Tuesday, November 12, 2019

முஸ்லிம் சமூகத்தை நிந்தனைப்படுத்தி ஞானசேர தேரரை விடுதலை செய்யக் கூறியவர் ஹிஸ்புல்லாஹ்தான்-றிசாட்

கடந்த அரசாங்கத்தில் மிக மோசமாக இனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை நிந்தனைப்படுத்தி ஞானசேர தேரரை விடுதலை செய்யவேண்டும் என்று கூறியவர் ஹிஸ்புல்லாஹ்தான். அதனை அவர் தனது சுயநலத்துக்காவே செய்தார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த புதிய ஜனநாயக தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் சனிக்கிழமை(9) இரவு கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்

இந்த நாடு ஒரு அழகான நாடாகும். இங்கு நாம் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தில் நாம் இழந்தவை ஒன்றிரண்டல்ல உயிர்களையும் உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்து அன்று வீதியில் நின்றோம்.

மீண்டும் இவ்வாறான ஒரு நிலைக்கு நாட்டை கொண்டுசெல்ல துடிக்கிறார்கள். சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கடந்த 31 ஆம் திகதி என்னை மட்டுமல்ல அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம், சிங்கள, தமிழ் தலைவர்கள், சமயப் பெரியார்கள் என இந்த நாட்டின் இரண்டு கோடியே 25 இலட்சம் மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தம்தான் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டினுடைய தலைவரை கொண்டு வருவதற்கு நாங்கள் கட்சி பேதங்களை கடந்து ஏன் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். சாதாரண தேர்தலாக இதை கருத முடியாது. சிறுபான்மை மக்கள் தங்களது மத , இன, கலாசார விழுமியங்களை நிம்மதியாக நிறைவேற்ற நமக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைந்திருக்கிறது.

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமலே வெற்றி பெற்று காட்டுவோம் என பேரினவாத சக்திகள் இனவாதத்தையும், மதவாதத்தையும் பேசி இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி கடந்த ஆயிரத்து நூறு வருடங்களாக சமாதானத்தையும் , இன ஒற்றுமையையும் பேணி வந்த சமூதாயத்தை அநியாயமாக கடந்த பத்து வருடங்களாக சீண்டி நிம்மதியை குலைத்து எமது வியாபார தளங்களையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்பவர்கள். அந்த ஆட்சி காலத்திலும் இந்த ஆட்சி காலத்திலும் செய்பவர்கள் ஒரே கூட்டத்தினரே.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மினுவாங்கொடையிலும், கெப்படிபொலயிலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் சமூகத்தின் சொத்துகளையெல்லாம் சேதமாக்கினார்கள். மூன்று மாதம் கழித்து கைது செய்து பார்த்தால் அந்த மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் , பல வேட்பாளர்களும் இருந்தார்கள். அனைவரையும் பிடித்து சிறையில் அடைந்தவர்கள் எங்களுடைய அரசு.

அன்று அந்த அநியாயங்களை செய்த அமித் வீரசிங்க உட்பட அனைவரும் மொட்டு கட்சிக்கு ஆதரவாக நிற்கின்றனர். கடந்த அரசிலே நாங்கள் அமைச்சராக இருந்து போய் சொன்னோம் அவர்களது சீசீரீவி புகைப்படங்களை போய் கொடுத்தும் அவர்கள் எவரும் கைது செய்ய படவில்லை என முழங்கினார்.


சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசுகையில்.

சேதமில்லாத விட்டு கொடுப்பு.


கல்முனை என்பது தமிழர்களும் , முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தாலும் அவ்வப்போது எங்களுக்குள்ளே முரண்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது கல்முனை பிரதேச செயலக விவகாரம் இந்த கோரிக்கையை மிக நியாயமான அடிப்படையில் கல்முனையில் வாழுகின்ற முஸ்லிம்கள் காலம் காலமாக இந்த பிரதேசத்தில் இருந்து அடிப்படை உரிமைகளை இழந்துவிட கூடாது என்ற நிலைமைக்கு மிக கவனமாக இருந்து நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நண்பர்களோடு கதைத்திருக்கிறோம். முக்கியமாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களோடும், ஏனைய உறுப்பினர்களோடும் பேசி ஒரு தீர்க்கமான முடிவுகளை கொண்டுவருவதற்கான முயற்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் உட்பட நாடாளுமன்ற குழு உறுப்பினர்களும் இது தொடர்பான சரியான விளக்கத்தை எங்களுடைய சனாதிபதி வேட்பாளருக்கு கொடுத்திருக்கிறோம்.

எங்கள் சனாதிபதி யின் ஆட்சி இந்த பிரதேசத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு நிதந்தர தீர்வை தருகின்ற ஆட்சியாக இருக்கும். இது தொடர்பாக நான் சனாதிபதி வேட்பாளர் அவர்களுக்கு நீண்டதொரு விளக்கத்தை கொடுத்துள்ளேன்.

இரண்டு தரப்பும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்காமல் விட்டுக்கொடுப்போடு இரண்டு தரப்பும் சேதம் இல்லாமல் முடிவை எடுக்க தயாராக இருக்கிறார்கள். கௌரவ பிரச்சினையாக பார்க்காமல் வருகின்ற ஆட்சி சஜித் பிரேம தாஸவின் ஆட்சியா இருக்கும் அதில் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

சாய்ந்தமருது மீனவர்களது பிரச்சினை சாதாரண பிரச்சினை இல்லை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அடி நாதமாத இருக்கின்ற மக்களின் பிரச்சினை . கல்முனை பிரதேச நீர்நிலைகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் பாரிய நகரமயமாக்கலை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்து காட்டுவோம். அன்று மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கொடுத்த ஆதரவை போல் நாம் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் வழங்க வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா

அலுகோசுகளில் ஒருவரே சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார்.

