Friday, May 15, 2015

„சல்லி' மீன்களின் கண்ணிற் படுவது மலம் மட்டுமே! - ஜேர்மனிலிருந்து லோகநாதன் -

கடலே பாலாக மாறினாலும் பால் அருந்தாமல் மலம், புழு, பூச்சிகளையே தம் விருப்பமிக்க உணவாகத் தேடும் சில மீன் வகைகளுண்டு. அதில் தனித்துவமானது சல்லி மீன்கள். இவை வேறு நல்ல இரை கிடைத்தாலும் கண்டுகொள்வதில்லை. இந்தச் சுவை தான் அவற்றின் தேர்வுச் சுவை. மனிதர் மலம் கழிக்கின்ற கரையோரங்களில் எல்லாம் இவற்றின் கண்ணோட்டமும் ஆரவாரமான புழக்கமும் அதிகமாகக் காணப்படும்.

பாற் கடல் போன்ற ஊடகவியல் துறையிலும் குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறையில் சல்லி மீன் குணவியல்பில் ஓரிரு சில்லறைகள் உலாவருகின்றன. ஊடகவியல் மக்களை முன் நகர்த்தும் ஒரு அரிய பணி, அரிய இயந்திரம்! ஆரோக்கியமான, தேர்ந்த செய்திகள், கட்டுரைகள், முன்மாதிரிகளை மக்களிடம் கொண்டு சென்று மக்களைப் பக்குவமாகப், பண்பாக வளர்க்கவேண்டிய தார்மீகப் பொறுப்புக்குரிய துறை ஊடகத்துறை.

நல்ல பிரஜைகளாகத் தம் பிள்ளைகள் வளர வேண்டுமென விரும்பும் பொறுப்புள்ள தாயும் தந்ததையும் பிள்ளைகளை எது அணுகவேண்டும் எது அணுகக்கூடாது என்று எண்ணுவார்களோ அதே உணர்வும் பொறுப்பும் பத்திரிகைகள், இணையத்தளங்கள், தொலைக்காட்சி, சினிமா . . . எனும் அத்தனைக்கும் இருந்தே ஆக வேண்டும். இல்லாதவைகள் மக்களால் புறந்தள்ளப்பட வேண்டும்.

அந்தவகையில் தமிழ் மக்களை வழி நடத்துவதாகப் பீத்திக்கொண்டு தவறான, வக்கிரமான, திரிவுக்கு உட்புகுத்தப்பட்ட, ஒரு பக்க சார்பான செய்திகள் கருத்துக்களைத் தந்து ஊடகப் பாற்கடலில் விஷம் கலக்கின்ற எவராயினும் உடனடியாகக் கிள்ளி எறியப்பட வேண்டிய சல்லிகளே!

விடிவாக்கி அழிக்கவேண்டிய பொய்யிருளையே முதலாக்கி யாழ்பாணத்திலிருந்து உதயமாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகையும், ஐரோப்பாவிலிருந்து வயிறு வளர்ப்புக்கு(சாவிலையே-வாழவும்) அரங்கேறும் ஒரு சாவீட்டு இணையத்தளமும் சமூகத்தைப் பாழடிக்கும் ஊடக உதாரணங்களில் உச்சத் தேர்வாயுள்ளன.

• 07.05.2015 நான் தினமும் மதிப்பளித்துப் பார்க்கின்ற இணையத் தளங்களில் ஒன்றில் ஆனந்த விகடன் தொலைக்காட்சியில் வெளியான நடிகர் ராஜ்கீரனின் பேட்டி முழுமையாகப் பார்க்க வசதி செய்து தரப்பட்டிருந்தது.

அதன் முழுமையையும், உண்மைத் தன்மையையும் மக்கள் அறியவேண்டும் என்ற உயர்வான நோக்கத்துடனான அச் செயற்பாட்டை நான் மதிக்கத் தவறவில்லை. அது மட்டுமல்லாமல் அதே இணையத்தில் அதே நாள் அதே தலைப்பினை அடுத்து . . . .

„விகடனில் ராஜ்கிரன்' என்ற பிறிதொரு தலைப்பிட்டு . . . . „பேட்டியில் எல்லாம் சரி பிரபாகரன் பற்றிய புரிதல் மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. ராஜ்கீரன் மட்டுமல்ல சேரன், அமிர் போன்றவர்களிடமும் இந்தத் தெளிவற்ற நிலையைக் காணமுடிகிறது'

என்று ஓரிரு வரிகளில் அருமையான குறுகிய விமர்சனமொன்றைத் தோழர் „சாகரன்' முன்வைத்திருந்தார்.

