Thursday, August 8, 2019

சுஷ்மா சுவராஜ் - கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றார் மறவன் புலவு.

பாரதிய சனதா கட்சியின் மூத்த தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் 6.8.19 செவ்வாய்க்கிழமை காலமானார். பாரதிய சனதா கட்சிக்கு இலங்கையில் ஏதாவது அக்கறை இருக்குமானால் அங்குள்ள தமிழர்களே என என்னிடம் கூறியவர் திருமதி சுஷ்மா சுவராஜ்.

1997ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை அவரது வீட்டில் நானும் திருமதி மாலினி இராசநாயகம் அவர்களும் சென்று சந்தித்தோம். அப்பொழுது அவர் ஈழத் தமிழர் தொடர்பான விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் முயற்சியாலேயே ஈழத்தமிழர்கள் சிதம்பரத்திற்கு வருவதற்குரிய கப்பலை விடுவதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. அப்பொழுதும் நான் தில்லியில் இருந்தேன். மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு இல கணேசன் அவர்கள் என்னை அவரிடம் அனுப்பினார்கள். திரு இல கணேசன் அவர்கள் எதைக் கேட்டாலும் செய்து கொடுக்கின்ற நண்பராகத் திருமதி சுஷ்மா சுவராஜ் இருந்தார்கள்.

பல மாதங்களாக வெளியுறவுத்துறை அமைச்சில் தேங்கியிருந்த கடிதத்தைத் தூசு தட்டி எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுக்கு ஒப்புதல் கடிதத்தை எழுதியவர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள்.

நாடாளுமன்ற அவையிலும் மாநிலங்களவையிலும் ஈழத்தமிழர்களுக்காக அவர் பலமுறை குரல் கொடுத்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களிலும் அமைச்சராக இருந்த காலங்களிலும் அவரது குரல் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்து இருக்கிறது.

ஒரு முறை பொதுவுடமைக் கட்சியின் திரு ராஜா அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து மாநிலங்களவையில் பேசினார். அப்பொழுது பதிலளித்த திருமதி சுஷ்மா சுவராஜ் ஈழத்தமிழர்களின் நலனே இந்தியாவின் நலன் எனவும் அவர்களை காப்பது இந்திய அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.

இத்தகைய நட்பும் அன்பும் ஈழத்தமிழர் மீது பாராட்டுகின்ற அம்மையார் மறைந்த செய்தி கேட்டதும் கண் கலங்கி நின்றேன். நெஞ்சம் கனத்து நின்றேன். நேரே சென்னையில் உள்ள பாரதிய சனதாக் கட்சி அலுவலகத்துக்கு ஓடினேன். அங்கே நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்தில் பங்கு பற்றினேன். திரு இல கணேசன் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அங்கிருந்த பாசகவின் ஏனைய தமிழகத் தலைவர்களுடனும் இணைந்து அஞ்சலி செலுத்தினேன்.

அம்மையார் ஈழத்தமிழர்களுக்கு ஆற்றிய சேவைகள் பற்றிச் சிறிய உரை ஆற்றினேன் தொலைக்காட்சியினர் கேட்ட வினாக்களுக்குப் பதில் சொன்னேன் ஊடகத்தாருக்கும் செய்தி சொன்னேன்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com