விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மீது விரைவில் USA குற்றப்பத்திரிக்கை கொண்டு வரப்படும். By Bill Van Auken
உளவுவேலைகளில் ஈடுபட்டமைக்கான குற்றச்சாட்டுக்களைக் காட்டி ஜூலியன் அசாங்கே மீது ஓர் அமெரிக்க குற்றப்பத்திரிகை விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்பப்படுகிறது. விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் ஒரு வழக்கறிஞர் வெள்ளியன்று இதைத் தெரிவித்தார்.
“அவர்மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று உயர்-மட்ட அதிகாரிகள் அழைப்புவிடுத்திருப்பதன் மீதும், ஒரு முத்திரையிடப்பட்ட குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அல்லது ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அமெரிக்காவில் நிலவி வரும் வதந்திகள் மீதும் நாங்கள் சட்டபூர்வமான ஆலோசனைகளை நடத்தி வருகிறோம்,” என்று ஜெனிபர் ராபின்சன் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
உளவுவேலைகளில் ஈடுபட்டமைக்காக விக்கிலீக்ஸ் வலைத் தளத்தின் மீதும், அசாங்கேயின் மீதும் கொண்டு வரப்படும் எவ்வித வழக்கும் அமெரிக்க அரசியல் அமைப்புமுறையை மீறுவதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
ராபின்சன் மேலும் கூறுகையில்,“உளவுவேலைகளில் ஈடுபட்டமைக்கான சட்டத்தின்கீழ் கொண்டு வரப்படும் எவ்வித வழக்கும், அரசியல் அரசியலமைப்பின் சட்டங்களுக்குப் புறம்பானது என்பது எங்களின் நிலைப்பாடு; மேலும் அது அனைத்து ஊடகங்களின் First Amendment protections (முதல் தீர்மான பாதுகாப்புகளின்) மீது கேள்வியை எழுப்பும்,” என்றார்.
ஜூலியன் அசாங்கே தெற்கு இலண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் இருக்கிறார். இட்டுக்கட்டிவிடப்பட்ட தகாத பாலியல் நடவடிக்கை குற்றச்சாட்டுக்களுக்காக, ஸ்வீடன் அவரை ஒப்படைக்கக் கோரிவரும் நிலையில், அவர் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார். தானாகவே முன்வந்து பொலிஸிடம் சரணடைந்த போதும், அவருக்கு பிணை அளிக்க மறுக்கப்பட்டது என்பதுடன் அவருடைய வழக்கறிஞர்களுடன் கூட சந்திக்க முடியாதபடிக்கு தனியாக அடைக்கப்பட்டுள்ளார். தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகளும் கடுமையாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய கைதிகளையும் விட மிகவும் கட்டுப்பாடான நிலைமைகள் அவர்மீது கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் செவ்வாயன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட வேண்டிய நிலையில், வெளிநாட்டில் ஒப்படைப்பதற்கான வழக்கில் ஆஜராகி இருக்கும் அசாங்கேயின் வழக்கறிஞர் கூறுகையில், திட்டமிடப்பட்டிருக்கும் செவ்வாய்கிழமை விசாரணைக்கு அவர் தயாராவதற்கு, 24 மணி நேரத்திற்கும் குறைவான காலஅவகாசத்தை அளிக்கும் வகையில், திங்கட்கிழமை வரை சந்திக்க முடியாதபடிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இரண்டு ஸ்வீடன் வழக்கும்―இவை அவற்றின் போலிதனத்திற்காக முதலில் கைவிடப்பட்டு, பின்னர் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன―பிரிட்டனில் பிணை மறுக்கப்பட்டதும், பொதுவான சட்ட நடைமுறைகளைக்குப் பொருந்தாததாக இருக்கின்றன. அசாங்கேவிற்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளானது, இந்த பாலியல் குற்றச்சாட்டுக்களைப் போலிக்காரணமாக பயன்படுத்தி அரசியல் தண்டனை வழங்குவதற்காகவும், வாஷிங்டன் அதன் சொந்த திட்டத்தை இட்டுக்கட்டுவதற்கும், மேலும் அதனிடம் ஒப்படைக்க கோருவதற்கான அதன் சொந்த முறையீட்டை அளிக்கவும் அதற்கு போதிய அவகாசத்தை ஏற்படுத்தி அளிக்கவும் நோக்கம் கொண்டிருக்கிறது.
"விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேயின் கைது நடவடிக்கையில், சட்டமீறல் மற்றும் நெறிமுறைமீறல்களுக்கான பல எடுத்துக்காட்டுக்களைக் காண்பதாகவும், குறிப்பாக ஸ்வீடன் வழியாக அமெரிக்காவிற்கு திரு. அசாங்கேவைக் கொண்டு செல்ல தேவைப்படும் வழியை உண்டாக்க அவை நோக்கம் கொண்டிருப்பது, முக்கிய கவலையாக இருப்பதாகவும்" குறிப்பிட்டு, அமெரிக்காவிலுள்ள அரசியலமைப்பு உரிமைகள் மன்றம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டதாவது:“சந்தேகிக்கப்படுபவரை விசாரணைக்கு அழைத்து விசாரிப்பது தான் இதுபோன்ற வழக்குகளில் முறையான நடைமுறையாக இருக்கிறது. அத்துடன் பல இடங்களில் அதிகாரிகளுக்கு அவர் போதிய ஒத்துழைப்பு அளித்துள்ளார். அதேபோல, தன்னைத்தானே மறைத்துகொள்ளவோ அல்லது வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்லவோ முயற்சிக்காமல், ஒரு சந்தேகத்திற்குரிய நபர் சரணடைந்துவிட்டால், அவருக்கு பொதுவாக பிணை அளிக்கப்படும். திரு. அசாங்கே கைது செய்யப்படவும் இல்லை; ஆனால் பிணையளிப்பும் மறுக்கப்பட்டிருக்கிறது.”
அமெரிக்க யுத்த குற்றங்களையும், அமெரிக்கா உட்பட உலகின் எல்லா நாடுகளின் மக்களுக்கு எதிரான கிரிமினல் சதிகளையும் அம்பலப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸையும், அசாங்கேயையும் பலித்தீர்க்க ஒபாமா நிர்வாகமும், வெளியுறவுத்துறையும், பெண்டகனும் நோக்கம் கொண்டிருக்கிறது. இந்த வெளிப்பாடுகள், கடந்த மாதம் வெளியான சமீபத்திய இராஜாங்க கசிவுகளில் இருந்து ஆரம்பிக்கவில்லை. இது, ஓர் அமெரிக்க தாக்குதல் ஹெலிகாப்டரால் பாக்தாத்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் படுகொலையின் ஒரு வீடியோவை விக்கிலீக்ஸ் வெளியிட்ட போதிருந்து, அதாவது ஏப்ரலில் இருந்தே நடந்து வருகிறது. அப்போதிருந்தே அந்த வலைத் தளம், அமெரிக்கா பொதுமக்களைக் கொல்வதையும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் சித்திரவதைச் செய்யும் கொடூரத்தையும் விளக்கும் நூறு ஆயிரக்கணக்கான ஏனைய ஆவணங்களையும் வெளியிட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மந்திரிகளுடனான ஒரு கூட்டத்திற்குப் பின்னர் வாஷிங்டனில் வியாழனன்று பேசிய அமெரிக்க தலைமை நீதிபதி எரிக் ஹோல்டர் கூறுகையில், அவர்கள் விக்கிலீக்ஸூடன் விவாதித்திருப்பதாக கூறினார். “அமெரிக்க மக்களின் பாதுகாப்பை ஆபத்திற்குட்படுத்தும் சட்ட உரிமையற்ற தகவல்களை வெளிப்படுத்துபவர்களைக் கையாள, நாங்கள் நடத்தி வரும் விசாரணைகள் எங்களை அனுமதிக்கும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கையாக இருக்கிறது,” என்றார். இந்த வாரத்தின் தொடக்கத்தில், இரகசிய வெளியுறவுத்துறை கசிவுகளை வெளிப்படுத்திய இணைய அமைப்புகள் சம்பந்தமாக, "இயல்பிலேயே குற்றநடவடிக்கைகளாக இருக்கும் அவற்றின் மீது மிக தீவிரமான மற்றும் தொடர்ந்து நடக்கும் விசாரணை ஒன்றை" ஹோல்டர் அறிவித்திருந்தார்.
