Friday, February 21, 2020

யாழ் உயர் சாதியினர் பிரபாகரனின் பயத்தால் என்னுடன் பழக பயந்தபோது மட்டு மீனவர்களும் விவசாயிகளும் உணவும் உறைவிடமும் கொடுத்து என்னை பராமரித்தனர். உமா மகேஸ்வரன்.

பிரபாகரனுடன் முரண்பட்டபோது யாழ்பாணத்து உயர்சாதியினரும் தனது உறவினர்களும் பிரபாகரன் மீதான பயம்காரணமாக தன்னுடன் பழக பயந்தபோது, மட்டக்களப்பு மீனவர்களும் விவசாயிகளும் தனக்கு உணவும் , உறைவிடமும் கொடுத்து பராமரித்தாகவும் , அப்போதே தனது மாக்ஸிசம் மீதான நம்பிக்கை உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், அதே இயக்கத்தால் கொலைசெய்யப்பட்ட தலைவர் உமா மகேஸ்வரன்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி , அவரது பிறந்த தினத்தை நினைவு கூரும்பொருட்டு, எண்பதுகளில் அவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி கந்தப்பா (Shirley Candappa) அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையான Uma Maheswaran A MAN WHO CHANGED THE COURSE OF SRILANKA’S ETHNIC CONFLICT என்னும் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

18.02.2019 அன்று Daily Mirror பத்திரிகையில் வெளியான இக்கட்டுரை வ.கி கிரிதரன் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய ஆளுமைகள் : வேலுப்பிள்ளை பிரபாகரன் (தமிழீழ விடுதலைப்புலிகள்) , உமா மகேஸ்வரன் (தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்) , நா.பத்மநாபா (ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணி), சிறி சபாரத்தினம் (டெலோ), வே.பாலகுமார் (ஈரோஸ்). அனைவருமே அவர்கள்தம் குறை , நிறைகளுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். தவிர்க்க முடியாத வரலாற்று நாயகர்கள். போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் மிக அதிக அளவில் , ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்ட இயக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். அதற்கு முக்கிய காரணம் அதன் செயலதிபராக விளங்கிய உமா மகேஸ்வரன்.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் தாக்கி ஒளிந்தோடும் கெரில்லா யுத்தத்தந்திரத்தைக் கடைப்பிடித்தபோது அதற்கு மாற்றீடாக அவ்வகையான யுத்த தந்திரத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து , பரந்து பட்டரீதியில் இலங்கையில் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்திய இயக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்.அதனால்தான் அதில் சிங்கள இளைஞர்களும் நூற்றுக்கணக்கில் இணைந்திருந்தார்கள், குறைந்தது நானூறுக்கும் அதிகமாகவாது இணைந்திருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். சரியான எண்ணிக்கை தெரிந்தவர்கள் அறியத்தரவும். இந்தியாவில் தங்கியிருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை முன் கூட்டியே எச்சரித்த இயக்கம் தமிழீழமக்கள் விடுதலைககழகம். இருந்தும் அதன் உட்கட்சி மோதல்களால், ஒன்றிணைந்த பெருந்தாக்குதல் என்னும் அதன் திட்டம் சீர்குலைந்து போனதால் , பெருந்தொகையான் அதன் ஆயுதங்கள் இந்திய் அரசினால் கைப்பற்றப்பட்டதால், விடுதலைப்புலிகளுடனான பகை முரண்பாடுகளினால் பின்னர் சீர்குலைந்தது. ஆனால் இன்றும் இலங்கையில் தமிழ் இயக்கத்தலைவர் ஒருவரின் பெயரில் வீதி இருக்கிறதென்றால் அது உமாமகேஸ்வரனுக்குத்தானுள்ளது. வவுனியாவில் உமாமகேஸ்வரன் வீதி என்றொரு வீதி உள்ளது. இன்றும் தமிழ் இயக்கத்தலைவர் ஒருவர் பெயரால் அவராதரவாளர்களால் அறக்கட்டளை நிறுவப்பட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றதென்றால் அது உமாமகேஸ்வரனுக்குத்தான். அதற்குக் காரணம் உமாகேஸ்வரனின் வசீகரம் மிக்க ஆளுமைதான்.

