Tuesday, August 6, 2019

அமெரிக்க பெடரல் நீதிமன்றம் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸிற்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது.

(By Eric London) நியூ யோர்க் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி John Koeltl, செவ்வாயன்று மாலை வெளியிடப்பட்ட ஒரு தீர்ப்பில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான சூழ்ச்சிக்கு ஒரு கடுமையான அடி கொடுத்தார்.

ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் (DNC) மின்னஞ்சல்கள் மற்றும் தரவைத் திருடி பொதுமக்களுக்கு அவற்றை வெளியிடுவதற்காக விக்கிலீக்ஸ் ரஷ்ய அரசுடன் சூழ்ச்சி செய்ததற்காக அது உரிமையியல் சார்ந்து பொறுப்பாவதாக குற்றஞ்சாட்டி ஏப்ரல் 2018 இல் DNC தொடுத்த ஓர் உரிமையியல் சட்டவழக்கை, பில் கிளிண்டனால் நியமிக்கப்பட்டவரும் வாட்டர்கேட் சிறப்பு விசாரணை படைக்கான முன்னாள் சிறப்பு உதவி வழக்குதொடுனருமான Judge Koeltl, அவர் தீர்ப்பில், "தப்பெண்ணத்துடன்" தொடுக்கப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்தார்.

அசான்ஜின் முன்னணி வழக்கறிஞர் ஜெனிஃபர் ரோபின்சனும் பிற விக்கிலீக்ஸ் வழக்கறிஞர்களும் அந்த தீர்ப்பை "பேச்சு சுதந்திரத்தின் ஒரு முக்கிய வெற்றியாக" வரவேற்றனர்.

பேச்சு சுதந்திரத்தைத் தாக்குவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களையும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் இரண்டு கட்சிகளது ஊழல்பீடித்த நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்குமான அதன் சொந்த சூழ்ச்சியில் ஜனநாயகக் கட்சியை இத்தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது. நீதிபதி Koeltl பின்வருமாறு குறிப்பிட்டார்:

DNC இன் அரசியல் நிதி மற்றும் வாக்காளர்களை ஈடுபடுத்தும் மூலோபாயங்களைக் கொண்ட ஆவணங்களைப் பதிப்பிப்பதற்கு விக்கிலீக்ஸை பொறுப்பாக்கினால், அதுவும் ஏனென்றால் DNC அவற்றை 'இரகசியம்' என்றும் வர்த்தக இரகசியங்கள் என்றும் முத்திரை குத்துவதன் காரணமாக எடுத்துக் கொண்டால், பின்னர் அது எந்தவொரு பத்திரிகைக்கும் அல்லது பிற ஊடக நிறுவனத்திற்கும் கூட பொருந்தும். ஆனால் அது பொதுமக்கள் மீதான அதிகபட்ச அக்கறை சம்பந்தப்பட்ட பிரசுரிப்புகள் மீது முதல் அரசியலமைப்பு திருத்த நலனை மீறி முற்றிலும் தனிநபர் இரகசியம் மீதான நலனை ஏற்றுக் கொள்ளவியலாத வகையில் மேலுயர்த்தும். DNC இன் வெளியான உள்தொடர்பு தகவல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்காவின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றின் திரைக்குப் பின்னால் நடக்கும் விடயங்களை அமெரிக்க வாக்காளர்கள் தெரிந்து கொள்ள அனுமதித்துள்ளது. இதுமாதிரியான தகவல்கள், மூடிமறைப்பின்றி முதல் அரசியலமைப்பு சட்டதிருத்தம் வழங்கும் பலமான பாதுகாப்புக்கு உட்பட்ட வகையாகும்.

இந்த தீர்ப்பானது, தேசத்துரோக குற்றச்சாட்டு உட்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக 175 ஆண்டுகால பெடரல் சிறைவாசத்தை முகங்கொடுக்கும் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக, பிரிட்டன், ஈக்வடோர், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன் அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்கள் ஆதரவிலான அமெரிக்க அரசினது சூழ்ச்சியின் சட்டவிரோதத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.

இந்த உரிமையியல் வழக்கின் வாதிதரப்பு —ஜனநாயக கட்சி— ஒரு தசாப்த காலத்தில் அரசு எந்திரத்திற்குள் இருந்து அசான்ஜைப் பிரதானமாக இன்னல்படுத்தியதாகவும் சேவையாற்றி உள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் போது, ஜனநாயகக் கட்சி நீதித்துறை அதிகாரிகள், அத்துடன் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தொழில்ரீதியில் பதவியில் தங்கியிருக்கும் ஜனநாயகக் கட்சியினர், அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கைத் தயாரித்தனர்.

