Showing posts with label veeman. Show all posts
Showing posts with label veeman. Show all posts

Sunday, May 30, 2021

நோயாளர்களை றிமோர்ட் கொன்றோலில் கொலை செய்யும் யாழ் வைத்தியசாலை – பீமன் -

உலகை தலைகீழாக பிரட்டிப் போட்டிருக்கின்றது கொவிட்-19. நாடுகள் நடுக்கம் கொள்ள பெருநகரங்கள் முடங்கிக்கிடக்கின்றது. கோவிட் தொற்றாளர்கள் மூச்சிழுப்பதைப்போன்றே பொருளாதாரமும் மூச்சிழுக்கின்றது. இந்த நிலையிலுருந்து மீள்வதற்காக உலகம் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து எதிர்பார்த்ததைவிட சீக்கிரமானதோர் மீட்சிக்கு வழிவிட்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ளலாம். பல்வேறு வகையான தடுப்பூசிகள் வெளிந்துள்ளது.

இந்த இடைவெளிக்குள் உலகளாவிய ரீதியில் இந்த நிமிடம் வரை கொரோணா தொற்றினால் 3,554,016 பேர் உயிரிழந்துள்ளார்கள். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் நோயாளிகளின் உயிர்களை காப்பதற்காக போராடிய வைத்தியதுறையைச் சேர்தவர்கள். பிரித்தானியாவில் மாத்திரம் 47 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளார்கள். இவர்கள் புனிதமான உயர்ந்த மனிதர்கள். சேவை செய்ய பிறந்த இறைதூதர்கள், என்றென்றும் மதிப்புக்குரியவர்கள்.

ஆனால் இலங்கையிலும் வைத்தியசேவை இவ்வாறு செயற்படுகின்றதா என்றால் 'ஆம் எங்களுடைய வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் நோயாளிகளை காப்பாற்ற செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்' என அடி மனதை தொட்டு கூறிவிடமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் நிற்கின்றோம்.

எமது வைத்தியசாலைகளில் கடைமையாற்றுகின்ற வைத்தியர்களின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகளை உணர்த்தவும் நோயாளிகள் எவ்வாறு ஈவுஇரக்கமின்றி கொலை செய்யப்படுகின்றார்கள் என்பதை உணர்த்தவும் யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை உதாரணத்திற்கு குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

யாழ்-வடமராட்சி, உடுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த வயோதிபர் ஒருவர், வயிற்றோட்டம் மற்றும் காச்சல் கரணமாக ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்தபோதும் காச்சல் தணியாத நிலையில் அவர் மந்திகை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மந்திகை வைத்தியசாலையில் இருநாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. காச்சல் தணியாத காரணத்தினால் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். முடிவு பொசிட்டிவ் (ஆம்) என வந்துள்ளது. பிசிஆர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிசிஆர் பரிசோதனையின் முடிவு வருவதற்குள் கொரோண தொற்றுக்குள்ளான நோயாளிகளை தனிமைப்படுத்தும் அறைக்கு நோயாளியை மாற்றம் செய்துள்ளனர். மறு நாள் பிசிஆர் முடிவு 'நெகட்டிவ்' (இல்லை) என வந்துள்ளது. நோயாளி சாதாரண வார்ட்டுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளார். இரு நாட்களின் பின்னர் பிசிஆர் பிரசோதனை மேற்கொண்டுள்ளனர். முடிவு 'பொசிட்டிவ்' என வந்துள்ளது.

வயிற்றோட்டம் காச்சலுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு வயிற்றோட்டம் காச்சலுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிவதற்கு பதிலாக, வைத்தியதுறையினராலேயே துல்லியமான முடிவு இல்லை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அன்ரிஜன் பரிசோதனையை மேற்கொண்டு கொரோணா தனிமைப்படுத்தல் அறையில் அடைத்து இல்லாத கொரோணைவை பரிசளித்துள்ளனர். மனித உடலில் காணப்படும் பெரும்பாண்மையான வியாதிகளுக்கான அறிகுறி வயிற்றோட்டம் காச்சல் என்ற நிலை இருக்கின்றபோதும் இன்று காச்சல் தடிமல் வயிற்றோட்டம் என்றால் கொரோணா மாத்திரம்தான் என முடிவு செய்கின்ற வினைத்திறனற்ற பொறுப்புணர்வற்ற மந்தபுத்தி நிலை வைத்தியசாலைகளில் காணப்படுகின்றது.

நோயாளி மந்திகையிலிருந்து யாழ் வைத்தியசாலையின் கொரோன வார்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த வார்ட் யாழ் வைத்தியசாலையின் பின்புறமாக உள்ளதுடன் அது கண்ணாடியினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக அமைக்கப்பட்ட துவாரங்களுடாக உணவினையும் மாத்திரைகளையும் வழங்குவது மாத்திரமே தாதியர்களின் செயற்பாடாக இருந்துள்ளது. அங்கு 17 நோயாளிகள் இருந்துள்ளனர். அவர்களில் மூவர் சுயமாக உணவையோ மருந்துகளையோ எடுத்து உட்கொள்ள முடியாத வாயோதிபர்கள். மூவரையும் பாராமரிப்பதற்காக அவர்களின் உறவினர்கள் அந்த வார்ட்டில் வந்து தங்கவேண்டும் என வைத்தியசாலை நிர்பந்தித்திருக்கின்றது. குறித்த நோயாளியை பாரமரிப்பதற்காக வைத்தியசாலை செல்வதற்கு நாட்டில் எவரும் இல்லை. அவரது பிள்ளைகள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். மனைவிக்கு 80 வயது. அவர் தனது நிலையை வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு தெரிவித்தபோதும் அவர்கள் அந்த உயிரை காப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறித்த வயோதிபரை 9 நாட்கள் பட்டினிபோட்டு கொலைசெய்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் கொரோணா வார்ட்டில் காணப்பட்ட 17 நோயாளிகளில் 14 பேர் சுயமாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளக்கூடியவர்கள். மூவர் பிறரின் உதவியில் தங்கியிருந்தோர். அவர்களில் இருவருக்கு உறவினர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து உதவியுள்ளனர். தனி ஒரு நோயாளியை உணவூட்டி மாத்திரைகள் வழங்கி பராமரிக்க முடியாத உறைந்த கொடுர மனநிலையிலேயே குறித்த வார்ட்டில் பணிபுரிவோர் காணப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர் சேவை என்பது மாத்திரைகளையும் ஊசி மருந்துகளை கொடுப்பது மாத்திரம்தான் என்ற நிலையாகி தசாப்பதங்களாகிவிட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கட்கு உதவிக்கு ஆட்கள் வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது. வைத்தியசாலையை சுற்றி தனியார் பராமரிப்பு நிறுவனங்கள் இயங்குகின்றது. நோயாளிகளுடன் வைத்தியசாலையில் நின்று உதவி புரிவதற்கு ஆள்உதவியற்றவர்கள் இந்த நிறுவனங்களிலிருந்து ஆட்களை பெறுகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 2400 ரூபா அறவிடப்படுகின்றது. தாதியர்கள் மேலதிக நேர கொடுப்பனவுகளுடன் மாதமொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாவினை மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளமாக பெற்றுக்கொள்ள மக்கள் நோயாளிகளாக வைத்திசாலைக்கு சென்றால் அவர்களை பராமரிப்பதற்கு மேலதிகமா நாளொன்றுக்கு சுமார் 2400 ரூபா செலுத்தவேண்டிய துர்பாக்கிய நிலை. இந்த நிதியினை வசதி படைத்ததோர் வழங்கி தங்களை காத்துக்கொள்கின்றனர், ஆனால் இத்தொகையை வழங்கமுடியாத வசதியற்றறோர் அதற்காக தங்களது உயிரினை விலைகொடுக்கவேண்டிய துர்பாக்கியம்.

மேற்படி தனியார் நிறுவனங்களுக்கு தரகர்களாக வைத்தியசாலையில் welfare service எனப்படுகின்ற பிரிவு செயற்படுகின்றது. இப்பிரிவை தொடர்பு கொண்ட குறித்த நோயாளியின் உறவினர்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பராமரிப்பாளர் ஒருவரை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கைக்கு பதிலளித்த welfare service ல் பிரிவில் கடமைபுரியும் வைத்தியசாலை ஊழியர்: 'நோயாளி கொரோணா தொற்றுக்குள்ளானவராதலால் பாராமரிப்பாளர் நாளொன்றுக்கு 5000 ரூபா வேண்டுகின்றார்' என தெரிவித்துள்ளார். அவர்கள் வேண்டுகின்ற எந்த தொகையையும் கொடுக்கமுடியும் ஒருவரை ஒழுங்கு செய்து தருமாறு கோரியுள்ளனர். மறுநாள் முடிவினை தெரிவிப்பதாக கூறிய அந்த ஊழியரை தொடர்பு கொண்டபோது, பாராமரிப்பாளர் ஒருவர் தயாராக இருப்பதாகவும் நிறுவனங்களிலிருந்து கொரோணா நோயாளிகளை பராமரிப்பதற்கு தங்களது பிரிவின் இயக்குனர் டாக்டர் ஜெயகிருஷ்னா அனுமதி தருகின்றார் இல்லை என தெரிவித்துள்ளார். இங்கு நாம் எழுப்புகின்ற கேள்வி யாதெனில் 'ஒரு நோயாளியை பராமரிப்பதற்கு நபர் ஒருவர் விருப்பு தெரிவித்திருந்தபோது அந்த நபரை அனுமதிக்க முடியாது என மறுப்பதற்கு டாக்டர் ஜெயகிருஷ்ணாவிற்குள்ள அதிகாரம் என்ன' என்பதாகும். ஒருவர் உணவின்றி உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும்போது எட்டிநின்று வேடிக்கை பார்த்த வைத்தியசாலை நிர்வாகம் உதவிக்கு வந்த நபரையும் அனுமதிக்காது குறித்த நோயாளியை கொலை செய்துள்ளது தெட்டத்தெளிவாகின்றது.

கொரோணா தொற்றுக்காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் உணவை தாமாக உட்கொள்ள முடியாத நோயாளர்கள் வீணாக உயிரிழக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என கிண்ணியா நகரசபையின் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடந்த செவ்வாய்யன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறிய அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களில் சிலர் தாமாக உணவை உண்பதற்கோ அல்லது தேநீரை தயாரித்து குடிப்பதற்கோ இயலாது பராமரிப்பின்றி சக்தி இழந்து வீணாக உயிர் இழக்கின்ற வாய்ப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே இவ்வாறான நோயாளர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்குவதை விட முறையான சுகாதார ஆலோசனை வழிகாட்டலின் பிரகாரம் தங்களது வீட்டில் வைத்து பராமரிக்கப் படுவதற்கான சந்தர்ப்பத்தை அல்லது வைத்தியசாலையில் உதவியாளர் ஒருவர் அனுமதிக்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சுகாதார திணைக்கள அதிகாரிகளிடமும் வைத்தியர்களிடமும் கேட்டுக்கொள்வதாக கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் வடகிழக்கில் வைத்தியத்துறையினரின் ஒழுங்கீனங்கள் தொடர்பாகவும் அங்குவாழும் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர்பாகவும் மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்வுவாழும் எந்த அரசியல்வாதியும் கண்டு கொண்டதாக இல்லை.

இந்நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் கடமைபுரியும் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக உரையாடினேன். அவரிடமிருந்து வந்த வார்த்தைகள்: ' இங்கே டொக்டர்மார் ஒடி ஒழிக்கின்றார்கள். கொரோணா வாட்டுக்களை அமைத்து அதற்காக வைத்தியர்களை நியமித்திருந்தாலும் இவர்கள் எவரும் வார்ட் பக்கம் செல்வதில்லை. தொலைவிலிருந்து வாட்டிலுள்ள ஒரு சில தாதிகளிடம் தொலைபேசியிலேயே நோயாளிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்கின்றார்கள். முன்னணியில் நின்று தலைமைதாங்கவேண்டிய வைத்தியர்கள் இவ்வாறு ஒழிக்கும்போது தாதியர்கள் நோயாளிகளுக்கு கிட்ட நெருங்குவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்கமுடியும். எழுந்து நடமாடி மருந்தை , உணவை உட்கொள்ளக்கூடிய தொற்றாளர்கள் 10-14 நாட்களில் மீண்டுவருவார்கள். இயலாதவர்களின் நிலைமை அவ்வளவுதான். இதுதான் இங்கு நிலைமை' என்று முடித்தார்.

Read more...

Thursday, January 14, 2021

இலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்! பீமன்.

யாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற தீயநோக்குடனும் திட்டமிட்டு நடப்பட்ட நச்சுக்கல்லொன்று துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா அவர்களின் காலப்பகுதியில் பிடிங்கியெறியப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். இக்கைங்கரியம் பேராசிரியர் சிறிசற்குணராசா அவர்களின் காலத்தில் இடம்பெற்றதென்பது சிறப்பம்சமாவதற்கு காரணம் யாதெனில் அவர் புலிகளின் தீவிர விசுவாசியாகவும் ஆதரவாளனாகவும் செயற்பட்டவர்.

இவ்விடயத்தினை பேராசிரியர் மேற்கொள்வதற்கு பிரதான காரணங்களாக : முதலாவது - குறித்த நினைவுக்கல்லானது மூவின மாணவர்களும் பயிலுகின்ற ஒரு பல்கலைக்கழகத்திலே குற்ற உணர்வுகளை, இனரீதியான தீய சிந்தனைகளை, வன்செயலை, வெறுப்புணர்வை, பழிவாங்கும எண்ணத்தை தூண்டக்கூடியதாகவும் மாணவர்களிடையே இருக்கக்கூடிய அந்நியோன்னியத்தை காலத்திற்குகாலம் குலைக்கக்கூடியதாகவும், அரசியல் முரண்பாடுகளை தோற்றவிக்ககூடியதாகவும் அமையலாம் என்ற நோக்கில்

இரண்டாவது - அரசிடம் அல்லது அரச உயர் பீடத்திடமிருந்து நேரயாகவோ அன்றில் மறைமுகமாகவோ வந்த அறிவுறுத்தல் அல்லது கட்டளை

மூன்றாவது - மேற்கூறிய முதலாவதும் இரண்டாவதும் கலந்த ஒரு கூட்டு முடிவினால் அமைந்திருக்கலாம்.

முதலாவது காரணத்திற்கான சாத்தியக்கூறுகள் மிகச் சொற்ப்பம் அல்லது அடியோடு இல்லையென்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் இயங்குதல் எவ்வாறானது, அந்த இயங்குதலின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?, எந்த நோக்கத்துடன் அவர்கள் இயங்குகின்றார்கள்? அவர்களின் வியூகங்கள் யாது? என்கின்றவற்றை நன்கே அறிந்து வைத்துள்ள பேராசிரியர் கல்லில் கைவைத்தால் தான் ஒரே இரவில் துரோகியாக்கப்படுவேன், தனது கல்விநிலை அந்தஸ்த்து, கற்பித்தலால் பெற்றுக்கொண்ட கௌரவம் யாவும் நந்திக்கடலில் மூழ்கடிக்கப்படும் என்பதை உணராதவராக இந்த முடிவுக்கு வந்திருக்க முடியாது.

எனவே இரண்டாவது அல்லது முன்றாவது காரணங்களே முடிவுக்கான மூலகாரணமாக அமைந்திருக்கக்கூடும்.

எடுக்கப்பட்ட முடிவு தீர்க்கதரிசனமானது. காரணம் இக்கல்லின் இருப்பால் ஒருநாள் முரண்பாடுகள் வெளிப்படும், அதிலிருந்து ஊற்றெடுக்கக்கூடிய இரத்த ஆறானது இலங்கையின் சகல நகரங்களையும் ஊடறுத்துச் செல்லவும் கூடும். ஆகவே பிடுங்கியெறியப்பட்ட அந்த நச்சுக்கல்லை மீண்டும் அங்கே வைத்துக்கொள்ள இலங்கை அரசு எடுத்துள்ள முடிவானது அயோக்கியத்தனமானது, வன்செயலுக்கான வழிகளை அரசு தடுக்க மறுக்கின்றது, வன்செயலில் குளிர்காய முனைகின்றது என்கின்ற குற்றச்சாட்டுக்களை இந்த அரசின்மீது நேரடியாகச் சுமத்துகின்றேன்.

மேலும் இவ்விடயத்தில் உபவேந்தரை இலங்கை அரசு அப்பட்டமாக காட்டிக்கொடுத்து நட்டாற்றில் விட்டுள்ளது. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயம் எவரால் எடுக்கப்பட்ட முடிவு என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கவில்லை, மாறாக எடுக்கப்பட்ட முடிவின் பலாபலன்கள் என்ன என்பதை மக்கள் முன்வைத்து அச்செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்றியிருக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பிலிருந்து இலங்கை அரசு தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது.

இவ்வாறு இலங்கை அரசு பல்வேறு சந்தர்ப்பங்களில் பிள்ளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டியுள்ளது. இடம்பெற்று முடிந்த யுத்தத்தில்கூட தங்களுடன் தோழோடு தோழ் நின்ற பல தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள அனுபவங்களை நாம் பதிவு செய்துள்ளோம்:

பல்கலைக்கழகத்திலிருந்த கல்லை அகற்றுமாறு அரசின் உயர் பீடத்திலிருந்து தனக்கு கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல் அல்லது அழுத்தத்தின் பேரிலேயே தான் அந்த முடிவுக்கு வந்ததாக தற்போது நேரடியாகவும் இதற்கு முன்னர் நண்பர்களிடம் மறைமுகமாகவும் தெரிவித்துள்ள பேராசிரியர் அந்த அறிவுறுத்தல் அல்லது அழுத்தம் எங்கிருந்து வந்தது என காட்டிக்கொடுக்கவில்லை. அது அவரது பேரறிவின் பண்பாக இருக்கலாம். பேராசிரியர் தனக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது என காட்டிக்கொடுக்காதபோது, அதே பண்பினை அவருக்கு உத்தரவு பிறப்பித்தவர்களும் கடைப்பிடித்திருக்கவேண்டும்.

கட்டளையை ஏற்று அதனை உடைத்தெறிந்த பின்னர், அவரது கையாலேயே அதற்கு அடிக்கல் நடவைத்தது இலங்கை அரசின் மிகவும் கீழ்த்தரமான செயலாகும். அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும். இந்த காட்டிக்கொடுப்பும் கறிவேப்பிலை பாவனையும் பேராசிரயருடன் இறுதியானதாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் குறித்த கல் எந்த சூழ்நிலையிலும் அல்லது நிபந்தனையிலும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு பொருத்தமற்றதாகும். எனவே அது அங்கு மீண்டும் நிறுவப்படுவதற்கு அனுமதி மறுக்கப்படவேண்டும்:

Read more...

