Wednesday, November 16, 2011

"என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" பெற்றோரை கட்டியணைத்து கதறி அழுத ரிஸானா!

குழந்தை ஒன்றை கொலை செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை அவருடைய பெற்றோர்கள் நேற்று சந்தித்துள்ளனர். 2007ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின் 23 வயதுடைய ரிஸானாவை ரியாத் சென்றுள்ள அவருடைய பெற்றோர் முதன்முதலில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு ´ஒரு நுட்பமான உறவு´ என ரியாத் சென்றுள்ள இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவாட்மி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிஸானா தனது தந்தை மொஹமட் மற்றும் தாய் ரிப்னா ஆகியோரை சந்தித்தபோது அழுது கொண்டே "என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என கெஞ்சியுள்ளார்.

அதன் பின்னர் மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டப்படி பாசப்பிணைப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

"எல்லாம் வல்ல அல்லாஹ், எங்கள் குழந்தையை திரும்ப பெற வழி செய்ய வேண்டும்" என ரிஸானாவின் தாய் ரிப்னா இதன்போது கூறியுள்ளார்.

ரிஸானாவை காப்பாற்ற குழந்தையை பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

"ரிஸானா அழகாக, உடல் வலுவான மற்றும் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்" எனத் தெரிவித்துள்ள ரியாத் தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் சமூகப் பணியாளர் இப்திகார் ரிஸானாவை நேரில் சந்திக்க அவருடைய பெற்றோருக்கு வாய்ப்பளித்தமைக்கு சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரிஸானாவை காப்பாற்றும் பொருட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் இப்ராகிம் சகிப் அன்சார் மற்றும் மொஹமட் செரிப் மொஹமட் தவுபிக், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் ரியாத் சென்றடைந்துள்ளனர்.

மேலும் மேல் மாகாண ஆளுநர் அலவி மவுலானா இன்று ரியாச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com