விடுதலைப்புலிகளின் தலைவரைப்பொறுத்தவரையில் அவர் இறுதிவரை போராட்டத்தை நடத்தி இறுதியில் தன் குடும்பத்தவருடன் அதற்காகவே மடிந்து போனவர். அவரது கொள்கையில் தளராத உறுதி காரணமாக , போராட்டம் காரணமாக உலகத்தமிழர்கள் பலரால் நன்கறியப்பட்டவர். நினைவுகூரப்படுபவர். அதே சமயம் ஏனைய இயக்கத்தலைவர்களும் அவர்களது வரலாற்றுப் பங்களிப்பு காரணமாகப் புறக்கணிக்கப்பட முடியாதவர்கள். நினைவு கூரப்படுபவர்கள்.

இன்று தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் கடந்த கால வரலாறு. அது அதன் குறை, நிறைகளுடன் ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டியது. மக்கள் மீது புரியப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் இலங்கைத்தமிழ் மக்கள் திரண்டெழுந்து ஆயுதங்களைக் கைகளிலேந்தினார்கள் என்பது சாதாரணமான விடயமல்ல. புரட்சிகரமானது. புனிதமானது.

இன்று இன்னுமொரு காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள், இலங்கை மக்கள் அனைவருமிருக்கின்றார்கள். கடந்த காலத்தவறுகளிலிருந்து, மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக , சமாதானமாக, சகல உரிமைகளுடன் வாழும் நிலையினை இலங்கையின் அரசும், அரசியல் தலைவர்களும் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்ப்போம். அதற்காக அனைத்துப்பிரிவினரும் அமைதியான வழிகளில் , அரசியல்ரீதியில் போராடுவது, செயற்படுவது அவசியமானது. ]

உமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்! - ஷேர்லி கந்தப்பா (ஆங்கிலம்) | தமிழ்: வ.ந.கிரிதரன்

பெப்ருவரி 18 உமா மகேஸ்வரனின் வருடாந்த நினைவுதினமாகும். உமா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகத்தலைவர், 18.2.1945 அன்று பிறந்தார். கோழைத்தனம்மிக்க கொலையாளி ஒருவனின் குண்டினால் 16.7.1989 அன்று அவர் , பம்பலப்பிட்டியாவிலுள்ள ஃப்ராங்பேர்ட் பிளேஸில் கொல்லப்பட்டார்.

நான் முதன் முறையாக உமாவை அறிந்தது 1977 பொதுத்தேர்தலையடுத்து, வடக்கில் அகதி முகாம்களை அமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளில் ஒருவராகவே. அன்றைய பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பொருளாதாரத்தைத் தனியுடமை ஆக்குவதற்கான தனது திட்டங்களைச் சீர்குலைக்கக்கூடிய தனது எதிரிகளை அடக்குவதற்காகவும், அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களுக்கெதிராகவும், மலையகத்தமிழர்களுக்கு எதிராகவும் கூடக் குண்டர்களை ஏவி விட்டார்.

அப்பொழுது நான் தேசிய கிறிஸ்தவ சபையின் அபிவிருத்தி ஆணைக்குழுவின் செயலாளராகவிருந்தேன். அரசாங்க ஒத்துழைப்பால் உருவான இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு , இடம் பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான திட்ட உருவாக்கத்துக்கு உதவுவது என்னுடைய பணி. சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்களில் பலர் மலையகத்தமிழர்கள். மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அத்துடன் நூற்றாண்டுக்கும் அதிகமாகக் கடுமையாக உழைத்த தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