Thursday, July 30, 2020

றிசார்ட் பதுயுதீன் வில்பத்து பிரதேசத்தில் தமிழ் சிங்கள மக்களை மதம்மாற்றுகின்றார். செலஸ் ரீன்

தமிழ் மக்களின் இனவிருத்தி குறைந்து செல்கின்றது.
தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகள் மக்களை கடந்த 70 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர்.
அல்பிரட் துரையப்பாவின் பாதையில் பயணிப்பதையிட்டு மனமகிழ்சி கொள்கின்றேன்
துரோகி என்பது அனைவருக்கும் பொதுவான பட்டமாகிவிட்டது. அதற்கு நான் அஞ்சவில்லை.


முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசார்ட் பதுயுதீன் தமிழ் சிங்கள மக்களை வில்பத்து பிரதேசத்தில் மதமாற்றி வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் செலஸ் ரீன் குற்றஞ்சுமத்துகின்றார்.

எமது இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார். பேட்டி கண்டவர் பீமன்.


பீமன் : உங்களைப் பற்றி சிறிது சொல்லுங்கள்?


செலஸ் ரீன் : என்னுடைய பெயர் ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரீன் நான் யாழ்ப்பாணம் பாஷையூர் என்ற கரையோர கிராமத்தில் பிறந்தேன். ஆரம்ப கல்வியை சென் யோசப் வித்தியாலத்தில் பெற்றுக்கொண்டேன். 1995ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி பூநகரி மகா வித்தியாலத்தில் சாதாரண தரம்வரை கற்றேன். உயர் தரத்தினை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் வணிகத்துறையில் கற்று கொழும்பு பல்கழைக்கழகத்திற்கு தெரிவானேன். கொழும்பு பல்கழைக்கழக பட்டதாரியாகி அதன் பின்னர் அப்பட்டத்துடன் UNHCR, Norwegian Refugee Council (NRC) ) போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் ஓர் மனிதாபிமான பணியாளராக கிழக்கு மாகாணத்தில் பணியாற்றி யுத்த காலத்தில் மக்கள் அடைந்த துன்பங்களையும் வேதனைகளையும் கொடுமைகளையும் இழப்புக்களையும் நேரடியாக பார்த்து அவர்களின் வலி உணர்ந்து செயற்பட்டேன்.

ஜக்கியமக்கள் தமிழ் சட்டப்பேரவை (UTLAC) என்ற சட்ட நிறுவனத்தை எனது சொந்த செலவில் நடாத்தி குறிப்பிடத்தக்க சட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றேன்.

பீமன்: தங்களுடைய அரசியல் பிரவேசம் சம்மந்தமாக கூறுங்கள்?

செலஸ் ரீன்: 2015ம் ஆண்டு வரை தமிழ்தேசிய மாயையில் சிக்குண்டு த.தே.கூ வின் ஆதரவாளராகத்தான் இருந்தேன். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களினுடைய பிரச்சனைகள் எதனையும் தீர்க்காது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, யுத்தகுற்ற விசாரணை, காணாமல் போனோருக்கான நியாயம் என்ற வார்த்தை ஜாலங்களால் மக்களினுடைய உணர்ச்சிகளை தூண்டி வாக்கு பெற்று விட்டு பாராளுமன்றம் சென்று மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை உணர்ந்ததுடன் சுதாகரித்துக்கொண்டேன்.

முஸ்லீம் அரசியல்வாதிகள் தேசியம் , தாயகம் என்ற போலிக்கோஷங்களை விடுத்து ஆட்சியிலுள்ளவர்களுடன் இணைந்து தமது சமூகத்திற்கு தங்களது சக்திக்கு மேலதிகமாகவே செய்துள்ளார்கள். ஆகையால் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் எனது சிங்கள நண்பர்கள் சிறீலங்கா பொதுஜன பிரமுக கட்சியில் இணையுமாறு கோரியதற்கு அமைவாக 2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து நான் சிறீலங்கா பொதுஜன பிரமுக கட்சியின் அங்கத்தவராக இருக்கின்றேன்.

பீமன் : நீங்கள் தற்போது பொதுஜன ஜக்கிய பிரமுகவுடன் இணைந்திருக்கின்றீர்கள். ஆனால் இலங்கையிலுள்ள தேசியக்கட்சிகளுடன் இணைந்த எம்மவர்கள் பலர் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்ட வரலாறு உண்டு. எனவே நீங்கள் ஒரு துரோக அரசியலை தேர்ந்தெடுத்திருப்பதாக உணரவில்லையா?

செலஸ் ரீன் : 1940 ஆண்டிலிருந்து ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வந்திருக்கின்றது. இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்களை நாடாற்றவர்களாக்கி சில இலட்சம் மக்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு துணைநின்று தமிழ் மக்களுக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் புரிந்த முதலாவது துரோத்தினை வரலாறு என்றும் மறக்காது.

அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற செல்வநாயகம் உட்பட சிலபேர் சேர்ந்து தாங்கள் பாராளுமன்றம் செல்வதற்காக வட்டுக்கோட்டையில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அத்தீர்மானத்தினூடாக எமக்கு வாக்களித்தால் வடகிழக்கை தாயகமாக கொண்ட தனிநாட்டை உருவாக்குவோம் என்ற நயவஞ்சக வாக்குறுதியை வழங்கி இலகுவாக பாராளுமன்று சென்றுவிட்டார்கள்.

இவர்களுடைய வார்த்தைகளை நம்பி இளைஞர்கள் பல ஆயுதக்குழுக்களை உருவாக்கினார்கள். அவ்வாயுதக்குழுக்கள் பலவும் அழிக்கப்பட்டு இறுதியில் விடுதலைப்புலிகள் இயக்கம் மிகப்பெரிய இயக்கமாக மாறியது. அவர்கள்கூட 2009ம் ஆண்டு இதே தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் துரோகத்தனத்தாலும் உதயன் பத்திரிக்கை போன்ற பத்திரிக்கைகளாலும் அழிக்கப்பட்டனர். சர்வதேச ஒழுங்குகள் என்ன? என்ன மாற்றங்கள நிகழ்கிறது? இந்த வழியால் சென்றால் என்ன அழிவு வரும் என்ற விடயங்களை சரியான வழியில் கூறாமல் பொய்க்கு மேல் பொய்களைக்கூறி தமிழ் பத்திரிக்கைகளும் தமிழரசுக்கட்சியும் மக்களுக்கு துரோகம் செய்தது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தையொட்டி உருவான ஆயுதப்போராட்டம் என்ற சதிவலையில் பாமர மக்கள், படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் என பலரும்; சிக்கினார்கள் ஆனால் தந்தை செல்வநாயகத்தினதோ அன்றில் ஏனைய தலைவர்கள் எவரினதோ பிள்ளைகள் இணைந்து கொள்ளவில்லை. இது தழிரசுக்கட்சி செய்த இரண்டாவது துரோகமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்தியா, சுவிஸ், நோர்வே என ஓடித் தப்பிவிட்டார்கள். மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சம்பந்தன் வாய் திறக்கவில்லை. இது தமிழ்தேசியக் கூட்டமைப்பு செய்த மூன்றாவது துரோகம்.

எனவே தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே துரோகிகள் நான் அல்ல.

பீமன் : உங்கள் அரசியல் பிரவேசத்தின் நோக்கம்தான் என்ன?

செலஸ் ரீன் : தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்திக்கும் மாநிலத்துக்குமான முட்டுக்கட்டையாகவுள்ளது. தமிழ் மக்களுக்கு பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்த நண்பர்கள் உதவ எத்தனிக்கின்றபோது அவர்கள் , தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் தடுக்கப்படுகின்றார்கள். அதன் பிரகாரம் அந்த நண்பர்கள் புதிய இளம் தலைமுறையினர் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் அங்கீகாரம் பெறவேண்டுமென்று எதிர்பார்கின்றார்கள். எனவே தமிழ் தேசியத்தடையை உடைத்து மக்களுக்கு சரியான பாதையை காட்ட அரசியலில் நுழைந்துள்ளேன்.

பீமன் : தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் குறைபாடுகள் தொடர்பில் பட்டியலிடுகின்றீர்கள். இருந்தாலும் தேசிய அரசியலில் இணைந்து செயற்பட்ட அல்பிறட் துரையப்பா போன்றோரை தமிழ் மக்கள் இன்றுவரை துரோகியாக காண்கின்றார்கள். அவ்வாறுதான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவரிசையில் தங்களுக்கும் துரோகி முத்திரை குத்தப்படலாம் அல்லவா?

செலஸ் ரீன் : தற்போது துரோகி என்பது அனைவருக்கும் பொதுவான பட்டம்போல் ஆகிவிட்டது. சுமந்திரன் துரோகி, கருணா துரோகி, சம்மந்தன் துரோகி, டக்ளஸ் துரோகி, நான் துரோகி, நீங்கள் துரோகி எல்லோரும் துரோகி. அப்படியானால் யார்தான் துரோகி இல்லை? அந்த துரோகி என்ற வார்த்தைக்கு பயந்து மக்கள் பணி செய்வதை நிறுத்திவிடுமளவுக்கு நான் கோழை அல்ல. இந்த அரசியல் பயணத்தில் இறங்கும்பொழுது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள், வார்த்தை பிரயோகங்கள் பாவிக்கப்படும் என்பது எனக்கு நன்றாகத்தெரியும்.

ஆனால் நான் இங்கு கற்றுக்கொண்ட விடயம் யாதெனில் அல்பிரட் துரையப்பா காலத்தில்தான் யாழ் நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. அதனுடைய சாட்சியாக அல்பிரட் துரையப்பா விளையாட்டு மைதானம் இன்றும் கம்பீரமாக உள்ளது. எனவே அவர் துரோகிப்பட்டத்தை பற்றி கவலை கொள்ளவில்லை, அவர் பாதையில் பயணிப்பதையிட்டு மனமகிழ்சி கொள்கின்றேன்.

பீமன் : மக்களுக்கு சேவை செய்வதற்கு தங்கள் வசமுள்ள திட்டங்கள் யாது?

செலஸ் ரீன் : வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற முட்டாள்தனமான தீர்மானம் 1976ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டபோது மிகப்பாரிய உத்வேகத்துடன் ஆயுதக்குழுக்கள் உருவாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் இலங்கை பூராவுமுள்ள அரச பதவிகளை யாழ் தமிழர்களே அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். அத்துடன் யாழ்ப்பாணத்தினுடைய கல்வி வளர்ச்சி, கல்வி தராதரம் மிகவும் உயரத்தில் இருந்தது. யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் மிக அதிகமாக காணப்பட்டார்கள். அனைத்து அரச நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. 1980ம் ஆண்டு காலப்பகுதியில் கல்வியிலும் விளையாட்டிலும் நாங்கள் சிறந்திருந்தோம். விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருந்தோம். கடற்தொழிலில் நாங்கள் கொழும்புக்கு ஏரளமான தொன்கணக்கான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தோம். சர்வதேச நாடுகளுடன் அந்த நேரத்தில் சரியான உறவில் இருந்தோம். யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றால் ஒரு மரியாதை இருந்தது. இந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் நாங்கள் இருந்த நிலையில் இருந்து பல மடங்கு கீழே இறங்கி விட்டோம்.

1980 ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுடைய விகிதாசாரம் 75 விகிதத்திற்கு அதிகமாகவும் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் விகிதாசாரம் 25 இற்கு குறைவாகவும் காணப்பட்டது. தற்போது கிழக்கில் தமிழர்களின் விகிதாசாரம் வெறும் 40 ஆக குறைந்துள்ளது. இன்றைய யாழ்பாண சனத்தொகையை 1980ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 30 லட்சம் இருக்கவேண்டும். ஆனால் தற்போது வெறும் 7 லட்சமாகவுள்ளது. எனவே நாம் அன்று வடகிழக்கு எமது தாயகம் என்றதில் நியாயம் ஒன்று இருந்தது.

ஆனால் இன்று நிலைமை வேறு. எமக்குள்ள பிரச்சினைகள் வேறு. அவற்றுக்கு தீர்வினை தேடவேண்டும். எமது சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக றிசார்ட் பதுயுதீன் என்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மோசமான அரசியல்வாதி வில்பத்து காடுகளை அழித்து அங்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை இஸ்லாத்திற்கு மதமாற்றியுள்ளார். இதனால்தான் நாம் மேலும் சிறுபாண்மையாகிக்கொண்டிருக்கின்றோம்.

இவ்விடத்தில் நாம் அறிவாயுதத்தை பயன்படுத்தவேண்டும். மாற்றுவழியைத் தேடவேண்டும். சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யவே தமக்கு நேரம் போதாது என்கின்றனர். எனவே தமிழ் மக்கள் தமக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளை தெரிவு செய்யவேண்டுமென்கின்றனர். என்போன்ற இளைஞர்கள் மக்கள் ஆணையை பெற்று மக்களுக்கு சேவையை மேற்கொள்ள முன்வரவேண்டுமென்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு , விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரை பாராளுமன்று அனுப்பினால் வெறுமனே எதிர்கட்சியிலமர்ந்திருந்து தொடர்ந்தும் சுயநிர்ணய உரிமைக்கோஷத்தை முன்வைத்து காலத்தை கடத்துவர். சுயநிர்ணய உரிமை என்றால் நாட்டை பிரித்து தனிநாடு உருவாக்குவதற்கான உரிமை. அது அரசியலமைப்புக்கு விரோமானது. அந்த உரிமையை சிங்களவர்கள் உலகம் அழிந்தாலும் கொடுக்க மாட்டார்கள். முட்டாள் தனமான கருத்துக்களை இந்த தமிழ்தேசியவாதிகள் கூறிக்கொண்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென்கின்றனர். அந்த இணைப்பு நிரந்தரமாக பிரிக்கப்பட்டு விட்டது. அதனை இணைக்க முடியாது. அத்தீர்ப்பில் எழுதப்பட்டுள்ள விடயத்தை உங்களை போன்ற ஊடவியலாளர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றீர்கள் இல்லை. ஆகையால் நாம் நடைமுறைச்சாத்தியமான வழியில் எமது விடயங்களை அணுக வேண்டும்.

கல்வி, விளையாட்டு, சுற்றுலாத்துறை, விவசாயம் வேளாண்மை, கடற்தொழில், கட்டட நிர்மாணத்துறை, கைத்தொழில், சிறுகைத்தொழில் இவ்வாறான சகல துறைகளையும் நாங்கள் மேம்படுத்த வேண்டும். அதற்கு அரச அதிகாரம் தேவைப்படுகின்றது. அதனை பெற்றுக்கொள்வதற்காகவே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம். மக்களுடைய ஆணையுடன் நிச்சயம் நாங்கள் பாராளுமன்றம் சென்று மக்களுக்கு சேவை செய்வோம் என எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

பீமன் : பொதுஜன பிரமுக என்ற கட்சியை தலைமையாக கொண்ட கூட்டில்தான் நீங்கள் அங்கம் வகிக்கின்றீர்கள். ஜனாதிபதி கோத்தபாய மீதுள்ள தங்களின் நம்பிக்கை யாது?

செலஸ் ரீன் : இவருடைய அடுத்த நான்கு வருட ஆட்சியில் நாம் மிகப்பெரும் அபிவிருத்தி யுகத்தை எதிர்கொள்ளப் போகிறோம். அந்த அபிவிருத்தி யுகம் வடக்குக்கும் வரவேண்டுமென்றால் நாமும் அரசில் பங்காளிகளாக மாறவேண்டும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் பிரதிநிதிகள் என்ற பொறுப்புணர்வை மறந்து பிச்சைக்காரன் சிரங்கை சொறிவதுபோல் சொறிந்து கொண்டிருக்கின்றனர். இது மக்களின் வயிற்றிலடிக்கும் செயலாகும். கோத்தபாய அவர்களின் ஆட்சியில் அடுத்த நான்கு வருடங்கள் அபிவிருத்தி யுகம் ஜந்தாவது வருடம் அரசியல் தீர்வை சட்டத்திருத்தத்தின் ஊடாக கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.

பீமன் : நீங்கள் சட்ட உதவி அமைப்பொன்றை இயக்கி வருவதாக ஆரம்பத்தில் கூறியிருந்தீர்கள். இந்த அமைப்பு எவ்வாறு செயற்படுகின்றது? இதனுடாக நீங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்ற சேவைகள் என்ன என்பது பற்றி குறிப்பிட முடியுமா?

செலஸ் ரீன் : நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளராகவிருந்தபோது, வடகிழக்கு மக்களுக்கு சட்ட உதவியை வழங்கும்பொருட்டு குறித்த அமைப்பை உருவாக்கியிருந்தேன். இதன்நோக்கம் சட்ட ஆதரவு அற்ற எம் மக்களுக்கு இலவச சட்ட உதவியை வழங்குவதாகும். ஆனால் இத்திட்டத்திற்கு உதவி வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்து விட்டது. அரசியல் மற்றும் பணபலம் இல்லாத காரணத்தினால் பெருமெடுப்பில் எனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமலுள்ளது. எதிர்காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நான் வலுப்பெறும்போது எனது கனவு நிறைவேறுமென நினைக்கின்றேன்.

பீமன் : தேர்தலில் உங்களுடைய நம்பிக்கை எவ்வாறு இருக்கிறது?


செலஸ் ரீன் : எனது நண்பர் அங்கஜன் இராமநாதன் தலமையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கை சின்னத்தில் போட்டிடும் எமது அணிக்கு குறைந்தது 03 ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்காக நாங்கள் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றோம்.

பீமன் : இறுதியாக நீங்கள் மக்களுக்கு கூற விரும்புகிற செய்தி என்ன?

இங்கு வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகளால் கடந்த 70 வருடங்களாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புலம்பெயர் தமிழர்கள் தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகளுக்கு பக்க பலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு , விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சி மற்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சிகளுக்கு நிதி மற்றும் ஆத்ம ரீதியாக உதவி புரிகின்றனர். ஆனால் இந்த உதவிகள் இங்கிருக்கக்கூடிய ஒவ்வொரு ஏழைகளினுடைய வயிற்றிலும் அடிக்கின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இக்கட்சிகள் பலம்பெறும் அளவுக்கு இங்குள்ள தமிழ் மக்களின் துன்பம் பெருகிக்கொண்டு செல்கிறது. ஆகையால் , தயவு செய்து தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதை நிறுத்திவிடுங்கள் என்று அன்பாக வேண்டுகின்றேன்.

