Wednesday, November 16, 2011

இத்தாலியின் பெர்லுஸ்கோனி இராஜிநாமாவானது வங்கிகள் தேர்ந்தெடுத்துள்ள தொழில்நுட்பவாத அரசாங்கத்திற்குப் பாதையை அமைக்கிறது.

(By Stefan Steinberg) வேகமான வழிமுறையினைத் தொடர்ந்து, வங்கிகளினால் ஆணையிடப்பட்ட தண்டனை சிக்கன நடவடிக்கைகளுக்கு இத்தாலியின் இரு மன்றங்களும் உடன்பட்டதோடு, இத்தாலிய பிரதம மந்திரி அவருடைய இராஜனாமாவை சனிக்கிழமை அறிவித்தார். நிதிய உயர்தட்டினதும் அதனுடைய கருவிகளான ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவைகளினால் கட்டளையிடப்பட்டு பொருளியளாளர் மரியோ மொன்ரி ஒரு ‘தொழில்நுட்பவாத அரசாங்கத்திற்கு தலைமைதாங்குவதற்கான தெளிவான தேர்வின் பாதையாக பிரதம மந்திரி கீழிறக்கப்பட்டார்.

கடந்த செவ்வாய் மாலை பிரதிநிதிகள் மன்றத்தில் தன் பாராளுமன்றப் பெரும்பான்மையை இழந்தபின், தன் இராஜிநாமா செய்யும் விருப்பத்தை அறிவித்தார். ஆனால் தன் இராஜிநாமாவிற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை பெர்லுஸ்கோனி கொடுக்கவில்லை; இத்தாலியப் பாராளுமன்றம் இத்தாலிக்குக் கடன் கொடுத்தவர்கள் கோரியுள்ள சிக்கன நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளும் வரை தான் பதவியில் நீடிக்க இருப்பதாக அறிவித்தார். இது அடுத்த ஆண்டு பெப்ருவரி மாதம் புதிய தேர்தல்கள் வரை அவர் அதிகாரத்தில் இருக்கும் வாய்ப்பை உயர்த்தியது.

பெர்லுஸ்கோனியின் அறிவிப்பிற்குச் சர்வதேச நிதியச் சந்தைகள் தங்கள் உடனடியான எதிர்ப்பைக் காட்டின, இத்தாலிய அரசாங்கக் கடன் பத்திரங்களுக்கான வட்டிவிகிதங்களை புதனன்று 7 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்தின—இந்த நிலை அரசாங்கம் அதன் கடன்களை அடைக்க இயலாது என்பதைக் குறிப்பிடுவது ஆகும். இன்னும் அதிக அழுத்தங்கள் IMF மற்றும் EU மற்றும் இத்தாலியப் பாராளுமன்றம் ஆகியவற்றிடம் இருந்து வந்ததை அடுத்து, ஜனாதிபதி ஜியோர்ஜியோ நாபோலிடனோ வலியுறுத்தியதின்பேரில் இத்தாலிய பாராளுமன்றம் விரைவான நடவடிக்கை மூலம் சிக்கனப் பொதியை ஏற்க ஒப்புக்கொண்டது.

வெள்ளியன்று, வேலைகள், சமூகநலக் குறைப்புக்கள், தொழிலாளர் சந்தை கட்டுப்பாடுகள் அகற்றப்படுதல் ஆகியவை குறித்த தொகுப்பு ஒன்றிற்கு செனட்டில் 152 ஆதரவு வாக்குகளையும் 12 எதிர்வாக்குகளையும் போட்டது. சனிக்கிழமை பிரதிநிதிகள் மன்றமும் ஏற்ற வகையில் திட்டத்திற்கு ஆதரவாக 380 வாக்குகளையும் எதிர்த்து 26 வாக்குகளையும் போட்டது. சனிக்கிழமை தன் இராஜிநாமாவைக் கொடுத்தபின், பெர்லுஸ்கோனி, இத்தாலிய ஜனாதிபதி அரண்மனையில் நடைபெற்று வந்த பேச்சுக்களில் இருந்து சீற்றம் நிறைந்த, இகழ்வுக் கரவொலி எழுப்பிய எதிர்ப்பாளர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு ஒரு பக்கப்புறக் கதவு வழியே சென்றுவிட்டார்.

இத்தாலியில் இவ்வித தொழில்நுட்பவாதிகள் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் இதேபோன்ற ஆட்சி கிரேக்கத்தில் கடந்த வாரம் அமைக்கப்பட்டதை தொடர்கிறது. இந்த ஆட்சி மாற்ற உதாரணங்கள் அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் ஸ்லோவாக்கியாவில் அரசாங்க மாற்றங்களை அடுத்து உடனடியாக வந்துள்ளன—அனைத்துமே கடந்த ஆண்டில் நிகழ்ந்தவை. ஒவ்வொன்றிலும், அரசாங்க மாற்றம் வங்கிகள் மற்றும் முக்கிய ஐரோப்பிய, சர்வதேச நிதிய அமைப்புக்களின் தீவிர அழுத்தங்கள் இருந்தன; அவைகள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் திறனுடைய ஆட்சிகளைச் சுமத்துவதில் தீவிரமாக இருந்தன.