தமிழிழ மக்கள் விடுதலைக்கழகத்துக்காக கருத்துகளை வெளியிடும் பேச்சாளரான ஸ்கந்தா அவர்களின் கூற்றின்படி உமாவைக் கொன்ற சூத்திரதாரி கழகத்துக்குத் தெரிந்தவராக இருந்தபோதும், கொலையின் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும், உமாவின் கொலைக்குத் திட்டமிட்ட, பின்னாலிருந்த சூத்திரதாரிகள் யாரென்பது தெளிவாகத்தெரியவில்லை. கொலைக்கு உரிமை கோரிய , கழகத்திலிருந்து பிரிந்த குழுவான பரந்தன் ராஜனின் குழுவினரின் கோரிக்கையினை அவர் நிராகரித்திருந்தார். ராஜனும் அவரது குழுவினரும் இந்திய உளவுத்துறையினால் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் உமாவின் கொலைக்கு உரிமை கோரியதற்குக் காரணம் அவ்விதம் கூறும்படி இந்திய உளவுத்துறை அவர்களை வேண்டியதனாலிருக்கக்கூடும்.

உமாவின் மரணத்தின்போது இலங்கையில் நிச்சயமற்ற , பதட்டமான , உறுதியற்ற நிலை இருந்தது என அவர் மேலும் கூறினார். நாட்டின் வடகிழக்கு இந்திய இராணுவத்தின் (இந்திய அமைதி காக்கும் படை என்னும் பெயரைக்கொண்ட இந்திய இராணுவத்தின், முழுமையான கட்டுப்பாட்டிலிருந்தது. இலங்கை இராணுவமானது ஜெயவர்த்தனேயின் அரசானது தயக்கத்துடன் கைச்சாத்திட்டிருந்த இந்தியாவுடனான உடன்படிக்கையின் சரத்துகளின்படி முகாம்களிலேயே எவ்வித உதவியுமற்று முடங்கிக்கிடந்தது.

நாட்டில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை எப்பொழுதுமே எதிர்த்து வந்த ஜனாதிபதி பிரேமதாசா இக்கட்டான நிலையிலிருந்தார். அவர் ஏற்கனவே இந்தியாவை விடுதலைப்புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த அமைதிப்படையினரை வெளியேற்றுமாறு இந்தியாவைக் கேட்டிருந்தார். அக்காலகட்டத்தில் ஜேவிபியானது தனது இரண்டாவது போர்முனையினைத் தனது தெற்குக்கிளர்ச்சி மூலம் திறந்திருந்தது. அவரவர் இடங்களில் பொதுமக்களின் ஆதரவினைப்பெற்றிருந்த விடுதலைப்புலிகளுக்கெதிராகவும், ஜேவிபிக்கெதிராகவும் , இரு முனைகளில் ஒரே சமயத்தில் போரிட முடியாது என்பதைப் பிரேமதாசா உணர்ந்திருந்தார். ஜேவிபி கழகத்துடன் தொடர்பிலிருந்ததையும் தனது உளவுத்துறையின் மூலம் அவர் அறிந்திருந்தார்.

சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்கத்தின்மேல் அடக்குமுறையினைப் பிரயோகிக்கும் அமைப்பினை மாற்றி, அதனிடத்தில் மக்கள் அரசினை ஸ்தாபிப்பதற்கு சிங்கள , தமிழ் உழைக்கும் வர்க்கத்துக்கிடையிலான ஒற்றுமை அவசியமென்பதை உமா எப்பொழுதுமே நம்பியிருந்தார். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்ப காலத்தில்கூட அவர் இந்தியத் தலையீட்டின் ஆபத்துகள் பற்றி எடுத்துரைத்திருந்தார்.