அத்துடன் தேசிய கட்சிகளில் போட்டியிடும் எங்களை ஒரு எதிரியாக பார்ப்பதை தவிர்த்து எமது எதிர்வரும் 5 வருட நடவடிக்கைகளை அவதானியுங்கள். நிச்சமாக நீங்கள் திருப்தியடையும் விதத்தில் நாம் செயற்படுவோம் என தமிழ் மக்களுக்கு நான் கூற விரும்புகின்றேன்.

Read more...

Wednesday, June 17, 2020

தமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா? மீட்பது எவ்வாறு? பீமன்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்றனர். பாராளுமன்றுக்கு தெரிவாகின்ற உறுப்பினன் ஒவ்வொருவனும் தெரிவான அதே நாளிலிருந்து பாடையில் ஏறும்வரை செல்வச்செழிப்புடன் வாழ்வதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளது எனப் பூரிப்படைகின்றான்.

1978ம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு அரசியல்வாதிகள் மக்களை சுரண்டுவதற்கான அத்தனை உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்புரிமைகள் என்ற போலிமுலாத்துடன், அவர்கள் நாட்டின் சட்டத்தினை மீறவும், மற்றவர்களின் உரிமைகளை பறிக்கவும், மக்களுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தினை தங்கள் பொக்கட்டுக்குள் போட்டுக்கொள்ளவும், இந்த அரசியல் யாப்பு வழிவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுபினரராக தெரிவு செய்யப்படும் ஒருவன், பாராளுமன்றினூடாக மக்களுக்கு என்ன சேவையை வழங்கியுள்ளான் என்ற எந்த ஆய்வும் செய்யாது, வாழ்நாள் முழுவதும் மக்கள் அவனை ஓய்வூதியம் வழங்கி பாதுகாக்கவேண்மென்ற பாரிய சுமையினை இந்த அரசியல்யாப்பு மக்கள் மீது சுமத்தியுள்ளது. நிதிநிர்வாகம் செய்வதற்கும் சட்டமியற்றுவதற்குமான பாராளுமன்று மக்களின் சொத்துக்களை தாங்கள் அனுபவிப்தற்கான சட்டங்களை இயற்றி வெகுஜன வாக்கெடுப்பின்றி அதற்கு ஆதரவாக தாங்களே வாக்களித்து மக்களுக்கு நடுவிரல்காட்டியுள்ள முக்கியமான விடயமொன்று தொடர்பில் பேசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 225 வாகனங்கள் அரசிற்கு வரிசெலுத்தாது நாட்டினுள் வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை சுமார் 700 கோடிகளை இழக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் 700 கோடிகளை ஏப்பம் விட, வரவுசெலவுத்திட்டத்தில் துண்டுவிழும் 700 கோடியை நிரப்புவதற்காக மக்கள் மீது வரிசுமை அதிகரிக்கப்படும். அதாவது நுகர்வுப்பொருட்களின் விலை அதிகரிக்கும். நேரடியாக கூறுவதானால் சம்பந்தன், டக்ளஸ், செல்வம், சித்தார்த்தன், சிறிதரன், சிறிநேசன் என்ற சிலர் சொகுசு வாகனத்தில் பயணிப்பதற்காக சிவக்கொழுந்தும், சின்னலெப்பையும், புஞ்சிபண்டாவும் சீனிக்கும், பால்மாவுக்கும் , பனடோலுக்கும் ஒவ்வொரு ரூபாய் மேலதிகமாக செலுத்தவேண்டும்.

இந்த அவலநிலைக்கான மாற்றம் அரசியல் யாப்பினூடாக கொண்டுவரப்படுகின்றதோ இல்லையோ மக்கள் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும். இலங்கை வரலாற்றில் சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா தொடக்கம் வியாளேந்திரன் வரை பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றார்கள். இவர்களுக்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுடன் மக்களின் வரிப்பணத்தில் சுமார் இரண்டரை லட்சம் ரூபா மாதாந்தம் வழங்கப்படுகின்றது. இதற்கு அப்பால் ஒவ்வொரு முறை பாராளுமன்று தெரிவு செய்யப்படும்போதும் சுமார் 3 கோடி ரூபா வரிச்சலுகையை பெறுகின்றார்கள். ஆனால் இவர்களை தெரிவு செய்த மக்கள் பெற்றுக்கொண்டது என்ன?P

பாராளுமன்றுக்கு தெரிவான எமது முதலைகள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாக்களை விழுங்கிவிட்டு மீண்டும்; அதே பழையே கோஷங்களுடன் அடுத்தசுற்றுக் கொள்ளைக்காக வெள்ளை வேட்டிகளுடன் மக்களின் வாசற்படி ஏறத்தொடங்கியுள்ளனர். ஆனால் மக்கள் இவர்களை பாராளுமன்றுக்கு அனுப்பியதனால் அடைந்தது என்ன? அவர்கள் விழுங்கியது எத்தனை கோடிகள்? என்ற கேள்விகளை கேட்க மக்கள் மறுக்கின்றனர்.

எனவே அவர்கள் விழுங்கியவற்றை மீட்கவேண்டிய காலகட்டத்திற்கு மக்கள் இப்போது வந்துள்ளனர். மக்கள் ஒன்று திரண்டால் அது செய்யமுடியாது காரியமும் அல்ல. அதனை எவ்வாறு செய்வது? ஏங்கிருந்து ஆரம்பிப்பது? ஏன்ற கேள்வி தோன்றலாம்.

கடந்த 5 பாராளுமன்றுகளை எடுத்துக்கொள்வோமானால், தமிழ் மக்கள் சுமார் 100 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். அவர்களில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் 5 தடவைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமாக இணைந்து சுமார் 100 வரிச்சலுகை வாகனங்களை பெற்றுள்ளனர். இவற்றின் மொத்தப்பெறுமதி 300 கோடிகளாகும். ஆனால் இந்த வாகனங்களால் மக்களுக்கு கிடைத்த சேவை என்ன? எனவே அவை மீட்கப்படவேண்டும். ஆகக்குறைந்தது அவர்கள் பெற்றுக்கொண்ட வரிச்சலுகையில் மூன்றில் ஒரு பங்காவது மக்களுக்கு வழங்கப்படவேண்டும். அந்த வகையில் 100 கோடி ரூபா இந்த முதலைகளிடமிருந்து பறிக்கப்படவேண்டும்.

பறிக்கப்படும் பணத்தை கொண்டு உயரிய கட்டுப்பாடுகள் மற்றும் சீரான ஓழுக்கவிதிகளுடன் கூடிய தொழில் மேம்பாட்டு நிதியம் ஒன்று வடகிழக்கில் உருவாக்கப்படவேண்டும். அதனூடாக வடகிழக்கெங்கும் தொழிற்சாலைகள் , பண்ணைகள் நிறுவப்பட்டு தொழிலற்றோருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் திட்டமொன்று உடனடியாக உருவாக்கப்படவேண்டும். நிதி மற்றும் நிறுவனங்களை பராமரிப்பதற்காக உழலற்ற கட்டமைப்பொன்று உருவாக்கப்படவேண்டும். அதன் வெளிப்படைத்தன்மையை பேணும்பொருட்டும் ஆலோசனைகளைப் பெறும்பொருட்டும் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பிரதிநிதிகள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்.

இவ்வாறானதோர் திட்டத்திற்கு அடித்தளம் வடகிழக்கிலிருந்து இடப்படும்பட்சத்தில் அந்நிதியத்திற்கு தாரளமான புலம்பெயர் உறவுகள் அதன் செயற்திறனை அவதானித்து ஒரே தடவையில் உதவி புரிவர். திட்டம் செயற்படுத்தப்படின் வடகிழக்கில் வலுவான உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கமுடியும். நேரடியாக கூறப்போனால் வாழ்நாள்முழுவதும் கையேந்தி வாழப்பழகியுள்ள மக்களை உழைப்பாளிகளாக மாற்றி கௌரவானதோர் வாழ்வு வாழ வழிவிடமுடியும். இதற்கு மேலதிக நிதி தேவைப்படின் மக்களின் பணத்தை ஏப்பம் விட்டுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகளின் கதவுகளையும் தட்டமுடியும்.

வாக்குகளை அபகரித்துக்கொண்டு மக்களுக்கு நடுவிரலை காட்டிவிட்டு நகர்ப்புறங்களில் சொகுசுவாகனங்களில் வாழ்ந்த அதிகார வர்க்கத்தினர் தற்போது பழைய குருடி கதவ திறடி என வேட்டி சால்வைகளுடன் மக்களின் வாசற்படிகளை மிதிக்கத்தொடங்கியுள்ளனர். எனவே இந்த ஈனப்பிறவிகளிடம் தாங்கள் பெற்றுக்கொண்ட வரிச்சலுகைப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை மேற்படி திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யுமாறு வலியுறுத்துவதற்கு தகுந்த தருணமாக நான் இத்தேர்தல் காலத்தை கண்கின்றேன்.

ஆகையால் கிராமங்கள்தோறுமிருக்கின்ற குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து சமூக சேவை செய்கின்றோம் என பணம்பெற்று முகநூலில் விளம்பரம் தேடிக்கொண்டிருக்கின்ற குழுக்கள் , தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை களைந்து மேற்படி திட்டத்திற்காக ஒன்றிணைந்து சகல அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள வரிச்சலுகைப்பணத்தில் மூன்றிலொரு பகுதியை பெற்றுக்கொள்வதற்கு அணிதிரளவேண்டும். இவ்விடயத்தில் மக்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தி , மக்கள் புரட்சி உருவாக வேண்டும். அவ்வாறு பணத்தினை தரமறுப்பவர்கள் அம்பலப்படுத்தப்படுவதுடன், புதிய வேட்பாளர்களாக வந்திருக்கின்றவர்களுடன் , அவர்கள் வெல்லும் பட்சத்தில் வாகனவரிச்சலுகையினை பெறுவார்களாயின் மூன்றிலொன்றை மக்களின் தொழில் மேம்பாட்டு நிதியத்திற்கு வழங்குவோமென்ற ஒப்பந்தத்தை செய்துகொள்ள முன்னவருகின்றவர்களை இத்தேர்தலில் வெற்றிபெறவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இத்திட்டம் இன்றியமையாதது என்று நினைக்கின்றவர்கள் இதனை வாசித்ததுடன் நின்றுவிடாது இம்முன்மொழிவை மக்களுக்கு கொண்டு செல்வதுடன் இது தொடர்பான ஆரம்ப வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். எனவே இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் பொருட்டு இக்கட்டுரையை தங்கள் சமூகவலைப்பின்னல்களில் பகிர்ந்து விவாதங்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகின்றேன். நன்றி.

வரிச்சலுகை பெற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களதும் அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை வாகனங்களை பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற அண்ணளவான பட்டியலை இணைக்கின்றேன். இதை பகிர்ந்துதவுங்கள்..




Read more...

Sunday, April 12, 2020

அன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா? பீமன்

புலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதிவொன்றை இட்டிருந்தார். அந்தப்பதிவில் கிழக்கினை ஆக்கிரமித்த வன்னிப்புலிகள் எமது பெண்களை 'கதறக் கதற கற்பழித்திருந்தனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்பதிவின் பின்னர் புலிவியாபாரிகளும் , புலிவாலில் தொங்கிக்கொண்டிருக்கும் அரசியல் அநாதைகளும், அவரது கருத்துச்சுதந்திரத்திற்கு சவால் விட்டு , பதிவையே நீக்கிகொள்ளுமளவுக்கு உளவியல் தாக்கமொன்றை கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.

தமிழர் தேசத்தில் கருத்துச்சுதந்திரத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த அச்சுறுத்தலே தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு காரணமாகும். 'சுவருக்கும் காதுண்டு' என பீதியை ஏற்படுத்தி மக்களை வாயடைக்கச் செய்ததன் ஊடாக புலிகளின் பேயாட்டம் மேலோங்கியது. மக்களால் எதிர்ப்புக்காட்ட முடியாது போனது, அராஜகத்திற்கு எதிராக அணி திரள முடியாது போனது. இந்த அவல நிலையை தொடர்ந்தும் கொண்டுசெல்வதற்கு தமிழ் மக்களின் சாபக்கேடுகளான சில கோடாரிக்காம்புகள் ஊடகம் என்ற போர்வை போர்த்திக்கொண்டு இன்றும் செயற்பட்டுவருகின்றார்கள்.

உண்மைகள் இயற்கையாக வெளிவரும் தன்மை கொண்டவை. செல்வியின் இப்பதிவை வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை வீழ்த்தநினைக்கின்றனர் அரசியல் அநாதைகள். ஆனாலும் புலிகள் ஏப்ரல் 10 ம் திகதியன்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள், பெண்புலிகளின் அந்தரங்க உறுப்புக்களில் சுட்டு வினோதமடைந்தார்கள், அவர்களது உடைகளை களைந்துவிசீ வெயிலில் காயப்போட்டார்கள் என்பதெல்லாம் இன்றுவரை புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள். இவற்றை நான் கண்ணால் காணாதவரை உண்மையென்று என்னால் எழுதமுடியாது. ஆனால் மேற்படி குற்றச்சாட்டுக்களை பிரதேச மக்களிடம் நிறையவே கேட்டிருக்கின்றேன்.

அத்துடன் புலிகள் புனிதமானதோர் அமைப்பு என்போர் உணர்ந்து கொள்ளவேண்டியது யாதெனில் , அந்த அமைப்பு வன்செயல்களுடாகவே தம்மை புனிதர்களாக காட்டிக்கொண்டார்கள். அவ்வன்செயல்கள் இருவகைப்பட்டவை:

முதலாவது தம்மீது விமர்சனம் செய்கின்றவர்கள் மீது வன்செயலை பிரயோகித்து விமர்சனங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட தனிக்காட்டு ராஜாக்களாக கொடுங்கோலாட்சி புரிந்தார்கள்.

இரண்டாவது புலிகள் தமது அடிமட்ட உறுப்பினர்களுக்கு தாம் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு என்று காட்டிக்கொண்டதுடன் தவறுகள் செய்கிறவர்களுக்கு மெய்சிலிர்கும் தண்டனை கொடுத்தனர். ஆனால் உயர்மட்டப் புலிகளுக்கு ஒழுங்குவிதிகளிலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

அதற்கு இரண்டு உதாரணங்களை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.

முதலாவது : புலிளமைப்பில் கருணாவிற்கு முக்கிய இடம்கொடுக்கப்பட்டிருந்து. அவருக்கு 150 மேற்பட்ட மெய்பாதுகாவலர்கள், போக்குவரத்தின்போது 10க்கு மேற்பட்ட வாகனங்கள் , 25 மோட்டார்சைக்கிள்கள் பாதுப்புக்கிருந்தது. இவ்வாறான நிலையில் கருணா பிரிந்து சென்றபோது அவர் மட்டக்களப்பிலிருந்த முக்கிய பெண் தளபதி ஒருவருடன் தகாத உறவில் இருந்தாக சக்தி ரிவியின் மின்னல் நிகழ்சியில் தமிழ் செல்வன் கூறினார். அவ்வாறாயின் 150 மெய்பாதுகாவலர்களுக்கும் தெரியாமலா கருணாவும் - அந்த பெண் தளபதியும் தகாத உறவில் ஈடுபட்டனர்?

இரண்டாவது : யாழ் மாவட்ட தளபதியாவிருந்த கிட்டு என்பவன் எப்பேர்ப்பட்ட பெண்பித்தன் என்பது வட மாகாணமே அறிந்த விடயம். கிட்டு தான் காதலித்த பெண்களில் ஒருத்தியை கேலிசெய்ததற்காக யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மட்டக்களப்பு மாணவன் ஒருவனை காணாமல் ஆக்கியுள்ளான். மேலும் கிட்டு மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றிக்கொண்டிருந்த பொறியிலாளர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்தமையும் அந்த பெண்ணின் வீட்டினுள் இருந்துவரும்போதே அதிகாலை 1 மணியளவில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கால் இழந்ததும் வரலாறுகள்.

மேலும் புலிகள் ஒழுக்கமானவர்களா அவர்கள் பாலியல்பலாத்காரம் செய்து பெண்களை கொன்றுள்ளார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவிரும்புவோர் பெரியநீலாவணை என்ற கிராமத்துக்குச் செல்லுங்கள். அவ்வூரிலுள்ள 1974ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தோரைச் சந்தித்து சித்திரா என்ற பெண்ணுக்கு 1989 ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.

அக்கிராமத்தவர்கள் பல கதைகள் கூறக்கூடும். நான் சுருக்கமாக கூறுகின்றேன்..

சித்திரா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உடலம் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை. உடலமாவது கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த உறவினர்களுக்கு அவரது சடலம் பெரியநீலாவணை மயாணத்தில் புதைக்கப்பட்டிருந்கும் தகவல் கிடைக்கப்பெற்றது அவர்கள் அதை தோண்ட முற்பட்டனர். 'தோண்டினால் கொல்வோம்' என்று புலிகள் மிரட்டினார்கள். உடலம் பாரமளிக்கப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டதாலேயே அது வழங்கப்படவில்லை.

நற்பட்டிமுனையைச் சேர்ந்த கள்ளத்தம்பி என்று அழைக்கப்படும் (இப்பெயர் அவன் அக்காலத்தில் களவெடுத்துக்கொண்டு திரிந்ததால் வந்தபெயர் - புலிகளில் இணைந்தபின்னர் வெள்ளதம்பியானார்) யோகன், பாண்டிருப்பைச் சேர்ந்த புலேந்திரன் , பாண்டிருப்பைச் சேர்ந்த தியாகு , யாழ்பாணத்தைச் சேர்ந்த சிவகுமார் , அன்பு (எந்த ஊர் என்று தெரியாது) மற்றும் சிலர் இணைந்தே இக்கொடுமையை செய்திருந்தனர்.

பின்னாட்களில் புலேந்திரன் தவிர மேற்படி நால்வரும் ஒவ்வொரு சந்தியில் மண்டை சிதறிக்கிடக்க எனது கண்ணால் கண்டேன்.

கற்பழித்ததை நான்கண்டேனா என்ற கேள்வி நியாயமானது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களில் ஒரிருவர் பின்னர் பிறதரப்பினரிடம் மாட்டிக்கொண்டபோது, அவர்கள் கற்பழித்தனை ஏற்றுக்கொண்டதாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அறிந்தேன்.

மேலும் இந்திய இராணுவம் இருந்த காலத்தில் ஊர்களில் புலிகள் ஒழிந்திருந்தனர் , அவர்கள் எப்போதும் ஆண்துணைகள் இல்லாத வீடுகளுக்குள்ளேயே நுழைந்திருந்தனர். கணவன் மத்தியகிழக்கு நாடுகளிலுள்ள வீடுகள் மற்றும் கணவனை இழந்த இளம்பெண்களுள்ள வீடுகள். அவ்வாறான பெண்கள் சிலருக்கு பிள்ளைகள் பிறந்தது கணவரை வெருட்டி வரவழைத்து பிறப்பு பதிவு செய் என்ற சம்பவங்களெல்லாம் நடந்தது..
எனவே புலிகள் ஒழுக்க சீலர்கள் என்பதெல்லாம் புலிகளால் வலிந்து திணிக்கப்பட்ட மாயை.

