Friday, July 13, 2012

வீட்டு வேலைக்காரப் பெண் கற்பழித்து கொலை: இந்திய முன்னாள் அமைச்சர் கைது.

இந்தியாவில் பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமார் என்பவர் தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது யுவதியை கற்பழித்து கொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இவரது சாரதிகள் மூவரும் கைது செய்யப்பட்டள்ளனர்.

பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏவான எம்.ராஜ்குமாரின் வீடு பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வெங்கடாசலபதி நகரில் உள்ளது. இவரது வீட்டில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சந்திரன்- சுசீலா தம்பதியின் மகள் சத்யா (15) வீட்டு வேலைக்கு சேர்ந்தார். 9-ம் வகுப்பு படித்து வந்த சத்யாவை பீர்மேடு பகுதியை சேர்ந்த வேலைக்கு ஆள் அனுப்பும் தரகர்கள் பன்னீர்செல்வம், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தான் ராஜ்குமாரின் வீட்டில் சேர்த்துவிட்டனர்.

வறுமை காரணமாக சத்யாவை வேலைக்கு அனுப்பிய சந்திரன்- சுசீலா தம்பதியினர் கடந்த மாதம் 23ம் தேதி பெரம்பலூர் வந்து ரூ.5,000 பெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பினர்.

இந் நிலையில் கடந்த 28ம் தேதி சத்யா தனது தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது என்னால் இங்கு இருக்க முடியவில்லை, ஊருக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார்.

மறுநாள் சத்யா உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராஜ்குமார் வீட்டினர் பெற்றோருக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்து சந்திரன் கடந்த 30ம் தேதி பெரம்பலூர் வந்தார். சரியான சிகிச்சை தராததால் சத்யாவை அங்கிருந்து அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால், சிகிச்சைக்கு பணம் போதாததால் சத்யாவை கடந்த 4ம் தேதி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 6ம் தேதி சத்யா இறந்தார்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்திரன் கூறியதால் சத்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சத்யா விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து சத்யாவின் உடல் பீர்மேடு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சத்யாவின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.

இதுபற்றி பீர்மேடு போலீசார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பிஜூ மோள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சத்யாவின் உடல் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் சத்யாவின் உடலில் விஷம் இருந்ததும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதும், அதனால்தான் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பீர்மேடு போலீசில் சந்திரன் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகள் சத்யா கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இதில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து கேரள போலீசார், பெரம்பலூர் போலீசாருக்குத் தகவல் தந்தனர். இதையறிந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராஜ்குமார், நேற்றிரவு பெரம்பலூர் போலீசில் சரணடைந்தார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது கார் டிரைவர் மகேந்திரன், புரோக்கர் அன்பரசன் ஆகியோரையும் போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு கைது செய்தனர். கைதான 3 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது கற்பழிப்பு (376), ஆள் கடத்தல் (367 ஏ), கொலை வழக்கு (302) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புரோக்கர் பன்னீர்செல்வம், திமுக மாவட்டப் பிரதிநிதி ஜெய்சங்கர், பாபு ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com