இதனை அவர் பங்களாதேஷ் தந்த படிப்பினைகள் என்னும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முதலாவது ஆவணங்களொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இலங்கையின் முதலாவது தலைமறைவு வானொலியான தமிழீழத்தின் குரல் என்னும் வானொலியினைத் தமிழ், சிங்கள, மற்றும் ஆங்கில மொழிகளில் , முதலாளித்துவ அமைப்பினை அனைத்துப்பகுதி மக்களும் பொதுவேலைத்திட்டத்தில் இயங்கி முறியடிப்பதற்கு விளக்கமளிப்பதற்கான வழிகளிலொன்றாக அவர் ஒழுங்கமைத்து செயற்படுத்தியிருந்தார். உள்வாங்கப்படும் போராளிகளைத் தமிழ் தேசியவாதம், இனவாதம் போன்றவற்றிலிருந்து மீட்பதற்காக அவர்களுக்கு மார்க்சியம் போதிப்பதற்காகத் தனியான கல்வி நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தது. திருமதி குமாரதுங்க உமாவின் சென்னை காரியாலயத்துக்கு விஜயம் செய்தபோது அவ்வகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்குத் தனது பாராட்டினைத்தெரிவித்திருந்தார். உமா சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவுடனும் தொடர்புகொண்டிருந்தார். அத்துடன் றோஸ்மண்ட் பலஸிலிருந்த அவரது இருப்பிடத்தில், இந்திய அமைதி காக்கும் படை தீவினுள் வந்தடைந்த பின்னர், டி.சிவாராம் மற்றும் என்னுடன் மரியாதை நிமித்தம் சென்று சந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் விஜயகுமாரதுங்க, நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதியாகப்பின்னர் உருவான சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரையும் சந்தித்திருக்கின்றார். அத்துடன் எல்லா மார்க்சியக் கட்சித்தலைவர்களையும் சந்தித்திருக்கின்றார். தனது வழியிலிருந்து விலகி, அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் சிங்கள வலதுசாரி அமைப்புகளின் தலைமைகளுடனும் பேச்சு வார்தைகள் நடத்தினார்.

பிரிந்து கிடந்த தமிழ் சிங்கள சமூகங்களிடையே இணக்கமான உறவினை ஏற்படுத்துவதற்காக உமாவுடன் நானும், திரு,சித்தார்த்தனும், திரு.ருக்மன் சேனநாயக்கவும் மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சென்று சந்தித்தோம் அவர்களுக்குத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நோக்கங்களையும், காரணங்களையும் விளங்கப்படுத்துவதற்காக. கிறிஸ்தவப்பாதிரிமார்கள் உமாவுக்கு தமது நன் நிமித்த ஆசிகளை வழங்கிய அதே சமயம் தமிழ் ஆயுததாரிகளின் சில அமைப்புகளின் செயல்கள் சிங்கள மக்களின் சில பகுதியினரை இனப்பிரச்சினை விடயத்தில் தீவிர எண்ணங்களை மேற்கொள்ளத் தள்ளிவிடுகின்றது என்பதையும் அறிவுறுத்தினர். அச்சமயம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவாதக்கொள்கைகள் காரணமாக திரு.சேனநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி விட்டிருந்தார். ருக்மன் ஜெயவர்த்தனாவின் பிரிக்கும் அரசியலானது நாட்டை அதன் அழிவுக்குக்கொண்டு செல்லுமென்று நம்பினார்.

உமாவின் சொல்லும், செயலும் இலங்கை மக்களுக்கு முழுமையாக ஆதரவானது. இந்தியாவானது நாம் ஒளிவதற்கான பின்வளவு என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே உமாவின் அரசியல் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளையிட்டு இந்திய அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்பது ஆச்சரியமானதொன்றல்ல. உமா இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளுடனும் , சுதந்திரக் கட்சியுடனும் தொடர்புகளைப்பேணிவருவதையும் அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். இந்திய அதிகாரிகள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆயுதங்களைக் களைந்தது அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தபோதிலும், அவர் அவ்விதம் ஆச்சரியம் அடைந்திருக்கத் தேவையில்லை. அவரது தலைமைத்துவமானது இலங்கையின் உறுதியினைச் சீர்குலைக்கும் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அப்பாவிகளை , தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களை குண்டர்களின் மூலம் தாக்குவதற்கு அனுமதியளிக்கும் ஜனநாயகம், அக்குண்டர்களைத் தண்டனையிலிருந்து காக்கும் ஜனநாயகம் ஜனநாயகமே அல்ல என்று அவர் என்னிடம் கூறினார். இது பாஸிஸ்ட் அரசு. பாஸிஸ்டுகளை எதிர்கொண்டு, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அத்துடன் மக்களைக் கட்டுப்படுத்த பாஸிசத்தைப் பாவிக்கும் அரசினை நாம் நீக்க வேண்டும்.