வரலாறு கறைகளை சுமந்து நிற்கின்ற நிலையில் புலிகளுக்கு வெள்ளையடிக்க முற்படுவோரிடம் நான் கேட்கின்றேன், புலிகளின் தத்துவாசிரியர் என்று அழைக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் தன்னுடன் தாய்லாந்து பேச்சுவார்த்தைக்கு வந்த புலி உறுப்பினர்கள் யாவரும் (தமிழ் செல்வன் உட்பட) விபச்சார விடுதிகளிலேயே நேரத்தை கழித்தாக கூறியிருந்தாரே, அந்தநேரம் இன்று குத்திமுறிகின்ற ஊடகவியலாளர்கள் எங்கே சென்றிருந்தார்கள்? அன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம் செல்வி கூறினால் தந்திரமா?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பெண்களணித் தலைவியின் கருத்தைக்கேட்டு பொங்கியெழும் பூசாரியாரிடம் ஒருகேள்வி :

தங்களைடைய கட்சியின் பெருநதலைவர் சம்பந்தனும் தளபதி சுமந்திரனும் புலிகள் வன்செயலில் ஈடுபட்டார்கள், மனித உரிமைகளை மீறினார்கள் , சகோதர இயக்கங்களை கொன்றொழித்தார்கள் , எனது நண்பன் கதிர்காமரை கொன்றது மாத்திரமல்லாது என்னை கொலைப்பட்டியலில் வைத்திருந்தார்கள் என்றபோது , ஐயகோ இது அபச்சாரமல்லோ, தலைவா ! தளபதியே ! புலிகள் புனிதமானவர்கள் என்று ஏன் பொங்கியெழவில்லை. அவ்வாறு பொங்கினால் அடுத்த தேர்தலில் சீற் கிடையாது என்ற பயமோ அல்லது தலைவரும் தளபதியும் கூறியவை அப்பழுக்கற்ற உண்மை என உணர்ந்ததனாலா?

உண்மைகள் மறைக்க முற்படுவோருக்கு நான் கூறக்கூடியது யாதெனில் காற்றடைத்த பலூண் ஒன்றை நீரினுள் அமிழ்த்தி வைத்திருந்தல் சிரமமான கருமமாகும், அது என்றோ ஒருநாள் இயற்கையாக வெளிவரும் திறன் கொண்டது. அவ்வாறுதான் உண்மைகளும்..

எனவே உணர்ச்சி என்ற அரக்கனைகொண்டு அடக்க முற்படாது கருத்துச்சுதந்திரத்திற்கு வழிவிடுங்கள்..

செல்விக்கு தான் கேள்விப்பட்டவற்றை அல்லது தனது மனதில் பதிந்துள்ளவற்றை கூறுவதற்கு சுதந்திரமளிக்கப்படவேண்டும்.

Read more...

Friday, April 10, 2020

வெருகல் மறந்த சகோதர படுகொலைகள்.. பீமன்

புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கருணா அறிவித்த பின்னர், கிழக்கை புலிகள் கனரக ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து அந்த மண்ணின் புதல்வர் புதல்வியரை கொடூரமாக கொன்றொழித்த அந்த கரிநாளுக்கு இன்றுடன் 16 வருடங்கள். இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொண்ட கபட ஒப்பந்தத்தூடாக கிழக்கினை ஆக்கிரமித்த வன்னிப்புலிகள் தங்களுடன் ஒன்றாக உண்டு , உறங்கி , உறவாடிய சகதோழர்-தோழியரின் உடல்களின் மீதேறிநின்று விடுதலைப் போராட்டத்திற்கு கிழக்கின் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களுக்கு நன்றிக்கடன் செலுத்திய நாளுக்கு இன்றுடன் 16 வருடங்கள்.

இந்தநாளில் புலிகள் மேற்கொண்ட கொடூரங்களை வரலாறு என்ன நிபந்தனையுடன் இலகுவாக மன்னித்துவிட்டது என்ற கேள்வியுடன் சிலரது மனச்சாட்சியின் கதவுகளை தட்ட முயற்சிக்கின்றேன்.

சுதந்திர தமிழீழத்திற்காக போராடுகின்றோம் என்று பறைசாற்றிய அமைப்பொன்றிலிருந்து ஒரு பிராந்தியத்தை சேர்ந்த போராளிகள் அதே இலக்கிற்காக நாம் தனித்து போரிடப்போகின்றோம் எங்களுக்கு அதற்கு அனுமதி தாருங்கள் , வழிவிடுங்கள் என்று அனுமதிகோரியபோது, அடிமை ஒப்பந்தத்தை மீறியதாக அவர்கள் மீது ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டது.

2004 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ம் திகதி அதிகாலை சுமார் ஒரு மணியளவில் கிழக்கின் போராளிகளை வேட்டையாட ஆரம்பித்தது புலிகளின் தலைமை. இக்கைங்கரியத்தினை கிழக்கின் போராளிகளை கொண்டே நிறைவேற்றுவது என்ற வஞ்சகத்திட்டத்தினையும் தீட்டியது. இவ்வேட்டைக்கு கிழக்கின் முக்கிய தாக்குதல் அணி ஒன்றையே தெரிவு செய்தது. ஜெயந்தன் படையணியை முன்னணியில் அனுப்பியது. அப்படையணியை ஜெயார்த்தன் என்பவன் தலைமைதாங்கிச் சென்றான். பின்னால் பால்ராஜ் தவிர்ந்த புலிகளின் முக்கிய வட தளபதிகள் யாவரும் களமிறங்கியிருந்தனர். பானு, சொர்ணம் , ஜெயம் , தீபன் போன்ற தளபதிகள் கிழக்கில் புலிவேட்டைக்கு களமிறங்கினர்.


தரை மார்க்கமாகவும் கடல்மார்க்கமாகவும் புலிகள் தங்கள் சகோதரர்களை படுகொலை செய்ய விரைந்து கொண்டிருந்தபோது இலங்கை அரசு கைகட்டி ஜாலியாக பார்த்திருந்தது. இவ்விடயத்தில் இலங்கை அரசை எந்தவகையிலும் யாராலும் குறைகூறமுடியாது, எதிரிப்படை இரண்டாக பிரிந்து போர்புரிந்து தங்களைத்தாங்களே அழித்துக்கொள்ள முனையும்போது எப்படை அதை தடுத்து நிறுத்தும்?

கடற்புலிகளின் போர்படகுகள் வந்துகுவிந்தது. சூசை தவிர முக்கிய கடற்புலித் தளபதிகள் யாவரும் கிழக்கின் கரைகளில் தரையிறங்கினர். இலங்கைக் கடற்படை தனது கடமைகளை கவனித்துக்கொண்டிருந்தது , புலிகளின் எந்தப்படகையும் இடைமறித்து என்ன சங்கதி என்று கேட்கவில்லை. ஆனால் இவ்விடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட்டாகவேண்டும் இக்கால கட்டத்தில் வடபுலத்து கடற்படை கட்டளை மையத் தளபதியாக றியர் அட்மிரல் சரத் வீரசேகர இருந்தார். அவர் வடகடற்பரப்பில் கடற்புலிகளின் சகல அசைவுகளையும் கண்காணித்தார். சமாதான காலத்தில் தீவுப்பகுதியினுள் நுழைந்து அங்கு தங்கியிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மீது தாக்குதல் நடாத்த புலிகள் திட்டமிட்டனர். ஆனால் அவ்வாறானதோர் தாக்குலுக்கு சரத் வீரசேகர எந்த இடத்தையும் வழங்கவில்லை.

புலிகள் சமாதான காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியினுள் செல்லும்போது சயனைட் குப்பிகளை அணிந்தவாறு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடற்படையின் கட்டுப்பாட்டினுள்ளிருந்த திவகப்பகுதியினுள் சயனைட்வில்லைகளுடன் செல்வதற்குகூட அவர் அனுமதி வழங்கவில்லை. இதனால் புலிகள் அட்மிரல் சரத் வீரசேகரவை ை ரணிலிடம் போட்டுக்கொடுத்தனர். ரணில் அரசாங்கம் சமாதான முயற்சிகளுக்கான விரோதி என்று றியர் அட்மிரல் வீரசேகரவைச் சாடியது. அவருடைய கடுமையான செயற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த ஒஸ்ரின் பெர்ணான்டோ வீரசேகரவிடம் விளக்கம்கூட கோரியிருந்தார். இதை எதற்காக குறிப்பிட்டேன் என்றால், சரத் வீரசேகர போன்றதோர் கடற்படை தளபதி கிழக்கில் இருந்திருந்தால் சிலவேளை வடக்கிலிருந்து கடல்மார்க்கமாக கிழக்கின் மீது போர்தொடுக்கச் சென்ற புலிகள் இடைமறிக்கப்பட்டு கிழக்கின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

கடற்புலிகள் , திருமைலைப் பகுதியிலிருந்து பஸ்களில் வந்திறங்கிய வன்னிப்புலிகள், ஏற்கனவே கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுள் பிரபாகரன் தலைமையின் திட்டத்தின்பெயரில் ஊடுருவியிருந்த புலிகள் யாவரும் கட்டளைக்காக காத்திருந்தனர். 10ம் திகதி காலை ஒரு மணியளவில் தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது புலிகளின் கனரக ஆயுதங்கள் தங்கள் சகோதரர்களை நோக்கி குண்டுகளை கக்கின.

கிழக்குபுலிகள் திக்குமுக்காடினர் சுதாகரித்துக்கொள்வதற்குள் பலர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர். கருணா பிரிந்தவுடன் கிழக்கில் இயக்கத்தை கலைப்பதாக அறிவித்திருந்தார். உறுப்பினர்களை தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறும் வேவையேற்படின் அழைப்பதாகவும் கூறியிருந்தார். அந்த அறிவிப்புடன் கைகளிலிருந்த துப்பாக்கிகளை வீசிவிட்டு பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என பலர் மட்டக்களப்பை விட்டே ஒடியிருந்தனர். இவர்கள் எவரும் மேற்குலக நாடுகளுக்கு செல்ல வசதி படைத்தவர்கள் கிடையாது. தங்களது வசதிக்கேற்றவாறு பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான முகவர்களை கண்டுபிடித்து கொழும்பிலேயே தங்கிவிட்டனர்.

கருணாவிற்கு நெருக்கமான சில தளபதிகள் தங்களது பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்காக சில போராளிகளை வைத்திருந்தனர். எல்லைப் பாதுகாப்பு அந்தளவு பலமானதாக இருக்கவில்லை. காரணம் ஏற்கனவே புலிகள் ஊடுருவியிருந்தனர்.

கிழக்கு புலிகள் இவ்வாறு அசட்டையாக இருந்துள்ளதற்கான காரணம், புலிகளின் தலைவர் பிரபாகரனில் அவர்கள் வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையாகும். கருணா பிரிந்துசெல்வதாக அறிவித்தபோது „சகோதர யுத்தம் ஒன்றுக்கு இடமில்லை என்றும் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமால் இப்பிரச்சினையை முடித்துவைப்பதாக' பிரபாகரன் அறிவித்திருந்தார். அதன் பிரகாரமே தாம் எந்தவொரு தயார்படுத்தலுமின்றி இருந்தாக உயிர் தப்பியுள்ள கருணா தரப்பு தளபதிகள் தெரிவிக்கின்றனர்.

உளரீதியாக நலிவடைந்த நிலையில் காணப்பட்ட தமது சகாக்கள் மீது புலிகள் 10ம் திகதி காலை சகோதர யுத்தத்தை ஆரம்பித்தனர். அந்தயுத்தமானது அந்நிய நாடொன்றின் மீது படையெடுப்பதையும் தாண்டிய காட்டுமிராண்டி யுத்தமாக காணப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக தமது சகோதரர்களை புலிகள் சுட்டுக்கொன்றனர், உயிருடன் பிடிபட்டவர்களை சங்கிலிகளில் விலங்குகளைப்போல் பிணைத்தனர். வெருகல் பிரதேசமெங்கும் மரணஓலம் கிளம்பியது. சுமார் சகல கிழக்கு புலிகளும் கைது செய்யப்பட்டனர்.

மரணஓலம் கிழம்பியபோது இவ்வணிகளுக்கு தலைமைதாங்கி வந்திருந்த பானுவை கிழக்கு தளபதிகளில் ஒருவரும் தற்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் உப தலைவராகவும் இருக்கின்ற ஜெயம் வோக்கி டோக்கியில் தொடர்பு கொண்டு „ தலைவர் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாது கிழக்கை மீட்பேன் என்று அறிவித்திருந்தாரே, நாங்கள் எதிரிக்கு படுத்தபாயில் வைத்து அடித்தார்போல் நீங்கள் எங்களுக்கு படுத்த பாயில் அடிக்கின்றீர்களே இது தர்மமாகுமா" என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பானு „உனது தியாகங்களை தலைவர் இன்றும் மதிக்கின்றார், நான் இங்கு வரும்போது „தவறுதலாகவேனும் ஜெயம் இறக்க நேரிட்டால் அவரை மாவீரர்பட்டியலில் சேர்த்துவிடுங்களென்று தலைவர் என்னிடம் கூறினார்." எனவே நீ உடனடியாக எங்கள் பக்கம் வா" என்று கேட்டுள்ளார். பானுவின் வலையில் விழ மறுத்த ஜெயம் நீங்கள் எம்மீது போர்தொடுத்துள்ளீர்கள் கிழக்கு போராளிகளின் போர்வலு யாதென்று உங்களுக்கு தெரியும் போர் என்றால் போர்தான் என்றுள்ளார். இதன் மூலம் புலிகளின் மாவீரர் பட்டியல் எத்தனை புனிதமானது என்பதை உணர முடிகின்றது.

இதோ பார் எண்ணி 30 நிமிடங்களில் உன்தலை சிதறுகின்றது எனக்கூறிய பானு சல்லித்தீவு பிரதேசமெங்கும் கண்மூடிதனமான ஆட்டிலறித் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்பிரதேசத்தில் ஜெயத்தின் இரகசியத் தளம் ஒன்று இருந்துள்ளது. மீன்வாடி மற்றும் சிறு தொழிற்சாலை என்ற பெயரில் இயங்கிவந்த இரகசியத் தளம் அது. அதன் நோக்கம் அரசுடனான பேச்சுவார்த்தைகள் முறியும்போது, இத்தளத்திலிருந்து மட்டக்களப்பு நகரை தாக்கி கைப்பற்றுவது. அதற்கான திட்டமும் பொறுப்பும் ஜெயத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. எனவே ஜெயம் அங்கேதான் இருக்கின்றார் என்பதை துல்லியமாக அறிந்து வைத்திருந்த புலிகள் கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்டிலறிகள் கொண்டு சல்லித்தீவெங்கும் குண்டு மழைபொழிந்தனர். இப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த மதனா படையணியின் தளபதி சாவித்திரி முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான வேலரசி உட்பட பலரது உடல்கள் சிதறியது. ஆனால் அப்போது ஜெயம் அங்கிருக்கவில்லை.

மட்டக்களப்பில் கருணாவின் ஆட்கள் நின்ற பிரதேசமெங்கும் கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர். கருணா தரப்பு துருப்புக்கள் மற்றும் தளபதிகள் நகருகின்ற வாகனங்கள் மீது அதிசக்திவாய்ந்த கிளேமோர்கள் கொண்டு பக்கவிளைவுகள் பற்றி சிந்திக்காத தாக்குதல் நடைபெற்றது. கிழக்கின் மக்கள் வரலாற்றில் கண்டிராத சமர்க்களம் ஒன்றை கண்டனர். உடலங்கள் துண்டுதுண்டாக சிதறின. சிதறும் உடலங்கள் தமது சதோதர சகோதரியரது என புலிகள் சிறிதும் கவலைகொள்ளவில்லை. உயிர் தப்பியுள்ளோரை சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது அவ்வாறு சரணடந்தவர்கள் சிலர் அவ்விடத்தே சுட்டுக்கொல்லப்பட்டனர், பலர் சங்கிலிகளின் பிணைக்கப்பட்டனர். அத்துடன் கருணாவின் முக்கிய தளபதிகளது குடும்பத்தினர் தேடித்தேடி வேட்டையாடப்பட்டனர். அவர்களும் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டனர். அவ்வாறு சங்கிலிகளில் பிணக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் மற்றும் தளபதிகளின் குடும்ப அங்கத்தினர் சுமார் 500 பேர் உடனடியாக கால்நடையாக வன்னிக்கு துப்பாக்கி முனையில் நகர்த்தப்பட்டனர். சிலர் அதிவேக படகுகளில் கொண்டு செல்லப்பட்டனர்.

பொழுதுவிடிந்து வெளியே வந்த மக்கள் தமது உடன்பிறப்புக்கள் உடல் சிதறிக்கிடக்க கண்டனர். சிதறிய உடற்பாகங்களை அணுக எவரும் அனுமதிக்கப்படவில்லை. நாய்களும் நரிகளும் தங்கள் பாட்டுக்கு புகுந்து விளையாடின. பிரதேசமெங்கும் இரத்தவாடை வீசியது. புலிகளின் ஆக்கிரமிப்பு படையினர் வீடுவீடாக சென்று சல்லடைபோட்டு தேடுதல் நடாத்தினர். கொழுத்தும் வெயிலில் வெந்துவேகிய உடல்கள் நாற்றமெடுக்க தொடங்கின. சடலங்களைக் அணுகக்கூட உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை மயான பூமியில் பிண மற்றும் இரத்தவாடைக்குள் மக்கள் திறந்தவெளிக்கைதிகளாக வைக்கப்பட்டனர். தங்களது உடன்பிறபுகள் உடல்சிதறிக்கிடக்க இறுதிக்கடமைகள்கூட செய்யமுடியாத அடிமைகளாக அவர்கள் ஆயுதமுனையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மறுநாள் 11ம் திகதி பிற்பகல் புலிகள் வெந்துவெதுங்கி நாற்றமெடுத்துக்கிடந்த உடல்களை ட்ரக் ரக வாகனங்களில் அள்ளிச்சென்று கதிரவெளிக்காட்டுக்குள் நூற்றுக்கணக்கான சடலங்களை பாரிய படுகுழிகளில்போட்டு புதைத்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சடலங்கள் வெருகல் ஆற்றின் மறுகரைக்கு எடுத்துச்செல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு ஆகக்குறைந்தது புதைக்கப்பட்ட இடம்தொடர்பான தகவல்கூட வழங்கப்படவில்லை.

