப் தூரவிருந்து பார்த்த நாங்களும் தண்டிக்கப்படுகிறோம். நான் செய்த குற்றம் என்ன?

தண்டனை கொடுத்துக் கொடுத்தே சமூகத்தைத் திருத்தமுடியாதென அறிந்த மேற்குலகம் சிந்தித்து, விவாதித்து, அறிவிரீதியாக உணர்ந்தே மரணதண்டனையை இல்லாது செய்தது. இதனால் குற்றங்கள் குறைந்ததோ இல்லையோ கொலைகள் குறைந்தது என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

கொலை செய்வது குற்றம் அதற்கும் மரணதண்டனை தான் முடிவு எனும் இந்தோனேசிய இஸ்லாமியச்சட்டம் மயூரனையும் இவருடன் 8ப் பேரையும் கொன்றது. இவர்களைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை எப்போ? மரணதண்டனையால் எதைச் சாதிக்க முடிந்தது? மரணம் அழிக்குமே தவிர எதையும் ஆக்காது. 24வயதாக இருந்தபோதே மயூரன் பிடிபட்டான். தெரிந்தோ, தெரியாமலோ, சமூகச்சூழலாலே, பணத்தாசையாலே இதை அவன் செய்தான். அன்று அவன் குற்றவாளியாகக் காணப்பட்டான். ஆனால் அவன் மனம்திருந்தி தனது நற்பங்களிப்பை சமூகத்துக்குக் கொடுத்தான். தன்னுடன் வாழ்ந்த சகசிறைக்கைதிகளுக்கு தற்காப்புக்கலை, கணினிபயிற்சி, சித்திரம் போன்றவற்றைப் கற்பித்தான். உணர்வுகளைச் சித்திரமாக வரையும் கலையை சிறையிலேயே கற்றுக்கொண்டான். இவனுடன் பிடிப்பட்ட அன்ரு என்பவரும் தன்பழைய காதலியை மணந்தார், திருந்தி போதகராக மாறவிருப்பினார். இவர்கள் திருந்தி வாழ்ந்தபோதே சட்டம் அவர்களைத் தண்டித்தது. குற்றவாளியாக உள்ளபோது தண்டிக்காத சட்டம் அவர்கள் திருந்தி வாழும்போது தானே தண்டித்தது. இத்தண்டனை சரியானதா? இங்கே கொன்று குவித்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதே ஒரு திறமையை தம்மிடத்தில் கொண்டவர்கள் தான். இவர்களுக்கு திருந்தும் உரிமை கூடக் கொடுக்கப்படவில்லை எனும்போது இப்படி ஒருதண்டனை அவசியமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவர்களை விட்டுவிட்டு கொண்டுண்ட காசைப் பொறுக்கியவர்களை அல்லவா தண்டித்தது. இது நியாயமா? ஒரு கிடங்கினுள் போதைவஸ்து தயாரிக்க இயலாது. இப்படித் தொழிற்சாலைகளால் தயார்படுத்தப்படும் போதை வஸ்துத் தயாரிப்பாளர்களை பிடித்துத் தண்டிக்க வக்கற்ற அரசும் சட்டமும் பாவனையாளர்களையும் இடைத்தரகர்களையும் தானே தண்டிக்கிறது. பெருங்குற்றவாளிகள் எங்கே சுகபோகமாக வாழ அற்ப ஆசைகொண்ட அப்பிராணிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். ஒருதயாரிப்பாளன் ஒராயிரம் விற்பனையாளர்கள் பலகோடி பாவனையாளர்கள். ஒரு தயாரிப்பாளனை அழிப்பதனூடாக பலகோடி பாவனையாளர்களைத் தடுக்கலாமே. இதை எந்த அரசும் முறையாகச் செய்ததில்லை. எந்த இஸ்லாம் போதைவஸ்துப் பாவிப்பது தப்பு, தண்டனைக்குரியது, மரணதண்டனை விதிப்பப்படவேண்டியது என்றதே அதே குரானை சரியாவைச் சட்டமாகக் கொண்ட இஸ்லாமியர்களும் இஸ்லாமிய நாடுகளுமே போதை வஸ்துக்களை ஏற்றுமதி செய்கின்றன. உ.ம் பாக்கிஸ்தான் ஆப்கானித்தானில் பெரும் தொழிற்சாலையாக நாட்டின் வருமானமாக இப்போதைப் பொருட்களை தயாரித்து வினையோகிக்கிறார்கள். இதில் இந்தோனேசியாவும் அடங்கும்.