இக்காலகட்டத்தில்தான் உமாவின் மனமானது பெருங்கொந்தளிப்புக்குள்ளானது. விடுதலைப்போராட்டம் உருவாகுமிடத்து அதன் வழிமுறைகள் விடயத்தில் முரண்பட்ட ஆனால் முன்பே அறிந்திருந்த பிரபாகரனை அவர் அதிக அளவில் சந்திக்கத்தொடங்கினார். பிரபாகரனும் இடம்பெயர்ந்த மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்தார். பிரபாகரனுடான உமாவின் தொடர்பானது இன்னுமொரு தளத்தில் செல்லத்தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்னெடுத்துக்கொண்டிருந்த அகிம்சை வழியிலான போராட்டம் வெற்றியினைத் தரப்போவதில்லை என்னும் உறுதியான முடிவுக்கு உமா வந்திருந்தார். 1977இன் இறுதிப்பகுதியில் உமா பிரபாகரனுடன் புதிய புலிகள் என்னும் அமைப்பில் இணைந்தார். உமா புதிய புலிகளில் இணைந்த சிறிது காலத்தில் இலண்டனை உறைவிடமாகக் கொண்ட தமிழரும், ஈழப்புரட்சிகர அமைப்பின் ஸ்தாபகருமான திரு.இளையதம்பி இரத்தினசபாபதி முதலாவது ஆயுதப் பயிற்சித்திட்டத்தை ஒழுங்கமைத்தார். அத்துடன் புதிய புலிகளின் தலைவரையும் பங்குபற்றும்படி அழைப்பு விடுத்தார். தமிழில் மட்டுமே போதிய பாண்டித்தியத்தைப் பிரபாகரன் பெற்றிருந்த காரணத்தால் உமாவை அத்திட்டத்தில் பங்குபற்றும்படி ஆலோசனை வழங்கினார். அத்திட்டத்தில் பங்குபற்றுவதற்கான நெறிமுறைகள் ஆங்கிலத்தில் புலமையுள்ள , தலைமைத்துவப் பொறுப்பிலுள்ள ஒருவரை வேண்டி நின்றதால், பிரபாகரன் புதிய புலிகளின் மத்திய குழுவுக்கு உமாவைத் தலைவராக்குமாறும், அவ்வாயுதப்பயிற்சித்திட்டத்தில் பங்குபற்றுமாறும் சிபார்சு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக , உமாவின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய புலிகள் என்னும் அமைப்பின் பெயரானது தமிழீழ விடுதலைப்புலிகள் என மாற்றமடைந்தது. ஆயுதப்பயிற்சி முடிந்து திரும்பியதும் பிரபாகரனுடனான உமாவின் உறவானது பல்வேறு இடையூகளுக்குள்ளாகியது. உமாவின் கூற்றுப்படி பிரபாகரனுடனான பிளவுக்கான பிரதானமான விடயங்களாக பிரபாகரனின் அமைப்புக்குள் பிரச்சினைகளைக் கையாளும் வழிமுறை மற்றும் அமைப்பின் நிதியினைத் தவறாக, சட்டவிரோதமாகக் கையாள்பவர்கள், மது அருந்துபவர்கள் என அவர் சந்தேகிப்பவர்களுக்குக் கங்காரு-நீதிமன்றங்கள் மூலம் அவர் நீதி வழங்கும் வழிமுறை போன்றவையிருந்தன.

இப்பிளவின் இறுதி விளைவு பிரபாகரன் அமைப்பின் மூத்த உறுப்பினரும், விடுதலைப்போராட்டத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தவருமான செட்டியைக் கொன்றபோது தோன்றியது. செட்டியைக் கொன்ற பின்னரான , மத்தியக் குழுக்கூட்டத்தில் உமா பிரபாவைக் கடுமையாகக் கண்டித்தார். அத்துடன் சந்தேகத்தின்பேரில் அமைப்பின் உறுப்பினர்களைக் கொல்வதைப் பிரபாகரன் நிறுத்த வேண்டுமென்று வேண்டினார். உமாவுக்கான தனது பதிலாகப் பிரபாகரன் தனது பிஸ்டலையெடுத்து, உமாவுக்கு முன்னால் வைத்துவிட்டுக் கூறினார் பெரியவரே! நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அத்துடன் இம்மனிதன் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அமைப்பின் நிதியினை தவறாகப்பயன்படுத்திய விடயத்தில் சுற்றவாளியென்றால், இதோ எனது துப்பாக்கி.. எடுத்து என்னைச் சுடவும்..

