Tuesday, July 28, 2020

பசிலை ஒழித்துக்கட்ட தாஜ்சமுத்ராவில் சூழ்ச்சி! ஓமாரே கஸ்ஸப தேரர்

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தையின் பெறுபேறாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அவசரமாக அவரது பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு உருகுணுரட்டை பிக்குமார் முன்னணியின் தலைவர் ஓமாரே கஸ்ஸப தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொரல்ல என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்,

முன்னாள் தூதுவர்களில் ஒருவரான தயான் ஜயதிலக்கவின் அழைப்பின் பேரில், அமெரிக்கர்கள் இருவர் உட்பட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேக்கரவின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது என தேர்ர் தெளிவுறுத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்காக 50 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்ற தேர்ர், இவர்களின் பேச்சுவார்த்தையின் ஒரே நோக்கம் அரசாங்கம் ஆட்சிபீடத்தில் ஏறியவுடனேயே அதனை அலைக்கழிப்பதும், பெசில் ராஜபக்ஷவை அவரது பாதையிலிருந்து விலகச் செய்வதுமேயாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் அவசரமாக செயற்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் நாட்டைத் துண்டு துண்டாக பிறநாடுகளுக்கு விற்பனை செய்தது. புலனாய்வுப் பிரிவும் ஏனோதானோ என்று இருந்தது. ஒன்று சேர்ந்தவர்களைப் பார்க்கும் போது இவர்கள் நல்லது செய்யவே மாட்டார்கள் என்பது புரிகிறது. நாட்டின் சுயாதீனத்தைக் கட்டிக்காக்கவே நாங்கள் ஜனாதிபதியை ஆட்சிபீடத்தில் ஏற்றினோம். 19 ஆவது அரசியலமைப்பு ஜனாதிபதியின் அதிகாரங்களில் பெருமளவு தாக்கம் செலுத்தியுள்ளது. நாட்டை ஆள்வதற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் பெற்றே ஆக வேண்டும்.

பெசில் ராஜபக்ஷ இந்நாட்டின் அபிவிருத்தியின் முன்னோடியாகச் செயற்பட்டார். என்றாலும் நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த்தும் அவருக்குப் பல்வேறு தலையிடிகளைக் கொடுத்தது. என்னதான் தடைக்கற்கள் வந்தபோதும் அவர் இம்முறை பாராளுமன்றத்திற்குச் சென்றே ஆகவேண்டும். பாராளுமன்றில் ஏதேனும் பிளவுகள் ஏற்பட்டால் அதனைச் சரிசெய்ய பெசிலன்றி யாராலும் முடியாது. அதனால் அவர் பாராளுமன்றிற்குச் செல்லவே வேண்டும். அதனைத் தடுக்கத்தான் தாஜ் சமுத்ராவில் கங்கனம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு எதிராக அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com