Tuesday, August 13, 2019

கப்பம் பெற்றுக்கொண்டு மோசடிக் காணியில் கட்டடம் அமைக்க அனுமதி வழங்கிய தவிசாளர் வேழமாலிகிதன்

கிளிநொச்சி ஏ9 வீதியில் மோசடி செய்யப்பட்ட பெறுமதிமிக்க காணியில் இரண்டுமாடி கட்டடம் அமைக்க பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கிய ஆவணம் தற்போது வெளியில் கசிந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் வலது கையாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனே இம் மோசடியை மேற்கொண்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் ஜெயந்தன் ஆகியோரின் போலி இறப்பர் முத்திரை, ஒப்பத்துடன் ஏ9 வீதியில் மோசடி செய்யப்பட்ட காணியில் புதிய மாடி கட்டடம் அமைப்பதற்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதனால் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2018-12-31 திகதியிடப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதனின் கையொப்பத்துடன் புதிய கட்டடத்திற்கான அனுமதியினை மகிழ்ச்சியுடன் வழங்குவதாக தெரிவித்து விட்டு தற்போது தான் அவ்வாறு எதனையும் வழங்கவில்லை எனத் தெரிவித்து வருகின்றார்.

கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் மற்றும் கிளி நகர் கிராம அலுவலர் எஸ்.வி. ஜெயந்தன் ஆகியோரது பதவி நிலை இறப்பர் முத்திரை போலியாக தயாரிக்கப்பட்டு காணிக்குரிய கடிதம் எழுதப்பட்டு ஒப்பமிட்டு ஏ9 பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய பெறுமதிமிக்க காணி ஒன்று மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டியறியப்பட்டு கிளிநொச்சி பிராந்திய பொலீஸ் அத்தியட்சர் காரியாலத்தில் கிராம அலுவலரினால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் காணியில் தற்போது இரண்டு மாடி கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய கட்டடங்கள் அமைப்பதாயின் பிரதேச சபையின அனுமதி பெறப்படல் வேண்டும் . எனவே மோசடி செய்யப்பட்ட காணியில் அமைக்கப்பட்டு வருகின்ற புதிய கட்டடத்திற்கு கரைச்சி பிரதேச சபை அனுமதி வழங்கியதா என பிரதேச சபையின் அமர்வின் போது உறுப்பினர்களால் கேள்வி எழுப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தான் அவ்வாறு ஒரு அனுமதியினை வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற கரைப்பி பிரதேச சபையின் 17 வது அமர்வின் போதே தவிசாளர் இதனை தெரிவித்திருந்தார்.( சபை கூட்ட அறிக்கயைின் 44 பக்கத்தில்)

ஆனால் புதிய கட்டடத்திற்கு கட்டட அனுமதியினை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் எழுத்து மூலம் வழங்கிய ஆவணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட காணியில் கட்டடம் அமைப்பதற்கான அனுமதியினை எழுத்து மூலம் வழங்கிவிட்டு தான் அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கவில்லை என உண்மைக்குப் புறம்பாக கூறிய தவிசாளரின ் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறித்த மோசடிக்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரும் உடந்தையாக செயற்பட்டுள்ளாரா என்று சந்தேகத்தையும் மக்கள் எழுப்பியுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com