Friday, December 13, 2013

உலகின் கவனத்தை ஈர்த்த ஒபாமா- ரவுல் காஸ்ட்ரோ கைலாகு (படங்கள் இணைப்பு)

நெல்சன் மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர் பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் அரசியல் உறவு ஏற்படுத்திக் கொண்டதால் கியூபாவுடனான அரசியல் உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா.

இந்நிலையில், நேற்று முன்தினம் தென்ஆப்ரிக்காவில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதற்கு, சுதந்திர உலகத் தலைவர் ஒருவரும், சர்வாதிகாரி ஒருவரும் கைகுலுக்கிக் கொள்வது ஏற்கத்தக்கதல்ல என அமெரிக்காவின் குடியரசு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக கியூபா அதிபல் ரவுல் காஸ்ட்ரோவிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா கைகுலுக்கியது திட்டமிட்ட செயல் அல்ல என விளக்கம் அளித்துள்ளார் வெள்ளை மாளிகையின் உதவியாளர் பென் ரோட்ஸ்.மேலும், இது குறித்து அவர் கூறியதாவது,

'மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டார்களே தவிர, இதில் வேறெந்த முக்கியத்துவமும் இல்லை. மேலும், கியூபாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டு வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், கியூபா தரப்பில் இந்தக் கைகுலுக்கல் பற்றிக் குறிப்பிடுகையில், 'இருநாட்டு தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்டுவதாக அமைந்துள்ளது' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க, கியூபா அரசியல் பிரிவிற்குப் பின்னர், கியூபா அதிபர் ஒருவருடன் கைகுலுக்கும் 2 -வது அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்த ஐ.நா. சபை கூட்டத்தின்போது முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கினார்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com