Thursday, December 5, 2019

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலின்போதே ஜனாதிபதிஇவ்வாறு தெரிவித்தார்.

இங்கு விசாரணை ஆணைக்குழுவின் பொறுப்புக்கள் யாதென தெளிவுறுத்திய ஆணைக்குழுவின் தலைவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஜானக த சில்வா, இதுவரை நடாத்தப்பட்ட விசாரணைகளின் சாரம்சத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கையளித்தார். தாக்குதல் நடாத்துவதற்கு முன்னர் அதுபற்றிய தகவல்களைத் தெரிந்திருந்தும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் போலியான ஆவணங்களைத் தயாரித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

தாக்குதலின் அடிப்படை எதுவென்பதைத் தெரிந்துகொண்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும். பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களின் தேவைப்பாடும் அதுவே. பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது பாதுகாப்புச் சபை தொடர்ந்தேர்ச்சியாகக் கூடியது. புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் பாதுகாப்புத் தொடர்பில் தொடர்ந்தேர்ச்சியாகக் கலந்தாலோசித்தோம். பாதுகாப்புக்குக் குந்தகமாக இருக்கின்ற செய்தி ஒன்று கிடைத்தவுடனேயே தேவையான முன்னெடுப்புக்களை எடுத்தோம். வெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைப்பதற்காக வருகைதந்த 160 பேச்சாளர்களையும் திருப்பியனுப்பினோம்.

சென்ற அரசாங்கக் காலத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அலட்சியமாக இருந்தார்கள்.. அதனால் புலனாய்வுத்துறை சரிவர இயங்க முடியவில்லை. அதன் பிரதிபலிப்பாய் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கியது. அதனை நிறுத்துவதற்கு இயலாமற் போனது. தாக்குதல் தொடர்பில் அனைத்துத் தகவல்களையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறாதிருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். இது காலத்தின் தேவையாகும். புலனாய்வுப் பிரிவு சரிவர இயங்காமைக்குக் காரணகர்த்தாக்கள் யார் என்பது பற்றியும் ஆராய வேண்டும். இதற்காக ஆணைக்குழுவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வேன்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷ்சங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் நீதியமைச்சின் முன்னாள் செயலாளர் டப்ளிவ். எம்.எம். அதிகாரி ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகக் கடமையாற்றுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com