Saturday, March 21, 2020

வடமாகாண எல்லைகள் உடனடியாக மூடப்பட்டு உள்வருவோர் மற்றும் வெளிச் செல்வோர் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

வடமாகாண எல்லைகள் அனைத்தும் மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும், வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் குறித்த தாக்கத்திற்குள்ளாகியதாக எவரும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் அவ்வாறனவர்களை இனம்காண்பதற்கான வசதிகள் இங்கு உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. குறிப்பாக அதிகமானோர் பாதிக்கப்பட்டால் அவர்களை பராமரிக்ககூடிய அதிதீவிர பிரிவின் கட்டில்கள் வடக்கில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

வடக்கில் யாழ் வைத்தியசாலையில் 13 கட்டில்களும் வவுனியா வைத்தியசாலையில் 4 கட்டில்களும் முல்லைதீவில் 2, கிளிநொச்சியில் 3 என மொத்தம் 22 கட்டில்களே இங்கு இருக்கின்றது. அவையும் பாவனையில் உள்ளது. இப்படியான சூழலில் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டால் எப்படி மக்களை காப்பாற்ற போகின்றோம் என்பது இங்கு பாரிய பிரச்சினை.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை இனம் காணக்கூடிய பிசிஆர் என்ற இயந்திரம் வடக்கில் எங்கும் இல்லை. எனவே வவுனியா மற்றும் யாழ் வைத்தியசாலைகளிற்கு அந்த வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com