உளவுவேலைகளில் ஈடுபட்டமைக்கான 1917ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் அசாங்கேயை வழக்கில் இழுக்கும் முயற்சியானது, அமெரிக்காவில் பேச்சு சுதந்திரத்தின் மீதும் மற்றும் ஏனைய அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதும் ஒரு வெளிப்படையான தாக்குதல் நடத்துவதற்குக் களம் அமைக்கும். அந்த 1917ஆம் ஆண்டு சட்டம், அமெரிக்க சோசலிஸ்டுகளையும், தொழிலாளர்கள் தலைவர் Eugene V. Debsஐயும், மற்றும் ஏனைய பல தொழிலாளர் வர்க்க போராளிகளையும் சிறையில் தள்ள ஆரம்பகாலக்கட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான ஒரு சட்டப்பிரிவாக இருந்தது.
அமெரிக்க காங்கிரஸால் கட்சிசார்பற்ற விசாரணைக்காக அமைக்கப்பட்டிருந்த, காங்கிரஸ் ஆய்வுச் சேவையால் (Congressional Research Service - CRS) இந்த வாரத்தில் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை, பிரத்யேகமான தகவல்களைப் பொதுப்பார்வைக்குக் கொண்டு வந்தமைக்காக விக்கிலீக்ஸ் மற்றும் அசாங்கே மீது வழக்குதொடுக்க கோரும், முன்னொருபோதும் இல்லாத வகையில் அதன் பாத்திரத்தை வெளிப்படுத்துகிறது.
“இரகசிய தகவல்களைப் பெற்று வெளிநாட்டு உளவுத்துறைக்கு அளிக்கவோ, அல்லது அமெரிக்காவில் இருந்து கொண்டே சட்டவிரோதமாக இரகசிய தகவல்களைப் பெறுகிற வெளிநாட்டு உளவாளிகளுக்கு தகவல்களை அளிக்கவோ செய்யும் தனிநபர்களின் மீது விதிவிலக்கின்றி வழக்கு தொடுப்பதற்குத் தான் அமெரிக்க கிரிமினல் சட்டபிரிவுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன" என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
“இரகசிய தகவல்கள் பத்திரிகைகளில் கசிந்தால், அரிதாக தான் அவை குற்றங்களாக கருதி தண்டிக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்க ஊழியரால் அதிகாரமில்லாமல் வெளியிடப்பட்ட தகவல்களை வெளியிட்ட பதிப்பாளர் அதை பதிப்பித்ததற்காக வழக்கைச் சந்தித்திருக்கிறார் என்று இதுவரை எந்த வழக்கும் இல்லை என்பதை நாம் அறிவோம்,” என்று அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டுக் காட்டுகிறது.
