Friday, April 30, 2010

மேதின வரலாறு

குறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப் பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

அமெரிக்காவில் ஆரம்ப நாட்களில் பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. 'அதிக சம்பளம் வேண்டும்' என்பது தான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப் பட்டன. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், தொழிற்சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சனைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாகச் சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப் படுத்தியது. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக எழுப்பப் பட்டது.

"அதிகாலை முதல் அந்தி சாயும் வரை' என்பதுதான் அப்போதெல்லாம் வேலை நாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத்தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதின்னான்கு, பதினாறு, ஏன் பதினெட்டு மணித்தியாலங்கள் வேலையென்பதெல்லாம் அப்போது சாதாரண விடயங்கள். 1806 ஆம்ஆண்டு பிடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ( இலங்கையில் முதலாவது வேலை நிறுத்தம் 1896 லேயே, 90 வருடங்களின் பின் ஏற்பட்டது.) அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப் பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது தொழிலாளர்கள்; பத்தொன்பது, இருபது மணித்தியாலங்கள் வேலைவாங்கப் பட்டார்கள் என்ற விடயம் அம்பலமானது.

1820 மற்றும் 30 களில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்று பற்பல வேலை நிறுத்தங்கள் நிகழந்தன. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன்வைக்கப்பட்டன. பிலடெல்பியா நகர இயந்திர தொழிலாளர்களின் தொழிற்சங்கம்தான் உலகின் முதலாவது தொழிற் சங்கமாகக் கருதப்படுகின்றது. இந்தத் தொழிற் சங்கம் உருவாகி இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமை இச்சங்கத்திற்கே உரியது.

1827 இல் பிலடெல்பியாவில் கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப் பட்டது. 1834 இல் நியூயோர்க்கில் பேக்கரித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்த பேக்கரித்தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புறுத்தப் பட்டனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்திகள் அப்போது வெளியாகிக் கொண்டிருந்தன. 'தொழிலாளர்களுக்காக வாதிடுபவன்' (Workingmen´s Advocate) என்ற பத்திரிகை இச் செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டது. பத்து மணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஓர் இயக்கமாக உருவெடுத்தது.

1837 இல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்த போதிலும் வேன் பியூனர் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், அரச ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலை நாளை அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றன. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய உடனேயே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850 களில் இக் கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857 இல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்த போதிலும் நன்கு வளாச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கைகளை வென்று கொண்டன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்திற்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டுங்கள் நிகழந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த அவுஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணிநேரப் பொழுது போக்கு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன்வைத்து 1856 இல் போராடி, அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

2.எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் தொடங்கியது.
1884 இல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தது. ஆனாலும் இதற்கு ஒரு தலை முறைக்கு முன்பே அமெரிக்காவின் 'தேசிய தொழிற் சங்கம்' குறைந்த வேலை நேரத்திற்கான கோரிக்கையை முன்வைத்த பரந்த இயக்கத்தையே நடாத்தியது. 'தேசியத் தொழிற் சங்கம்' அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணம் மிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

1861--1862 இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது. இதற்குச் சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சுத் தொழிலாளர் சங்கம், இயந்திரத் தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற் சங்கங்கள் அப்போது மறையத் தொடங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளுர் தேசிய தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்த ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது.

இவ்வாறு பல தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866, ஆகஸ்ட் 20ம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச். சில்விஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஓர் இளைஞர். இவர் லண்டனில் இருந்த முதலாவது அகிலத் தலைவர்களான மார்க்ஸ், ஏங்கல்ஸ்சோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தேசியத் தொழிற் சங்கத்திற்கும் முதலாவது அகிலத்தின் பொதுக் குழுவுக்கமிடையே உறவை ஏற்படுத்த அவரால் முடிந்தது. தேசியத் தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866 இல் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

'அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலை நாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனை அடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும ;ஒன்று திரட்டத் தீர்மானிக்கிறோம்.'

