Tuesday, March 4, 2014

சர்வமதத் தலைவர்கள்’ தலைமையில் ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

மனித உரிமை என்ற போர்வையில் அரசியல் மற்றும் வர்த்தகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மேற்கத்தேய ஏகாதிபத்திய நாடுகள் முயற்சிக்கின்றன என சர்வமதத் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் தற்போது இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் மீண்டுமொரு குழப்பநிலையை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து மதத் தலைவர்களும், நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென்றும் சர்வமதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சர்வமதத் தலைவர்கள் இன்று பேரணியொன்றை நடத்தவுள்ளனர்.

‘மனித உரிமைகள் எனும் போர்வையில் தேசிய உரிமையில் கைவைக்காதே’ எனும் தொனிப்பொருளில் நடைபெற விருக்கும் இந்தப் பேரணி காலை 10 மணிக்கு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள பௌத்த மகா சம்மேளனத்திலிருந்து ஆரம்பித்து ஐ.நா அலுவலகத்தில் முடிவடையவுள்ளதுடன் ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சர்வமதத் தலைவர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது. 

தேசிய உரிமைகள் அமைப்பின் இணைத் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் அனைத்து மதங்களையும் சார்ந்த மதத் தலைவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று கொள்ளுப்பிட்டியில் நேற்று நடைபெற்றது இதில் தேசிய உரிமைகள் அமைப்பின் இணைத்தலைவர்களான சங்கைக்குரிய பெங்கமுவே நாலக்க தேரர், சங்கைக்குரிய கலகம தம்மரன்சி தேரர், அஷ் ஷெய்க் கலாநிதி ஹஸன் மௌலானா, அருட்தந்தை சரத் ஹெட்டியாராச்சி இராமச்சந்திரக் குருக்கள், பாபு சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் சந்தோசமாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில், சர்வதேச விசாரணையொன்றைக் கொண்டுவந்து நாட்டைக் குழப்ப சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த சங்கைக்குரிய பெங்கமுவே நாலக்க தேரர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, நான்கு மதத் தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை என்பதுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள் தொடர்புடைய தரப்பினரை மாத்திரம் சந்தித்துச் சென்றுவிட்டு தற்பொழுது அறிக்கை சமர்ப்பித்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப் பட்டிருக்கும் சர்வதேச சதியை முறியடிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்த கலகம தம்மரன்சி தேரர், நாட்டை மீண்டும் குழப்பி அதனூடாக தமது அரசியல் மற்றும் வர்த்தகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதாகக் கூறினார்.

அருட்தந்தை ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில், புகையிரதம், பேரூந்து, பொது இடங்கள், வழிபாட்டுஸ்தலங்களில் பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ யினர் கொன்று குவித்தபோது அமைதியாகவிருந்த சர்வதேசம், நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும் சூழ்நிலையில் மனித உரிமை பற்றிக் கேள்வியெழுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக்குறிப்பிட்டார்.

மேலும் அமெரிக்கா லிபியாவில் செய்ததை யோசித்துப்பார்க்க வேண்டும் கடாபியைக் கொன்ற பின்னரும் அங்குள்ள மக்களுக்கு அமைதி கிடைக்கவில்லை சர்வதேச சதிவலையில் லிபிய மக்கள் தற்போதும் மாட்டிக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதே வேளை இங்கு கருத்து தெரிவித்த அஷ் ஷெய்க் கலாநிதி ஹஸன் மௌலானா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை நிறையப் பொறுப்புக்களைக் கொண்டவர் எனினும் அவர் அந்தப் பொறுப்புக்களை விட்டுவிட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ்வதைக் குலைக்கும் சதிகாரர்களின் வலையில் சிக்கியிருப்பது கவலைக்குரிய விடயமாகும் எனக்குறிப்பிட்டார்.

சிரியா, பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தினமும் நடைபெற்றுவரும் குண்டு வெடிப்புக்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத நவநீதம் பிள்ளை அம்மா, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையில் நிலவும் அமைதியைக் குழப்பும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுவது கவலையளிக்கிறது.

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் சூழ்நிலையைக் குழப்பியடித்து மீண்டுமொரு பயங்கரவாத நிலையை உருவாக்குவதற்கு மேற்கத்தேய வாதிகள் எடுக்கும் முயற்சிகளுக்கு நவநீதம்பிள்ளை அடிபணிந்திருப்பது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com