Tuesday, December 24, 2019

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை!

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா தி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.

25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் விடுதலை செய்துள்ள நீதிமன்று ஒவ்வொரு மாதத்தினதும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மணி முதல் 12 மணிக்கும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு ஆஜராக வேண்டும் , சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்கவை மீட்பதற்கு பல்வேறு பிக்குகள் நீதிமன்ற வாசலில் குழுமியிருந்ததுடன் அங்கு பிரித் ஓதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

வெளியேவந்த சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்: தமது நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையை சுயாதீனமாக்கியதன் பலாபலனாக இன்று நீதிபதி சுதந்திரமானதோர் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், அதற்கு தாம் தலைவணங்குவதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம் குறித்த விபத்து சம்பந்தமாக நீதிமன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன் பிரகாரம் சம்பந்தப்பட்ட வாகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டிருந்த சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மேற்படி வழக்கை மீள்பரிசீலனையாக எடுத்துக்கொண்ட பொலிஸார் சம்பிக்க ரணவக்கவை கைது செய்து கவனயீனத்;துடன் வாகனத்தை செலுத்தியமை, காயமடைந்தவருக்கு உதவி புரியாது தப்பியோடி பிறிதொரு நபரை சாரதியாக காண்பித்து நீதித்துறையை ஏமாற்ற முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com