Thursday, January 12, 2012

முன்னாள் புலி உறுப்பினர்கள் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டு அவர்களை கற்றாளைச் செய்கையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக யாழ்பாணம் பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர். படையினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கட்கு யாழ்பாணம், வவுனியா மற்றும் வெலிகந்த ஆகிய புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் அரசாங்கத்தினரால் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பயிற்சி முடிவில் அவர்களை சமூகமயப்படுத்தி வெளியுலகிற்கு கொண்டு வந்த போதும் பெரும்பான்மையானவர்கள் தொழில்வாய்ப்பின்றி கஷ்டத்தினை எதிர்நோக்குவதாக படைப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையைக் கவனத்திற் கொண்டே பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப் ஜனரல் ஜகத் ஜயசூரிய, யாழ்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜனரல் மஹிந்த ஹதுருசிங்க. வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜனரல் ஜி. ஏ. சந்திரசிரி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த கற்றாளை செய்கைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாளையடி செம்பியன்பத்து ஆகிய பிரதேசங்களில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், அவர்களுடைய உறவினர்கள் உட்பட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த செய்கைக்காக விவசாய உபகரணங்களுடன் 5000 கன்று வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதக் கடைசிக்குள் 20000 கன்று வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com