Saturday, March 7, 2020

கறுவாத்தோட்டத்தில் ஒழிந்து விளையாடியோருக்கு இனவிடுதலைக்காக சென்றோர் உண்ண உணவின்றிச்சென்றோராம்..

இறந்தவர்கள் அமைதியாக உறங்க, வடு சுமந்தவர்கள் வலியுடன் வாழ வழி தெரியாமல் தவிக்க, இடையில் நின்ற கூட்டம் கொக்கரிக்கின்றது. தேசம் எங்களது, தேசிய தலைவர்கள் நாங்கள்தான் என்கின்றனர்.

ஓர் அறிவு சார்ந்த இனம் , உலகிற்கு பல நாகரீகங்களையும் , சித்தமருத்துவத்தையும் , கட்டடகலைகளையும் அறிமுகம் செய்தது மட்டுமல்ல உலகெங்கிலும் பரந்து வணிகம் மேற்கொண்டு செல்வசெழிப்போடு வாழ்ந்தார்களாம் என்று வரலாறுகள் சொல்கின்றது.

அப்படிப்பட்ட இனம் இன்று ஒரு வேளை உணவுக்காக மாற்றானிடம் மண்டியிடுகின்றது என்பது வேதனை அல்ல அவமானத்தின் அடையாளம்.

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின் தொடங்கிய விடுதலை போராட்டம் 1970 பின் பொறுமை இழந்த அன்றைய இளைஞர்கள் ஆயுதம் ஏந்த புறப்பட்டார்கள் . அன்றைய காலகட்டத்தில் அது அவர்களுக்கு சாத்தியமாக இருந்தது ஏன் என்றால் இயற்கை உணவுகள் மூலம் அவர்களின் நெஞ்சங்களில் வீரம் நிறைந்திருந்தது. 2009 வரை ஏறக்குறைய 30 வருடங்களாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் பல வெற்றிகளையும் , பல பாதகங்களையும் சுமந்து 2009 மௌனித்தது.

இந்த காலப்பகுதியில் தங்கள் இன்னுயிர்களை இந்த மண்ணுக்காக விலையாக கொடுத்தவர்கள் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் . பலர் போற்றப்படுகிறார்கள் , பலர் தூற்றப்படுகின்றார்கள். விடுதலை போரில் கலந்து கொள்ளாத பல அப்பாவிகளும் வலிந்து கொல்லப்பட்டார்கள் இவர்கள் தியாகிகளும் இல்லாமல் , துரோகிகளும் இல்லாமல் அமைதியாக உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் , அவர்களை வழிநடத்தியவர்களையும் 1986 காலப்பகுதியில் சூதுகவ்வத்தொடங்கியது, தியாகிகள் என்றும் துரோகிகள் என்றும் அன்னிய ஏகாதிபத்தியத்தால் பட்டியல் இடப்பட்டு மாறி மாறி முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்த சதிவலையில் பல நடத்துனர்கள் கோடாரி காம்புகளாக மாற யாதும் அறியாத பல இளைஞர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினோம் என்று விடை காண்பதற்கு முன்பு குற்றுயிரும் குறையுருமாய் வீதிகளில் வீசப்படுகின்றார்கள்.

விடுதலைக்காக புறப்பட்டவர்கள் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் திக்கு தெரியாமல் தடுமாற , வசதியான குடும்பத்து இளைஞர்களும், நடத்துனர்களுக்கு ஐரோப்பிய தேசங்களை நோக்கி உயிரை காப்பாற்ற தப்பி ஓடுகின்றார்கள். வசதியற்ற இளைஞர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ளவும் , வஞ்சம் தீர்க்கவும் தவறான இடம் தேடுகிறார்கள் . இது யார் தவறு ? அவர்களை தவறான இடத்திற்கு கொண்டு சேர்த்தது யார் ? இதற்கான விடைகளை மக்களே தேடிக்கொள்ளுங்கள்.