மேலும் இம் மகாநாட்டில் 8 மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும்.. மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசிய தொழிற்சங்கப் போராட்டங்களினால் 8 மணி நேரக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. மேலும் இச் சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசாங்க வேலைகளில் 8 மணிநேர வேலை நாளை அமுல்படுத்தின. 1866 இல் அமெரிக்க காங்கிரஸ்சும் இதே போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. போஸ்டனைச் சேர்ந்த இயந்திரத் தொழிலாளியான 'ஐரஸ் டூவார்ட்' என்பவர்தான் இந்த 8 மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள் திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்று சொல்ல முடியாது. ஆனாலும் அடிப்படையில் இந்த இயக்கம் பாட்டாளிவர்க்கத்தின் வலுவான இயல்புகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாதத் தலைவர்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களேயானால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்பகட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் அமெரிக்காவில் தேசிய தொழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத்திற் கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.

சில்விஸ் தொடர்ந்து லண்டனில் உள்ள முதலாம் அகிலத்தோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1867 இல் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மகாநாடு சர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869 இல் முதலாம் அகிலத்தின் பொதுக் குழுவின் அழைப்பக்கு இணங்க பாசலில் நடைபெற்ற அகில காங்கிரஸ்சுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செய்தது. ஆனால் துரதிஸ்டவசமாக மகாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்காகோவிலிருந்து வெளிவந்த 'வோர்க்கிங்மென்ஸ் அட்வகேட்' பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி.காமெரன் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

அகிலமகாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டிய இளம் அமெரிக்கத் தொழிலாளர் தலைவனுக்கு ஒரு விஷேச தீர்மானத்தில் அஞ்சலி செலுத்தியது. 'பாட்டாளிவர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டுகாலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ், எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்து விட்டான்' என்றது அஞ்சலித் தீர்மானம். சில்விஸ்சின் மறைவு தேசிய தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.

3.எட்டுமணி நேரம் குறித்து மாக்ஸ்
1866 ஆம் ஆண்டு எட்டுமணி நேர வேலை நாள் என்ற முடிவை அமெரிக்கத் தேசியத் தொழிற் சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய முதலாம் அகிலத்தின் காங்கிரஸ்சும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

'வேலை நாளுக்குச் சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது. வேலை நாளுக்கான சட்ட பூர்வமான அளவு 8 மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மகாநாடு முன் மொழிகிறது'. தேசிய தொழிற் சங்கத்தின் இந்த 8 மணிநேர இயக்கத்தைக் குறித்து மார்க்ஸ் 1867 இல் வெளியான மூலதனப் புத்தகத்தில் 'வேலை நாள் குறித்து' என்னும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகின்றார். கறுப்பு மற்றும் வெள்ளைத் தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பந்தியில் பின்வருமாறு எழுதுகிறார். 'அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருக்கும். தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக்கொள்ள முடியாது. ஆனால் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதற் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஓர் இயக்கமாக அதிவேகத்துடன் அத்திலாந்திக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்ணியா வரையிலும் பரவியது.

இருவார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மகாநாடும், ஜெனிவா முதலாம் அகில காங்கிரஸ்சும் ஒரே சமயத்தில் 8 மணி வேலை நாளை முன்மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அத்திலாந்திக்கின் இரு புறமும் உற்பத்தி முறை நிலைமைகளால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை உருவாக்கியது.

ஜெனிவா காங்கிரஸ்சின் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப் போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. 'வட அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்தக் காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்துத் தொழிலாளர்களுக்கமான பொது மேடையில் முன்வைக்கிறது.' அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரஸ்சில் ஆளமை செலுத்தியது.

4.அமெரிக்காவில் மேதினம் பிறந்தது.

மார்க்ஸ் ஏங்கல்ஸ்சால் ஆரம்பிக்கப்பட்ட முதலாம் அகிலம் 1872 இல், தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்கு மாற்றியது. அது அப்போது கறாரான சர்வதேசத் ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின்பு 1876 இல் இது அதிகார பூர்வமாக கலைக்கப் பட்டது. பின் இது மாற்றியமைக்கப் பட்டு இரண்டாவது தொழிலாளர் அகிலம் என்று அழைக்கப் பட்டது. இதன் முதலாவது மகாநாடு 1889 இல் பாரிசில் நடைபெற்றது. இம்மகாநாட்டில்தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள், தங்கள் அரசியற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசிற் கோரிக்கையாக 8 மணி வேலை நாளுக்கு போர்க் குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப் பட்டது. இதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் 1884, அக்டோபர் 7 ஆம்நாள் சிக்காக்கோவில் அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மகாநாடு நடந்தது. இந்த மகாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவே பாரிஸ் மகாநாட்டு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

'1886 ஆம் ஆண்டு மே முதல் நாள்முதல் சட்டபூர்வமான வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் ஸ்தாபனப் படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்புக்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக்கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.'