விக்கிலீக்ஸ் வெளியீடுகள் மீது ஒரு வழக்கு தொடுப்பதற்கான முயற்சியானது, “அரசாங்க தணிக்கைமுறை" மற்றும் "அன்னியநாட்டுடனான சட்ட விவகாரங்களைச்" செயல்படுத்தும், அமெரிக்காவின் முயற்சிகளின் மீது கேள்விகளை எழுப்பும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
பெண்டகன் ஆவணங்கள், New York Times மற்றும் Washington Post இல் வெளியான முன்னுதாரணங்களையும் அது மேற்கோளிட்டுக் காட்டுகிறது. 1971இல் வியட்நாமில் செய்யப்பட்ட அமெரிக்காவின் தலையீடு குறித்த ஒரு இரகசிய ஆய்வும், அந்த விஷயங்களை அச்சில் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும் என்ற அரசாங்கங்களின் முறையீட்டிற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்ததையும் அது மேற்கோளிட்டுக் காட்டுகிறது.
எவ்வாறிருப்பினும், ஏனைய அரசியல் அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு, உயர்நீதிமன்றம் அதிகபட்சமாக வலதின் பக்கம் திரும்பி இருப்பதால், உளவுவேலையில் ஈடுபட்டமைக்கான குற்றச்சாட்டுக்களின் மீது அசாங்கேயை அச்சுறுத்துவதற்கான அரசாங்கத்தின் ஒரு முயற்சியுடன் சேர்ந்து கொண்டிருப்பதால், இன்றைய மிக வித்தியாசமான ஆட்சியைக் குறித்து அஞ்சுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. மேலும் CRS குறிப்பிடுவதைப் போல, அதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் மரண தண்டனை விதிக்கும் அளவிற்கு இருக்கும்.
முன்னனி அமெரிக்க அரசியல்வாதிகளும், விமர்சனகர்களும் - அசாங்கேயை ஓர் எதிரியாகவும், விக்கிலீக்ஸை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றனர். மேலும் வெளிப்படையாகவும், வெட்கமில்லாமலும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை "தூக்கிலிட வேண்டும்" அல்லது "அழித்துவிட வேண்டும்" என்றும் முறையிட்டுள்ளனர். இந்த வெளிப்படையான முறையீடுகளின் கூக்குரல்கள், அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டால், அசாங்கே நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்படுவாரா என்ற வெளிப்படையான கேள்வியை எழுப்புகிறது.
அசாங்கேயிற்கு எதிராக நிலவும் பலிதீர்க்கும் எண்ணம், பல்வேறு அரசுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அதிகாரிகளின் கண்டனங்களை முன்கொண்டு வந்துள்ளது. இவர்கள் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காக, அமெரிக்க "இராஜதந்திரத்தின்" உண்மையான பாத்திரத்தை வெளிப்படுத்தியமைக்காக, விக்கிலீக்ஸை தண்டிப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிகளின் போலியான மற்றும் பிற்போக்குதனமான பாத்திரத்தை உயர்த்தி காட்டியுள்ளனர்.
பிரேசிலின் ஜனாதிபதி லியூஜ் இனாசியோ லூலா டா சில்வா, வியாழனன்று பிரேசிலியாவில் பேசுகையில், "இந்த விஷயங்களை வெளியிட்டதில் விக்கிலீக்ஸூடன் நான் உடன்படுகிறேன்; என்னுடைய போராட்டம் பேச்சு சுதந்திரத்தின் பக்கம் தான் இருக்கும்,” என்றார்.
லூலா தொடர்ந்து கூறுகையில்,“மேற்கு நாட்டினர் கூறுவதைப் போல, 'உயிருடனோ அல்லது பிணமாகவோ வேண்டும்' என்பது போன்ற குறிப்புகளை அவர்கள் முன்வைப்பது குறித்து எனக்குத் தெரியாது ・ இவற்றை வெளியிட்டிருக்கும் நபரைக் குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு, அந்த முட்டாள்தனங்களை எழுதிய நபர்களைத் தான் குற்றஞ்சாட்ட வேண்டும். இல்லையென்றால், இப்போது நம்மிடம் இருக்கும் இந்த மோசடிகள், நம்முன் இருந்திருக்காது,”என்றார்.
