Thursday, June 23, 2011

இலங்கை விடயத்தில் சரியான முடிவெடுக்கத் தவறிவிட்டார் பான் கீ மூன். Human Rights Watch.

ஐ.நா. செயலர் பான் கீ மூன், இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார் – என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் ஆசிய இயக்குனரான பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் தலைமைச் செயலராக பான் கீ மூன் அவர்கள் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டார் என்று பல மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பிராட் அடம்ஸ் மேலும் கூறியவை வருமாறு -

பான் கீ மூனின் செயற்பாடு ஒரு கலவையான விடயம். பர்மா விடயத்தில் அவர் நிறைய அறிக்கைகளை விட்டார். ஆனால் பர்மிய அரசுக்கு எதிராக செயல்படுவதில் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார்.

அவருக்கு ஒரு கோர்வையான திட்டம், யுக்தி இல்லை. சீனாவைப் பொறுத்த வரை கடந்த இரு தசாப்த காலத்தில் நடந்த மிகவும் மோசமான ஒடுக்குமுறையின் போது அவர் அமைதி காத்தார் – என்று அடம்ஸ் தெரிவித்தார்.

இலங்கை நிலைமை குறித்தும் அடம்ஸ் தமிழோசைக்குத் தெரிவிக்கையில் -

இலங்கையைப் பொறுத்தவரை அவர் மிகவும் உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார். போர் முடிந்த பின்னர் இலங்கைக்குச் சென்று, மஹிந்த ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என்று நாங்களும் மற்றவர்களும் தந்த நல்ல அறிவுரையை மீறிச் சென்றார். மஹிந்த ராஜபக்ஷ, தனது அரசுக்கு நம்பகத்தன்மையைப் பெற அந்த விஜயத்தைப் பயன்படுத்திக் கொண்டார் – என்றார் அடம்ஸ்.

இலங்கையில் போர் தொடர்பான பிரச்சினைகள் பற்றி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பொறுப்பு சுமத்தும் வழிமுறை உருவாக்கப்படும் என்று மஹிந்த கொடுத்த உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு சரியான முடிவெடுப்பதில் பான் கீ மூன் தவறிழைத்துவிட்டார் என்றும் அடம்ஸ் சாடினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com