Tuesday, March 1, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 43,44வது நாள் நிகழ்வுகள்!

தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஸ்ரா ஆகிய மூன்று மாநிலங்களைக் கடந்து நான்காவதாக மத்திய பிரதேசத்தினுள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தைக் கடப்பதற்கு இன்னும் ஏறக்குறைய 160 கிலோ மீற்றர் தூரம் உள்ளது. இன்னும் ஐந்து நாட்களில் நடைபயண வீரர்கள் மத்தியபிரதேச மாநிலத்தைக் கடந்து உத்திரபிரதேச மாநிலத்திற்குள் பிரவேசிப்பார்கள்.

நடைபயணத்தின் 43வது நாளான (27-02-2011, ஞாயிறு) 27கிலோ மீற்றர் தூரம் நடந்து நரசிம்மபுரம் என்ற மாநகரத்திற்கு 12 கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்னாள் நர்மதா ஆற்றின் கிளை ஆற்றங்கரையில் மதியம் 01:00 மணியளவில் முகாம் அமைத்தனர்.

நடைபயண வீரர்கள் தங்களது உடுப்புகளை சுத்தம் செய்வதற்கும், மருத்துவ பரிசோதனைக்கும் மற்றும் ஓய்விற்குமாக அங்கு தங்கினர். ஞாயிற்றுக் கிழமை மதியம் வரை 27 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே நடந்தனர். நேற்று நடைபயணக் குழுவினரை படம்பிடித்து செய்திகள் சேகரித்துச் சென்ற மத்தியபிரதேசத்தின் பிரபலமான “சகாரா” என்ற தொலைக்காட்சி விபரமாக வீடியோ படங்களுடன் செய்திகள் வெளியிட்டிருந்தது. அது நடைபயண வீரர்களுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுத்திருந்தது.

நடைபயணத்தின் 44வது நாளாவது நாளான (28-02-2011, திங்கள்) ஆற்றங்கரையிலிருந்து புறப்பட்ட நடைபயண வீரர்கள் தேசிய நெடுஞ்சாலை – 26ல் பயணித்து காலை 11:30 மணியளவில் நரசிம்மபுரம் மாநகரத்தை அடைந்தனர். அங்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். மத்தியபிரதேச பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வந்து செய்திகள் சேகரித்துச் சென்றனர்.

மேலும், இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகப் பூர்வமாக “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருந்த செய்தி இன்று மத்தியபிரதேச செய்தித் தாள்களிலும், இணையத்தளங்களிலும் வந்ததாக நரசிம்மபுரம் காங்கிரஸ் உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் நடைபயணவீரர்களுக்கு இந்திமொழியிலும், ஆங்கிலத்திலும் தெரிவித்து நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் கூறினர்.

பொதுமக்கள் அறிவித்த செய்தி நடைபயண வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. இந்திய நாட்டை ஈழத் தமிழர்கள் பக்கம் திருப்புவதற்காக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அறிவிக்கும் எந்தவகைப் போராட்டங்கள் என்றாலும் அனைத்திலும் உணர்வுபூர்வமாக கலந்துகொள்வதாக நடைபயண வீரர்கள் தலைமைக் குழுவிடம் உணர்ச்சிப் பொங்க தெரிவித்தனர்.


இவ்வண்ணம்,
ஞா.ஞானராஜா
நடைபயண தலைமைக் குழு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com