எட்டு மணிநேர வேலை நேரத்தை எப்படி கொண்டுவருவது என்பது பற்றி கூட்டமைப்பு தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50000 க்கு உட்பட்டது. தங்கள்உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆ;லை,, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களை திரட்டவேண்டும் என்பதை அது அறிந்திருந்தது. அப்போதுதான் 8 மணி நேர வேலை நாளை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டே 'தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்' என அறிவித்திருந்தது. வேலை நிறுத்தத்தின்போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவைப்படும். மேலும் இவ் வேலை நிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப் பட்டுள்ள அனைத்துத் தொழிற் சங்கங்களும் அமைப்புகளும் கலந்து கொள்வதாலும் அவரவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறவேண்டியது அவசியமாகும். இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கூட்டமைப்பானது தற்போதுள்ள அமெரிக்கத் தொழிலாளர்களது கூட்டமைப்புப் போலவே சுயேச்சையாக கூட்டமைப்பு முறையில் ஏற்பட்டது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற் சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவர்களைக் கட்டுப்படுத்தும்.

5.மேதின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்.
1877 இல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக் கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கு எதிராக இராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப் போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெனுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப் பட்டது.

இப் போராட்டங்களின் விளைவாக அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன்போர்க் குணமும் ஒழுக்க நெறியும் மேலும் செழுமையடைந்தது. இப்போராட்டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தது.

ஏனெனில் இணர்டு ஆண்டுகளுக்கு முன்புதான் 1875 ஆம் ஆண்டு சுரங்;கத் தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிர போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்கு மரத்தில் ஏற்றினர்.

அமெரிக்கத் தொழிற்துறை மற்றும் உள்நாட்டுச் சந்தை1880-1890 க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிரமாக வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-1885 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லாத் திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலை நாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியைத் தந்தது. கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. 'நைட்ஸ் ஒப் லேபர்;' என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. 8 மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களை திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலை நாள் இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு 'நைட்ஸ் ஒப் லேபர்' ஸ்தாபனத்தை கூட்டமைப்பு கேட்டக் கெண்டது. அனைத்துத் தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனைப் பெற முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்திருந்தது.

1885 இல் கூட்டமைப்பு மாநாடு அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்திற்கான தயாரிப்புகளில் இறங்கியது குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினர். இந்த போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. இது கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கியது. 'நைட்ஸ் ஒப் லேபரின்;' உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் மதிப்பு உயர்ந்தது. வேலை நிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க 'நைட்ஸ் ஒப் லேபர்' அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன் பவ்டர்லி என்பவன் நாசகார வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற் சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென இரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊளியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். 8 மணி நேர வேலை நாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிப் படர்ந்து கொண்டது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்து கொண்டிருந்தது.

தொழிலாளர்களின் அப்போதய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின்போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும். அப்போது நிகழ்ந்த பல வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களின் போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின. முந்திய ஆண்டைக் காட்டிலும் 1885-1886 களில் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 1886 மே முதல் நாளுக்கான வேலை நிறுத்தத் தயாரிப்புகளோடு 1885 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது. 1881-1884 இல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 250000 ஆகவும் உயர்ந்தது. 1885 இல் நடைபெற்றவேலை நிறுத்தங்களைப் போல இரு மடங்கு 1886 இல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 1572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டார்கள். 1885 இல் 2467 ஆக இருந்த பாதிக்கப் பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886 இல் 11562 ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம். 'நைட்ஸ் ஒப் லேபர்' ஸ்தாபனத்தின் நாச வேலை இருந்த போதிலும் 8மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

இவ்வேலை நிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும். இங்குதான் வேலை நிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது. மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடை பெற்றன. நியூயோர்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயிண்ட் லூயிஸ், பிட்ஸ்பார்க், டிட்ரோய்ட் ஆகிய நகரங்களில் வேலை நிறுத்தங்கள் சிறப்பாக நடைபெற்றன. உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவில் இருந்தன. இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும். ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது. முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப்போர் என்றார்கள். மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள். அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவியிருந்த அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மே முதல் தின வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றி கண்டதாகச் சொல்லப் படுகின்றது. மற்ற இடங்களில் 8 மணி நேர வேலை நாளை அடைய முடியாவிட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்த்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.