„வேஷ்டி விளம்பரத்துக்குக் கேட்டு வந்தார்கள் மறுத்தேன். கடன் தனியோடு உள்ள உங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை எவ்வளவு உதவியாக அமையும் என்று நிர்ப்பந்தித்தார்கள். அப்போதும் நான் ஏற்கவில்லை! அவர்களிடம் கேட்டேன் எனக்குத் தரும் இந்தப் பணத்தையும் அந்த ஏழை விசாயிகளிடம் தானே திரும்ப அறவிடப் போகிறீர்கள்' என ராஜ்கீரன் வேஷ்டி விளம்பரத்து மறுத்ததான செய்தியும் பேட்டியிலடங்கியிருந்தது.

இதுபோல் பல அதிக நல்ல செய்திகள்! நடிகர் ராஜ்கீரனின் நேர்மையையும், சமூக நேயத்தையும் வெளிப்படுத்தும் கடைந்தெடுத்த மதிப்புள்ள அதிக வெண்ணெய் அந்தப் பேட்டிப் பாற்கடலில் மிதந்துகொண்டிருக்க . . . . .

மலத் துளியாக மிதந்த பிரபாகரன் பற்றிய ஓரிரு வரிகள் மட்டுமே சாவு வீட்டு இணையத்தளத்திற்கு சாவுறா அமுதமானது. அவரவர் புரிதலுக்கும் உணர்வுக்கும் ஏற்பத் தானே அவரவர் நாடும் சுவையும் அமையும். இது ஒன்றும் புதிதல்லவே.

இருந்தும் நடிகர் ராஜ்கீரனின் சமூகப் பார்வையையும் நேர்மையையும் கேலியும் கேள்விக்குறியுமாக்கிய வரிகளை மட்டுமே தேர்வு செய்தது மட்டுமல்லாமல் இராணுவ உடையுடன் பிரபாகரன் அருகில் ராஜ்கீரன் அமர்திருந்தது போல் படத்துடன் அச் செய்தி இணையத்தில் பிரசுரமாகியிருந்தது. ராஜ்கீரனுக்கு எப்படியோ? உண்மையில் எங்களுக்கு வேதனை! அவரைப் பற்றிய மதிப்பைக் கேள்விக்குள் தள்ள எம்மை தூண்டியது போல் இன்னும் எத்தனை பேரைத் தூண்டியிருக்கும்?

இப்படி நேர்மையற்ற செய்தித் தேர்வால் வாசகனைக் தவறாக வழி நடத்துவதும், பேட்டியாளனைக் கொளரவக் குறைவாக்கி ஊடகத்தில் காட்டுவதும் நோக்கமற்றதோ, அல்லது பிரபாகரன் மேல் இவர்கள் கொண்ட பாசமோ மதிப்போ அல்ல. இவர்கள் பிழைப்புக்கு இன்னும் பிரபாகரன் பயன்படுத்தப்படுகிறான் என்பது தான் வெளிச்சமான உண்மை.

இதே பயன்பாட்டுக் கிடங்கு இன்னும் தூர்ந்துபோகவில்லை! தூர்ந்து போகும், தூர்ந்துபோகும் வேளையில் பிரபாகரனைத் தூற்றத் தொடங்கும் முதல் ஊடகக்காரர்களும் இவர்களாகத் தான் இருப்பார்கள்! அன்று இவர்கள் சந்தை அதுவாகத்தான் இருக்கும்! இதுவும் இவர்களுக்கு விரைவில் வசமாகும்.

இவர்கள் சந்தையில் விலை போகும் பொருட்கள் எதுவோ அது அன்றே மனிதனைக் கொல்லும் பொருளாக இருந்தாலும்? இவர்களுக்குரிய நோக்கம் இவர்கள் சட்டைப் பைகள் மட்டுமே! இந்த நோக்கம் மாறப்போவதும் கிடையாது. இவர்கள் மனிதர்களாவதற்கும் சாத்தியப்பாடே இல்லை.

• யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் பிரபல இந்துக் கோவிலொன்றில் அண்மையில் சுமார் இரு மாதங்கள் இடைவெளியிருக்கும் ஒரு பெண்ணின் தாலிச் சங்கிலியை இன்னொரு பெண் திருட முயற்சித்ததாக ஒரு செய்தி . . . !

இதே சாவீட்டு இணையத்தில் பிரசுரமாகிருந்தது.

„யாழ்பாணம் வண்ணார் பண்ணைக் கோவிலொன்றில் தாலிக்கொடியைத் திருட முயன்ற பெண் கையுங் களவுமாக பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்'

செய்தி! இதேடு நிற்கவில்லை! „இவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.' இது தேவையா?

