Tuesday, August 13, 2019

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தாவேதான்.... இது உறுதி என்கிறார் கம்மன்பில

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாயவேதான்... மகிந்த ராஜபக்ஷ சொன்னது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரே அல்ல. அடுத்த ஜனாதிபதியின் பெயரே.... கோத்தபாய பற்றிய எதிர்வுகூறலே அன்றி வேறில்லை.... என பிவிதுரு ஹெல உருமய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகளாக எங்களது ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டியவர்கோத்தபாய ராஜபக்ஷவே. அதேபோல ஜனாதிபதி வேட்பாளரும் கோத்தபாய ராஜபக்ஷ என நாம் கூறினோம். என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக முடியாது என்று கூறின. அதற்காக நான்கு காரணங்களையும் முன்வைத்தன. அமெரிக்க குடியுரிமையிலிருந்து நீங்குவதற்கு அமெரிக்காவுக்கு இடம் கொடுப்பதில்லை என்றன. அமெரிக்க குடியுரிமையிலிருந்து அமெரிக்கா குடியுரிமையைப் பறிக்க முடியாது என்று நாங்கள் சட்டப் புத்தகத்தைப் புரட்டிக் காட்டினோம். அது இன்று உண்மையாகி உள்ளது. அதன்பின்னர், அமெரிக்காவிலும் இலங்கையிலும் அவருக்கு எதிராக வழக்கு நடைபெற்றுவருதனால் தேர்தலில் ஈடுபட முடியாது என்றனர். போலிக் குற்றச்சாட்டுக்களுடன் வழக்குப்போட்டு அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்த முடியாது என்று நாங்கள் சட்டப் புத்தகத்தைப் புரட்டிக் காட்டினோம். அதுவும் இன்று உண்மையாகியுள்ளது. அவருக்கு எதிராகப் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் காரண காரணமின்றியவை என உயர் நீதிமன்றங்கள் குறிப்பிட்டு, வழக்குகளை இடைநிறுத்தி வைத்துள்ளன.

கோத்தாபய ராஜபக்ஷ தற்போது நோயாளியாக இருக்கின்றார் என்றும் அதனால் அவர் தேர்தலில் ஈடுபட முடியாது என்றும் சாென்னார்கள். பை பாஸ் சிகிச்சையின் பின்னர் முன்னரை விட இளமையான தோற்றத்துடன் அவர் இருக்கின்றார் என நாங்கள் சொன்னோம். பார்த்தீர்களா நேற்று முன் தினம் கட்டழகுடன் இளைஞன் ஒருவனைப் போல மேடையேறி வந்தது... பிரதமர் ரணிலுக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் ஒரே வயது. இருவரும் மேடையேறினால் அப்பாவும் மகனும் போலத்தான் இருப்பார்கள். கடைசியாக, ராஜபக்ஷ குடும்பத்தாரிடையே மோதல் என்றும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு என்றும், பெரும்பான்மையினர் கோத்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என்றும் சொன்னார்கள். 'இல்லை நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு கோத்தபாய ராஜபக்ஷவுக்கே வாக்களிப்போம்... அவரே எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் என்று சொன்னோம். நீங்கள் எல்லோரும் அதனை நேற்றைய முன்தினம் கண்டுகொண்டீர்கள்தானே. அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் ஒன்றிணைந்து பொதுஜன முன்னணியைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து, அதேபோல ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் எல்லாேரும் ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷவை ஆசிர்வதித்தார்கள். ஆதரவளித்தார்கள்... அவரது சுபமுகூர்த்ததில் அவருடன் ஒன்றிணைந்தார்கள்.

இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து சொன்ன அனைத்தும் பொய்த்துவிட்டன. நாங்கள் சொன்னவை உண்மையாகி விட்டன. அதனால் நாங்கள் அடுத்த எதிர்வுகூறலையும் கூறுகின்றோம். நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்ஷ மேடையில் சனத்திரளிடம் கூட்டணி எதிர்க்கட்சியினதும், பொதுஜன பெரமுனவினதும் ஜனாதிபதி வேட்பாளரை அல்ல அறிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாபதி வேட்பாளரையே அறிமுகம் செய்தார். கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாவதை யாராலும் நிறுத்த முடியாது....என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com