Monday, March 11, 2019

போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும் - டொக்டர் ராமதாஸ்

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற வெளிநாடுகளின் வலியுறுத்தலை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் குறித்த விசாரணைக்கு இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, ஆகிய நாடுகள் தமது வலியுறுத்தலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மேற்குறித்த நாடுகளின் வலியுறுத்தலை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என்று டொக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த விளக்கமளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை தண்டிக்க இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த அசமந்த போக்கிற்கு அப்பால் ஐ நா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ஈழத்தமிழர்களுக்கு ஒரு சாதகமான திருப்பமாகும். அத்துடன், போர்க்குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை, குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, ஆகிய நாடுகளின் வலியுறுத்தலை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என ராமதாஸ் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், எதிர் வரும் 20ஆம் திகதி விவாதம் நடத்தப்பட்டு 21ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com