நயவஞ்சகத்தனமாக வலையில் சிக்கவைத்து சரணடைய பண்ணிய முக்கிய தளபதிகள் பலரை புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வுப் பொறுப்பாளராகவிருந்த கீர்த்தி என்பவன் பாரமெடுத்தான். புலிகளமைப்பில் முக்கிய தளபதிகளாகவிருந்த ராபட், ஜிம்கெலித்தாத்தா, துரை, ஸ்ரேன்லி உட்பட பல தளபதிகள் , பொறுப்பாளர்கள் , சிறந்த போராளிகள் எனச் சுமார் 130 பேர்வரை கீர்த்தியின் இலுப்படிச்சேனை சித்திரவதை முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். கைகள் பின்னே கட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் பலத்த சித்திரவதையின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராபட்டை சுடமுயன்றபோது கண்கட்டையும் கையையும் அவிட்டுவிட்டு நெஞ்சில் சுடுமாறு அவர் வேண்டியதாக அறியக்கிடைக்கின்றது. இவர்கள் அனைவரும் மாவடியோடை பிரதேசத்திற்கப்பாலுள்ள கிறவல்குழிகளில் சுடப்பட்டு அக்குழிகளிலேயே எரிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் யுத்தவரலாற்றில் குறுகிய நேரத்தில் அதிக கொலைகள் இடம்பெற்ற நாளாகவும் பெருநிலப்பரப்பொன்றில் குறுகிய நேரத்தில் ரத்தபெருக்கெடுத்த நாளாகவும் ஏப்ரல் 10ம் திகதி பதிவாகியுள்ளது. ஆனால் மனித உரிமைகளின் காவலர்களோ சமாதானத்தின் தேவ – தேவதைகளோ இந்த கொடூரமான நாள் தொடர்பில் அவர்களது நாளேட்டில் எதையும் பதிவு செய்து கொள்ளவில்லை. இது தொடர்பாக பேசுவதை தீண்டாமையாக கருதுகின்றார்கள்.

மேலும் குறிப்பிட்டாகவேண்டிய அசிங்கம் யாதெனில், கொல்லப்பட்டும் குற்றுயிரும் குறையுயிருமாக கிடந்த பெண்போராளிகளின் உடைகளை களைந்தெறிந்து அசிங்கப்படுத்தியுள்ளனர். இச்செயலை வடக்கிலிருந்து வந்திருந்த பெண்புலிகளே மேற்கொண்டதாக உறுதியாக கூறப்படுகின்றது. அத்துடன் அங்கு கொல்லப்பட்ட பெண்போராளிகள் நடாத்தப்பட்டவிதம் தொடர்பில் பல்வேறான கதைகள் பேசப்படுகின்றன. அச்சம்பவங்களை என்னால் நம்பமுடியவில்லை. சிலர் கற்பழிக்கப்பட்டதாகவும் , சிலரது மார்புகள் அறுக்கப்பட்டதாவும் பேசப்படுகின்றன. இவை எவற்றையும் இன்றுவரை உறுதிசெய்யமுடியவில்லை.

இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் யாவரையும் பட்டியலிட்டு நீதிகோரும் தமிழ் சமூகம் புலிகளால் கிழக்கில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்கட்கு வாழத்தகாதவர்கள், துரோகிகள் என்று தீர்ப்பெழுதிவைத்துள்ளது. இவர்களுக்கு கருணை காருணியம் காட்டுவதற்கு எவரும் இல்லை. நீதிபெற தகுதியற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். புலம்பெயர்ந்து பாதுகாப்பான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற கிழக்கின் புத்திஜீவிகள்கூட சிறுசிறு தவறுகள் இடம்பெற்றுள்ளதுதான் என்ற வார்த்தையுடன் தமது நவதுவாரங்களையும் அடைத்துக்கொள்கின்றனர். கிழக்கு புத்திஜீவிகளின் பார்வையில் இந்த மன்னிக்கமுடியாத சமூப்படுகொலை சிறுதவறு (மைனெர் ஒபன்ஸ்). இந்தியாவினுள் நுழைந்து அந்நாட்டின் பிரதமர் ரஜீவ் காத்தியை கொலை செய்துவிட்டு, அக்கொலையை அன்ரன் பாலசிங்கம் துன்பியல் சம்பவம் என்றதுபோல்.

மட்டக்களப்பு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கண்களுக்கு இங்கு புலிகளால் கொல்லப்பட்ட எவரும் வாழ்வுரிமையுடைய மனிதர்களாகவோ , பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களு இங்கு கொல்லப்பட்ட பெண்கள் எவரும் பெண்களாகவோ தெரியவில்லை. Chanel 4 ,BBC ,அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் இலங்கையில் நடந்தவிடயங்களை தேடித்தேடி ஆய்வு செய்தன. ஆனால் அவர்கள் வெருகல் படுகொலை தொடர்பில் பேசுவதற்கு இன்றுவரை மறுக்கின்றனர். இருட்டடிப்புச் செய்கின்றனர்.

இந்த சமூகபடுகொலையில் புலிகளுடன் சேர்த்து மேற்குலகத்தினரும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவேண்டியவர்கள். இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலத்திலேயே வெருகலில் மனிதபேரவலம் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டமெங்கும் போர்நிறுத்த மீறல்களை கண்காணிக்கவென கண்காணிப்பாளர்களை களமிறக்கியிருந்த மேற்குலகின் சமாதான தூதர்கள் தாக்குதல் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தங்களது காரியாலயத்தை அங்கிருந்து அகற்றி புலிகளின் பாசிச கொள்கை நிறைவேற வழிவிட்டனர். அத்துடன் மூன்று பஸ்களில் வன்னியிலிருந்து புறப்பட்ட கொலைப்படைக்கு திருமலைவரை வழித்துணை வழங்கினர். எனவே மேற்குலகின் பார்வைக்கும் மட்டக்களப்பு போராளிகள் கொல்லப்படவேண்டியவர்களாகவே காணப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரமல்ல மாவட்டத்திலுள்ள அநேகருக்கும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் கொல்லப்படவேண்டியவர்களாகவும் நீதிக்கு உரித்தற்றவர்களாகவுமே காணப்படுகின்றனர். இந்நிலையில்தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சி மாத்திரம் உயிர்பறிக்கப்பட்டவர்களை வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான விடயம் யாதெனில் இப்பிளவுக்கு கொலைகளுக்கும் காரணகர்த்தாவாகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் இறந்தவர்களை நினைவுகூறும் எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை என்பதாகும்.

இவ்வருடம் வெருகல்படுகொலைகளை நினைவுகூறுவதற்கு கொரோணா தடைபோட்டுள்ளது. எனவே அவர்களை தத்தமது வீடுகளிலிருந்து இன்று மாலை 6.05 க்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை கேட்டுள்ளது.








Read more...

Friday, March 20, 2020

கருணாவின் வாய்க்கு கட்டாயம் பூட்டு வேண்டும். பீமன்.

இலங்கையின் 16 வது பாராளுமன்றுக்கு 225 பேரை தெரிவு செய்துகொள்வதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவு பெற்றதுடன், எதிர்வரும் 25 ம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழுனால் ஒத்தியும் வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழர் மகா சபையின் கப்பலில் அம்பாறை சென்றுள்ள புலிகளின் மட்டு-அம்பாறை முன்னாள் இராணுவத் தளபதி கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த 18ம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவைத் தாக்கல்செய்துவிட்டு வெளியேறிய விநாயகமூர்த்தி முரளிதரன் மாவட்ட செயலக முன்றலில்வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் படுதோல்வியடைவார் என ஜோதிடம் கூறியிருந்தார்.

கருணாவின் மேற்படி கருத்தானது கண்டனத்திற்கும், கேலிக்குமுரியதாகின்றது. தமிழ் மக்கள் சந்தித்துள்ள சகலவித அழிவுகளுக்கு, பிரதானமாக மட்டு அம்பாறை மக்கள் எதிர்கொண்ட பெரும்பாலான அழிவுகளுக்கு நேரடி பதில்கூறவேண்டியவராகவும் சூத்திரதாரியாகவும் காணப்படும் கருணா, காலத்தின் தேவையுணராது, தனது காழ்புணர்ச்சியை தீர்த்த கருத்தாகவே கருணாவின் மேற்படி கருத்து நோக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மாறி மாறி அரச பீடமேறும் அதிகார சக்திகள், யாழ் மேலாதிக்க குறுந்தேசிய தலைமைகள் மற்றும் முஸ்லிம்கள் என்ற மூத்தரப்பினராலும் பந்தாடப்படும் தருணத்தில், கிழக்கு மக்களுக்கான தனித்துவமான தலைமையொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. அவ்வாறானதோர் தலைமைத்துவம் கிழக்கின் புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் நிரப்பப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அது நிறைவேறப்படாமைக்கான காரணிகள் ஏராளமானவை.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தாம் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றோம், கைவிடப்பட்டிருக்கின்றோம், பயன்படுத்தப்பட்டிருக்கின்றோம் என்று உணருகின்ற மக்கள் மாற்றுத்தேர்வொன்றினை நாடி நிற்கின்றனர். அதன் வெளிப்பாடு நிச்சயமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதிபலிக்கும். இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான கிழக்கு தமிழர் எழுச்சிக் கூட்டணி தோல்வியடையவேண்டும் என எதிர்பார்க்கின்றார் என்றால் கருணாவின் எதிர்பார்ப்பு என்ன? பிள்ளையான் தலைமையிலான கட்சி தோல்வியடையவேண்டுமென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிவாகைசூடவேண்டும் என எதிர்பார்க்கின்றாரா?

கருணா – பிள்ளையானுக்கிடையேயான தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் தமிழ் குறுந்தேசியவாதிகளால் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. பிள்ளையான் தோற்கடிக்கப்படவேண்டும் என்ற கருணாவின் விருப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கயவர் கூட்டத்திற்கு எதிரான கூட்டணி தோற்கடிக்கப்படவேண்டும் என கருணா கருதுவது நயவஞ்சகமானதும் சமூகவிரோதமானதுமாகும். மக்கள் தற்போது மிகுந்த அரசியல் தெளிவுள்ளவர்களாகவுள்ளனர். அவர்கள் படகின் பட்டியலில் சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்வர். எனவே கருணா தனக்கு ஒரு கண்போனாலும் கேடில்லை எதிரிக்கு இரு கண்களும்போகவேண்டும் என்ற செயற்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

கடந்த 9 ம் திகதி வரை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சின்னத்தில் அம்பாறையில் போட்டியிடுவதற்கு உத்தேசித்திருந்த கருணா தனது மனைவிக்கு மட்டக்களப்பில் படகின் வேட்பாளர் பட்டியலில் இடம்கிடைக்காமை காரணமாகவும் பிறகாரணங்களுக்காகவும் தனது நோக்கத்தை கைவிட்டு அம்பாறைக்கு கப்பலேறினார் என்ற உண்மை மக்கள் அறிந்து கொள்ளாத ஒன்றல்ல.

எனவே கருணா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மறைமுகமாக வெற்றியை உறுதிபண்ணும் நோக்கில் செயற்படுவதை நிறுத்தும்பொருட்டு தனது வாய்க்கு சுயமாக பூட்டு ஒன்றினை போட்டுக்கொள்ளவேண்டும்..

Read more...

Sunday, March 8, 2020

„புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" இதற்காக புலம்பெயர் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை இதோ! பீமன்

இலங்கையில் 2009 ம் ஆண்டு புலிகள் இலங்கை அரசாங்கத்தின் மொழியில் „தோற்கடிக்கப்பட்டனர்' புலிகளின் மொழியில் „ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது'. எதுவாக இருந்தாலும் மக்களுக்கு எஞ்சியது இழப்புக்களும் , அவலங்களும் , வறுமையுமேயாயினும் „ எது நடந்ததோ அது நன்றாகவே நடத்தது' என்று வன்னியிலுள்ள மக்களில் பெரும்பாண்மையினர் கூறுகின்றனர்.

இன்று எமக்கு உண்ண உணவில்லையாயினும் அச்சமற்ற உறக்கமுண்டு என்றும் உழைந்தால் உயரலாம் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் புலம்பெயர் தமிழர் அல்லது புலிகளிடமிருந்து அபிவிருந்திக்கான உதவியை வேண்டுகின்றனர். அவர்கள் வேண்டும் உதவியானது கோழிக்குஞ்சியை கொடுத்துவிட்டு படம்பிடித்து பத்திரிகையில்போடும் உதவியல்ல. ஒரு தொழில்புரட்சிக்கான அடித்தளத்தை நாடி நிற்கின்றனர்.

ஆனால் புலம்பெயர் புலிகள் அந்தமக்களுக்கு கிடைக்கபெற்றிருக்கின்ற அச்சமற்ற சுவாசத்தை அசுத்தப்படுத்துவதற்காக இராப்பகலாக உழைக்கின்றனர். அதற்காக அவர்கள் வகுத்துள்ள வியூகத்தில் ஒருபகுதி இலங்கைநெட் ன் காதுக்கு எட்டியது. அதை உங்கள் காதில் போடவேண்டியது எங்கள் கடமை, அதை கிரகித்துக்கொள்வது உங்கள் திறமை.

2009 புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அணுகுமுறைகளில் அபாரா மாற்றங்கள் ஏற்பட்டது. அது முடிந்தால் பண்ணிப்பாரும் என்று சாவால்விடுக்கும் மாற்றம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நாட்டில் எமது இறையாண்மையை நாங்கள் காத்துக்கொள்வோம் என்று மார்தட்டி நின்றனர் ராஜபக்சங்கள். 5 வருடங்களில் அவர்களை மேற்குலகு இந்தியா இணைந்து தூக்கி எறிந்தது. அத்துடன் தங்களுக்கு தேவையானவாறு சீனாவின் உள்நுழையும் வேகத்தை ஓரளவுக்கு தணித்துக்கொண்டனர். அதற்கு சமாந்தரமாக அல்லது நிகராக தங்களின ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக்கொள்ள வழிசமைத்துக்கொண்டனர்.

இந்நிலையில், பௌத்த ராச்சியம் என்று எழுதப்படாத கோட்பாட்டினை பெரும்பாண்மை சிங்கள மக்களிடம் முன்வைத்து மேற்குலகினாலும் இந்தியாவினாலும் இலங்கையில் நிறுவப்பட்ட ஆட்சியை தகர்த்தெறிந்த ராஜபக்சங்கள் ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றினர்.

இதையடுத்து இந்தியா பத்திப்பதறி இலங்கையை அழைந்தது, அன்பாக அழைந்தது. ஆனால் பழையகுருடி கதவை திறடிதான். ஏங்கள் முடிவுதான் அமெரிக்காவின் முடிவு என்றது. அமெரிக்காவின் முடிவு என்றவுடன் ராஜபக்சக்கள் ஆடவேண்டிய விடயங்கள் பலவுடண்டு அதற்குள் செல்லவில்லை. ஆனால் 13 ற்குள் சென்றார்கள்;. பொதுத்தேர்தல் முடிந்தவுடன் பேசலாம் என்று இலங்கை ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் 13 பலப்படுத்தி தனது காலை ஆழமாக ஊன்றுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது தகவல்.

13 ஐ இலங்கையில் பலப்படுத்துவதென்பது பலரின் அரசியல் இருப்புக்கு கொள்ளிவைக்கும் செயலாகும். இந்த கொள்ளிவைப்புக்கு இம்முறை இந்தியா தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ளப்போகின்றது. இலங்கை அரசு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை மேசைக்கு அழைத்து நியாயமானதும் நிதானமானதுமான மாற்றங்களை 13 ல் மேற்கொண்டு சேர்க்கவேண்டியவற்றை சேர்த்து கழிக்கவேண்டியவற்றை கழித்து ஒரு விளையாட்டு காட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தை எவ்வாறாயினும் இலங்கை அரசு முறியடிக்க திட்டம் போட்டேயாகும். அவ்வாறாயின் அதனை எவ்வாறு முறியடிப்பது. „கோடாரிக்காம்பு' விளையாட்டுத்தான். 13 ஐ கொண்டுவந்தபோது பிறேமதாஸ புலிகளை கோடாரிக்காம்பாக்கினார். புலிகள் இது எங்களுக்கான தீர்வில்லை. இந்தியனே வெளியேறு என்று. பிறேமதாஸவிடம் ஆயுதத்தை வாங்கி அடித்து வெளியேற்றினர். மாபெரும் வெற்றி. புpராந்திய வல்லரசை அடித்து வெளியேற்றிய (காதிதப்) புலிகள்.

ஆனால் இம்முறை ஆயுதத்தால் அடிக்கமுடியாது, அதற்காக புலம்பெயர் புலிகள் நாட்டில் தங்களது கோடாரிக்காம்புகளை செம்மையாக சீவிக்கொண்டிருக்கின்றனர். அது எவ்வாறு? முதலாவது இலங்கை பாராளுமன்றுக்கு விக்கினேஸ்வரன் , கஜேந்திரகுமார் பொன்னைஅம்பலம் ஆகியோரை அனுப்பி 13 தீர்வாகாது என்று அதை குழப்பியடிப்பதுதான் திட்டம்.

இத்திட்டத்திற்காக புலம்பெயர் புலிகள் தமது முழுப்பலத்தையும் பிரயோகிக்கின்றனர். தமது பொம்மைகளை பாராளுமன்றுக்கு அனுப்பி, தீர்வு விடயங்களில் அவர்களை கலந்துகொள்ளை வைப்பதாகும். அவ்வாறு விக்கினேஸ்வரன் பொன்னைஅம்பலம் ஆகியோர் தமக்கு வழங்கப்பட்டுள்ள வைக்கோற்பட்டறை நாய்களுக்கான பாத்திரத்தை கச்சிதமாக வகிப்பர் என்பது திண்ணம்.

இது தான் „புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்'

எனவே இத்தாகத்தை தீர்க்க அளிப்பீர் வாக்கு விக்கினேஸ்வரனுக்கும் , பொன்னையம்பலத்துக்கும்..

Read more...

Monday, October 28, 2019

எவனோ ஒருவனை சிம்மாசனத்தில் அமர்த்துவதற்காக அப்பாவிகளை பாடையேற்ற தயாராகும் குண்டுத்ததாக்குதல்கள். பீமன்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நற்பெட்டிமுனைப் பிரதேசத்தில் சில ஆயுததாரிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் பிரதேசத்திற்குச் சென்ற படையினரால் குறித்த நபர்களை கைது செய்ய முடியாது போயுள்ளது.