கிரேக்கத்தில் ஒரு வாரத்திற்குமுன் நடந்ததைப் போலவே, இத்தாலிய அரசாங்கத்தின் தலைவர் வெளியேறியதும் திங்களன்று சந்தைகள் திறப்பதற்கு முன் பங்குச் சந்தைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் வார இறுதியில் நடைபெற்ற பரபரப்பான தொடர்ந்த பேச்சுக்களுக்குப் பின் ஏற்பட்டது. வணிகத் தலைவர்கள், நிதியளிப்பாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடக விமர்சகர்களால் நிம்மதியான பெருமூச்சுடன் பெர்லுஸ்கோனியின் இராஜிநாமா வரவேற்கப்பட்டது. சர்வதேசச் செய்தி ஊடகத்திலும் பெர்லுஸ்கோனியினால் நேரடியாகச் சொந்தம் கொண்டாடப்படாத இத்தாலிய செய்தி ஊடகத்திலும் தொடர்ச்சியான கருத்துக்கள் இரு தசாப்தங்கள் இழக்கப்பட்டுவிட்டதைப் பற்றிக் கூறி பிரதம மந்திரியை இத்தாலியை இழிசரிவிற்குத் தள்ளி நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை சிதைத்ததற்கும் குற்றம் சாட்டியுள்ளன.

ஆனால், பெர்லுஸ்கோனியின் வாழ்க்கைப் போக்கு பற்றிய ஒரு மேம்போக்கான பரிசீலனைகூட, இத்தாலிய அரசியலின் நேர்மையற்ற தன்மைக்குக் காரணம் என்பதை விட, அதன் விளைவுதான் அவர் என்று காட்டுகிறது. ஒரு அழுகிய, ஊழல்மலிந்த அரசியல் முறையின் மொத்த உருவமாக அவர் இருந்தார்.

அரசாங்கங்கள் மற்றும் அரசியல் தலைமைகள் ஐரோப்பா, சர்வதேச அளவில் –கிறிஸ்துவ கன்சர்வேடிவ், சமூக ஜனநாயகம் என்று எக்கட்சியாயினும் சரி, பொறுத்துக் கொண்டதால்தான் பெர்லுஸ்கோனி இத்தாலியை வேறு எந்த போருக்குப் பிந்தைய இத்தாலியப் பிரதமரும் ஆட்சி செய்யாத அளவிற்கு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடிந்தது.

பில்லியனர் பெர்லுஸ்கோனியின் அரசியல் முன்னுரிமைகள்—உழைக்கும் மக்களின் இழப்பில் தன்னுடைய சொந்த வணிக நலன்கள் மற்றும் நாட்டின் பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் முன்னேற்றத்தை இரக்கமின்றி உயர்த்தியவை—ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டன, இன்றளவும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனவேதான் அரசியல் தலைவர்கள் இப்பொழுது சில செய்தித்தாட்களால் ஐரோப்பிய அரசியலில் “கோமாளி இளவரசர்” என்று குறிக்கப்படும் நபருடன் அரசியல், பொருளாதார அளவில் ஈடுபாடு கொள்ளத்தயாராக இருந்தனர்.

இத்தாலிக்குள்ளேயே பெர்லுஸ்கோனி அவருடைய வணிகப் பேரரசின் விரிவாக்கமாக இருந்த ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், அதிகாரத்தின்மீது கொண்டிருந்த இறுக்கமான பிடி, உத்தியோகபூர்வ “இடது” கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை சரிந்ததின் விளைவு ஆகும்; இந்த வழிவகை இத்தாலியுடன் வரம்பு கட்டி நின்றுவிடவில்லை, மாறாக ஐரோப்பா, சர்வதேச அளவில் நன்கு காணப்படலாம்.

