Friday, July 5, 2019

மரண தண்டனையை இடைநிறுத்தி வைக்க உச்ச நீதிமன்று உத்தரவு.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவரும் நிலையில் அதனை நிறுத்தும்பொருட்டு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

இவ்வறிவித்தலையடுத்து மரண தண்டனை வழங்குவதற்கு பல்வேறு தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதி வரை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீது இடம்பெற்ற விசாரணைகளின்போது மன்றில் ஆஜராக விளக்கமளித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே.டப்ளியூ. தென்னகோன், மரண தண்டனை நிறைவேற்றப்படும் கைதிகளின் பெயர், காலம், இடம் என்பன அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.

குறித்த மனு இன்று தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, தீபாலி விஜேசுந்தர, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த 25ம் திகதி நான்கு போதைப் பொருள் குற்றவாளிகள் நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதுடன், அது நடைமுறைப்படுத்தும் திகதி குறித்து அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்ததாக, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com