Monday, February 3, 2020

விடுதலைப் புலிகள் பேரவையுடன் இணையமாட்டோம்! இன்னுமொரு புலிக்கட்சி அதிரடி அறிவிப்பு.

எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இப்பேரவையில் புலிகளமைப்பை சேர்ந்த சிதறிக்கிடக்கும் உதிரி அமைப்புக்கள் யாவும் ஒன்றிணைவது என்ற முவுக்கு வந்துள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் தாம் இணைந்து செயற்படப்போவதில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், 'புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் நிர்வாகக்குழு, ஆலோசனைக் குழு, செயற்குழு கூடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்கள்.

கடந்த ஜனவரி 11ஆம் திகதி உருவாக்கப்பட்ட போராளிகள் ஒன்றிணைவோம் என்று வவுனியாவில் போராளிகள் கட்சிகள் ஒன்றிணைவு நடைபெற்றுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியும் கலந்து கொண்டிருந்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு போராளிகளின் கட்சிகள் ஒன்று கூடி தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்கள்.

இந்தக் குழு தலைமைத்துவம் இல்லாத ஒரு கூட்டுக்குழுவாக கூட்டுத் தலைமையாக நிர்வாகத்தில் இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. முக்கிய நோக்கமாக போராளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுத்தேர்தலில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்டது.

இதனை விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை என்று சொல்லி உருவாக்கினார்கள். அதில் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை என்ற கட்சிதான் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னரே நாங்கள் இந்த கூட்டில் இருந்து விலகிக்கொள்வதாக முடிவெடுத்துள்ளோம்.

இனிவரும் காலம் நடக்கப்போகும் பொதுத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் தனித்துவமாக நின்று போட்டியிடுவதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்கள் அனைவரும் சிந்தித்து கட்சிக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை என உருவாக்கப்பட்டுள்ள அமைப்பான கடந்த வாரம் மட்டக்களப்பில் கருணாவை சந்தித்து அவர்கள் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்வதென்றும் கருணாவின் அம்பாறை தேர்தல் போட்டிகளில் உதவி புரிவது என்றும் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com