Tuesday, May 13, 2014

சிறையில் உள்ள கூட்டாளிகளை விடுவித்தால் 200க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளை விடுவிப்போம் - தீவிரவாதிகள்

நைஜீரியா சிறையில் உள்ள கூட்டாளிகளை விடுத்தால், கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளை விட்டுவிடுகிறோம் என்று போகோ ஹரம் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அடங்கிய 17 நிமிட வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நைஜீரியாவில் இஸ்லாமிய மதக் கொள்கைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேற்கத்திய கலாசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் சிபோக் நகருக்கு அருகே பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து தாக்கியதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் வெடித்து சிதறியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளியில் இருந்து 276 மாணவிகளை வேன்களில் கடத்தி சென்றனர்.

இதில் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் மாணவிகளை கடத்தி சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதை தீவிரவாதிகள் மறுத்தனர். இதற்கிடையில் மாணவிகளை மீட்க அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் படைகளை நைஜீரியாவுக்கு அனுப்பியுள்ளன.

பதற்றமான சூழ்நிலையில், போகோ ஹரம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷேக், வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். 17 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் கடத்தப்பட்ட சிறுமிகள் ஒரு இடத்தில் அழுதபடி பிரார்த்தனையில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன.

வீடியோவில் அபுபக்கர் ஷேக் பேசுகையில், நைஜீரிய அரசு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் கூட்டாளிகளை வெளியில் விடவேண்டும். அப்படி செய்தால் சிறுமிகளை விட்டுவிடுகிறோம் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதற்கிடையில் கடத்தப்பட்ட மாணவிகளில் இருவர் பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும், சுமார் 223 பேரின் கதி என்ன என்றும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com