தொடக்கத்தில் பெர்லுஸ்கோனி சிறிதும் நேர்மையற்ற வணிகன் என்ற வகையில் புகழ்பெற்றார்; சொத்துக்கள் வளர்ச்சியில் முதலில் பெரும் செல்வத்தை ஈட்டினார். 1970களில் ஏற்கனவே இந்தக் காலக்கட்டத்தில், அவர் பரந்த அளவில் மாபியாக்களுடன் தொடர்பு கொண்டதாகக் கருதப்பட்டது; இதன்பின் அவர் வலதுசாரி அரசியல் வட்டங்களுக்கு நகர்ந்தார்.
1970களின் முடிவில், அவர் தன்னுடைய வணிக நலன்களைச் செய்தி ஊடகத்திற்கு விரிவாக்கம் செய்து, செய்தி ஊடகக் குழுவான Fininvest என்பதை நிறுவினார்; இது பல முக்கியத் தொலைக்காட்சி நிறுவனங்களையும் முக்கிய செய்தித்தாள்களையும் உரிமையாக்கிக் கொண்டது. 1981ம் ஆண்டு பெர்லுஸ்கோனி இரகசிய Masonic சங்கமான P2 உறுப்பினர் எனத் தெரிய வந்தது. இக்குழு இத்தாலிய அரசியல், இராணுவ மற்றும் பொலிஸ் துறைகளின் முக்கிய உறுப்பினர்களை கொண்டிருந்தது, இத்தாலியில் ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை நிறுவும் நோக்கத்தில் பெரும் ஈடுபாட்டை கொண்டிருந்தது.

பெர்லுஸ்கோனியின் ஏற்றத்தின் வழிகாட்டிகளில் ஒருவர் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலளாரும் பிரதம மந்திரியாகவும் இருந்த பெட்டினோ கிராக்ஸி ஆவார். 1984ம் ஆண்டு கிராக்ஸியின் அரசாங்கம்தான் ஒரு சட்டத்தை இயற்றி பெர்லுஸ்கோனி தன் செய்தி ஊடகப் பேரரசை பின்னர் இத்தாலிய தொலைக்காட்சி ஏகபோக உரிமை என விரிவாக்கம் செய்து வருவதற்கு அனுமதித்தது.

கிராக்சியின் உபதேசங்களை ஒட்டி, பெர்லுஸ்கோனி அரசியலில் தன்னுடைய வணிகப் பேரரசிற்கு அரசாங்க உதவித்தொகைகள், பின்புல உதவிகள் ஆகியவற்றின் முட்டுக் கொடுத்து விரிவடையச் செய்யும் நோக்கத்துடன் நுழைந்தார்; அதே நேரத்தில் தன் செயல்களுக்கு ஒரு சட்டபூர்வ விலக்கு மறைப்பை அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படுவதற்கும் உறுதி செய்து கொண்டார்.

பிரதம மந்திரிப் பதவியை பெர்லுஸ்கோனி ஏற்றது, 1990களில் தொடங்கிய “mani pulite” என்னும் “தூய்மையான கரங்கள்” பிரச்சாரத்தின் விளைவு ஆகும். இப்பிரச்சாரம் வக்கீல் Antonio Di Pietro வினால் வழிநடத்தப்பட்டு, முதலில் கிராக்சியின் சோசலிஸ்ட் கட்சியிலுள்ள ஊழலுக்கு எதிராக இயக்கப்பட்டது. ஆனால் இது போருக்குப் பிந்தைய முழு இத்தாலிய அரசியல்முறை பற்றிய விசாரணை என விரைவில் விரிவாக்கப்பட்டது.

இத்தாலிய அரசியல்கூடத்தில் இருந்த குப்பையை அகற்றுதல் என்னும் புறத்தோற்றத்தைக் கொண்ட பிரச்சாரத்தின் விளைவு போருக்குப் பிந்தைய அனைத்து இத்தாலிய அரசியல்வாதிகளிலேயே மிக ஊழல் நிறைந்தவர், சமரசத்திற்கு உட்படக்கூடியவர் அதிகாரத்திற்கு வருவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்ததுதான். பெர்லுஸ்கோனி 1994ல் தனது கூட்டரசாங்கத்தின் பாகமாக இத்தாலிய நவ பாசிஸ்டுகளை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அதிகாரத்திற்கு கொண்டுவந்தார்.

அந்த அரசாங்கம் ஏழு மாதங்கள்தான் நீடித்தது. அவருடைய கொள்ளைகளுக்கு எதிரான பரந்த எதிர்ப்புக்கள் மற்றும் கூட்டணிப் பங்காளி அமைப்பு ஒன்றான குடியேற்ற எதிர்ப்பு வடக்குக் கழகத்துடன் பிளவு ஆகியவற்றை ஒட்டி அது சரிந்தது.

இதன் பின் பெர்லுஸ்கோனி “இடது” எதிர்க்கட்சிகள், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCI), அதன் சரிவைத் தொடர்ந்து, அதன் அழிவில் வந்த கட்சிகள்—2001ல் நிறுவப்பட்ட இடது ஜனநாயகக் கட்சி, 2009ல் ஜனநாயகக் கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்டது, மற்றும் உறுதியாக ஸ்ராலினிசத்தில் நின்ற PRC ( மீள்ஸ்தாபக கம்யூனிசம் -Refounded Communism-) ஆகியவற்றிற்கு இன்னும் வலது புறத்தில் கூடுதலாக நகர்ந்ததில் அரசியலளவில் ஆதாயம் அடைந்தார்.

