Friday, July 13, 2012

தடை செய்த அமைப்புக்கு பரிவு காட்டினால் கடும் நடவடிக்கை! இந்திய மத்திய அரசு எச்சரிக்கை!

"இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட கலெக்டர், தமிழக டி.ஜி.பி., மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி டி.ஐ.ஜி.,க்கள், க்யூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, மத்திய உள் விவகாரத்துறை அமைச்சக இணைச் செயலர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார்.

மத்திய அரசின் உத்தரவு விவரம்:

தமிழருக்கு என, தாய் நாட்டை (தமிழ் ஈழம்) உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சட்ட விரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது. தோல்வியடைந்த பின் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கைவிடாமல், ஐரோப்பாவில் நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகள் வழியாகவும், தனி ஈழம் அமைப்பதற்காக, மறைமுகமாக செயல்பட்டு வருவதாலும், எல்.டி.டி.ஈ., தலைவர்கள் அல்லது போராளிகள், சிதறிக் கிடக்கிற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரிவினைவாத தமிழ் பற்றார்வக் குழுவினரும், எல்.டி.டி.ஈ., ஆதரவாளர்களும், மக்களிடையே பிரிவினைவாத போக்கினை தொடர்ந்து வளர்த்து வருவதுடன், தமிழகத்தில் எல்.டி.டி.ஈ.,யினருக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது.

அதனால், பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல், குந்தகம் விளைவிப்பதாக கருதி, சட்டவிரோதமான அமைப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறது.எனவே, 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், உடனடியாக செயலுக்கு வரும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com