ஆயுததாரிகளின் நடமாட்டம் தொடர்பான தகவல் போலியானது என்று எடுத்துக்கொள்வதற்கு இல்லை. காரணம் ஆயுததாரிகள் பாதையால் சென்ற நாவிதன்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட நபர் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இன்று காலை தெருவோரத்தில் வெடிகுண்டு ஒன்றை அவதானித்த நபர் ஒருவர் பாதுகாப்பு தரப்பிரனருக்கு அறிவித்ததை தொடர்ந்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், இடம்பெறவிருந்த அனர்த்தம் ஓரளவிற்கு தடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

யார் இந்த ஆயுததாரிகள்? இவர்களது நோக்கம் என்னவாக இருந்திருக்கவேண்டும் என்பது இங்கு தெட்டத்தெளிவானது. யார் என்ற கேள்விக்கு பதிலை நேரடியாக கூறுவதானால் அவர்கள் முஸ்லிம்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுவிட்டால் குய்யா முய்யா என்று ஒரு கூட்டம் வரும். அவர்களை பற்றிய அச்சத்தில் அவ்வாறு குறிப்பிடுவதை தவிர்க்கவில்லை. காரணம் இது இஸ்லாமிய பயங்கரவாத நோக்கம் கொண்ட கூட்டம் அல்ல. இவர்கள் அரசியல்பயங்கரவாதிகள். ஏதோ ஒரு தரப்பை வெல்ல வைப்பதற்காக அல்லது தோற்கடிப்பதற்காக நாட்டில் இரத்த ஆறினை ஓடவைக்க முனையும் வெறும் வன்செயல் மீது காதல்கொண்ட கூலிப்படைகள். இவர்களுக்கு இஸ்லாத்தின் மீதோ அன்றில் இஸ்லாமிய மக்கள் மீதோ எவ்வித கருணையும் கிடையாது. மொத்தத்தில் ஏவலாளிகள்.

நடைபெறவிருக்கின்ற தேர்தல் வெற்றி-தோல்வியை தமிழ், முஸ்லிம், சிங்கள இனவாதிகளின் வாக்குகளே தீர்மானிக்கப்போகின்றது. குறித்த இனவாதிகள் வேட்பாளர்களின் தாராதரம் அவர்களின் தூநோக்கு சிந்தனை, வினைத்திறன், நேர்மை, அர்பணிப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்டு வேட்பாளரை தெரிவு செய்யப்போவதில்லை, மாறாக அவர்களை ஆட்டிப்படைக்கின்ற இனவாதபேயே வேட்பாளரை தெரிவு செய்யப்போகின்றது. அந்த அடிப்படையில் சிங்கள இனவாதிகள் தனது இனத்திற்கு மிகவும் விசுவாசமானவன் அல்லது இனத்தின் பாதுகாவலன் என கருதுகின்றவனை தெரிவு செய்கின்ற அதேநேரம்; தமிழ் , முஸ்லிம் இனவாதிகள் தங்களது இனத்திற்கு நன்மை செய்யக்கூடியவனா என்ற விடயத்தை ஆராய்வதை விடுத்து இனத்திற்கு எதிரானவன் என கருதுகின்றவவனை தோற்கடிப்பதில் கவனம் செலுத்தப்போகின்றனர்.

எனவே இந்த இனவாதப்பேயை உருவேற்றுவதற்காக இலங்கையின் நாலா பக்கங்களிலும் இனக்குழுமங்களிடையே மோதல்களை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒருபகுதியே நற்பெட்டிமுனையில் கண்டெடுக்கப்பட்டுள்ள குண்டாகும். நற்பெட்டிமுனையென்பது நான்கு பக்கங்களும் தமிழ் கிராமங்களால் சூழப்பட்ட தமிழ்-முஸ்லிம் கிராமமாகும். கிழக்கில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் கலவரங்களை எடுத்துநோக்குகையில் தமிழ்-முஸ்லிம் கிராமமான நற்பெட்டிமுனையில் கலவரங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்பதும் முடிந்தளவு இக்கிராமத்து மக்கள் மிகவும் உறவாடி வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த குண்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் இன்று நிர்ப்பந்திக்கப்படுகின்றது. அச்சமூகம் தனது இக்கடமையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுமாகவிருந்தால் கிழக்கில் இரத்த ஆற்றில் இருசமூகங்களும் முக்குளிக்கவேண்டிவரும் என்பது தவிர்க்க முடியாதது.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை தமது சமூகத்தில் எந்த காடைத்தனம் இடம்பெற்றாலும் முஸ்லிம் நாமத்தை கொண்டுள்ளவன் என்ற ஒரேகாரணத்திற்காக காடையர்களை அது காப்பாற்றுகின்றது. ஆனால் காடையர்களுக்கு அந்த சமூகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையும் அவர்கள் வெறும் கூலிப்படைகள் , கொந்தராத்துக்காரார்கள் என்பதையும் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே இன்று இந்த நாட்டில் யாருக்கு ஒரு வன்செயல் தேவைப்படுகின்றது? இதனால் யார் எவ்வாறு பயன்பெறப்போகின்றார்கள் என்பதை நன்றாக யோசித்தறிந்த ஒவ்வொருவரும் கூலிப்படைகளை இனம்காண அர்பணிப்புடன் செயற்பட்டு எதிர்காலத்தில் இந்தநாட்டில் ஒரு துளி இரத்தம்கூட சிந்துவதற்கு வழிவிடக்கூடாது என்பதே இந்நாட்டில் அமைதியாக வாழ விரும்புகின்ற மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Read more...

Saturday, October 12, 2019

சிங்களக் குடியேற்றம் என நீலிக்கண்ணீர் வடிக்கும் மேற்குலக தமிழரே கேளீர். பீமன்.

இலங்கையின் வடகிழக்கு தமிழரின் தாயகமாம் அங்கே சிங்களவன் குடியேற முடியாதாம்! இதுதான் இலங்கை தமிழ் அரசியல்விபச்சாரிகளதும் மேற்குலக தமிழரதும் கோஷம். சிங்களவன் குடியேற்றத்தை மேற்கொண்டு குடிப்பரம்பலை உருவாக்கி பாராளுமன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதுதான் நோக்கமாம். இதுவரை பாராளுமன்றுக்கு சென்ற தமிழன் என்ன மயிரை தமிழ் மக்களுக்கு கொண்டுவந்து கொடுத்தவன் என்ற கேள்வியை கேட்டு நேரத்தை வீண்விரயம் செய்யாது விடயத்துக்கு வருகின்றேன்.

வடகிழக்கில் சிங்களவன் குடியேறுகின்றான் தமிழரின் விகிதாசாரம் குறைகின்றது என மேற்குலகத்திற்கு சென்றிருந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழனுக்கு இன்றைய நாளில் ஒரு செயல்வீரனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தீவகத்தின் குக்கிராம் ஒன்றில் பிறந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது முழுநாளையும் அர்பணித்தவர் டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட். அவுஸ்திரேலியா, வட ஆபிரிக்கா , பிரித்தானியா என்றெல்லாம் சுகபோக வாழ்கை கிடைத்திருந்தும் அங்கு தான் உழைத்து சேமித்த பணத்தை கொண்டு இலங்கை வந்து டாக்டர் இராஜசுந்தரம் அவர்களுடன் இணைந்து காந்தீயம் என்ற அமைப்பை உருவாக்கினார். (டேவிட் ஐயா கட்டிய காந்தியம் என்ற கூட்டில் புளொட் முட்டையிட்ட கதை வேறு) வடகிழக்கில் குடியேற்றத்திற்கு எதிராக இரத்தம் சிந்தாத யுத்தம் ஒன்றை புரிந்தார். காந்தியத்தினூடாக மலையக பகுதிகளிலிருந்த தமிழ் மக்களை முல்லைத்தீவு கிளிநொச்சி மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லை பிரதேசங்களில் குடியேற்றினார். டேவிட் அவர்களால் அந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காதிருந்திருந்தால் இன்று வன்னியின் சனத்தொகை எவ்வாறிருந்திருக்கும் என்பதை அவரது நினைவு நாளான இன்று கற்பனை செய்யும்போது இச்சமூகத்தின்மீது பாரியவெறுப்பு ஏற்படுகின்றது. தீர்க்கதரிசனத்துடன் வன்னியின் சனத்தொகையை பெருக்க அரும்பெரும் பணியாற்றிய அந்த மகனை மறந்த எமது சமூகம் வன்னியின் சனத்தொகையை கொடிய யுத்தத்தின் ஊடாக அழித்தொழித்த ஒரு மோடனை தீர்க்கதரிசி என வாழ்த்தி வணங்குகின்றது. அவனது இறப்பைக்கூட ஏற்க மறுக்கின்றது.

எனவே இறுதியாக டேவிட் ஐயாவின் நினைவு நாளான இன்று „சிங்களக்குடியேற்றம் தமிழ் மக்களின் குடிப்பரம்பல்" என்றெல்லாம் புலம்பும் மேற்குலக தமிழனுக்கு ஒர் சவால் விடுக்கின்றேன். வடக்கிலிருந்து வெளியேறி சுமார் 15 லட்சம் தமிழர்கள் மேற்குலகில் வாழ்ந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. முடிந்தால் மலைநாட்டிலிருந்து டேவிட் அவர்களின் பாணியில் 1 லட்சம் தமிழ் மக்களை வடகிழக்கில் குடியேற்றிக்காட்டுங்கள்..

டேவிட் ஐயாவின் வாழ்கைவரலாறு மற்றும் அவர் எவ்வாறு காந்தியத்தை கொண்டு இயக்கினார் என்பது தொடர்பாக அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தி அங்குள்ள வீடியோக்களில் அவர் விளக்குவதை கேட்கலாம்.

டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று. பீமன்.


Read more...

Monday, October 7, 2019

கோத்தபாய எதற்காக சுமந்திரனை அழைத்தார்? ஐ.தே. கட்சியின் முகாமிலிருந்து சுமந்திரனால் வெளியேற முடியுமா? பீமன்

ஒரிரு தினங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வ வல்லமை கொண்டவர் என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான மதியாபரணம் சுமந்திரனை அழைந்து எனது சகோதரர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ சகிதம் உங்களுடன் பேசவிரும்புகின்றேன் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதியாக அழைக்கப்பட்ட சுமந்திரன் அவ்வழைப்பு தொடர்பில் அம்மக்களின் அல்லது அவர்களது சகபிரதிநிதிகளின் விருப்பு வெறுப்புக்களை பெற்றுக்கொள்ளாது : 'தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாட – அவசர – நெருக்கடி ஆகியவற்றுக்கான தீர்வுகளாக நீங்கள் முன்வைக்கக்கூடிய யோசனைகள் தொடர்பில் உங்களிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் சந்தித்துப் பேசுவதில் பலன் விளையாது' என நிராகரித்துவிட்டதாக தமிழ் தேசியவாதிகள் எனத் தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்வோர் அல்லது சுமந்திரனின் செம்புதூக்கிகள் எக்காளமிடுகின்றனர்.

ஆனாலும் எமது யோசனைத் திட்டங்கள் தொடர்பாக பேசுவதற்காகவே நாம் உங்களை அழைக்கின்றோம் என கோத்தபாய ராஜபக்ச தனது நல்லெண்ணெத்தை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளபோதும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் என்ன முடிவைக்கொடுக்கப்போகின்றது என்ற விரிவான விளக்கம் தேவைப்படுகின்து.

இலங்கை அரசியல் வரலாற்றில் இருதரப்பினர் மாறிமாறி ஆட்சிப்பீடம் ஏறுகின்றனர். இருவரில் எவரும் இதுவரை தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக சரியான அணுகுமுறை ஒன்றை கொண்டிருக்கவில்லை என்பது வெள்ளிடைமலை. ஆனால் தமிழர் தரப்பின் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமானது? அக்கோரிக்கைகள் நிலையானதா? அது காலத்திற்கு காலம் மாற்றம் பெற்றுள்ளதா? அவற்றை அடைய தமிழ் தரப்பு நியாயமான வழிமுறைகளை பின்பற்றியுள்ளார்களா? பெற்றுக்கொள்ளக்கூடியவற்றை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்களா? என்கின்ற கேள்விகளுக்கு இதுவரை தமிழர் தரப்பிலிருந்து வெளிப்படைத்தன்மையான எவ்வித பதில்களும் இல்லாத நிலையிலேயே போலித்தேசியவாதத்தின் பெயரால் போலித் தமிழ் தலைவர்கள் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து தாங்கள் இராஜபோகம் அனுபவித்து வருகின்றார்கள்.

கடந்த காலங்களை விட நிகழ்கால அரசிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேரடியாக நிபந்தனைகளின்றி ஆதரவு வழங்குகின்றார்கள் என்பதைவிட அந்த அரசையே ஆட்சிக்கவிழ்பிலிருந்து காத்துவருகின்றார்கள். அதாவது தமிழ் மக்களின் வாக்குகளால் காக்கப்படும் ஆட்சி இது என்று வெளிப்படையாக கூறிக்கொள்ளமுடியும். இதற்காக தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடவில்லை என்று கூறமுடியாது. அது தூநோக்குடன் செயற்படுகின்றது. தூரநோக்குடன் செயற்படுகின்றது எனும்போது தமிழ் மக்களுக்கான நிரந்தர நலனுக்கான நோக்கு என்று நோக்கலாகாது. மக்களின் உதிரத்தை உறிஞ்சி எடுக்கும் வரிப்பணத்திலிருந்து மக்களுக்கான அபிவிருத்தி என்று சொல்லப்படும் கம்பரெலி எனப்படும் திட்டத்தினூடாக மக்களுக்கான உதவி என்ற பெயரில் தங்களது இருப்பை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

வெளிப்பார்வைக்கு கம்பரெலிய மக்களுக்கான அபிவிருத்தி திட்டமாக காணப்பட்டாலும் அதன்நோக்கம் கம்பரெலியவைக்காட்டி அடுத்த தேர்தலுக்கு மக்களை அபிவிருத்தியின் அடிமைகளாக்குவதாகும். அதாவது வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அபிவிருத்தி பூச்சாண்டி காட்டி அதனூடாக தனது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளல் அடுத்து பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றியீட்டப்பண்ணி அடுத்த ஆட்சியிலும் தமக்கு பொதி சுமக்கும் கழுதைகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை வைத்திருத்தல்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதிசுமக்கும் கழுதைகளாக தொடர்ந்தும் இயங்குவதா அன்றில் சமவுரிமையுள்ள இலங்கை பிரஜைகளின் பிரதிநிதிகளாக சம அந்தஸ்துடன் மேசையில் உட்கார்ந்து கௌரவமான அரசியல் செய்வதா என நிர்ணயிக்கக்கூடியதோர் சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தட்டிக்கழித்து தமிழ் மக்களை தொடர்ந்தும் இந்நாட்டின் இரண்டாம்தர பிரஜைகள் அல்லது இந்நாட்டின் விசேட விருந்தாளிகள் என்ற மனநிலைக்கு கொண்டு செல்லப்போகின்றதா?

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தரப்பை ஆதரிப்பது அதற்கான நிபந்தனைகள் யாது என்ற விடயத்தில் சுமந்திரன் எனப்படும் தனிநபரின் முடிவுகள் ஒருபோதும் தமிழ் மக்களின் முடிவாக இருக்க முடியாது. அவ்வாறு சுமந்திரன் தன்னிச்சையாக எடுத்திருக்கும் முடிவுகளால் தமிழ் மக்கள் நிறையவே இழந்திருக்கின்றார்கள்.

நான்கு வருடகால நல்லாட்சி என்று கூறிக்கொண்ட ஆட்சியில் ஜனாதிபதி – பிரதமர் இடையே இழுபறியேற்பட்டபோது கவிழ்கப்பட்ட ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்மூடித்தனமாக தூக்கி நிறுத்தியதில் தமிழ் மக்கள் சாதித்துக்கொண்டது யாது என்ற கேள்விக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பதிலளிக்கவேண்டும். ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது மஹிந்த தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பகிரங்கமாகவே வேண்டி நின்றனர். ஆனால் அவ்வேண்டுதலை எட்டி உதைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தனர்.

இங்கு மிகவும் கண்டனத்திற்கும் அருவருப்பிற்கும் உரிய விடயம் யாதெனில், மஹிந்த தரப்பினர் தமிழ் மக்களுக்கு எதைத் தருகின்றோம் என தெரிவித்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்துவோம் என சுமந்திரன் சிங்கள ஊடகங்கள் ஊடாக அத்தரப்பை பிளக்மெயில் பண்ணுமளவிற்கு சென்றிருந்தார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதப்படுகின்ற விடயங்களைக்கூட மஹிந்த தரப்பினர் கொடுப்பதற்கு தயாராக இருந்திருக்கின்றார்கள் என்பதனை இங்கு உணரவேண்டியுள்ளது. அவ்வாறாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை நட்டாற்றில் தள்ளிவிட்;டே ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவியிருக்கின்றது என்ற உண்மையை மக்கள் தங்கள் மனதில் நிறுத்தவேண்டும்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் சார்பான விடயங்களில் எத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தும் தகுதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் அதன் மீதான நம்பிக்கையும் தவிடுபொடியாகியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பாக எத்தரப்பு தமிழ் மக்கள் சார்பாக எதை முன்வைக்கின்றது என்பது தமிழ் மக்களுக்கு நேரடியாக தெரியப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் மக்கள் சார்பாக பொது நலன்கருதும் நபர்களும் ஊடகங்களும் நேரடியாக கலந்து கொண்டு தரப்புக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முன்மொழிவுகள் அல்லது உறுதிமொழிகள் ஆராயப்படவேண்டும். அவ்வாறு ஆராய்ந்து அவற்றில் எத்தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான பொது முடிவு ஒன்று எட்டப்படவேண்டும்.

Read more...

Saturday, August 31, 2019

உடையுமா கிழக்கு உதயம்? துணைபோகின்றதா கிழக்குக்கான அரசியல் கட்சி ?

கிழக்கு உதயம் என்கின்ற அமைப்பு 2004ம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுனாமி பேரலை தாக்கியபோது, கிழக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கென சுவிட்சர்லாந்தில் உருவானது. கிழக்கு என்ற தமது அடையாளத்தை வெளிப்படுத்தினால் துரோகிகள் அல்லது பிரதேசவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றதோர் அபாயமான காலகட்டத்தில்தான் உதயம் உருவானது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்ற அவசர அழைப்புடன் அந்த அமைப்பு ஆரம்பமாகியிருந்தாலும், கிழக்குக்கென்று தனித்துவமான சுயாதீனமான தலைமைத்துவம் ஒன்று வேண்டும், எம்மால் தனித்து இயங்கமுடியும், தொடர்ந்தும் எம்மை யாழ் மேலாதிக்க சக்திகள் ஆட்சி செய்ய அனுமதிக்கமுடியாது என்கின்ற ஏகப்பட்ட உள்ளக்கிடக்கைகளின் வெளிப்பாடகவே உதயம் உருவானது. கிழக்கு என்ற பெயரை கம்மீரமாக கூறிக்கொண்டு, ஆம்! எங்களாலும் முடியும் என்று ஆரம்பமான முதலாவது அமைப்பு கிழக்கு உதயம் என்றும் அடையாளப்படுத்தலாம்.

