Monday, February 3, 2020

மைத்திரிபால சிறிசேனவை சூழ்கின்றது கருமேகம்.. குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வீயூகம்..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவின் எதிர்கால அரசியல் கனவுவை கலைத்து அவரை கருமேகம் ஒன்று சூழ்வதை அவதானிக்க முடிகின்றது. அந்த கருமேகம் யாரும் எதிர்பாராக திசையிலிருந்து அவரை சூழ்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அத்தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரிந்திருந்தும் அதனை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அன்றைய பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி கட்டாய விடுமுறையில் அனுப்பியிருந்தார்.

தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையானது அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் பெயரிட உயர்நீதிமன்றம் இன்று (03) அனுமதி வழங்கியுள்ளது.

பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரர் தரப்பினர் மற்றும் சட்டமா அதிபர் சமர்ப்பித்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் குறித்த மனு விசாரணைகளை எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதேபோல், மனுதாரர் தரப்பினர் சமர்ப்பித்த மற்றுமொரு கோரிக்கையை ஏற்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் பெயரிட அனுமதி வழங்கினர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பினை மீறி தனக்கு கட்டாய விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்திருந்ததாக பூஜித் ஜயசுந்தர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான அதிகாரம் இலங்கையின் அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என்றும் , தனக்கு இவ்வாறு கட்டாய விடுமுறை வழங்க அரசியலமைப்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் பூஜித் ஜயசுந்தர தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இதனூடாக அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பொன்றை வழங்குமாறு தனது மனுவின் மூலம் கோரியுள்ளார்.

அதேபோல், தனக்கு மீண்டும் பொலிஸ்மா அதிபர் பதவியில் செயற்பட முடியும் என உத்தரவொன்றையும் பிறப்பிக்குமாறு பூஜித் ஜயசுந்தர தனது மனுவில் மேலும் கோரியுள்ளார்.

இதேநேரம் அரசியல் ரீதியாக மைத்திரிக்கு ஆப்பு வைப்பதற்கு சுதந்திரக் கட்சியினுள்ளிருந்தே ஆட்கள் கிளம்பியுள்ளனர். அமைக்கப்படவுள்ள கூட்டணியில் சம அந்தஸ்து மட்டுமன்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட மைத்திரிக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுஜன முன்னனி சார்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அம்மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள பலரும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நிலைப்பாட்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது அதனை முன்கூட்டியே அறிந்தும் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது உள்ள நிலையில் அவருக்கு தமது கூட்டணியில் போட்டியிட அனுமதி வழங்கமுடியாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருவதாக உள்வீட்டு செய்திகள் தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com