இந்த காலப்பகுதியில் விடுதலை இளைஞர்கள் காடுகளிலும் கரம்பைகளிலும் காலுக்கு செருப்பும் இல்லாமல் கால்வயிற்று கஞ்சியுடன் மக்களை காப்பற்ற உறக்கம் தொலைத்துக் கொண்டிருக்கும் போது , சிங்கள தேசத்திற்கு அடிவருடிகளாக சேவகம் செய்த பல பெற்றோர்களும் , கருவாக்காட்டு வருமானத்தில் பஞ்சணையில் உறங்கியவர்களும் தங்கள் பிள்ளைகளை இரத்த வாடை அறியக்கூடாது என்பதற்காக சிங்கள தேசத்திலும், ஐரோப்பிய , இந்திய நாடுகளிலும் தங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை திணித்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு பயிற்றப்பட்டவர்கள் மும்மொழியும் கற்றுத் தேறிய பின்பு சிங்கள அரசாங்கத்தின் முகவர்களாக மாற்றப்பட்டு மேய்ப்பவன் இல்லை என்று எண்ணி வெள்ளாட்டு கூட்டத்திற்கு மேய்ப்பவனாக மாற கச்சைகட்டிக்கொண்டு உதவிக்கு நாலு அல்லக்கைகளை இணைத்துக் கொண்டு நாமே அடுத்த தலைவன் என்று மகுடம் சூட புறப்பட்டுள்ளனர். அதற்கு பல அல்லக்கைகளும் சேர்ந்து வடம் இழுக்கின்றனர்.

படுக்க பாய் இல்லை, பஞ்சணை வாங்கித்தருகின்றேன் என்கிறார்கள் , கால்வயிற்று கஞ்சிக்கு வழியில்லை வடை , பாயசத்துடன் விருந்து தருகின்றேன் உரித்துக்கு வாக்களியுங்கள் என்று ஆசை வார்த்தைகள் காட்டி இருப்பையே அழிக்கும் முயற்சிக்கு முண்டு கொடுக்கிறார்கள்.

உரித்துக்கு பின்பு தான் அபிவிருத்தி என்கிறார்கள் . உயிர் போன பின்பு உங்கள் உரித்து யாருக்கு ? இப்படியே சொல்லி மக்களை நிரந்தர அடிமையாக்கி அதில் அவர்கள் குளிர்காய முயற்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசுகள் இந்த மண்ணில் இல்லை. அதனால் அவர்கள் எதையும் பேசலாம் ஆனால் உங்கள் குழைந்தைகள் நாளை பள்ளி படிப்பை முடித்து விட்டு வேலை வாய்ப்புக்காக வீதிக்கு வரவேண்டுமா? அல்லது உங்களைப்போல் தினக்கூலிகளாகவும் , வயலிலும், கடலிலும் அலையவேண்டுமா? சாத்தியம் இல்லாத "அரசியல் தீர்வு" என்ற வசனத்தனை வைத்து எத்தனை காலம் ஏமாற்றுவார்கள் ? நீங்களும் எத்தனை காலம் ஏமாறப்போகின்றீர்கள் ?

உங்கள் பிள்ளைகளும் அரச சேவையில் இணைந்து தனது வாழ்வை வளப்படுத்துவதை உங்கள் வாக்குகள் மூலம் நாசமாக்கப்போகின்றீர்களா? உணர்சிக்கு அடிமைப்படாமல் நிதானமாக சிந்தித்து " அபிவிருத்தி ஊடாகவே அரசியல் தீர்வு " சாத்தியம் என்பதை புரிந்து வாக்களிக்க முயற்சி செய்யுங்கள்.