மரணதண்டனைக் கெதிரான மாற்றுவழிகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதனூடாக மேற்குலகம் பலவெற்றிகளைக் கண்டுள்ளது. சீர்திருத்து நடவடிக்கைகளூடாக மரணதண்டனை எனும் கொலைகளை நிறுத்தியதுடன் மனிதவளங்களை பயன்படுத்தி நாட்டை வளப்படுத்தி மனிதநேயத்தை வளர்த்துள்ளனர். ஒவ்வொரு மனிதனும் மாறுவான், திருந்துவான் என்ற அடிப்படை நம்பிக்கை மனிதர்களின் மத்தியில், அரசின் மத்தியில், மனங்களில் விதைக்கப்படவேண்டும். பெரிய கனமான பாரதூரமான குற்றங்களைச் செய்தவர்கள் மனந்திருந்தியதால் மன்னிப்பளிக்கப்பட்டு குற்றத்தடுப்பு இலாகாவில் பெரியபதவியில் உள்ளனர். ஒவ்வொரு மனிதனும் விலைமதிப்பற்ற வளங்களையும், சக்திகளையும் கொண்டவர்கள். மரணதண்டனை என்பது மாற்றுச்சிந்தனையற்ற, மூளைவளமற்ற மனிதர்களாலும் அரசாலும் நிறைவேற்றப்படும் ஒரு துர்காரியமே. யார் குற்றவாளி? பிடிபட்டபின்னர் தானே ஒருவன் குற்றவாளியாகிறான். அப்போ பிடிபடாமல் குற்றம் செய்பவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்ற பெயரில் வெளியில்தானே இருக்கிறார்கள். பிடிபடமாட்டார்கள் என்று எண்ணித்தானே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். பிடிபட்டபின்னர் குற்றவாளியாகக் கண்டு மரணதட்டனை வளங்குவதா? அல்லது வாழும்போதே குற்றச்செயல்களில் ஈடுபடாது பார்த்துக் கொள்ளவதா சிறந்தது? மரணதண்டனையை நிறுத்தி, குற்றவாளிகள் திருந்துவதற்கான சந்தர்பத்தைக் கொடுத்து, அவர்களின் முற்போக்கினைக் கண்டறிந்து, தண்டனையைக் குறைந்து, வளமுள்ள மனிதர்களை உருவாக்கி சமூகத்துக்கு பயன்பாடுள்ள மனிதர்களாக வெளியே விடுவதே நியாயமான சட்டமாகவும் மனிதநேயம் கொண்ட மனிதர்கள்வாழும் நாடாகவும் கருதமுடியும்.

தண்டனை அளிக்கும், தண்டனை நிறைவேற்றும் கூடங்களாகவே அன்று சிறைச்சாலைகள் இருந்தன. இன்று அவை சமூகத்துக்கு ஒவ்வாதவர்களை தனியே பிரித்து அவர்களை சமூகத்துக்கு ஏற்றமனிதர்களாக மாற்றும் கோவில்களாகவே சிறைகள் இன்று அறிவுஜீவிகளால் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை இருந்தாலும் திருந்தும் வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிறது. மரணதண்டனைகளால் எதையும் சமூகம் சாதித்ததில்லை. சாதிக்கப்போவதுமில்லை. கடவுளை நம்பும் மதவாதிகளே! கடவுளின் சிருஸ்டியைக் கொல்வதற்கு நீங்கள் யார்? சந்தர்ப்பம் சூழலே மனிதனை உருவாக்கிறது, புடம்போடுகிறது. ஆதலால் மனிதர்கள் மாறுவதற்கோ திருந்துவதற்கே மதங்களும் சமூகங்களும் அனுமதிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான சூழல், தொடர்புகள், மனிதநேயச் செயற்பாடுகளை வளர்த்து மரணதண்டணைக்கு மரண அடி கொடுக்கப்படவேண்டும்.

மரணதண்டனையை வெறுக்கும் நோர்வே நக்கீரா 30.04.2015

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com