இந்த உரிமையியல் சட்டவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதானது, பாரியளவில் செய்திகளில் தெரிவிக்கப்படாத நலன்களின் மோதல்களையும் மற்றும் வழக்கு விசாரணைகளில் நடக்கும் துஷ்பிரயோகம் மற்றும் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் நடைமுறைகளைக் குற்றகரமாக துஷ்பிரயோகம் செய்வதை எல்லாம் அம்பலப்படுத்துகிறது. அசான்ஜ் மீதான குற்றவியல் வழக்கு விசாரணைக்கும் உண்மைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதற்கு பதிலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்திய போர் குற்றங்கள் குறித்த உண்மைகளைக் கூறியதற்காக அவரை தண்டிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

விக்கிலீக்ஸை ஒரு "சர்வதேச செய்தி நிறுவனம்" என்று முத்திரையிட்ட நீதிபதி, பேச்சு சுதந்திர பாதுகாப்புக்குள் அசான்ஜ் வரமாட்டார் என்று அறிவிக்கின்ற பெருநிறுவன பத்திரிகைகளின் பொய்யர்களை அம்பலப்படுத்தி உள்ள அசான்ஜை ஒரு "பத்திரிகையாளர்” என்று குறிப்பிட்டார். நீதிபதி Koeltl தொடர்ந்து குறிப்பிட்டார்: “குறிப்பிடத்தக்க 'பென்டகன் ஆவணங்கள்' வழக்கான, நியூ யோர்க் டைம்ஸ் கம்பெனியும் அமெரிக்காவும் வழக்கில், உச்ச நீதிமன்றம் பொதுமக்கள் மீதான அக்கறையில் மூன்றாம் நபரிடம் இருந்து திருடிய ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பிரசுரிப்பதைத் தாங்கிப் பிடித்தது,” என்றார்.

ஒரு சட்ட விடயமாக, தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற விக்கிலீக்ஸின் பிரேரணையை ஏற்றுக் கொண்ட அந்நீதிமன்றம், DNC "உள்ளது உள்ளவாறே நம்பத்தகுந்த" வாதத்தை முன்வைக்கவில்லை என்று தீர்ப்பளித்தது. அந்த பிரேரணையின்படி நிராகரிக்கும் கட்டத்தில், வழக்காளி குற்றஞ்சாட்டிய உண்மைகள் அனைத்தையும் ஒரு நீதிபதி நிஜமென ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இங்கே அந்த நீதிபதி, DNC குற்றஞ்சாட்டிய உண்மைகள் அனைத்தும் நிஜமென்றால், உண்மை-விரும்பி யாரும் "குற்றஞ்சாட்டப்பட்ட துஷ்பிரயோகத்திற்குப் பிரதிவாதி தான் பொறுப்பு என்பதில் நியாயமாக குறுக்கீடு செய்ய" போவதில்லை என்று தீர்ப்பளித்தார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, அந்நீதிபதி DNC இன் வாதங்களை "இற்றுப்போன" வாதங்கள் என்று குறிப்பிட்டதுடன், “எந்த கட்டத்திலும் DNC குற்றஞ்சாட்டும் எந்த உண்மைகளும்" அசான்ஜோ அல்லது விக்கிலீக்ஸோ "DNC இன் தகவல்களைத் திருடுவதில் பங்கெடுத்ததை" காட்டவில்லை என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் "DNC இன் ஆவணங்களைத் திருடி பரப்புவதற்காக ரஷ்ய கூட்டாட்சியுடன் சூழ்ச்சி செய்தனர்" என்ற DNC இன் வாதம் "முற்றிலும் உண்மையிலிருந்து விலகி உள்ளது,” என்று Judge Koeltl தெரிவித்தார். நீதிமன்றம் "வலியுறுத்தப்படும் தீர்மானகரமான வலியுறுத்தல்களை உண்மைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்றும் நீதிபதி மேற்கொண்டு தீர்ப்பில் எழுதினார்.