ஏன் இதுவரை வடக்கு மாகாணத்தில் எந்தப் பெண்ணும் திருடியதாக வரலாறே கிடையாதா? வடமாகாணமோ மற்ற மாகாணங்களில் திருட்டுக்களே இடம்பெறவில்லையா? குறிப்பாக இவர் கிழக்கு மாகாணம் என்று அழுத்தி சொல்லும் செய்தியின் மூலம் எதை மக்களுக்குக் கொண்டுசொல்ல விரும்புகிறது இந்த ஊடகம்?

எம்பி சிறீ உட்பட்ட தழிழ்க் கூட்டமைப்பும், அரசியல் வாதிகளும் செய்த, செய்கின்ற திருட்டுக்கள் கொலைகள், மோசடிகளை விடவா ஏதுமறியாத ஏதிலிகளான இந்த அப்பாவிப் பெண்களில் ஒருத்தி திருட எத்தனித்தது? இது உங்களுக்கு உழைப்பு தேடித் தரும் செய்தியாயமைகிறதோ? பதவியை, அதிகாரத்தை வைத்து கொலை செய்து, திருடி, ஏமாத்திப் பிழைப்பு நடத்தும் கொடிய திருடர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் குற்றம் தூசுக்கும் சமனில்லை.

இந்த சிறிய புறக்கணிக்க வல்ல ஒரு செய்தி . . . . . ? மாவட்டத்துக்கு மாவட்டம் தமிழருக்கு இடையே ஏற்படுத்தம் பாரிய இடைவெளிக்கு எவ்வளவு பங்களிக்கிறது என்பது தெரியும் தெரிந்தாலும் கவலைப்படமாட்டீர்கள். பிணமழை தான் உங்கள் பணமழை என நாக்கைத் தொங்கவிட்டு அலையும் நாதாரிகள்..

போரால் விதவைகளாகி வாழ்வாதாரங்கள் எதுவும் இன்றித் தனித்தும் பிள்ளைகளோடும் ஒரு வேளைக் கஞ்சிக்கும், உடு கந்தலுக்கும் அவலம் என்ற நிஜத்தின் அபலைகளாக எத்தனை ஆயிரமாயிரம் பெண்கள்? களவு, விபச்சாரம் இயல்பாகிறதொன்றும் அவர்கள் குற்றமல்ல! அரசும் மக்களும் சிந்தித்து இந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அடிப்படைத் திட்டங்கள், அவற்றை செயலாக்கும் வழிகள் பற்றி அறியவைக்கும் நேர்மையான ஊடகப் பணியை மறந்து சமூகத்தின் பலவீனங்களைச் செய்திகளாக்கி குளிர் காய்கிறீர்கள். காயம் ஆறிவிட்டால் பிச்சை எடுக்கமுடியாது தானே?

இன்றுள்ள பொருட்களின் விலைவாசி, பிள்ளைகளின் பராமரிப்பு, அவர்களின் கல்வித் தேவை, உணவு, உடை என எதையும் நிறைவு செய்ய முடியாது வாழும் சூழலில் கொடுமை என்னவென்றால்? அத்தனை சமுதாய அடுக்கிலும் பொருளாதார அவலமும் பொறுப்பும் பெண்களைத் தான் அதிகம் சாடியிருக்கிறது என்பது தான் இன்றைய அவதானிப்பில் உண்மையாகவுள்ளது.

இந்நிலையை சற்று அதிகமாக எதிர்கொள்ள நேர்ந்தால் பெண்கள் உயிரை மாய்க்கவேண்டும் இல்லை உயிர் வாழ்வதாயின் உழைப்புக்கு உத்தரவாதமற்ற சூழலில் களவோ, விபச்சாரமோ தான் அவர்களது தேர்வாகவுள்ளது. இதைப் புரிந்துகொள்ளாத ஊடகங்களின் செய்தியின் பக்கங்களைப் பார்த்தால் பெண்ணினம் எரிவதை பார்த்துக்கொண்டு பிடில் வாசிக்கிறார்கள்.

„சிறுமியோடு சில்மிசம்', „திரிசாவுக்கு நின்று போனது தனூசாலா', „கலிபோர்னியக் கடற்கரையில் பலர் பார்வையில் பாலுறவு,' 'ஆவி வந்து அருகில் படுத்தது' இப்படிக் கிழுகிழுப்பும் திகிலும் தரும் செய்திகளின் நிழலில் சமூகம் பற்றிய அக்கறையை எதிர்பார்ப்பது சாதுவிடம் சீப்பு கேட்பது போல . .