6.சிக்காகோ வேலை நிறுத்தமும் 'ஹே' சந்தையும்.
சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிக தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல்ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்கள் போராட்ட உணர்வை கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.

போர்க்குணம் உள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலை நிறுத்தம் பெருமளவுக்கு பிரகாசித்தது. வேலை நிறுத்தத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே அதற்கான தயாரிப்புகளை செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப் பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் என்பது தொழிற்சங்கக் கூட்டமைப்பு, 'நைட்ஸ் ஒப் லேபர்', சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி( அமெரிக்கத் தொழிலாளர்களின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை கொண்ட ஓர் ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது. இந்த 8 மணி நேர சங்கத்திற்கு இடது சாரித் தொழிற் சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற் சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்திற்கு முந்திய நாளான ஞாயிற்றுக் கிழமையன்று மத்திய தொழிற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு விடுத்ததன் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைக் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் ஏப்போதும் இல்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையின் முக்கியத்துவம், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத் தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தை தந்தது. அடுத்த சில நபட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1866 மே முதல் தினம் உச்சக் கட்டத்தை அடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்திகள், ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களை கைது செய்தது. போர்க்குணம் மிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கிவிடலாம் எனக் கனவு கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் 'வைகோல் சந்தை விவகாரம் (ஹே மார்க்கட் )' என்றழைக்கப் படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3 ஆம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார் மிக் ரீப்பர் வோர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த பொலீஸின் காட்டு மிராண்டித் தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4 ஆம் நாள் வைக்கோல் சந்தைச் சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீஸ் மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலை தொடுக்க ஆரம்பிக்கும்போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவரைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் 7 பொலீஸ் உத்தியோகத்தர்களும் 4 தொழிலாளர்களும் கொல்லப் பட்டனர். வைக்கோல் சந்தைச் சதுக்கத்தில் ஏற்பட்ட இரத்த ஆறும், போர்க்குணம் மிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும் , தூக்கு மேடைக்கும் அனுப்பியதுதான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. நாடெங்கிலுமுள்ள முதலாளிகளும் சிக்காகோ நகர முதலாளிகளுக்கு ஆதரவு தந்தனர். அன்று தொழிலாளர்களின் இரத்தத்தால்தோய்ந்த சிவப்பு ஆடைகளைப் பதாகைகள் ஆக்கித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்ட ஊhவலங்களை நடாத்தினர். அன்று முதல் மேதினக் கொடியும் தொழிலாளர் பதாகைகள் சிவப்பு நிறத்தால் அடையாளப் படுத்தப் பட்டன.

1889 ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. இதன்மூலம் வேலை நிறுத்த இயக்கத்தின் போது இழந்த தங்கள் பழைய நிலையை மீண்டும் அடைய அந்த முதலாளிகள் தீர்மானித்தனர்.

சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு 1888 இல் செயிண்ட் லூயிஸில் தொழிலாளர் கூட்டமைப்பு கூடியது.( தற்போது அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்றுஅழைக்கப் படுகிறது). அப்போது அங்கே 8 மணி நேர இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க தீர்மானம் எடுக்கப் பட்டது. இரணடாண்டுகளுக்கு முன் ஒரு வர்க்க அரசியல் பிரச்சனையை அடிப்படையாக வைத்த, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்திய மே முதல் நாளையே மீண்டும் 8 மணி நே இயக்கத்தைத் துவக்குவதற்கான நாளாக அங்கே அறிவித்தார்கள். 1889 ஆம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு வேலை நிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில் வெற்றி கண்டது. வலுவான முறையில் தயாரிப்புகளோடு விளங்கிய மரவேலைத் தொழிலாளர் சங்கம் முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்றும் அது வெற்றி பெற்ற பின் மற்றய சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

7.மே தினம் உலக தினமாக மாறியது.
சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்கத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்து கூறுகின்றார். '8 மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தை பரவலாக்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தோம். பாரிசில் சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ்சுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த காங்கிரஸ்சின் மூலம் உலகளாவிய ஆதரவை பெறுவதன் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்'. 1889 ஆம் ஆண்டு 14ஆம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிசில் நடந்தது. இதற்காக உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்கத்தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர் 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸ்சும் ஏங்கல்ஸ்சும் உருவாக்கிய அகிலத்தை போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப் பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப் பட்டது பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ் கண்ட தீர்மானத்தை நிறை வேற்றியது.

'எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்ட பூர்வமாக்க கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம்தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம் மாநாடு தீர்மானிக்கிறது 1888 டிசம்பரில் செயிண் லூயிஸில் கூடிய அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகையை ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாளை சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. எனவே அந்த குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.

1890 ஆம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிடவேலைத் தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீற்றர் மேக்யூரி தலைமையில் 8 மணி நேர வேலை நாளுக்காக பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஜேர்மனியில் சோஸலிஸ்டுகளுக்கு எதிராக பல விஷேச சட்டங்கள் இருந்த போதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தைக் கொண்டாடினார்கள். அதே போல் மற்றய ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகார வர்க்கத்தின் எச்சரிக்கைகளையும் ஒழுங்கு முறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினர்.

அமெரிக்காவில் சிக்காக்கோவிலும், நியூயோர்க்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத் தக்கவையாய் இருந்தன. ஆயிரக் கணக்கானவர்கள் தெருக்களில் 8 மணி நேரக் கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.

1891 இல் இரணடாம் அகிலத்தின் அடுத்த மநாடு பிரான்சில் நடந்தது. மே முதல் நாளின் உண் மையான நோக்கம் 8 மணி வேலை நாள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும், நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலை நாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மேதின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவு படுத்தவும் ஸ்தூலப் படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஸ் தொழிலாளர் தலைமையோ ஜேர்மன் சமூக ஜனனாயகவாதிகளோடு சேர்ந்து கொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்ப வாதத்தை வெளிக்காட்டியது.


8. உலக மேதினம் குறித்து ஏங்கல்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஜேர்மன் நான்காவது பதிப்புக்கு 1890, மே 1 ஆம் தேதி ஏங்கல்ஸ் எழுதிய முகவுரையில், உலகப் பாட்டாளி வர்க்க ஸ்தலங்களை விமர்சிக்கும் பொழுது முதலாவது உலக மே தினம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார். 'நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. அது முதன்முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணி நேர வேலை சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காக திரண்டிருக்கிறது. நாம் பாhக்கக் கூடிய இந்த அற்புதமான காட்சி உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்தக் காட்சியை பார்ப்பதற்கு என்னுடன் உயிரோடிருந்தால்.....' உலகம் முழுவதும் இப்போராட்டம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. இது உலகத்தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வையும் சிந்தனையையும் ஆழமாகத் தொட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிகமான மக்கள் மே தின ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

1893 இல் இரணடாம் அகிலத்தின் மாநாடு சூரிச்சில் நடைபெற்றது. அதில் ஏங்கல்ஸ் கலந்து கொண்டார். அப்போது நிறைவேற்றப்பட்ட மே முதல் நாள் தீர்மானத்தில் சேர்க்கப்பட்ட சேர்க்கை தொழிலாளர்களின் ஆர்வத்தை வேளிப்படுத்துவதாக உள்ளது.

'உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப்பாகுபாடுகளை அழித்தொழிப்பது. முற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவதாகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் 8 மணி நேரவேலை நாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்.'

மே தினத்தைப் போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்குப் பதிலாக கேளிக்கை மற்றும் ஒய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்வாதத் தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர் குலைக்க முயற்சித்தார்கள். இதற்காக மேதினத்தை அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை ஏற்கனவே விடுமுறை நாள். எனவே அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம். சீர்திருத்தவாதத் தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்சிகளுக்குமான உலக விடுமுறை நாளாகும். சூரிச் மாநாடு மே தினம் முதலாளித்துவச் சுரண்டல், அடிமைத்தனம், வர்க்க வேறுபாடுகள், இன ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானித்தது.