22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த நேரத்தில் புடுங்க முடியாததை ஐயா விக்கி 2அல்லது3 ஆசனங்களை எடுத்து சாதிக்கப் போகின்றாராம். அதை நம்பி உங்களை வாக்களிக்கட்டாம். கேட்பவன் கேணையன் என்றால் எருமையில் நெய் வடிகின்றது என்பது போல் உள்ளது. 5 வருடங்கள் மாகாண சபையில் எதையும் புடுங்கவில்லை பாராளுமன்றம் போய் தான் புடுங்கப்போகின்றாராம். மாகாண சபைக்கு வந்த நிதிகளை திருப்பி அனுப்பினார் என்று பிரதமரே குற்றம் சாட்டுகிறார் . இவர் இல்லை என்கிறார் மாகாண சபை எதிர்கட்சி தலைவர் அதனை நான் நிருபிப்பேன் பகிரங்க விவாதத்திற்கு தயாரா என்கிறார். ஆனால் ஐயா அதற்கு மழுப்புகிறார். மொத்தத்தில் மக்கள் முட்டாள் என்று நினைக்கிறார். இதற்கு சில அல்லக்கைகள் ஒத்து ஊதி அடுத்த தலைவர் என்ற கொக்கரிக்கிறார்கள்.

இப்போது நான் பகிரங்கமாக கேட்கின்றேன் யாழ்ப்பாணத்தில் 200மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்ட உப்பு தொழில் சாலைக்கு அனுமதி இரண்டு தடவைகள் திருப்பி அனுப்பப்பட்ட பின்பு மூன்றாவது தடவை எவ்வாறு அனுமதி வழங்கினார் என்று சொல்லமுடியுமா? மூலப் பொருள் மட்டுமே இங்கு இருந்து சுரண்டப்பட்டு தெற்கில் பொதி செய்யப்படுகின்றது இதனால் வடக்கு அடையும் லாபம் என்ன ? தெற்கு அடையும் லாபம் என்ன என்று பகிரங்கமாக ஐயாவால் சொல்ல முடியுமா ?

மற்றுமோர் கூட்டம் போராட்ட காலங்களில் கருவா தோட்டத்தில் ஒழிந்து விளையாடி விட்டு, இப்போது போராட்டத்தில் பல வலிகளை சுமந்தவர்களை துரோகி என்கிறார்கள் . ஏன் உங்கள் வயது இளைஞர்கள் தானே அப்போது ஆயுதம் ஏந்தினார்கள். அப்போது உங்களுக்கு வராத உணர்வு இப்போது எங்கு இருந்து வந்தது? வாய்ச்சொல் வீரர்கள் இவர்கள்.

இன உணர்வுடன் போராட புறப்பட்டவர்களை குடும்ப வறுமை காரணமாகவே இயக்கத்தில் இணைந்தார்கள் என்று பொது வெளியில் விடுதலை உணர்வை ஏலம் போட்டு விற்றுவிட்டு தாங்கள் தான் அடுத்த தேசிய தலைவர்களாம். போராட்ட வாடையே தெரியாத இவர்கள் எல்லாம் போராட்டத்தில் பல இழப்புக்களையும் , வலிகளையும் சுமந்தவர்களை பார்த்து துரோகி என்பதும் ஒட்டு குழு என்பதும் வேடிக்கை. உண்மையில் போராட்டத்தை விற்றுப் பிழைக்கும் இவர்கள் தான் உண்மையான துரோகிகளும் ஒட்டுக்குழுக்களும்.

அன்பார்ந்த மக்களே இனி வரும் காலங்களிலாவது உணர்ச்சி வசனங்களுக்கு மயங்காமல் நிதானமாக சிந்தித்து , உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு " அபிவிருத்தி ஊடாகவே அரசியல் தீர்வை " அடையாளம் என்ற நம்பிக்கையுடன் அன்னிய சக்திகளுக்கு விலை போகாமல் நிதானமாக சிந்தித்து வாக்களியுங்கள்.

" என்றும் வலி சுமந்த மக்களுடன் நாம்"

நன்றி...

Sham varathan
VISION6.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com