Wednesday, October 9, 2019

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்.

நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதெனிய விமான நிலையில் வரவேற்றார்.

அதன்பின், மாலைதீவு உயர் கல்வி அமைச்சர் கலாநிதி இப்றாஹிம் ஹஸனை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவும் கலந்துகொண்டார்.

மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் தகுதியான மாலைதீவு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழங்களில் உள்ளீர்ப்பது குறித்தும், எதிர்காலத்தில் உயர் கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்றங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

அதனையடுத்து இன்று (09) மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மட் நசீட்டும் இடையில் பூர்வாங்க கலந்துரையாடலொன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com