இந்தத்தீர்மானம் இந்தத்தலைவர்களை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. ஏனெனில் அகிலத்தின் முடிவுகள் தங்களைக் கட்டுப் படுத்தும் என்பதையே அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சோஷலிச மாநாடு என்பது அவர்களைப் பொறுத்தவரை போருக்கு முன்பு ஐரோப்பிய தலை நகரங்களில் நடந்த பல்வேறு மாநாடுகளைப்போல சர்வதேச நட்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. பாட்டாளி வர்க்க நடவடிக்கைகளை அவர்கள் முறியடிக்கவும் அலட்சியப் படுத்தவும் எல்லா வேலைகளையும் செய்தார்கள். தங்களுக்கு ஒத்துவராத மாநாட்டுத் தீர்மானங்களைக் கிடப்பிலே போட்டார்கள். இருபதாண்டுகளுக்குப் பின்பு இந்த சீர்திருத்தவாதத் தலைவர்களின் சோஷலிசமும் சர்வதேசியமும் நிர்வாணமாக்கப் பட்டு அம்பலப் படுத்தப்பட்டது. 1914 இல் இந்த சர்வதேச மேடை சீர்குலைந்தது. காரணம் இது தோன்றிய நாளிலிருந்தே இதன் அழிவு சக்தியாக இதைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய சீர்திருத்தவாதத் தலைவர்கள் இதனுள்ளே இருந்து வந்தார்கள்.

1900 ஆம் ஆண்டு நடைபெற்ற அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில், முந்திய மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப் பட்டது. மேலும் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில், மே முதல் நாள் வேலை நிறுத்தம், மே தின ஆர்ப்பாட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கும் என்ற வாக்கியம் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது. அடுத்து வந்த மேதின ஆர்ப்பாட்டங்கள் மேலும் பலத்தோடு திகழ்ந்தது. ஆர்ப்பாட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் கலந்துகொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. உலகெங்கிலுமுள்ள ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு ஓர் எச்சரிக்கையாக வந்து சென்ற மே தினங்கள் ஒரு சிவப்பு தினமாக மாறியது.

9.மே தினம் குறித்து லெனின்.
மே தினத்தை ஓர் ஆர்ப்பாட்ட தினமாக ரஷ்சியத் தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால புரட்சி இயக்க நடவடிக்கைகளின்போதே அறியச் செய்தார். செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் என்ற ரஷ்சியாவில் இருந்த ஒரு மார்க்ஸ்சிய அரசியல் சங்கத்திற்காக 1896 ஆம் ஆண்டு லெனின் சிறையில் இருந்தபோது மே தின துண்டுப் பிரசுரம் ஒன்றை எழுதினார். அந்தப் பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிசாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப் பட்டன. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரடியான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தது. 'பிரசுரம் வெளி வந்த ஒரு மாதத்திற்குப் பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்திற்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம்தான்' என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்தப் பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தாங்கள்வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப் படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு, மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.

'பிரான்ஸ், இங்கிலாந்து,ஜேர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் மே 1 அன்று பொது வேலைநிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினார்கள். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்துச் சென்றனர். மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்காலப் போராட்டங்களுக்கான திட்டங்களையும் குறித்துப் பேசினார்கள். இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு, அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக் கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரப் பொழுது போக்கு என்பதை நினைவு படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறாhகள்.'

ரஷ்சியப் புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900 ஆம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப் பட்ட 'கார்க்கோவில் மே தினம்' என்ற பிரசுரத்தின் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகின்றார். 'இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்சிய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே முதல் நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம். மே தின நிகழ்சிகளில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்குகொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்சிய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும் தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியான சந்தர்ப்பமும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.

மேதின ஆர்ப்பாட்டங்கள் குறித்து 6 மாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. லெனினுக்கு மே தினம் என்பது 'ரஷ்சிய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டதிற்கும், பாட்டாளிவர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாகும்.'

மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900 ஆம் ஆண்டு கார்க்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார். 'வேலை நிறுத்ததில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகுஜனக் கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகைகள், கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித் தன்மை, 8 மணி நேர வேலை நாள், அரசியல் விடுதலை இவைகள்தான்'

கார்க்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்துகொண்டார். காரணம், மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று அவர் விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின் வருமாறு எழுதுகின்றார்.

'8 மணி நேர வேலைதான் என்ற முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலிருந்து கார்க்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோஷலிஸ தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறர்கள் என்பது தெரிகிறது.

குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இது போன்ற ஒரு கோரிக்கையை, மிகக் கரிசனையாகவும் ஒழுங்காகவும் முன்வைக்க வேண்டும். பத்து சத ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்து அதன் வீரியத்தைக் குறைக்கக் கூடாது. 8 மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்டு முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக் காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம். தற்போதய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிப்பதாகும்.

