Tuesday, January 21, 2014

கிழக்கு தமிழ் மக்கள் யாரிடமும் ஏமாறக் கூடாது! வ.கோ.தீர்மானத்தை ஆதரித்து இரத்த திலகம் இட்டவர்கள் தற்போது எங்கே சென்றார்கள்?

"தேசியம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள்தான் அதிகம் தேசியம் பற்றி பேசுகின்றார்கள்"

தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத் தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்போது தேசியத்தின் பால் ஈர்க் கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பலர் கையை கீறி இரத்த திலகம் இட்டார்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே சென்றார்கள்? அவர்களின் தற்போதைய நிலைதான் என்ன? என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றுகின்றபோது மேடையின் முன்னால் அமர்ந்து இருந்து உணர்ச்சிவசப்பட்டு கையைக் கீறி இரத்த திலகம் இட்ட மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்த பரிசு தியாகிகள் மற்றும் மாவீரர்கள் என்ற சொற்பதங்கள் மாத்திரம்தான்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கிழக்குவாழ் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அம்மக்களே தற்போது நன்கு உணர்ந்துள்ளார்கள். இதற்கு உண்மையான காரணம் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள்தான் என்பதனையும் அம்மக்கள் உணரா மல் இல்லை. உண்மையை கூறப்போனால் தேசியம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள்தான் அதிகம் தேசியம் பற்றி பேசுகின்றார்கள்.

ஏன்? நான் இதனைக் குறிப்பிடுகின்றேன் என்றால் அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்போது தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பலர் அதாவது கையை கீறி இரத்த திலகம் இட்டார்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே சென்றார்கள்? அவர்களின் தற்போதைய நிலைதான் என்ன? ஆனால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னின்றவர்களில் வடக்கைச் சேர்ந்தவர் களின் பெரும்பாலானவர்களின் குடும்பங்கள் அனைத்துமே ஐரோப்பிய நாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றார்கள். நமது மாகாணத்தவரின் நிலை என்ன? என்பதனை சற்று சிந்தியுங்கள்.

ஆனால் எமது மாவட்ட மக்களை எல்லாம் உசுப்பேற்றி உணர்ச்சிவயப்படுத்தி அழிவிற்கான அடித்தளமிட்டது அத் தீர்மானம் என்பதை முன் கூட்டியே அறிந்தும் கூட தங்களது அரசியல் அதிகாரங்களை அதாவது அவர்கள் வகித்த பதவிகளுக்கான கதிரைகளை பாதுகாப்பதற்கான ஓர் கபட நாடகத்தை நிறைவேற்றிய வடபுலத்தை சேர்ந்த சிலருக்கு கிடைத்த பரிசு என்றால், அது தங்களது குடும்பம் பிள்ளைகளுடன் ஐரோப்பிய நாடுகளில் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதுதான்.

இன்றும்கூட சம்பந்தன் மற்றும் மாவை இது போன்று இன்னும் பலர் தற்போது அரசியல் செய்கின்றவர்களின் பிள்ளைகள்கூட வெளிநாட்டிலே வைத்தியர்களாக தொழில் புரிகின்றார்கள். இது எல்லாம் எமது சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. தெரிவிக்க வேண்டும் என்பதற்காக என்னைப் போன்றவர்கள் பேசினாலும் அதனை எமது ஊடகங்கள் பிரசுரிப்பதும் இல்லை. எனவே மக்களே தற்போதைய நிலையிலாவது நீங்களே உங்களை கேள்வி கேட்டு ஏனைய சமூகங்களுடன் அரசியல் ரீதியில் ஒப்பிட்டு வாழ வேண்டும்.

தேசியம் பேசியவர்கள மற்றும் தற்போது அதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்ற வர்களின் ஒரே ஒரு ஆயுதம் கோசம்தான். அதாவது தேசியம் பேசிப் பேசி எமது பிரதேசத்தையே நாசமாக்கி சுடுகாடாக்கினார்கள். அத்தோடு நின்றுவிடாது கோசம் எழுப்பி எழுப்பி எம்மை எல்லாம் விசமாக்கி நாசமாக்கினார்களே தவிர, வேறு எதனையுமே சாதிக்கவில்லை. அதனால்தான் கடந்தகாலங்களில் நாம் விட்ட தவறை இனிவரும் காலங்களில் நிச்சயம் விடக்கூடாது என்று நான் தற்போது கூறுகின்றேன்.

இனிவருகின்ற காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் யாரிடமும் ஏமாறக் கூடாது. எம்மை யாரும் ஏமாற்றக் கூடாது என்கின்ற சிந்தனை மாற்றத்திற்கு கல்வி அவசியம் என்பதனை உணர்ந்துதான் கல்வி அபிவிருத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றேன்' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com