Saturday, December 13, 2014

தேர்தல் நெருங்க இலங்கை முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதை காண முடிகின்றது. குறிப்பாக காணி , வாழ்வாதாரம் மற்றும் மத வழிபாட்டு உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முடிவுகள் சில தமக்கு கிடைத்துள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும்அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் திருகோணமலை உயர்பாதுகாப்பு வலயமொன்றிலுள்ள கருமலையுற்று பள்ளிவாசல் தற்போது விடுவிக்கப்பட்டு இராணுவத்தினால் பள்ளி வாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் ரம்ழான் அன்வர் கூறுகின்றார். இந்த பள்ளிவாசலை விடுவிப்பதற்காக கிழக்கு மாகாண சபை ஊடாக இரு வருடங்களுக்கு மேலாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் அது கை கூடாமல் போனதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அந்த பகுதியில் கரைவலை மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் ஒலுவில் வெளிச்சவீட்டு அருகாமையில் கடந்த சில வருடங்களாக அமைந்திருந்த கடற்படை முகாமும் இன்றுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக புல்மோட்டை பிரதேசத்தில் காணி தொடாபான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கக் கூடிய அறிகுறிகள் தென்படுவதாவும் ரம்ழான் அன்வர் குறிப்பிட்டார்.

கடந்த 4- 5 வருடங்களாக முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்ட இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தவில்லை என்றும், தற்போது ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியாகவே இவை தற்போது நிறைவேற்றப்படுவதாகவும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இந்த முயற்சியானது அவர்களது எதிர்பார்க்கும் பலனை கொடுக்கமாட்டாது என்றும், கிழக்கு மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள் என்றும் அக்கட்சியை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் மஹ்ருப் இம்ரான் குறிப்பிடுகின்றார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com