2015 வெற்றிக்காக நீங்கள் அளித்த ஆதரவை போன்று வரும் சனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். அதற்கு முன்பு மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் நரகத்தில் வாழ்ந்தோம் அதை போன்ற உணர்விலே இருந்தோம் . அவரை சுற்றியிருந்தவர்கள் அலுகோசிகள் அவர்களில் ஒரு அலுகோசுதான் சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார். 2015 ஆண்டு அவரது மெதமுல்லையில் அவரை தோற்கடித்து சன்னலில் தொங்க வைத்தோம் அதையே மீண்டும் செய்வோம்.

வெள்ளை வேன் கலாச்சாரம் எமது ஆட்சிக்காலத்தில் தான் ஒழிக்கப்பட்டது. மஹிந்தவின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு தூதர்கள் யாரும் அவர்களை சந்திக்க சந்திக்க விரும்பவில்லை . அவர்கள் சமாதானத்தை விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம்.

லிபியாவில் சர்வாதிகாரியான கடாபியை மகிந்த ராஜபக்ச சந்தித்து வந்தபின்னர் அந்த நாட்டு மக்களே புரட்சி செய்து கொன்றனர். அதே போன்றே மஹிந்த அரசியல் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டார்.

தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரம் கோட்டாபய ராஜபக்ச விருப்பத்திற்காக மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் ஒரு யுத்தத்தை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை . ஒரு நாட்டிற்குள் இன்னோரு இனம் இரண்டாம் குடி மக்களாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை. மொட்டு கட்சிக்குள் இருப்பவர்களின் கை சுத்தமில்லாமல் இருக்கின்றனர் அவர்கள் ராஜாவாக இருக்க விரும்புகின்றனர்.

சஜித் பிரேமதாஸ சனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் எமக்குள் சிக்கல்கள் இருந்த போதும் நாங்கள் பேசி முடிவெடுத்தோம். மகிந்த குடும்பம் அவ்வாறில்லை. அண்ணன் சொல்வார் அனைவரும் ஏற்க வேண்டும் .சஜித் பிரேமதாச என்னை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக உறுதி வழங்கியுள்ளார். அவ்வாறான நல்ல மனிதர் சஜித் பிரேமதாச என்பதை கூறிக்கொள்ள விரும்ப விரும்புகிறேன்.
மீண்டும் ஒரு யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற விடமாட்டோம் . ஷஹ்ரான்கள் உருவாகவும் விடமாட்டோம் . அவர்களை ஆதரிப்போரையும் கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வருவோம்.

தண்ணீர் கேட்ட மக்களை சுட்டு கொன்றவர் கோட்டாபய ராஜபக்ச இன்று இரவில் தூங்க முடியாது தவிக்கிறார் . சுட்டவர் சிறையில் இருக்கிறார் சுட சொன்னவர் வெளியில் சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார். ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற லெப்டினட் கேணல்கள் இந்நாட்டில் இருக்கின்றார்கள். அனைவரையும் சனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியுமா? என கேள்வியெழுப்பினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச

வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய சானாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கல்முனை பிரதேச அபிவிருத்தி உட்பட அனைத்து விடையங்களையும் தனது ஆட்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் .ஹரீஸ் அவர்களிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதிகளை வழங்கினார்.

ஒளி வீசும் நகரமாக மாற்றியமைப்பதோடு புதிய வியாபார கட்டிட தொகுதியையும் அமைத்து தருவதாக தெரிவித்தார். கல்முனை , நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு ,மருதமுனை உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களும் பாரிய அபிவிருத்திகளை பெறும். பாஷை புரியாவிட்டாலும் அனைத்தையும் கையேட்டில் குறித்து வைத்துள்ளேன் 17ம் திகதி வேலைகளை தொடங்குவதற்கு .

கல்முனைக்கும் பிரேமதாச குடும்பத்திற்குமான உறவு இன்று நேற்றயதல்ல . ரணசிங்க பிரேமதாச முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்களுடைய காலத்திலிருந்து இன்றுவரை அந்த உறவு இருக்கின்றது.

வடகிழக்கு மாத்திரமல்ல முழு இலங்கையிலும் ஒரு விடையம் நடக்கிறது அதுதான் முஸ்லிம்களிடம் சென்று தமிழர்களை போட்டு கொடுப்பதும், தமிழர்களிடம் போய் முஸ்லிம்களை போட்டு கொடுத்து பிரச்சினையை உண்டாக்குவதும் , சிங்களவர்களிடம் போய் தமிழர்களை போட்டுக்கொடுக்கின்ற வேலையைத்தான் எதிரணியினர் செய்து வருகின்றனர். இது குடும்ப ஆட்சிமுறையை தக்க வைத்து கொள்ளவே இந்த நடவடிக்கை அரங்கேற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

அளுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் பள்ளிவாசல்களை உடைத்தவர்கள் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வந்து அந்தப் பிரதேசத்திற்கு தீர்வினை பெற்று தருவதாக கூறுகின்றனர் . அங்கு பள்ளிவாசலை உடைத்தார்கள் சாய்ந்தமருதிற்கு எவ்வாறு தீர்வினை பெற்று தருவார்கள் என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கின்றேன் .

அதே போன்று கல்முனைக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றும் ,முஸ்லிம்களுக்கு ஒன்றுமாக அவர்கள் பேசி திரிகிறார்கள். இவர்களிடம் என்ன தீர்வு இருக்கிறது.

நானே கல்முனைக்கு வந்து சிறப்பான தீர்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பேன் சஜித் பிரேமதாசவை விசுவாசியுங்கள் என தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர், பிரதி முதல்வர் , மாநகரசபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் , பொதுமக்களும் கலந்துகொண்டனர் .

பாறுக் ஷிஹான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com