Wednesday, October 9, 2019

ஹபரணையில் விசம் காரணமாகவே 7 யானைகள் உயிரிழந்தன

ஹபரணை, ஹிரிவடுன்ன வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளினதும் மரணம் விஷம் உடலில் கலந்ததால் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையில் இது தொடர்பில் தெரிய வந்துள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்தார்.

குறித்த குழுவின் அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னர் குறித்த பெண் யானைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தை நாளைய தினம் (10) அறிவிக்கக்கூடியதாய் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹிரிவடுன்ன வனப்பகுதியில் மர்மமான முறையில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட மிருக வைத்தியர் ஒருவர், உதவி பணிப்பாளர் ஒருவர் மற்றும் பூங்கா பொறுப்பாளர் ஒருவர் அடங்கிய மூவரடங்கிய குழுவொன்று வனவிலங்கு திணைக்களத்தால் கடந்த 28 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் அறிக்கை கடந்த திங்கட் கிழமை வனவிலங்கு திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், விஷம் உடலில் கலந்ததால் குறித்த யானைகளின் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எந்த வகையான விஷம் உடலில் கலந்துள்ளது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என வன விலங்கு பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com