Tuesday, January 19, 2021

குருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் ! கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை

குருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணையங்களிலும் பல்வேறுவிதமான செய்திகள் பரவியிருந்த நிலையில் அச்செய்திகள் தவறானவை என சிவசேனையின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அண்மித்தான குருந்தக் குன்றில் அருள்மிகு ஆதி சிவ இலிங்கேச்சரர் திருக்கோயில் மூலவரான முச்சூலம் நீக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறானவை.

குன்றின் உச்சியில் உள்ள சைவ வழிபாட்டு இடம் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. குருந்தக் குன்று திருக்கோயில் அறங்காவலர் என்னிடம் தெரிவித்தார்கள். மேலும் விவரம் பெற விரும்புவோர் திருக்கோயில் அறங்காவலர் திரு சசிகுமார் அவருடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம். +94767644290

குருந்தன்குளம் அணைக்கட்டுக்கு அருகே மலையடிவாரத்தில் உடைந்த கட்டிடம் இருந்தது. நான் நேரில் பார்த்திருக்கிறேன். அங்கு புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட முயன்றதால் நீதிமன்றத்தில் வழக்கு.

உடைந்த அந்தக் கட்டடத்தின் அருகே தொல்லியல் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தனர். மேசைமீது புத்தர் சிலை ஒன்றை வைத்தனர் வணங்கினர். அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டவில்லை, நோண்டிப் பார்த்தனர்.

அமைச்சர் வந்திருந்தார். படைப் பிரிவினரும் வந்திருந்தார்கள். புத்தபிக்குகள் எவரும் அங்கு வரவில்லை.

படைப்பிரிவின் காப்பரண் நெடுங்காலமாகவே அங்கு உண்டு. படைவீரர் ஒருவரோ இருவரோ இருப்பார்கள். கடமைக்கு வராத நாள்களே கூடுதலானவை.

சைவக் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை ஏதுமில்லை. பொங்கலுக்குத் தடையில்லை. வழிபாட்டுக்கு தடையில்லை. என அமைச்சர் அறங்காவலரிடம் கூறியுள்ளார்.

முழுமையான தகவல் அறியாமலே முச்சூலம் அகற்றியதாகத் தவறான செய்திகள் வெளியாகி சைவ உணர்வாளர்களின் மனம் புண்ணாகியதே.

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குமிழமுனை வழியாகச் சைவ உணர்வாளர்கள் வழிபடு பயணமாக குருந்தக் குன்று சென்று குருந்த மரநிழலில் அமர்ந்து இருக்கும் சிவபெருமானை வழிபட்டு அருள் ஆசி பெற்று வருவார்களாக

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com