10.மே தின அரசியல் முழக்கங்கள்
உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஒரு கவரும் காந்தமாகும். மே தின ஆர்ப்பாட்டங்களின்போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப் பட்டார்கள். உலகத் தொழிலாளர்கள் ஒற்றுமை, எல்லோருக்கும் ஒரே மாரியான வாக்குரிமை அதாவது சர்வஜன வாக்குரிமை, ஏகாதிபத்தியப் போர் அல்லது காலனி ஆதிக்க எதிப்பு, தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு, தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், தொழிலாளர்களுக்கான அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை, அவசரகாச் சட்டத்தை நீக்குதல் போன்றவை அந்தக் கோரிக்கைகளில் சிலவாகும்.

1904 ஆம் ஆண்டு இரண்டாம் அகிலத்தின் ஆம்ஸ்;ரடம் மகாநாட்டில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 'ஆம்ஸ்ரடம்மில் நடைபெறும் இந்த சர்வதேச சோஷலிஸ்ட் மாநாடு அனைத்து சமூக ஜனனாயக ஸ்தாபனங்களையும், எல்லா நாடுகளிலுமுள்ள தொழிலாளர்களையும் மே முதல் நாள் அன்று 8 மணி நேர வேலை நாள்ச் சட்டமாக்கும் படியும், பாட்டாளி வர்கக் கோரிக்கைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும் முழுமையான சக்தியோடு போராடுமாறு கேட்டுக் கொள்கிறது.

மே முதல் நாள் ஆர்ப்பாட்டத்திற்கு வேலை நிறுத்தமே சிறந்த வழியாகும். எனவே மாநாடு எல்லா பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களுக்கும், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழிலாளர்களை பாதிக்காத வண்ணம் மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதை கட்டளையாகச் சொல்கிறது.'

11.வெகுஜன வேலை நிறுத்தம் மாபெரும் ஆயுதம்
பாட்டாளி வர்க்கத்தின் சக்தியை பலர் புரிந்து கொள்வதில்லை. தேர்தல்காலங்களின் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டும் பார்த்தால் பாட்டாளிவர்க்கத்தின் சக்தி ஒரு சக்தியாகத தெரியாது. முதலாளித்தவத்தின் வரலாறு என்பது கிராமப் புறங்கள் பெரு நகரங்களுக்கு அடிமைப்படுத்தப் பட்ட வரலாறாகும். நரங்களிலே இரண்டு தரப் படுத்தப்பட்ட சுயாதீனமான அரசியற்சக்கிகள் ஆளமை செலுத்துpன்றன. ஓன்று பெருவாரி மூலதனத்தையும் பணங்ளையும் குவித்து வைத்திருக்கின்ற பெரு முலாளிகள். மற்றது மூலதனத்தையும் செல்வத்தையும் உற்பத்தி செய்ய வல்ல பாட்டாளிகள். இவர்களைத் தவிர்ந்த மற்றவர்கள் பெருவாரியான விவசாயிகளோ எண்ணுக்கணக்கற்ற உதிரி மனிதர்களோ இந்த இரண்டில் ஒன்றைப் பின்பற்றுபவர்களாகும். தேர்தல் காலங்களில் வாக்குகளின் எணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அளந்து பார்த்தால் ஒரு விவசாயிக்கோ அன்றேல் ஓர் உதிரித் தனிமனிதனுக்கோ ஒரேயொரு வாக்கே உரிமையானது.

தொழிலாளிக்கும் ஒரேயொருவாக்கே போடும் உரிமை இருக்கிறது. இப்படி அளந்து பார்க்கையில் தொழிலாளரது பலம் அற்பமானது. விவசாயிகளும் மற்றவர்களும் தொழிலாளர்களை விடப் பலமானவர்கள் போலத் தோன்றும். புரட்சிகர நாட்களில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற சமப்படுத்தல் பிரமை நிறைந்ததாகி விடும். ஆயிரம் றெயில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் செய்வது ஏற்படுத்தும் அரசியற் தாக்கமானது மில்லியன் கணக்கான கிரமப்புறத்தவர்களதும் உதிரிளதும் போராட்டங்களிலும் பார்க்க பெரிய பின்விளைவுகளைப் பிரதி விளைவுகளை ஏற்படுத்தும். நவீன சமூக வர்க்கங்களின் அரசியற் பலத்தை வெறும் எண்ணிக்கையால் மட்டும் அளவிட முடியாது. மாறாக அவர்களின் சமூகப் பங்களிப்பாலும் அவர்களது சமூகசக்தியாலும் மட்டமே நிhணயிக்கப் படும்.

