Tuesday, February 11, 2020

நளீமியாவைப் போட்டுக்கொடுத்தாராம் ஜமாஅத்தே இஸ்லாமித் தலைவர்!

இலங்கையிலுள்ள முதலாவது அறபுக் கலாபீடமான ஜாமிய்யா நளீமிய்யா பேருவளையில் அமைந்துள்ளது. அது எண்பதாம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இயங்கி வருகின்றது என, உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்துதல் தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற ஜனாபதி ஆணைக்குழு முன் சாட்சியளிக்கும்போது ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்ட குறிப்பிட்ட தலைவர், தான் 1976 ஆண்டு தொடக்கம் தொடர்ந்து 06 வருடங்கள் அந்தக் கலாபீடத்தில் கற்றதாகவும், குறித்த இயக்கத்தின் தலைமையை கடந்த 24 ஆண்டுகளாக ஏற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு விடயங்கள் தொடர்பில் பல 'உண்மைகள்' வெளியிட்டுள்ள குறிப்பிட்ட அமைப்பின் தலைவர், மாவனல்லையில் புத்தர் சிலையை உடைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட, கடந்த உயிர்த்த ஞாயிறன்று தாமும் தற்கொலை செய்துகொள்வதற்குத் தயார் நிலையில் நின்ற சாஹித் மற்றும் ஸாதிக் இருவரினதும் தந்தையான இப்ராஹீம் மெளலவி என்பவர் கூட இந்தக் கலாபீடத்தில்தான் கல்வி கற்றார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தக் கலாபீடத்தில் கற்பிக்கப்படுவை ஷரீஆ சம்பந்தப்பட்ட விடயங்கள் என்றும், அந்தச் சட்டங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானவை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், மத்ரஸாக்கள் சிலவற்றில் இவ்வாறான விடயங்கள் கற்பிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜாமியா நளீமியாவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமன்றி மேலைத்தேய நாடுகளிலிருந்தும் பணம் பெருமளவு வருவதாகவும், நளீமியாவுக்கு ஆதரவானவர்கள் வெளிநாடுகளிலிருந்தும் பணம் அனுப்பிவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவரது இந்தக் கூற்றுக்கள் முஸ்லிம்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மீது ஆதரவு செலுத்தியவர்கள் கூட அதிலிருந்தும் நழுவுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனத் தெரியவருகின்றது.

பின்னிணைப்பு:

மேலும், ஜாமிய்யா நளீமிய்யாவுக்குச் சேறு பூசும் வகையில் இந்தச் செய்தி சிங்கள ஊடகத்தில் வெளியாயிருக்கின்றது எனவும், இதில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் பெரும்பாலானோர் இலங்கைநெற்றை தொடர்பு கொண்டு கருத்துத் தெரிவித்தனர். எதுஎவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அறபுக் கலாபீடங்களில் ஒன்றான ஜாமிய்யா நளீமிய்யா நாளுக்கு நாள் புகழ்பெற்று வருகின்றது என்பது வெள்ளிடை மலை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com