அசான்ஜிற்கும் ரஷ்யா அரசாங்கத்திற்கும் இடையே குற்றஞ்சாட்டப்படும் தொடர்பு "பொருத்தமற்று" இருப்பதாக குறிப்பிட்டு, “திருட்டில் பதிப்பாசிரியர் பங்கெடுக்கவில்லை எனும் வரையில் ஓர் ஆதாரநபர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதிப்பாசிரியர் திருடப்பட்ட ஆவணங்களைப் பதிப்பிக்க உரிமையுடைய ஒரு நபர் தான்" என்பதால், ரஷ்யாவுடன் விக்கிலீக்ஸ் குற்றகரமாக தொடர்பில் இருந்தார் என்ற DNC இன் வாதத்தை நீதிபதி கூடுதலாக உதறி தள்ளினார்.

“திருட்டுக்குப் பின்னர் திருடப்பட்ட ஆவணங்களைக் கொண்டு உடனிருந்து சதி செய்தவராக விக்கிலீக்ஸைப் பொறுப்பாக்கலாம்,” என்ற DNC இன் வாதத்தையும் நீதிபதி Koeltl நிராகரித்தார். இந்த வாதத்தை "ஆதாரத்திற்குரியதல்ல" என்று குறிப்பிட்ட நீதிபதி, அது அரசியலமைப்பு பாதுகாப்புகளின் "உள்அம்சங்களை அகற்றி" விடும் என்று எழுதினார்: “இதுபோன்றவொரு விதி, திருடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கட்டுரையை பிரசுரிக்கும் எந்தவொரு பத்திரிகையாளரையும் திருட்டுக்கு உடனிருந்த சூழ்ச்சியாளராக ஆக்கிவிடும்,” என்று குறிப்பிட்டார்.

DNC அதன் ஏப்ரல் 2018 புகாரில், முன்வைத்த பல வாதங்கள் இப்போது திமிர்தனமான பொய்கள் என்பதாக அம்பலமாகி உள்ளன. அசான்ஜ், ட்ரம்ப் மற்றும் ரஷ்யா "அக்கட்சியின் மதிப்புகளையும் அமெரிக்க வாக்காளர்கள் மீதான அக்கட்சியின் பார்வைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான DNC இன் தகைமையை குழிபறித்து சிதைத்து விட்டனர்,” என்ற புகாரும் இதில் உள்ளடங்கும்.

அந்த புகார் பின்வருவதையும் குற்றஞ்சாட்டியது: “ரஷ்ய உளவுத்துறை சேவைகள் பின்னர் திருடப்பட்ட இரகசிய ஆவணங்களை GRU உளவாளி #1 மூலமாகவும், அத்துடன் விக்கிலீக்ஸ் மற்றும் அசான்ஜ் மூலமாகவும், பரப்பிவிட்டன, இவர்கள் ட்ரம்ப் பிரச்சாரக் குழு மற்றும் ட்ரம்புக்கு உடனிருந்தவர்களால் செயலூக்கத்துடன் ஆதரிக்கப்பட்டிருந்தனர், அதேவேளையில் அவர்களின் பொதுவான நோக்கங்களுக்குச் சேவையாற்றும் விதத்தில் தகவல்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் அமெரிக்க மக்களிடையே வெளியிட்டு பரப்பப்பட்டன,” என்று குறிப்பிட்டது.

DNC அதன் புகாரைப் பதிவு செய்த அந்நேரத்தில், நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், அந்த ஆவணம் "மக்கள் அறிந்த உண்மைகளையும்", அத்துடன் "செய்திகள் மற்றும் அதற்குப் பிந்தைய நீதிமன்ற நடைமுறைகளில் வெளியிடப்பட்ட தகவல்களையும்" சார்ந்திருப்பதாக எழுதியது. இந்த சட்டவழக்கு "திரு. ட்ரம்ப், அவருக்கு உடனிருப்பவர்கள் மற்றும் ரஷ்யா உடனான அவர்களின் தொடர்புகளைக் குறித்து ஆராய்வதைத் தீவிரப்படுத்தும் ஒரு சூழலில் வருகிறது,” என்று டைம்ஸ் எழுதியது.

நீதிபதி Koeltl அவர் தீர்ப்பில் பென்டகன் ஆவண வழக்கான நியூ யோர்க் டைம்ஸ் கம்பெனியும் அமெரிக்காவும் வழக்கை மேற்கோளிட்டது ஆழமாக முரண்பாடானது.