அத்தருணத்தில் உமா தொடர்ந்தும் பிரபாவுடன் இயங்க முடியாதென்பதை உணர்ந்திருந்தாரென்பதை என்னிடம் கூறினார். அதன் பிறகே, உமா கூட்டணியினரின் இளைஞர் அமைப்பிலிருந்து இணைந்திருந்த விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்களையும், தன் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஏனைய இளைஞர்களையும் ஒரே மனதுச் சிங்கள மக்களுடனும், ஏனைய இனக்குழுக்களுடனும் ஒன்றிணைந்து நாட்டில் வளரும் இனவாதத்தை, தீவிர தேசியவாதத்தை எதிர்த்துப் போரிட இணங்கச்செய்து, உள்வாங்கிடத்தொடங்கினார்.

உமாவின் புதிய உபாயமானது பிரபாகரனால் வன்முறையாக எதிர்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தலைவராகத் தன்னால் நியமிக்கப்பட்டவரின் நோக்கம் அமைப்பை உடைப்பதாகவுள்ளது. அவர் உமாவிடம் இவ்விதமான செயற்பாடுகளை நிறுத்தும்படி வேண்டினார். அத்துடன் உமா இயக்கப்பெண் உறுப்பினருடன் இரகசியத்தொடர்பினைப் பேணி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

குற்றச்சாட்டுகளும், பதிற் குற்றச்சாட்டுகளும் ஆத்திரமும், கசப்பும் நிறைந்த நிலைக்கு இட்டுச் சென்றன. பிரபாகரனின் மனநிலையினை உணர்ந்திருந்த உமா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகினார். கிழக்குக்கு இடம் பெயர்ந்தார். அங்கு வறிய தமிழ் மீனவர்களாலும், விவசாயிகளாலும் பராமரிக்கப்பட்டார்.

~இங்குதான் மார்க்சிசம் மீதான எனது நம்பிக்கை உறுதியானது என உமா கூறினார். யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதி மக்கள் மற்றும் என் உறவினர்கள் கூட, பிரபாகரன் மீதான பயம் காரணமாக என்னுடன் இணைவதற்குப் பயந்துகொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் வறிய விவசாயிகள், மீனவர் மக்கள் எனக்கு இருப்பிடம் வழங்கினர்.

இறுதியாக உமா இலங்கையைச் சகல விதமான வெளியார் தலையீடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிக்காக, ஜூலையில் கொல்லப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டெலா போன்ற இமயங்களுடன் ஒப்பிடக்கூடிய ஓர் உருவமல்லர் உமா. அவர் தனது தவறுகளையுமிழைத்திருக்கின்றார். பல பாரதூரமானவையும் கூட. ( உதாரணமாக 1988இல் மாலைதீவுச் சதியின் தலைவரான அப்துல் லுதுவிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது போன்ற ).

கலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வாவின் இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் (‘Ceylon under British Rule) நூலின்படி குறிப்பிட்ட சிங்களத்தலைவர்களின் இனவாதமே இலங்கையின் இனப்பிரச்சினையானது விரைவாகப்பற்றியெரியக் காரணமென்றால், சாதாரணத் தமிழர்களும், சிங்களவர்களும் அவர்களைக் கட்டிப்போட்டுள்ள முதலாளித்துவத் தளைகளிலிருந்து விடுபட ஒன்றிணைந்து போராட வேண்டியது தேவையானது. அதுவே தமிழரின் விடுதலைப்போராட்டத்தினை இனவாதம் பக்கம் திருப்பாமல் தடுக்கும் என்பது உமாமகேஸுவரனின் திடமான நம்பிக்கையாகும்.

கிரிதரனின் முகநூலிலிருந்து

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com