இந்த அமைப்புக்கள் 1995-96ல் பொருளாதார வல்லுனர் Lamberto Dini தலைமையில் இருந்த தொழில்நுட்பவாத அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்தன. PCI, PRC இரண்டும் பின்னர் Olive Tree “மையவாத-இடது” கூட்டணி என்று ரோமனோ ப்ரோடியின் (1996-98) தலைமையில் இருந்ததுடன் சேர்ந்து பிரோடியின் வலதுசாரி உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்தன. பலமுறையும் PRC அதிகாரிகள் பிரோடியின் சமூகநல விரோதத் திட்டம், இராணுவவாதம் நிறைந்த வெளியுறவுக் கொள்ளை ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்து பெர்லுஸ்கோனி அதிகாரத்திற்கு மீண்டும் வராமல் தடுப்பதற்கு அது ஒரு விலையாகும் என்று கூறினர்.

பிரோடி அரசாங்கத்தின் கொள்கைகளில் பெரும் ஏமாற்றங்கள் இருந்த அளவில், PCI, PRC ஆகியவை பங்கு கொண்டது பெர்லுஸ்கோனியை 2001ல் அதிகாரத்திற்கு மீண்டும் வருவதற்கு உதவியது. இதேபோன்ற அரசியல் காட்டிக் கொடுப்பு வழிவகைதான் பெர்லுஸ்கோனியை மீண்டும் 2006ல் அதிகாரத்திற்கு வர உதவியது.

பெர்லுஸ்கோனி 2006ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபின், இத்தாலிய அரசியலில் திரைக்குப் பின் முக்கிய அரசியல் செல்வாக்கு உடையவர் முன்னாள் PCI ல் நிலைத்திருந்த ஜியோர்ஜியோ நாபொபோலிடானோ ஆவார்; அவர் அதே ஆண்டு குடியரசின் 11வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், நாபொலிடானோ 1945ல் PCI ல் சேர்ந்திருந்தார்.

பெர்லுஸ்கோனி இராஜிநாமா செய்ய நாபொலிடனோதான் உறுதியளித்து, மரியோ மோன்டியை அரசாங்கத்தின் புதிய தலைவராக நியமித்தார். ஞாயிறன்று நாபொலிடனோதான் இத்தாலியர்களுக்கு அவர்கள் நாட்டின் பிரச்சினைகளைக் கடக்க “தியாகங்கள்” செய்ய வேண்டும் என அழைப்புக் கொடுத்து எச்சரித்தார். நாட்டின் அரசியல் கட்சிகள் தங்கள் மோதல்களை விடுத்து, புதிய ஆட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரிய மதிப்பிலிருந்து, சர்வதேச அரசியல், நிதிய உயரடுக்கின் பார்வையில், பெர்லுஸ்கோனி வீழ்ச்சி அடைந்துள்ளது அவர் சொத்துக்கள் சேர்த்ததின் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களுடனோ அவருடைய சமூகக் கொள்கைகளுடனோ தொடர்பு எதையும் கொண்டிருக்கவில்லை. மாறாக வங்கிகள் மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் ஐரோப்பியக் கடன் நெருக்கடியின் விளைவுகளை ஒட்டித் தங்கள் நலன்களைக் காப்பதற்குத் தேவையான கடுமையான சிக்கன நடவடிக்கைகளை இத்தாலிய மக்கள் மீது அவர் சுமத்த விருப்பம் கொண்டிருக்கவில்லை, அல்லது அவற்றைச் செயல்படுத்துவதற்கு பெர்லுஸ்கோனியிடம் திறன் இல்லை என்று உணரப்பட்டதுதான் காரணம் ஆகும்.

Corriere della Sera செய்தித்தாளின் கருத்துப்படி, மோன்டி தன்னுடைய புதிய அமைச்சரவையில் Guide Tabellini ஐ நிதி மந்திரியாக நியமிக்க உள்ளார். 56 வயதான டாபெல்லினி, மிலானிலுள்ள Bocconi பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர் ஆவார்; அங்கு மோன்டி தலைவராக உள்ளார். வெளியுறவு மந்திரிப் பதவி கூட ஒரு வங்கியாளருக்குத்தான் கொடுக்கப்பட இருக்கிறது. செய்தித்தாள் முன்னாள் பிரதம மந்திரியும் தற்பொழுது Deutsche Bank க்கு ஆலோசரகாரகவும் உள்ள Giuliano Amato நாட்டின் புதிய வெளியுறவு மந்திரியாகக் கூடும் என்று தகவல் கொடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com