வெகுஜன வேலை நிறுத்தம் என்ற ஆயுதமே தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் ஆயுதமாகும்.

நடந்த முடிந்த சமூகப் புரட்சிகள் இதைப் பலதடைவை நிறுவிக் காட்டியுள்ளன. ஒரு கிழமைக்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள்;, வைத்தியசாலைத் தொழிலாளர்கள், நகரசுத்தித் தொழிலாளர்கள், அரச எழுதுவினைஞர்கள், கடைச் சிப்பந்திகள், நெருப்பணைக்கும் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்களென்று ஒட்டு மொத்தத் தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டால் நாட்டின் நிலமை என்ன வாகும். 1953 கர்தாலைப் பற்றி கொல்வின் ஆர் டி சில்வா வர்ணிக்கையில் 'கொழும்பு நகரத்தில் தொழிலாளர்கள் யந்திரங்களை நிறுத்திவிட்டு வேலைத் தலங்களை விட்டு வேளியேறி றோட்டுக்கு இறங்கினார்கள். பக்கத்துத் தொழிற்சாலைகளுக்குக் கூக்கரல் இட்டுக் கொண்டு சென்றார்கள். வேலை நிறுத்தம் செய்யும்படி கேட்டார்கள். அவர்களும் கூக்குரலிட்டுக் கொண்டு வெளியேறி றோட்டுக்க வந்தார்கள். றோட்டில் வந்து போனவர்களெல்லாம் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். இப்படி றோட்டுககு; றோடென்று தொழிற்சாலைக்குத் தொழிற்சாலையென்று வெகுசனக் கூட்டம் மடைதிறந்த காட்டாற்று வெள்ளம் போலப் பெருகிக் கொண்டே போனது. எதிர்த்திசையிலிருந்த வந்தவர்கள் எல்லாம் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். றோடுகள் நிரம்பி வழிந்தன. பக்கத்துக் கட்டிடங்களிற் புகுந்து தன்னிச்சையாக உடனடிப் புரட்சிக் கூட்டங்களை நடாத்தினார்கள்.

இப்படியான கூட்டங்களிலே பழைய பார்வையாளர்கள் வெளியேறுவதும் புதிய பார்வையாளர்கள் புகுந்து கொள்வதுமாக இருந்தது. பேச்சாளர்களும் புதுப் புதியவர்கள் வந்து புரட்சிப் பிரகடனங்களைச் செய்தார்கள். என்ன காரணத்திற்காக இந்தக் கர்த்தால் நடைபெறுகிறது என்பதை விளக்கினார்கள். மக்களுக்கு தாங்கள் அரசாங்கத்தைவிடப் பலமானவர்கள் என்ற மாபெரும் நம்பிக்கை ஏற்பட்டது. கொழும்பு நகரமே ஒரு புரட்சிநகர நகரமாகச் சில மணித்தியாலங்களில் உருமாறியது. பொலிசினது தெருத்தடைகள் எல்லாம் துச்சமாக மதிக்கப்பட்டுத் தூறு செய்யப் பட்டன..... ஈற்றில் பெரிய பெரும்பான்மைப் பலத்தோடு ஆட்சியமைத்த பிரதமர் ட்டலி சேனனாயக்கா தனது வதிவிடத்தை விட்டோடி துறைமுகத்தில் நின்ற பிரித்தானியக் கப்பலில் தஞ்சம் புகுந்து கொண்டார்.

கர்த்தால் செய்பவர்களை ஒருவரும் தடுக்க முன்வரவில்லை. கடைக்காரர்ளும் தெருவோரச் சனங்களும் உணவுகளையும் பிஸ்கட்டுளையும் குடிநீர்களையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். தொழிலாளிவர்க்க வெகுஜனப் போராட்டத்திற்கும் தனிமனித பயங்கரவாதிகளது ஆயுதக் கொலைகளுக்குமிடையேயுள்ள வித்தியாசம் இதுதான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com