Sunday, January 5, 2014

தமிழரசுக் கட்சியிடம் சரணடைந்து விட்டாரா சித்தார்த்தன்? சித்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது கட்சியுடன் தமிழரசுக் கட்சிக்குள் சரணாகதி அடைந்து விட்டதாக தெரியவருகிறது. 2009 க்கு முன்னர் அரசுடன் கூட்டாக இயங்கிய புளொட் அமைப்பு புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட ஆசனங்களைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலை ஏற்படுத்தியது. இந்த வெற்றியை வைத்துக் கொண்டு அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட புளொட் கூட்டமைப்பை எதிர்க்க முடியாமல் தோல்வியடைந்தது.

இதன் பின்னர் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமது எதிர்காலம் உண்டு என புளொட் அமைப்பும், புளொட் அமைப்பை இணைப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாமல் தடுக்க முடியும் என கூட்டமைப்பும் கருதி பல சுற்றுப் பேச்சுக்களின் இறுதியில் புளொட் கூட்டமைப்புடன் இணைந்தது.

புளொட் அமைப்பை கூட்டமைப்பில் இணைப்பதற்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதேபோல இன்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட் அமைப்பை எதிர்த்து வருகின்றனர். இந் நிலையில் ஈபிஆர்எல்எப் கட்சியின் முயற்சி காரணமாக கூட்டமைப்பினுள் புளொட் உள்வாங்கப்பட்டு, அதன் பின் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில்களில் போட்டியிட்டு புளொட் அமைப்பினர் சிலரும் கூட்டமைப்பில் வெற்றி பெற்றனர்.

அதன் பின் மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது விசப் பரீட்சையாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது செல்வாக்கு மிக்க வவுனியாவில் தனது கட்சி சார்பில் வேறு ஒருவரை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு தனது தந்தையின் பெயரையும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த கஜதீபனையும் பயன்படுத்தி எதிர்பாராதவிதமாக அமோக வெற்றி பெற்றிருந்தார். தேர்தல் காலங்களில் தமிழரசுக் கட்சியை அனுசரித்து நடந்த சித்தார்த்தன் தற்போதும் அக் கட்சியின் செயற்பாடுகளை ஆதரித்தும் அதனை நியாயப் படுத்தியும் வருவதுடன் தமிழரசுக் கட்சியுடன் முழுமையாக இணையக் கூடிய வகையில் செயற்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் செய்ய சென்ற போது அதனை சரி என நியாப்படுத்தி கூடச் சென்ற சித்தார்த்தன் தமிழரசுக் கட்சி விடும் தவறுகளை பகிரங்கமாக எதிர்க்க மறுத்து வந்தார். சத்தியப்பிரமாணம் தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்ட போதும் மௌனமாக இருந்து செயற்பட்டவர் இச் சித்தார்தன். இந் நிலையில் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடன் சென்று இரகசிய உடன்படிக்கை தொடர்பாக கதைத்ததை சரியென நியாயப்படுத்தி, ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்னும் தோரணையில் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும் மூர்த்திகள் என அழைக்கப்படும் சம்மந்தன், சுமந்திரன், சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இதே கொள்கையில் இணக்கப்பாட்டுடன் உள்ளனர். இந் நிலையில் சித்தார்த்தனும் மீண்டும் அதே கொள்கையில் செயற்பட்டு தமிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகளின் நிகழ்டச்சி நிரலுடன் ஒத்தியங்கவுள்ளதாக தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com