டைம்ஸ் பத்திரிகையாளர்கள் Andrew Kramer, Michael Gordon, Niraj Chokshi, Sharon LaFraniere, K.K. Rebecca Lai, Eric Lichtblau, Noah Weiland, Alicia Parlapiano மற்றும் Ashley Parker ஆகியோரின் கட்டுரைகள், அத்துடன் "கிளிண்டனின் பகிரங்க எதிரி, அசான்ஜ், ஜனநாயகக் கட்சி கருத்தரங்கிற்கு உரிய நேரத்தில் மின்னஞ்சல் வெளியீடு,” என்று தலைப்பிட்டு சார்லி சாவேஜ் எழுதிய ஜூலை 26, 2016 கட்டுரையும் உள்ளடங்கலாக, DNC இன் அடித்தளமற்ற புகார் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸின் ரஷ்யாவுடனான உறவுகளுக்கு "ஆதாரமாக" நியூ யோர்க் டைம்ஸை எட்டு முறை குறிப்பிட்டது.

நியூ யோர்க் டைம்ஸ் மார்ச் 2016 இல் அதன் தலையங்க பக்க ஆசிரியராக ஜேம்ஸ் பென்னெட்டை நியமித்ததற்குப் வெகுசில வாரங்களுக்குப் பின்னர் தான் இந்த கட்டுரைகளின் முதலாவது பதிப்பிக்கப்பட்டது. ஜேம்ஸ் பென்னெட்டின் சகோதரர், மிக்கெல் பென்னெட் ஜனாதிபதி வேட்பாளராவார், கொலராடோவின் செனட்டர் ஆன அவர் ஜனநாயக கட்சியின் தேசிய குழுவின் ஜனநாயக கட்சி செனட் சபை பிரச்சாரக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். ஈக்வடோர் அசான்ஜ் இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் சிக்கி இருந்த போது, ஈக்வடோர் அசான்ஜிற்குத் தஞ்சம் வழங்கியதை இரத்து செய்யாததைக் குறித்து அவர் "மிகவும் கவலை" கொண்டிருந்ததாக குறிப்பிட்டு 2018 இல் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இக்கான ஒரு கடிதத்தில் பென்னெட் கையெழுத்திட்டார்.

"விக்கிலீக்ஸ் ஜனநாயக கட்சி நடைமுறைகளை உலகளவில் குழிபறிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் ஈக்வடோர் திரு. அசான்ஜிற்கு ஆதரவைத் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து [ஈக்வடோரிய] ஜனாதிபதி [லெனின்] மொரெனோ உடன் அமெரிக்காவின் கவலைகளை நீங்கள் எழுப்புவது,” “தவிர்க்க முடியாத கட்டாயமாகும்,” என்று அக்கடிதம் குறிப்பிட்டது.

ஏப்ரல் 2019 இல், ட்ரம்ப் நிர்வாகம் அசான்ஜிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அறிவித்த பின்னர், நியூ யோர்க் டைம்ஸ் பதிப்பாசிரியர் குழு, ஜேம்ஸ் பென்னெட் வழிகாட்டுதலின் கீழ், பின்வருமாறு எழுதியது: “சர்ச்சைக்கிடமற்ற குற்றச்சாட்டுடன் திரு. அசான்ஜைக் குற்றஞ்சாட்டி இந்த நிர்வாகம் மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது.” இரண்டு வாரங்களுக்குப் பின்னர், மிக்கெல் பென்னெட் அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதை அறிவித்ததுடன், அப்போதிருந்து டைம்ஸின் தலையங்க பக்கத்தில் ஆதரவான செய்திகளைப் பெற்று வருகிறார்.

“இதற்கும் கூடுதலாக, ஜேம்ஸ் மற்றும் மிக்கெல் பென்னெட்டின் தந்தை, டக்ளஸ் பென்னெட், 1970 களின் இறுதியில் மற்றும் 1980 களின் ஆரம்பத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான சிஐஏ-தொடர்புபட்ட அமெரிக்க முகமைக்குத் தலைமை வகித்தார்.”

“தேர்தலுக்கு எதிரான DNC சட்டவழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்ற தலைப்பின் கீழ், புதன்கிழமை, டைம்ஸ் அதன் 25 ஆம் பக்கத்தில் ஆறு பத்தி கொண்ட சிறிய கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. அதன் இணையவழி பதிப்பில், டைம்ஸ் அதன் சிறப்பு பக்கத்தின் முல்லெர் அறிக்கைக்கான இணைப்பை முக்கியத்துவத்துடன் அதில் இணைத்திருந்தது, அந்த அறிக்கை பெடரல் நீதிமன்றத்தில் நீதிபதி Koeltl உதறித் தள்ளிய, அதே DNC-முன்வைத்த இற்றுப்போன பொய்களை அடிப்படையாக கொண்டதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com