மாஸ்கோவில் ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புட்டின் பேசுகையில், விக்கிலீக்ஸை ஒடுக்கும் முயற்சியின் முன்னால் ஜனநாயகத்தின் காவலனைப் போல காட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் வேடங்களை ஏளனம் செய்தார்.“அதுவொரு முழு ஜனநாயகமாக இருந்தால், அவர்கள் ஏன் திரு. அசாங்கேயை சிறையில் வைத்து மறைக்க வேண்டும்? அது தான், ஜனநாயகமா?”என்றார் புட்டின்.
கிராமங்களில் சொல்வதைப் போன்ற, ஒரு ரஷ்ய பழமொழியையும் ("பானை கருப்பு என சட்டி அழைக்கிறது") புட்டின் எடுத்துக்காட்டினார். இதற்கிடையில், அசாங்கேயைக் காப்பாற்றுவதற்காக, "அவர் நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்படலாம்" என்று பெயர் வெளியிடாத கிரெம்ளின் அதிகாரி ஒருவரின் ஓர் அறிவிப்பை ரஷ்ய பத்திரிக்கைகள் வெளியிட்டன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் கமிஷனர் நவி பிள்ளே, விக்கிலீக்ஸிற்கு அளிக்கப்படும் சேவைகளை நிறுவத்துவதற்காக "தனியார் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும், மற்றும் கிரெட்கார்டு நிறுவனங்களுக்கும்" அளிக்கப்பட்ட அழுத்தத்திற்குக் கண்டனம் தெரிவித்தார்.
“செய்திகள் வெளியீட்டைத் தணிக்கை செய்வதற்கான ஒரு முயற்சியாக இதை விளங்கப்படுத்த முடியும். இதன் மூலம், அது விக்கிலீக்ஸின் வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமையை முக்கியமாக மீறுகிறது,” என்று ஜெனிவாவில் நடந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பிள்ளே தெரிவித்தார்.
இதற்கிடையில், யூனெஸ்கோவின் உலக பத்திரிக்கை சுதந்திர நாளை வாஷிங்டன் தொடங்கி வைக்கும் என்ற வெளியுறவுத்துறையின் முடிவை வெளியிட்ட ஓர் அறிவிப்பு, சர்வதேச ஏளனத்திற்கு உள்ளாகி உள்ளது.
தெரியாமல் தன்னைத்தானே கேலி செய்து கொள்வதைப் போல இருக்கும் இதுகுறித்து, வெளியுறவுத்துறை அறிவித்ததாவது:“உலகம் முழுவதும் உள்ள குடிமக்கள் அவர்களின் சூழ்நிலைகளையும், உலக நிகழ்வுகளைக் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தின் மீதிருக்கும் தனிநபரின் உரிமையில் சிலநேரங்களில் கொண்டு வரப்படும் நடைமுறைகளுக்கு விரோதமான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் புதிய ஊடகம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதே நேரத்தில், தனிநபர்களை மௌனமாக்கவும், தணிக்கையின்கீழ் கொண்டுவரவும், மற்றும் தகவல்களின் சுதந்திர பரிமாற்றத்தைத் தடுக்கவும் முயலும் சில அரசாங்கங்களின் தீர்மானம் மீது நாங்கள் கவலை கொள்கிறோம்.”
இணையத்தில் கட்டுப்பாடு விதிப்பதற்கான சீன அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும், சீன அரசாங்கத்திற்கும் எதிராக, சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தடையைக் கொண்டுவர திட்டமிட்ட நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட "கவலையானது", விக்கிலீக்ஸை மௌனமாக்கவும், தணிக்கைக்கு உட்படுத்தவும் மற்றும் உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து நடக்கும் தகவல் பரிமாற்றத்திற்கு அணைகட்டவும் நடத்தப்படும் வாஷிங்டனின் சொந்த முயற்சிக்கு அதுவே ஒரு குற்றப்பத்திரிக்கையை வாசித்திருப்பது போன்றுள்ளது.
0 comments :
Post a Comment