புலிகள் அமைப்பிலிருந்து தனது சொந்த காரணங்களுக்காக பிரதேசவாத போர்வையை போர்த்துக்கொண்டு கருணா வெளியேறியிருந்தபோது, யாழ் மையவாத பிற்போக்குவாதிகளின் பார்வை ஒட்டுமொத்த கிழக்கு மக்கள் மீதும் திரும்பியிருந்த காலகட்த்தில் உதயம் பிரகாசமாக உதயமானது. உதயத்தின் தோற்றத்திற்கு எதிராக எழுந்த அத்தனை சவால்களையும் அது எதிர்கொண்டது. இச்சவால்களை எதிர்கொள்வதில் அந்த அமைப்பை உருவாக்க உறுதுணையாக நின்ற கிழக்கின் மக்கள் உறுதியுடன் செயற்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் செயற்பட்டமைக்கான முதன்மைக் காரணம் ஏலவே குறிப்பிட்டதுபோல் கிழக்கின் மக்களுக்கு உதவவேண்டும் என்ற விருப்புக்கு சமாந்தரமாக கிழக்கின் தனித்துவம் தொடர்பான அவர்களது உள்ளக்குமுறல்களுமாகும்.

துரோங்களாலும் துரோகிகள் என்ற போலி முத்திரை குத்தல்களாலும் சாபக்கேடுக்குள்ளான எமது சமூகத்தில் பொதுநோக்குடன், அதுவும் பாமரமக்களின் எதிர்கால விடிவுக்காக செயற்படுவதும் துரோகமே. கட்சிகளும் அமைப்புக்களும் மக்களுக்காக என்பதிலிருந்து விலகி அவை தலைவருக்காகவும் தலைமைக்காகவுமே என்ற அச்சுறுத்தலிலிருந்து உதயத்தாலும் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.

ஆம், நடந்தது! குறுகிய காலத்தில் உதயம் உடைந்தது யாழ் மையவாத பாசிஸ தலைமையின் நிகழ்சி நிரலில் அதன் அடிவருடிக்கும்பலொன்ன்று உதயத்தை உடைத்து புதிய அமைப்பொன்றை உருவாக்கி கொண்டனர். உதயத்தின் மக்கள் பலம் குன்றியது. செயற்பாடுகளின் தாக்கம் தணிந்தது. நிர்வாகச் சிக்கல்கள் உருவானது. மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் உருவானது. இவை அத்தனைக்கும் மத்தியில் உதயத்தின் இயங்கு சக்திகளான மக்களின் பலத்துடன் அது 15 வருடங்களாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நகர்வு ஆரம்ப வேகத்திலும் மிகக்கம்மியாகவே அமைந்திருந்தது என்பதை பதிவு செய்தே ஆகவேண்டும்.

மேற்குறிப்பிட்டவை யாவும் இறந்தகாலம். ஆனால் எதிர்காலம் இறந்தகாலத்திலும் பார்க்க ஆபத்தான திசையை நோக்கி நகர்கின்றது என்ற அடிப்படையில் சில விடயங்களை வெளிப்படையாக மக்களின் ஆய்வுக்கு விடலாம் எனக் கருதுகின்றேன்.

கடந்த சில வருடங்களாக உதயத்தின் நிர்வாகத்தினுள், குறிப்பாக நிர்வாக சபை உறுப்பினர்களுள் உருவாகியுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் ஒரு பொது அமைப்பை, விசேடமாக உதவிகள் தேவைப்படும் ஒரு தொகுதி மக்கள் பயனடைகின்ற அமைப்பை உடைத்து மேலும் பலவீனமடையச் செய்யக்கூடிய நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. இக்கட்டுரையின் நோக்கம் நபர்களைச் சாடுவது அல்ல என்பதாலும் உடைவை தடுத்து நிறுத்தி இதுவரை செய்யப்பட்ட பணி தொடர்ந்தும் மேலதிகவேகத்துடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்துவது என்பதாலும் மேலோட்டமாக சில விடயங்களை தொட்டுச்செல்லலாம் எனக் கருதுகின்றேன்.

நிதிநிர்வாகத்திற்குரிய பொறுப்புக்கூறல்கள் இதுவரை சரியாக இடம்பெறாதன் காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளது என்ற முடிவுக்கு இலகுவாக வரக்கூடியதாகவுள்ளது. பொதுமக்களின் பணத்திற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் அதற்கு கட்டுப்படாது செல்வதற்கு எமது அரசியல் மற்றும் ஆயுதக்கலாச்சாரங்கள் வழிவிடுகின்றது அல்லது துணை நிற்கின்றது என்ற குற்றச்சாட்டை உதயத்தின் உயிர்நாடியாக இருக்கக்கூடிய பொதுமக்கள் வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக நிதிநிர்வாகத்திற்கு பொறுப்பானவரிடம் பொறுப்புக்கூறல் என்ற கருமத்திலிருந்து தாங்கள் விடுபடமுடியாது என்று மக்கள் வலியுறுத்துகின்றபோது, அரசியல் கட்சி ஒன்று அவர் எங்களுடைய ஆள் என்று மிரட்டுகின்ற நிலைமை உருவாகியுள்ளதாக அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுவதானால் உதயத்தின் முன்னணிச் செயற்பாட்டாளரான பெண் ஒருவரை அரசியல் கட்சி ஒன்றின் பெண்கள் அணிப்பொறுப்பாளர் மிரட்டியதாக அறியமுடிகின்றது. இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றதாகவும் அதற்கும் குறித்த அரசியல்கட்சியே பொறுப்புக்கூறவேண்டும் என்றும் மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இச்செயற்பாடானது அக்கட்சியின் பொதுமக்கள் மீதான அக்கறையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. கட்சிகள் பொது அமைப்புக்கள் மக்களுக்கானவை என்பதையும் அவை தனிநபர்களுக்கானவை அல்ல என்பதையும் குறித்த கட்சி ஏற்றுக்கொள்ளவேண்டும். நிதிநிர்வாத்திற்கு பொறுப்பானவர் கட்சியின் விதிமுறைகளுக்கு கட்டுப்படாது செயற்படுகின்றபோது, அவர் மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர் என்பதையும் நிர்வாக விதிகளுக்கு கட்டுப்படவேண்டியவர் என்பதையும் வலியுறுத்துவதை விடுத்து அவரை விடுங்கள் அவர் எங்களுடைய ஆள் என்பது அக்கட்சி மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு குந்தகமாக அமையலாம்.

எனவே குறித்த அரசியல் கட்சி கிழக்கு மக்களின் மேம்பாட்டில் அக்கறைகொண்டதாகவிருந்தால் உடனடியாக அமைப்பு உடைந்து பலவீனமடைவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும் நிதிக்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நபரை அரவணைத்து தஞ்சம் வழங்குவதை தவிர்க்கவேண்டும்.

அத்துடன் அமைப்பினுள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துகொண்டு உடைவினை தவிர்த்து முன்நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் உடனடியாக இடம்பெறவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

Saturday, July 13, 2019

கல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா? பீமன்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகியுள்ளது. அவசரத் தீர்வாக பிரதேச செயலகத்துக்கான நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளருக்கான நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றது.

இச்செய்திகளை தொடர்ந்து இவ்வெற்றியின் முழுப்புகழும் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் ராஜன் என்பவரையே சாரும் என பிரதேச இளைஞர்கள் ராஜனை தோழில் சுமந்தவாறு பட்டாசு கொழுத்தி மகிழ்துள்ளனர். மறுபுறத்தில் யாழ் மேலாதிக்க ஊடகங்கள் தீர்வுக்கான சகல புகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளார் பா.உ சுமந்திரனையே சாரும் என்று புகழ்கின்றனர்.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆசனம் எதிர்பார்த்து நிற்கும் ஊடகவியாபாரிகள் தற்போது சுமந்திரன் புகழ்பாட ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் அதன் பின்னணி. முன்னொருகாலத்தில் சப்ரா நிதிநிறுவனத்தினூடாக ஏழைகளின் கண்ணீரை பாணமாகக்குடித்த வித்தியாதரன் அந்த துரோகத்திலிருந்து தப்புவதற்காக பிரபாரன் புகழ்பாடினார் என்பது ஊர் அறிந்த விடயம். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பல்வேறு வழிகளில் மிரட்டி தனக்கு ஆசனம் பெற்றுக்கொள்ள முனைந்தார். அது கைக்கூடாத நிலையில் ஆசனம் பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் புகழ்பாட ஆரம்பித்துள்ளார்.

செயலகத்திற்கென்ற தனியான கணக்காளர் கிடைத்துவிட்டார் என்பதற்காக பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு இன்னும் பதில்கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்வேறு தரப்புக்களுடன் கடந்தகாலங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டது என்றும் அவற்றில் எத்தனை குப்பைத்தொட்டிக்கு சென்றுள்ளது என்பது தொடர்புமான வரலாற்றை புரட்டிப்பார்ப்போமானால் குறித்த பிரதேச செயலகம் அவ்வளவு இலகுவாக தரமுயர்த்தப்பட்டுவிடுமாக என்பதை ஊகித்துக்கொள்ளமுடியும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தலைதப்பியுள்ள யுஎன்பி அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றுமா என்பதும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் என்ன நிலையை எடுக்கப்போகின்றது என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயங்கள்.

இந்நிலையில் குறித்த விடயத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழி பெற்றுக்கொண்டுவிட்டோம் என கொக்கரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செம்பு காவிகள் அவ்வாறான உறுதி மொழி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலையை உருவாக்கிய நம்பிக்கையில்லா பிரேரணையை பற்றி மறந்து விட்டனர். ஜேவிபி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்திருக்காவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதிமொழியை பெற்றிருக்கமுடியுமா என்பதும் கேள்வியே. எனவே உறுதிமொழிக்கு காரணம் ஜேவிபி யா அன்றில் த.தே.கூ வா?

Read more...

Tuesday, March 19, 2019

மனித உரிமைகள் பேரவையில் புலிகளுக்கும் கால அவகாசம் வழங்கப்படுகின்றதா? பீமன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வு ஜெனிவாவில் கடந்த மாதம் 25ம் திகதி ஆரம்பமாகி 22 ம் திகதி முடிவுக்கு வருகின்றது. நாளை 20ம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்றும் பொறுப்புக் கூறலுக்காக இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை 30 / 1 தீர்மானத்திற்கு அரசு வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இந்நாட்டினை நேசிக்கும் சக்திகள் அரசிற்கு வழங்கிய அழுத்தங்களை கணகில் எடுக்காது தொடர்ந்தும் அனுசரணை வழங்க முன்வந்திருப்பதானது இலங்கையின் உள்வீட்டு விவகாரங்களில், மேற்குலகுக்கு விரிக்கும் செங்கம்பளமாகவே பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்று பொறிமுறை ஒன்றை வரைந்து எல்லைகளை போட்டுள்ள மனித உரிமைகள் ஆணையகமானது, புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக அவ்வியக்கத்தினை நீதியின் முன்நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளதாக உணர முடிகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தில் சகல தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மையாகும். விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் ஆயுதம் தூக்கிய சகல அமைப்புக்களும் மனித நேயம் அற்றும் சட்டத்தை மதியாமலும் சக மனிதனின் உரிமைகளை மீறி காட்டு மிராண்டித்தனமாக செயற்பட்டார்கள்.

ஆனால் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தங்களை தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்ட புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் எண்ணில் அடங்காதவை. இதன் காரணமாகவே அமெரிக்க ஐக்கிய ராச்சியம் புலிகள் அமைப்பை உலகிலுள்ள அதிபயங்கரமான காட்டுமிராண்டித்தனமான இயக்கம் என்று வரையறை செய்திருந்தது.

ஏகப்பிரதிநித்துவ மோகம் பிடித்தலைந்த புலிகள் அமைப்பு இலங்கையில் செயற்பட்ட சகல போராட்ட மற்றும் அரசியல் கட்சிகளையும் தடை செய்து அவர்களின் அரசியல் உரிமையை மாத்திரம் அல்ல வாழ்வுரிமையையே பறித்தது. இயக்ககங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொட்டு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வரை கொத்து கொத்தாக கொன்றொழித்தது.

புலிகளின் பாசிஸப் கொள்கைளை ஏற்க மறுத்த மற்றும் அவற்றை விமர்சனம் செய்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த சகல வர்க்கத்தினரும் கொன்றொழிக்கப்பட்டனர்.

மக்களின் அடிப்படை சுதந்திரமான எழுத்து பேச்சு சுதந்திரம் புலிகளால் பறிக்கப்பட்டது. அவ்வமைப்பு ஒலி-ஒளி பரப்புகின்றவற்றையும் அவர்களது வெளியீடுகளையும் மாத்திரமே மக்கள் வாசிக்கவும் கேட்கவும் பார்க்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சுதந்திமான நடமாட்டத்திற்கு தடைபோடப்பட்டது. புலிகள் பலவந்தமாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த பிரதேசங்களுக்கு வெளியே மக்கள் செல்லவும், வெளியேயிருக்கும் மக்கள் உள்நுழையவும் பலத்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. அப்பிரதேசத்திலிருந்து ஒருவர் வெளியேறுவதனால், பெற்றோர் உறவினர்கள் பிணை நிற்கவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. மேலும் அவ்வாறு வெளியேறுவோர் குறிக்கப்பட்ட காலத்தினுள் திரும்பாதவிடத்து பிணை நின்றவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

சிறுவர்கள் படையில் பலவந்தமாக இணைக்கப்பட்டு யுத்தமுனையில் பலியிடப்பட்டார்கள். அவ்வாறு தமது பிள்ளைகள் பலியிடப்படுவதை எதிர்த்த பெற்றோர் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கும் உள்ளானார்கள்.

யுத்தம் ஆரம்பமானபோது தோல்வி நிச்சயம் என்பதை தெரிந்திருந்தும் புலிகள் மக்களை மனித கேடங்களாக பயன்படுத்தினார்கள். இலங்கை அரசினால் யுத்த சூனிய வலையம் பிரகடனம் செய்யப்பட்டது. அப்பிரதேசங்களினுள் மக்கள் பாதுகாப்பு தேடிச் சென்றபோது அப்பிரதேசங்களிலிருந்து படையினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் விளைவாக தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்திற்கு படையினர் திருப்பி தாக்கியபோது பொதுமக்கள் பலியாவது தவிர்க்க முடியாததாகியது. எனவே இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மக்கள் அழிவிற்கு புலிகளே காரண கர்த்தாக்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படை உண்மை.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பியோட முற்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலிருந்து உயிர்தப்பிய மற்றும் கண்கண்ட சாட்சியங்கள் இன்றும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் சாட்சியங்களை ஐ.நா ஏன் பதிவு செய்து கொள்ளவில்லை என்பதும் புலிகளின் கொடிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை.

புலிகள் கர்ப்பிணிப்பெண்களைக் கூட தற்கொலைகுண்டுதாரிகளாக உருமாற்றினார்கள்.

யுத்தத்தில் காயமடைந்து அவயங்களை இழந்து நடமாட முடியாதிருந்த புலிகளை மூளைச்சலவை செய்து கடலில் தற்கொலைப் படகுகளில் தற்கொலைதாரிகளாக பயன்படுத்தினார்கள்.

புலிகளியக்கத்திற்காக சண்டையிட்டு அங்கவீனர்களாகவிருந்த பலர் இறுதி நேரத்தில் புலிகளால் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்.

பொது இடங்கள், மற்றும் பயணிகள் பஸ், ரயில்களில் குண்டுகளை வைத்து பொதுமக்களை தாக்கினார்கள்.

இந்நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு விபூதி அணிவித்த இந்து சமய பூசகர் ஒருவரை சுட்டுக்கொன்றார்கள். இதன் ஊடாக புலிகள் மத சுதந்திரத்திற்கு இடையூறு விளைவித்தார்கள்.

இஸ்லாமிய மற்றும் பௌத்த வணக்கஸ்தலங்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை புலிகள் கொன்றொழித்தார்கள்.

பொதுமக்கள் யுத்த முடிவில் இராணுவத்தினரால் கைப்பற்றபட்ட பிரதேசங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, பொதுமக்களோடு பொதுமகள் போன்று உடையணிந்து சென்ற பெண்புலி ஒருத்தி உடம்பில் கட்டியிருந்த குண்டினை வெடிக்கவைத்ததில் உடன்சென்ற பல மக்கள் பலியாகினர்.

இவ்வாறு புலிகளின் மனித உரிமை மீறல்கள் பட்டியல் நீண்டு செல்லும். ஆனாலும் புலிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக இதுவரை எவரும் குரகொடுக்க முன்வரவில்லை. ஐ.நா இலங்கை அரசை பொறுப்புக்கூறலுக்கு நிர்பந்திக்கும் அதே பாணியில் புலிகள் தரப்பையும் நிர்பந்திக்காதவிடத்து அது பக்கசார்பாக நடந்து கொள்கின்றது என்பதை வெளிப்படையாக காட்டுகின்றது.

Read more...

Tuesday, March 12, 2019

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினுள்ளும், தமிழ் பிரிவினை- வாதத்தினுள்ளும் சிக்குண்டுள்ள கல்முனை பிரதேச செயலகம். பீமன்.

கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் 1987 ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழ் முஸ்லிம் பிரிவுகளாக பிரிக்கப்பட்டபோது, அங்கே திரு காலித் (அல்லது காலிதீன் சரியாக நினைவில்லை) உதவி அரசாங்க அதிபராக இருந்தார். ஒரு சோனி பாரபட்சம் காட்டுகின்றான் என, அவர் காலத்தில் பேசப்பட்டதாக ஞாபகம் இல்லை. அந்த அலுவலகத்திலே அன்று 90 விழுக்காடு உத்தியோகித்தர்கள் தமிழர்களாகவே இருந்தனர்.

சிரங்குகளை உருவாக்கி அந்த சிரங்கினை உரசி, பெருப்பித்து வாழும் பிச்சைக்காரர்களான அரசியல்வாதிகள் இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, வாக்குகளை அபகரிக்கும் நயவஞ்சக
சிந்தனையிலேயே குறித்த உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தை பிரித்துள்ளார்கள் என்பது இன்றைய நடைமுறையை பார்கின்ற போது தெளிவானாலும், நிகழ்காலச் செயற்பாடுகள பிரிந்து தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பலவந்தமாகவே தள்ளுகின்றது.

