Sunday, February 16, 2020

எலிக்கு மரணம்; பூனைக்கு விளையாட்டு. வை எல் எஸ் ஹமீட்

சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரிவிக்கும் மக்கள் ஒரு புறம். அரசியல் பாராட்டுக்கள்; என கலகலக்கிறது. இதனைவிடவும் விரிவாக கொண்டாடினாலும் தப்பில்லை; அடுத்த ஊருக்கு அது அநியாயமில்லாமல் இருந்தால்.

இனரீதியாக பிரிக்கப்படக்கூடாது; என நம்மவர்கள் தெரிவித்த கருத்தை பிரதமரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. எல்லை நிர்ணயக்குழு ஒன்றை அமைத்து ஏனைய மூன்று சபைகளையும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பிரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கு எழுகின்ற முதலாவது கேள்வி; அவ்வாறு மூன்று மாதங்களில் அவற்றைப் பிரிக்க முடியுமானால் ஏன் அந்த மூன்று மாதங்கள் தாமதித்து நான்கு சபைகளையும் ஏககாலத்தில் பிரிக்கமுடியாமல் போனது?

சாய்ந்தமருதுக்கான வர்த்தமானி தற்போது வெளியானாலும் 2022ம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும். அப்போது நான்கு சபைகளும் உருவாகிவிடும். கல்முனை பாதிக்கப்படாது; என்று சாய்ந்தமருது பள்ளித்தலைவர் கூறியதாக ஒரு செய்தி வாசிக்கக்கிடைத்தது.

2022இல் தான் தேர்தல் நடைபெறும். பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பேசி ஒரே சமயத்தில் தீருங்கள்; என்றபோது இல்லை; எங்களுக்கு இப்போதே வேண்டுமென்றவர்கள், இப்பொழுது எமக்கு சபை கிடைத்தாலும் 2022இல் தான் நடைமுறைக்குவரும். உங்களுடைய பிரச்சினையும் தீர்ந்துவிடும்; என ஆறுதல் கூறுகிறார்கள்.

ஆபத்து

இனரீதியாக பிரிப்பதில்லை என்றால் எதற்காக எல்லை நிர்ணயக்குழு? 1987 இல் இருந்த நான்கு சபைகளையும் ஒரே நேரத்தில் ஏன் பிரிக்கமுடியாது.

கல்முனையில் இருக்கின்ற எல்லைப் பிரச்சினை என்ன?

கல்முனையை தமிழர்கள் நிர்வாகரீதியாக துண்டாடச் சொல்கிறார்கள். எந்த இடத்தால் துண்டாடுவது? எனத்தீர்மானிப்பதற்கே எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்படுகிறது.

கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினரும் இவ்வளவு காலமும் சாய்ந்தமருதுக்கு தனியாக சபை வழங்குவதை எதிர்த்து அண்மையில் பிரதமருடன் நடந்த கூட்டத்தில் அதை வழங்குவதற்கும் ஏனைய மூன்று சபைகளையும் எல்லை நிர்ணயக்குழு அமைத்து பிரிப்பதற்கும் உடன்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்பொருள் கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனையைத் துண்டாட உடன்பட்டிருக்கின்றார்; என்பதாகும். எந்த இடத்தால் துண்டாடுவது என்பது மாத்திரம்தான் கேள்வியாகும்.

அதாவுல்லாவின் நான்காகப் பிரிப்பு

சகோ அதாவுல்லா, தான் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தபோது கல்முனையை நான்காகப் பிரிக்க முற்பட்டதாகவும் அதனை கல்முனைப் பள்ளிவாசல் எதிர்த்ததன் காராணமாக கைவிடப்பட்டதாகவும் ஒரு கூற்று இருக்கின்றது.