„பாம்பு இறைச்சி விற்கும் கடை! இதயம் பலவீனமானவர் பார்க்காதீர்கள்' இது இதே இணையத்தின் இரவல் பிரசுரம், இரவலாயினும் தேர்வு வேண்டும். பாதிப்பை மீறியும் பலனிருந்தால் வெளியிடலாம். இங்கே பாதிப்பு யாருக்கு? பலன் யாருக்கு? விளங்க முடியாதவர்களா வாசகர்கள்!

இவ்வாறான பிழைப்பு நோக்கிய பயணத்தை விட்டு செப்பனிட்ட செய்திகள் கருத்துக்களோடு சமூகத்துக்கு உதவுவதே ஊடக தார்மீகம். இதை இனியாவது நன்றே செய்ய முனையுங்கள் என வேண்டுகிறோம்.

இதைவிட எம்மவர் மரண செய்திகளும் இணையத்தளம், வானொலி, தொலைக்காட்சிகளில் அறிவித்தலாகின்றன. இலங்கையர் பரந்துவாழும் பாங்கில் இது வரவேற்புக்குரிய பணியே மறுப்பதற்கில்லை!

எதிரியின் மரணமாயினும் மரணமென்பது அனுதாபத்துக்குரிய ஒன்று! இனிமேல் சந்திக்க வாய்ப்பற்ற இறுதி சந்தர்ப்பம் மனிதனின் மரணம்! இவ்வகை மரணச் செய்தியைக் கூட முள்ளி வாய்கால் அனர்த்த அவல வேளைகளிலும் கறாரான கட்டணம் அறவிட்டுப் பிரசுரித்துக்கொண்ட இணையமும், தொலைக்காட்சியும் மறுபுறத்தில் தழிழர் அழிவு தாழாமற் நீலிக் கண்ணீர் வடித்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பதிந்து வைத்திருக்கும் கணனித் திரையில் பெயர்களும் திகதியும் மட்டுமே மாற்றுவதோ, தொடர்ந்து திரையில் ஓரிரு நாள் நிற்கவிடுவதோ பாரிய கஸ்டமான, அதிக செலவான பணியொன்றுமில்லை. இருந்த போதும் இதற்கென ஒரு சந்தையை உருவாக்கி அதற்கென ஒரு கட்டணம் வைத்து ஒட்டுமொத்த மரணக் குத்தகையை ஒரே இணையமோ ஒரே தொலைக்காட்சியோ எடுத்துவிட்டால் மரணித்தவனுக்குக் கூட வேறு போக்கிடமற்றுப் போகிறது.

எமது கிராமங்களில் மரணச் செய்தியை மேளத்தில் அடித்து அறிவிக்கும் வழமை அண்மையில் தான் அருகிப்போனது. இந்த செயலில் ஒழிந்திருந்த பாரிய மனித அபிமானமொன்று உங்களில் எத்தனை பேரறிவீர்களோ தெரியாது!

குறிப்பிட்ட கிராமத்தில் எத்தனை குறிச்சிகளோ, பறை அறையும் அந்த ஏழை எத்தனை மைல்கள் நடந்தானோ, பசி ஆறியிருந்தானோ, பசித்திருந்தானோ எது எப்படியிருந்தாலும் மரணத்தை அறிவிப்பதற்கு கூலி பெறுவதில்லை என்ற கொள்கைப் பற்றில் பரம ஏழைகளிடமே பரம்பரை தாண்டிய இறுக்கம் இருந்தது.

மரணத்தைக் கூடப் பணம் பண்ண யோசிக்கும் போது ஊடகங்களின் வரலாற்றுப் புகழ் வறுமையாகிப் போகாதா?

உழைப்பை மட்டும் குறியாக்கி ஊடகம் நடத்தும் திருடர்கள் உருசி கண்டவர்கள். செய்திக்காக பல்வேறு பாணியில் கலவரங்கள் உருவாக்கவும் தயங்காதவர்கள். இவர்கள் தாமாகத் திருந்துவது அரிதிலும் அரிது. முடிந்தால் நாமாக முயலவேண்டும்.!

யாருக்கு இக்கட்டுரை விளங்குதோ இல்லையோ! யாரை எதிர்வினையாக்கியிருக்கிறேன் என்பது இவ்வகை ஊடகங்களுக்கு நன்றாகவே விளங்கும்.

விமர்சனங்களிருப்பின். . . . . . delft@hotmail.de

கருத்துடன் உடன் பட்டால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . . . . . .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com