1993 ம் ஜூலை மாதம் 28ம் திகதி கூடிய அமைச்சரவை, கல்முனை பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு) உட்பட்ட 28 உப பிரதேச செயலர் அலுவலகங்களை தரமுயர்த்த அங்கீகாரம் வழங்கியது. (அன்றைய உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சின் ராஜாங்க செயலாளரின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.) இருந்த போதும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அல்லது கல்முனை பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு) என்று அறியப்படுகின்ற பிரதேச செயலகம் இன்று வரை தரமுயர்த்தப்படவில்லை.

அது தரமுயர்த்தப்படாமைக்கான காரணம் தெட்டத் தெளிவாகியுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரடியாகவே அதற்கான தடையை போடுகின்றனர். தமிழ் மக்கள் தமது அரச கருமங்களை செய்து கொள்ளக்கூடிய அந்த காரியாலயத்தை தமது விருப்பிற்கேற்றவாறு அமைத்துக் கொள்வதால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கள், பின்னடைவுகள், பாதிப்புக்கள் யாது என்று கேட்கின்ற போது நொண்டிச் சாட்டுக்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம், அரச நிர்வாக திணைக்களங்கள் இன, மத ரீதியாக பிரிக்க முடியாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறாயின், ஓட்டமாவடி , காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் காணப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளை எவ்வித நிலத் தொடர்பு அற்ற முறையில் இணைத்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலையம் என்றதோர் வலையம் உருவாக்கப்பட்டமை, திருக்கோயில் கல்வி வலயத்திலிருந்து பிரித்து பொத்துவில் கல்வி வலையத்தை அமைத்துக் கொண்டமை, கல்முனையிலிருந்து பிரித்து சாய்ந்தமருது தனி பிரதேச சபைக்கான கோரிக்கை, கோறளைப்பற்று பிரதேச செயலகத்திருந்து ஓட்டமாவடி தனி பிரதேசம் உருவாக்கியமை தொடர்பான நியாயப்பாடுகள் யாது என்ற கேள்விக்கு இதுவரை பதிலளிக்கப்படாத நிலையில், கடைந்தெடுத்த இஸ்லாமிய அடிப்படை வாதியாக அடையாளம் காணப்படுகின்ற வை.எல்.எஸ் ஹமீத் கூறுகின்ற நியாயம் யாதெனின், புலிப் பயங்கரவாதிகள் தொடர்சியாக முஸ்லிம் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அவர்களின் பள்ளிவாசல்களில் கூட அம்மக்களை கொன்றொழித்ததாகவும், அதற்கு நஷ்டஈடாக கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என்கின்றார்.

சட்ட முதுமானியான ஹமீத்திடம் நான் கேட்கின்ற கேள்வியாதெனில் இலங்கையின் எந்த சட்டம் இவ்வாறான கோரக்கைக்கு இடம் விடுகின்றது என்பதாகும்.

மேலும் புலிகள் முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்தார்கள், அவர்களை மனித நேயம் அற்று கொன்று குவித்தார்கள் என்பதெல்லாம் நியூட்டனின் 2ம் விதியான , ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமும் எதிருமான மறுதாக்கம் உண்டு, என்பதற்கு உட்பட்டது தான். புலிப்பயங்கரவாதிகள் தமிழ் மக்களின் தலைவர்களை கொன்று குவிக்கும்போது, அவர்களுக்கு முஸ்லிம்கள் அனுசரணையும் அடைக்கலமும் கொடுத்ததன் பிரதிபலனையே நீங்கள் அனுபவித்தீர்கள்.

இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த போது, சகோதரப்படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அச்சந்தர்ப்பங்களில் துருக்கி தொப்பியணிந்தே புலிப்பயங்கரவாதிகள் தமிழ் மக்களின் தலைவர்களையும், மக்களையும் சக இயக்க உறுப்பினர்களையும் கொன்றொழித்தார்கள். அச்சந்தர்ப்பங்களில் முஸ்லிம் கிராமங்களில் எவ்வாறு பயங்கரவாதிகளுக்கு செங்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது என்பதனை சற்று மீட்டிப்பாருங்கள் ஹமீத்.

புலிப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட வன்செயல்களுக்காக முஸ்லிம்களோ, சிங்களவர்களோ ஒட்டுமொத்த தமிழ் மக்களை பழிவாங்க நினைப்பார்களாயின் அல்லது அவர்கள் அதற்கு பொறுப்பாளிகள் என்று கூறுவார்களாயின் அதைப்போல் அறம்கெட்ட செயல் இருக்கமுடியாது. புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையை (படையினரின் எண்ணிக்கையை தவிர்த்து) ஒப்பீடு செய்து பார்ப்பீர்களாயின், புலிகளால் பாதிக்கப்பட்ட முதலாவது இனம் தமிழினம் என்பது எவருக்கும் புரியும். அவ்வாறான நிலையில் புலிகள் செய்த தவறுக்காக தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு குறுக்கே நிற்பது எவ்வாறு நியாயமாகின்றது?

புலிகள் மேற்கொண்ட வன்செயல்களை சுட்டிக்காட்டி தமிழ் மக்களை நோகடிக்க அல்லது பழிவாங்க எத்தனிக்கும் அல்லது தொடர்ந்தும் முஸ்லிம் - தமிழ் மக்களின் உறவில் விரிசலையே ஏற்படுத்த முனையும் ஹமீத் போன்றவர்களே! உங்கள் மனச்சாட்சியை (இருந்தால்) தட்டிக் கேளுங்கள், எத்தனை அப்பாவித் தமிழர்களை முஸ்லிம்கள் கொன்றொழித்தார்கள்?

புலிகள் எங்காவது ஓர் முஸ்லிம் மீது கை வைத்துவிட்டால் உங்கள் கிராமங்களில் தொழிலுக்காக நுழைந்திருந்த எத்தனை அப்பாவி தொழிலாளிகளை கொன்றொழித்தீர்கள். காலை 6 மணிக்கு கூலித் தொழிலுக்கு வந்தவனுக்கு 8 மணிக்கு காலை உணவை கொடுத்து விட்டு மதிய உணவுக்காக தனது உதிரத்தை வியர்வையாக உங்கள் வாசற்படியில் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எத்தனை பேரை வெட்டி
கடலில் வீசியிருக்கின்றீர்கள்? இவர்கள் உங்களை நம்பி உழைக்க வந்த பாட்டாளி வர்க்கம். உழைத்து உண்ணும் வர்க்கம். உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்ற வந்த அப்பாவிகள் கூட்டம்.

அவர்களை தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக கொன்று குவித்தீர்களே! அதில் என்ன நியாயம் இருந்தது? புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். புலிகள் செய்த அராஜகங்களுக்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் சீண்ட நினைப்பது அறமற்றது.

அதேநேரம் தமிழர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக எத்தனை தமிழ் மக்களை எவ்வாறு கொன்றொழித்தீர்கள் என்பதனை, இங்கு பட்டியலிட விரும்பவில்லை. மனச்சாட்சியை தட்டிக்கேழுங்கள்.

மேலும் ஹமீத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கல்முனை நகரம் முஸ்லிம்களின் இதயம் என்றும் அங்குள்ள அரச அலுவலகங்கள் தமது முன்னோர்கள் வழங்கியவை என்றும் குறிப்பிட்டுள்ளார். கல்முனை நகரம் கல்முனை வாழ் மக்களின் இதய பூமியாக இருக்கலாம், எவ்வாறு முஸ்லிம்களின் இதயம் மாத்திரமானது?

கல்முனைக்குடி , சாய்தமருது, சம்மாந்துறை , நிந்தவூர் , மாளிகைக்காடு அக்கரைப்பற்று , அட்டாளச்சேனை, ஒலுவில் என அத்தனை கிராமங்களில் இருந்தும் வந்தவர்களுக்கு வியாபாரத்திற்காக கடைகள் தமிழர்களால் வாடகைக்கு வழங்கப்பட்டன. சிலர் விலைக்கே வாங்கினர். தற்போது அந்த நகரத்தில் பெரும்பான்மையான வியாபாரிகள் முஸ்லிம்களாகவுள்ளனர். நிலங்களையும் கொள்வனவு செய்துள்ளனர். அந்த நிலங்கள் எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டன? என்ற கதை யாவரும் அறிந்த பரகசியம்.

இலங்கையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யாத நகரம் ஒன்று கூற முடியுமா? காலியில், மாத்தறையில், அம்பநாந்தோட்டையில் கொழும்பில், கண்டியில் என சகல நகரங்களிலும் முஸ்லிம் வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். எனவே இந்த நகரங்களில் அமைந்திருக்கின்ற பிரதேச செயலகங்கள் முஸ்லிம்களின் ஆழுகைக்குள் இருக்க வேண்டும் என்ற கோஷத்தை ஏன் முன்வைக்கவில்லை.

கல்முனையில் அரச அலுவலகங்களை முஸ்லிம்களின் முன்னோர்களே அமைத்தார்கள் என்றால், அதனூடாக ஹமீத் சொல்ல வருவது யாது? யார் அந்த முன்னோர்கள்? அவர்கள் தங்களுடைய தாயக காணியில் அரச அலுவலகங்களை அமைத்துக் கொடுத்தார்களா? இவ்விடத்தில் அரச அலுவலகங்களை அமைத்து கொண்டதன் நோக்கம், இன்றைய உங்களுடைய நோக்கம் தானா?

இல்லை. அன்றிருந்த முஸ்லிம் தலைவர்களின் நோக்கம் அவ்வாறிருந்திராது. கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு வடக்கே பெரியநீலாவணைக்கும் தெற்கே மாளிகைக்காட்டுக்கும் மையமாக கல்முனை நகர்ப்பகுதி இருந்தது. அந்த காரியாலங்களை கல்முனைக்குடிக்கு கொண்டு செல்வதால் இரு அசௌகரியங்களை அவர்கள் கணக்கில் எடுத்திருக்கலாம்.

ஒன்று மருதமுனை மற்றும் பெரியநீலாவணை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் நீண்ட தூரம் அரச கருமங்களுக்காக பயணிக்க வேண்டி வரும் என்ற நியாயமான நோக்கமும், இரண்டாவது கல்முனைக் குடியிலுள்ள அரச காணிகளை அரச திணைக்களங்களுக்கென எடுத்துக் கொண்டால், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு காணிப்பற்றாக்குறை நிலவலாம். ஆகையால் தமிழர் பிரதேசத்திலுள்ள காணிகளிலேயே அதனை அமைத்துக்கொள்வோம் என்ற, சற்று தமது சமூகம் சார்ந்த நோக்கமாகவும் இருந்திருக்கலாம்.

எனவே அக்காலத்தில் செயற்பட்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை தமது அரசியல் வங்குரோத்து தனங்களுக்காக நயவஞ்சகர்களாக மாற்ற முனைவது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் அவமானமாகும். குறிப்பாக அஹமட் மற்றும் மன்சூர் போன்ற தலைவர்கள் தமிழ் மக்களாலேயே பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதும், அவர்கள் இறுதி வரை தமிழ் மக்களுக்கு தங்களால் முடிந்தவரை விசுவாசமாக இருந்தார்கள் என்பதும் வரலாறு.

அவர்கள் கல்முனையில் அரச அலுவலகங்களை அமைத்தது, எதிர்காலத்தில் முஸ்லிம்கள் தமிழரை அடக்கி ஆட்சி செய்தவதற்கான அத்திவாரமாகவே என்று ஹமீத் நியாயப்படுத்துவாரானால், தமிழ் மக்கள் தங்களை தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்று முயற்சிப்பதில் தவறு எங்கே இருக்கின்றது?

மேலும் தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் முடியாது என்றும், கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சி அமைத்த போதும், அந்த முஸ்லிம் முதலமைச்சர் ஒரு தெருவின் பெயரைக்கூட மாற்றுவதற்கு கையாலகாதவராக காணப்பட்டார் என்றும், ஹமீத் தனது வக்கிரத்தை கக்குவதன் ஊடாக முன்னாள் முதலமைச்சர் நஸீர் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு வரலாற்றை திணிக்க முற்பட்டிருக்கவில்லை என்ற உண்மையை உணர்த்தியிருக்கின்றார்.

ஹமீத் குறிப்பிடுகின்ற 100 வீதம் முஸ்லிம்கள் வாழுகின்ற தெருவின் பெயர் என்ன? தரவை பிள்ளையார் கோயில் வீதி
என்ன பெயர் வைக்க முற்படுகின்றார்கள் ? கடற்கரை பள்ளிவாயல் வீதி.
100 வீத முஸ்லிம்களும், தரவை பிள்ளையார் கோயில் வீதிக்கு எப்போது வந்தார்கள்? எவ்வாறு வந்தார்கள்? என்பது கிழக்கு மாகாணத்தின் எட்டுத் திசையிலுமுள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் 90ம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் தமிழ் மக்களின் எல்லை கிராமங்கள் மீது முஸ்லிம்கள் எவ்வாறு அரச படைகளின் அனுசரணை பாதுகாப்புடன் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பதும் அதன் நோக்கம் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.

முஸ்லிம் பிரதேசங்களை அண்மித்து வாழ்ந்த தமிழ் மக்களின் பொருளாதாரத்தை சிதைத்து அவர்களை உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தி அவர்களது சொத்துக்களை அபகரிப்பதே மேற்படி தொடர் தாக்குதல்களின் நோக்கமாக இருந்தது. அந்த வகையில் கல்முனை தமிழ் மக்களின் எல்லையாக காணப்பட்ட பிரதேசங்கள் மீது, முஸ்லிம் மக்கள் அரச படைகளின் துணையுடன் தாக்குதல்களை மேற்கொள்ளுவர்.

சமைத்த உணவை சாப்பிட்டுக் கொள்ள முடியாது தமிழ் மக்கள் ஓட்டமெடுப்பர். பின்னர் பள்ளிவாசல்கள், ஆலயங்கள் இணைந்து சாமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதும் தமிழ் மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்வதும் சாதாரண நிகழ்வுகளாக இருந்தது.

ஆனாலும் அழிவுகள் கணக்கெடுக்க முடியாதவையாக இருக்கும். வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வகையில் அவற்றிலிருந்து மக்கள் மீண்டெழுவர். மீண்டெழுந்த அடுத்த இரு மாதங்களில், அதே தொடர் தாக்குதல்.

இவ்வாறு நிலைமைகள் தொடரும் போது, உடைத்து எரித்து நாசமாக்கப்பட்ட குடிமனை பொருட்களை மீண்டும் புனரமைப்பு செய்வதற்கான பொருளாதார வசதியையும் மன தைரியத்தையும் இழக்கும் மக்களிடம், ஒரே தெரிவுதான் இருக்கும். அந்த தெரிவு யாதெனில் வீடு வாசலை விற்றுவிட்டு தமக்கு பாதுகாப்பென கருதுகின்றதோர் இடத்தில் குடியேறுவது. இவ்வாறான நிர்ப்பந்தத்தை வன்செயல் ஊடாக உருவாக்கி தமிழ் மக்களை விரட்டி விட்டுத் தான் இன்று தரவை பிள்ளையார் கோயில் வீதியில் 100 வீதம் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள்.

தரவை பிள்ளையார் கோயிலில் இருக்கும் பிள்ளையார் அனுபவித்த துயரம் மக்கள் அனுபவித்த துயரத்திலும் கோரமானது. தமிழ் மக்கள் மீது வன்செயலை கட்டவிழ்த்து விட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வன்செயலாளர்கள் பிள்ளையாரை தூக்கி கொண்டு முன்னே இருந்த குளத்தினுள் போடுவார்கள். அதன் பின்னர் குடியேறும் மக்கள் பிள்ளையாரை தேடிப்பிடித்து ஆலயத்தில் வைத்து வணங்குவார்கள். இறுதியாக கொங்கிறீட் போட்டு கம்பியால் பிள்ளையாரை பிணைத்து கட்டி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக கட்டிக்காக்கப்பட்ட ஆலயத்தின் வீதியைத் தான் மாற்றக் கேட்கிறார் ஹமீத். ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் முஸ்லிம் அடிப்படை வாதிகளின் மதவெறிக்கு இவ்விடத்தில் துணை போகாது
உயர்ந்து நிற்கின்றார் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

இறுதியாக இஸ்லாமிய அடிப்படை வாதம் பிரிவினைவாதத்திற்கான அத்திவாரத்தை பலமாகவே போட்டுள்ளது. எனவே தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர் அரசியல் தளங்களிலிருந்து இணைந்து வாழவே முடியாது என்ற முடிவு முற்றானது.

தமிழ் அரசியல் தலைமைகள் தமது எதிர் அரசியல் வியூகத்தை மாற்றி ஆழும் கட்சியில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் பலாபலன்களையும் கோடிட்டுக் காட்டுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் காலாகலமாக மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட சகல அரச வளங்கள் மற்றும் வாய்ப்புக்களை தாங்களே அனுபவித்து வந்த நிலையில், தமிழர் தரப்பானது அரசுடன் இணைந்து சென்றதன் ஊடாக அரச வளங்கள் சமமாக பங்கிடப்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் தவித்த முயல் அடித்துப் பழகிய முஸ்லிம் அரசியல் தலைமைகள், தங்களுக்கு தேவையானவற்றை நிபந்தனையாக்குவர். தமிழர் தரப்பானது அரசிற்கு ஆதரவு வழங்காத வெறும் எதிர் கட்சியாக இருந்திருந்தால் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வேண்டுமானால், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மூடுவதற்கான வர்தமானி அறிவித்தலை வெளியிடு என்ற நிபந்தனையை முஸ்லிம் தலைவர்கள் விதித்திருப்பார்கள்.

ஆனாலும் தழிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் அரசினால் முஸ்லிம்களின் நிபந்தனையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழர் தரப்பு அரசுடன் இணைந்திருந்தே இவ்வாறான விடயங்களை சாதிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது. அத்துடன் கல்முனை பிரதேச செயலக விவகாரத்தினை அரசியல்வாதிகளின் வாக்குகளுக்கான பிச்சை பாத்திரமாக தொடர்ந்தும் பயன்படுத்தாது உடனடியாக இதற்கான தீர்வு காணப்பட வேண்டும். பிரித்தாளும் சக்திகள் தொடர்ந்தும் இவ்விடயத்தை தமக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

இவ்விடயம் கடந்த 1987ம் ஆண்டிலிருந்து சகல அரசியல் மேடைகளிலும் பேசப்பட்டிருக்கின்றது. எனவே எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் இவ்விடயம் தீர்க்கப்படவேண்டும்.

1993 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கபினெட் தீர்மானத்தை அடுத்து ராஜங்க செயலாளரின் அறிவித்தல் பிரதி.




Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com