அன்று கல்முனைப் பள்ளிவாசல் அதனை எதிர்த்ததற்கான காரணம் அதாவுல்லா, வாடிவீட்டு வீதியால் கல்முனையை பிரிக்க எத்தனிக்கின்றார்; என்பதாகும். இன்றும் அதாவுல்லா அதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாக அவருடன் இது தொடர்பாக பேசியவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இங்கு நாம் எழுப்பவேண்டிய கேள்வி, இனரீதியாக பிரிப்பதில்லை; என்பது அரசின் நிலைப்பாடு என்றால் கல்முனையை இனரீதியாக துண்டாடுவதற்கு எதற்கு எல்லை நிர்ணயக்குழு?

இலங்கையில் எந்தவொரு நகரமாவது இதுவரை இரண்டாகத் துண்டாடப்பட்டு இரு சமூகங்களுக்கு நிர்வாகரீதியாக பிரித்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றதா? கல்முனைக்குமட்டும் ஏன் இந்த தலைவிதி?

சாய்ந்தமருதிற்கு 1987 இற்கு முன்பிருந்த தனது கிராமசபையைக் கேட்பதற்கு உரிமையிருந்தால் அதை அரசியல்வாதிகளும் மற்றோரும் நியாயமாக காணும்போது கல்முனை தனது பட்டினசபையைக் கேட்பதில் என்ன தவறு? கல்முனை மட்டும் எதற்காகத் துண்டாடவேண்டும்?

எல்லை நிர்ணயக்குழு தீர்வுகாணுமா?

தமிழர்கள் கடற்கரைப்பள்ளி வீதியால் - அதாவது மொத்த வர்த்தக நகரத்தையும்- துண்டாடக்கேட்கிறார்கள். அதாவுல்லா வாடிவீட்டு வீதியால்- அதாவது பாதி நகரத்தை- கல்முனையில் அமைந்துள்ள அனைத்து பிரதான அரச அலுவலகங்களையும் உள்ளடக்கிய பிரதேசத்தை தமிழருக்கு தாரைவார்த்து கல்முனைக்கும் தனியான சபை வழங்கியதாக பெயர் எடுக்கலாம்; என நினைக்கிறார்.

கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினருக்கோ தனது பிரச்சினையை எந்தவொரு சபையிலும் முன்வைத்து தெளிவுபடுத்த முடியாதநிலை: கடந்த நல்லாட்சி அரசில் தமிழர்களின் பக்கமே நியாயமிருக்கிறது பிரதேச செயலக விடயத்தில்- என்ற அபிப்பிராயமே இருந்தது. முஸ்லிம் தரப்பு நியாயம் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.

எல்லைப் பிரச்சினை இருக்கிறது. எல்லை நிர்ணயக்குழு போடுங்கள். இவ்வளவுதான் சொல்லத் தெரிந்தது. எதற்காக எல்லை நிர்ணயக்குழு?

கல்முனையில் சபை இருக்கிறது. செயலகம் இருக்கிறது. இலங்கையில் எங்கும் ஒரு நகரம் இனரீதியாக துண்டாடப்பட்டு இரு சமூகங்களுக்கு கொடுக்கப்பட்ட வரலாறு இல்லை. எனவே, கல்முனையைத் தனியாக விட்டுவிட்டு சபை மற்றும் செயலகம் இல்லாத ஊர்களுக்கு கொடுங்கள்; என்று பேச, அதற்குரிய நியாயங்களை முன்வைக்கத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் சாயந்தமருது வர்த்தமானி தாமதிக்கப்பட்டதே தவிர, வேறு தடை இருக்கவில்லை. இப்பொழுது நடந்திருப்பதென்ன?

கல்முனைக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. அது கல்முனையின் பிரச்சினை. எங்களுக்கு உடனடியாக சபை வேண்டும். என்பது சாய்ந்தமருதின் நிலைப்பாடு. ஏதோ பெரிய ஆபத்தில் சாய்ந்தமருது இருப்பதுபோலவும் இந்த சபை கிடைத்தால் அது நீங்கிவிடும்போலவும் அவர்களது அவசரம் இருக்கிறது. சற்றுப் பொறுத்து கல்முனையையும் பாதுகாத்துக்கொண்டு அந்த சபையை ஏக காலத்தில் பெற்றிருக்கமுடியாதா?

அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. ஏதோ சாய்ந்தமருது ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் போலவும் கல்முனை இன்னுமொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போலவும் கோசமெழுப்பினார்கள்.

அன்று பண்டாரநாயக எவ்வாறு வாக்குகளுக்காக இந்நாட்டில் இனவாதத்தை விதைத்து இந்நாட்டின் சீரழிவுக்கு காரணமாக அமைந்தாரோ அதேபோன்று தனது தேர்தல் வாக்குகளுக்காக அதாவுல்லா கல்முனையை ஆபத்திற்குள் தள்ளி சாதனை செய்திருக்கின்றார். அதனை அறிவாளிகள் வாழ்த்துகிறார்கள் .

நடக்கப்போவதென்ன? தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எல்லை விடயத்தில் உடன்பாடு எட்டப்போவதில்லை. தீர்வு-ஒன்றில் கல்முனையில் பாதியை இழந்து தீர்வுகாணவேண்டும். அல்லது தீர்வே இல்லாமல் 2022ம் ஆண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும்.

அடுத்த தேர்தல் பெரும்பாலும் பழைய முறையிலேயே நடக்க வாய்ப்பு அதிகம். இந்தத் தேர்தல் முறையை எந்தக் கட்சியும் விரும்பவில்லை. அவ்வாறு நடந்தால் நம்மவர்கள் முப்பது கட்சிகளாகப் பிரிவார்கள்.

குறிப்பாக, அருகே இருக்கின்ற, திருமணங்களால் பின்னிப்பிணைந்த சாய்ந்தமருதுக்கே கல்முனைக்கு எது நடந்தாலும் கவலையில்லை; எனும் மனோநிலை இருக்கும்போது மருதமுனை, நற்பிட்டிமுனை கல்முனையைப் பாதுகாக்கும் கோணத்தில் வாக்களிப்பார்கள்; என எதிர்பார்க்கலாமா? அது நியாயமா?

அதேநேரம் தமிழர்கள் அவ்வாறான சூழ்நிலையில் கண்டிப்பாக ஒன்றிணைவார்கள். ஒரு வாக்கு அதிகமாக பெறும் கட்சி ஆட்சிக்குவரும். அந்நிலையில் தமிழர் ஒருவர் மேயரானால் அத்துடன் முடிந்தது கல்முனையின் அத்தியாயம்.

மார்க்கட்டில் வாடகை கட்டாமல் பாக்கி இருப்பவர்களை வெளியே போட்டுவிட்டு அவற்றைத் தமிழர்களுக்கு வழங்கலாம். கடையாக இல்லாமல் pavement வியாபாரம் செய்பவர்களை எழுப்பிவிட்டு அவற்றை பின்னர் தமிழர்களுக்கு வழங்கலாம்.

ஒரு வருடம்கூடத் தேவைப்படாது கல்முனை மார்க்கட்டில் பாதியை இழப்பதற்கு. அதேபோன்று அந்தக்காலத்தில் அனுமதி பெற்று யாரும் கடைகள் கட்டும் நடைமுறை பெரிதாக இருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் விரும்பிய கடைகளை உடைத்தெறியலாம்.

இவ்வாறான ஆபத்தான நிலைமைக்கு கல்முனையைத் தள்ளிவிட்டு விழாக்காணுகின்றார்கள்.

அதேநேரம் கல்முனை தூங்கிக்கொண்டிருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினரின் அனுமதியில்லாமல் பள்ளித்தலைவர் ஒரு கூட்டத்தைக்கூட கூட்டமாட்டார்; என்கிறார்கள். அதை உண்மையாக்கியதுபோன்று இம்முறை எந்தக்கூட்டமும் கூட்டப்படவில்லை.

கவலையாக இருக்கிறது.

எலிக்கு மரணம்; பூனைக்கு விளையாட்டு; என்பார்கள். அதுபோல் பூனை விழாவும் பாராட்டும் கொண்டாட்டமுமாக இருக்கிறது. எலி தனது ஆபத்துக்கூட புரியாமல் உலாத்துகிறது.

கவலைப்படுவதையும் பிரார்த்திப்பதையும் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com