Wednesday, June 22, 2011

சம்பந்தன்-அரசு உறவு வெளிப்படுத்துகின்றார் கோத்தபாய

அரசாங்கத்துடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்த முயலும் இரா.சம்பந்தனின் முனைப்புக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இடை யூறுகளை ஏற்படுத்தி வருவதாக படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ­ குற்றம் சுமத்தியுள்ளார்.அளவெட்டியில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு விசனம் வெளியிட்டார். இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உதவுமாறு இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். படைத்தரப்பு மற்றும் படைத்துறைச் செயலாளருடன் இணைந்து செயலாற்ற இக் கடி தத்தில் இணக்கம் தெரிவித்திருந்த சம்பந்தனின் கருத்திற்கு அரசாங்கம் மதிப்புக் கொடுக்கின்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா முன்னிலையில் சம்பந்தனை கடந்த 8ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடினேன். இந்தியத் தூதுவரின் அழைப்பின் பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்நிலையில் அளவெட்டியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து சம்பந்தனுடனான சந்திப்புத் தொடர்பான செய்திகளை தெரிவிப்பதை விட எனக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை. அரசாங்கத்துடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்த முயலும் சம்பந்தனின் முனைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினருக்குப் பிடிக்கவில்லை.

தனக்குக் கடிதம் எழுதிய பின்னர் சம்பந்தன் இந்தியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில் அவரின் கோரிக்கை தொடர்பில் நான் தேவையான ஏற்பாடுகளை செய்யத் தயாராகவிருந்தேன். என்னால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் சம்பந்தனின் முயற்சிகளை விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுமதி பெறாமல் அளவெட்டியில் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இக் கூட்டத்தின்போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக தனிப்பட்ட ரீதியில் நான் விசாரணைகளை மேற்கொண்டேன். படை அதிகாரி ஒருவரின் தலைமையில் படைத்தரப்பினர் இக்கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்குச் சென்றபோது அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இக்கூட்டத்தில் படைத்தரப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இவ்வாக்குவாதத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவரே தாக்கப்பட்டார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினரையோ அல்லது பொதுமக்களையோ படைத்தரப்பினர் தாக்கவில்லை. இச்சம்பவத்தின்போது வாகனங்கள் சேதமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. இச்சம்பவத்தை ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தியாக வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களம் அழைத்து விசாரித்துள்ளது. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக அமுலுகமவிடம் இச்சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலைமையை ஆராயாமல் வெளிநாட்டு அரசாங்கங்கள் பிரச்சினைகளை எழுப்புகின்றன. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவரும் இவ்வாறுதான் என்னை மிரட்டியிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை மாற்றிக்கொள்ளவில்லை. அரசாங்கத்துடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனை கூற வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைத்தான் செய்தாலும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரின் போராளிகளையும் உயிர்த்தெழ வைக்க முடியாது என இச்செவ்வியில் கோத்தபாய ராஜபக்­ஷ தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com