Friday, October 16, 2009

இதோனேசியக் கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் அவுஸ்திரேலியா நோக்கி சரக்கு கப்பல் ஒன்றில் சென்று கொண்டிருந்த 253 இலங்கையர்கள் இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். 195 ஆண்கள், 31 பெண்கள், 27 குழந்தைகள் அடங்கிய இக்குழுவினர் "நாம் இலங்கைப் பொது மக்கள், எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்" என்ற வசனத்தை மரப்பலகை ஒன்றில் பெயின்றினால் எழுதி தாங்கி வந்துள்ளனர்.

முதன் முறையாக இந்தோனேசியக் கடற்பரப்பில் இவ்வாறானதொரு இலங்கை அகதிகள் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் உள்ளவர்கள் கப்பலில் இருந்து இறங்க மறுத்திருந்ததுடன், அவுஸ்திரேலியா அல்லது ஏதாவது ஒரு நாடு தம்மை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதத்தில் இறங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், அதிகாரிகள் கப்பலை நெருங்கினால் தாம் கப்பலை வெடிக்கவைத்து சிதறடிக்கப்போவதாக தெரிவித்திருந்ததை, கப்பலில் உள்ளவர்கள் சார்பாக பேசிய ஒருவர் மறுத்துள்ளார். தம்மிடம் எவ்விதமான வெடிமருந்துகளும் இல்லை என தெரிவித்திருந்த அவர், சிலர் பயத்தின் நிமிர்த்தம் அவ்வாறு கத்தியதாகவும் கூறியிருந்தார்.

அதேநேரம் இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டவர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றுட் திடமாக தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் அவுஸ்திரேலிய அரசு எடுக்கின்ற இறுக்கமற்ற முடிவுகள் இன்று உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கு உதவியாக அமையும் எனவும், இவ்விடயத்தை கையாள்வதற்கு மிகவும் தேர்ச்சி பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின், அகதிகளுக்கான ஸ்தாபனம் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இந்தோனேசிய அதிகாரிகள், தடுத்து வைத்துள்ளவர்களிடம் ஆட்கடத்தல் முகவர்களின் விபரங்களை கேட்டு வருகின்றனர். ஆட்கடத்தல் முகவர்களின் விபரங்களை பகிரங்கமாக வெளியிட மறுத்துள்ள மக்கள், கடத்தல் காரர்கள் சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு தாம் அவர்களது விபரங்களை வெளியிடும்போது அது இலங்கையில் உள்ள தமது குடும்பத்தவர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமது பயணத்திற்கு பணம் செலுத்துவதாக ஒத்துக்கொண்டுள்ள தமது உறவினர்களுக்கும் ஆபத்தாக அமைந்து விடும் எனவும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஏதாவது ஒரு நாடு தம்மை ஏற்றுக்கொண்டால் அந்நாட்டிற்கு அவர்களது தகவல்களை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களை கப்பலில் இருந்து இறங்குமாறும், தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்படும் எனவும் பின்னர் வழமையான நடைமுறைகளை கடைப்பிடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் மக்கள் தாம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்ககே செல்ல விருப்புவதாக தெரிவித்துள்ளனர்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com