Wednesday, January 1, 2020

பொதுத்தேர்தலை எதிர்கொள்ள ஐ.தே.க புதிய வியூகத்தை வகுக்கின்றது. பிரதமர் வேட்பாளராக கருவை களமிறக்க திட்டம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய வியூகம் அமைத்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (30) ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களது கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பி. திகாம்பரம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐ.தே.க.வின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உட்பட வேறு சிலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின்போது ஐ.தே.க.வுக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் பொதுத் தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியும் இடைக்கால அரசாங்கமும் பதவியேற்றுள்ள நிலையில் கைதுகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருவதனால் இவற்றை எதிர்கொள்ளும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் மனித உரிமைகள் குழுவொன்றையும் சட்டத்தரணிகள் குழுவொன்றையும் அமைப்பது என்று இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட ஜனவரி மாதம் 2ஆம் வாரத்துக்குள் கட்சிக்குள் காணப்படும் முரண்பாட்டு நிலைக்கு தீர்வினைக் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இங்கு வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலை புதிய வியூகம் அமைத்து எதிர்கொள்வது குறித்தும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆராய்ந்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளாக கரு ஜயசூரியவை நியமித்து அவரது தலைமையின் கீழ் போட்டியிடுவது எனறும் இவ்விடயம் குறித்து விரைவில் தீர்மானத்தை எடுப்பது எனவும் இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இவ்வாறு கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்றும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டின் தலைவராகவும் சஜித் பிரேமதாசவை நியமிப்பது குறித்து பரிசீலிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் சஜித் பிரேமதாச போட்டியிட வேண்டுமானால் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதைத் தவிர்த்து கரு ஜயசூரியவுக்கு இடம் வழங்க வேண்டுமென்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிணங்கவே புதிய வியூகம் அமைத்து தேர்தலை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தலின்போது பாரிய கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் அதில் ஜே.வி.பி.யை இணைத்துக்கொள்வது குறித்து கலந்துரையாடுதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற இருந்தபோதிலும் இச் சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com