Friday, July 5, 2019

உலகம் போரின் விளிம்பில் இருப்பதை ஜி20 வெற்றுரைகளால் மூடிமறைக்க முடியவில்லை. Nick Beams

“நாசகரமான தசாப்தம்" என்றறியப்படும் 1930 களின் போது, வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகளில் இராஜதந்திர, சர்வதேச மட்டத்திலும், அத்துடன் பொருளாதார மற்றும் வர்த்தக துறையிலும், அனைத்து விதமான வளைவுகளும் திருப்பங்களும் இருந்தன.

ஒரு நாள் உடன்படிக்கைகளைச் செய்வதும் அடுத்த நாளே அதை முறித்துக் கொள்வதுமாக இவற்றால் குணாம்சப்பட்டிருந்த அந்த ஒன்றுக்கொன்று முரணான செயல்பாடுதான் ஓர் இன்றியமையா புறநிலை உள்ளடக்கமாக இருந்தது. அது, செப்டம்பர் 1939 இல் உலக போர் பிரளயம் வெடிப்பதற்கு முன்னதாக ஏகாதிபத்திய சக்திகள் வெறித்தனமாக சதியாலோசனைகள் செய்யும் வடிவத்தை எடுத்தது.

மாற்றத்தேவையானதை மாற்றினால், இங்கே இன்றைய காலகட்டத்துடன் அதன் நேரடியான சமாந்தரங்கள் உள்ளன. ஈரான், வட கொரியா மற்றும் சீனா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னுக்குப்பின் முரண்பாடான நடவடிக்கைகள் —ஒருநாள் போரைக் கொண்டு அச்சுறுத்துவதும், மறுநாளே ஓர் உடன்படிக்கை அறிவிப்பதும், அதற்கடுத்த நாள் இன்னும் அதிக அச்சுறுத்தல்கள் வெளியாவதும்— அதே தர்க்கத்தை கொண்டுள்ளன. அவை தவிர்க்கவியலாமல் ஒரு புதிய போர் வெடிப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கும் நெருக்கடியால்-பிளவுபட்ட ஒரு புவிசார் அரசியல் ஒழுங்கின் ஒரு வெளிப்பாடாக உள்ளன.

இது கடந்த வியாழக்கிழமை மிகப்பெரியளவில் பென்டகனுக்கு அதிகாரமளிக்கும் 750 பில்லியன் டாலர் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதில் எடுத்துக்காட்டப்பட்டது. அமெரிக்க செனட் சபையில் அது 86-8 என்ற இருகட்சிகளது வாக்குகளுடன் நிறைவேறிய அந்த சட்டமசோதாவின் நோக்கம், செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு தலைவர் Jim Inhofe ஆல் வெளிப்படுத்தப்பட்டது.

உலகம் “எனது வாழ்நாளில் வேறெந்த காலத்தையும் விட மிகவும் ஸ்திரமின்றியும், மிகவும் அபாயகரமாக" இருப்பதாகவும் வர்ணித்த அவர், தேசிய பாதுகாப்புத்துறை மூலோபாயம், ரஷ்யா மற்றும் சீனாவுடனும் அத்துடன் ஈரான் மற்றும் வட கொரியா போன்ற "அடாவடி நாடுகளிடம்" இருந்து வரும் அச்சுறுத்தல்களுடனும் "மூலோபாய போட்டியை" உருவாக்கி, "எமக்கு நேரடிப்பாதையை" வழங்கி உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

மிகப்பெரியளவில் இராணுவ செலவினங்களைத் தீவிரப்படுத்துவதைக் குறித்த Inhofe இன் கருத்துக்களும் இருகட்சிகளது ஆதரவும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் மற்றும் அதன் இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் இன்றியமையா நிலைப்பாட்டை அடிக்கோடிடுகின்றன. அது உலகின் மற்ற பகுதிகளை உயிர்வாழ்வுக்கான அச்சுறுத்தலாக கருதுகிறது.

இரண்டாம் உலக போர் முடிந்ததில் இருந்து சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை அனுபவித்து வந்த பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் அதன் பொருளாதார பலத்தின் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதைக் கொண்டு அதன் மேலாதிக்க நெருக்கடியை எதிர்கொள்ள முயன்று வருகிறது. இது மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றது.

பிரதான சக்திகளுக்கு இடையிலான மோதல்களும் பதட்டங்களும் அனைவருக்கும் எதிராக அனைவரினதும் ஒரு போராக இந்த வாரயிறுதியில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த ஜி20 உச்சிமாநாடு கூட்டத்திலும் வெளிப்பட்டது. இந்த மாநாடு, கணக்கிடவியலா விளைவுகளுடன் ஒரு கட்டுப்பாட்டை மீறிய இராணுவ மோதலை ஏற்படுத்த அச்சுறுத்திய ஈரான் மீதான ஒரு தாக்குதலை ட்ரம்ப் இரத்து செய்து ஒரு வாரத்திற்கும் சற்று அதிக நாட்களுக்குப் பின்னர் நடைபெற்றது.

உலகளாவிய பொருளாதார விவகாரங்களை நெறிப்படுத்த முயற்சிக்கவும் மற்றும் இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்த மோதல்கள் போன்றவை, மிகவும் குறிப்பாக கட்டுப்பாடான வர்த்தக நடவடிக்கைகளை மற்றும் பாதுகாப்புவாதம் வெடிப்பதைத் தவிர்க்கவும் முயற்சிப்பதற்காக, ஓர் இயங்குமுறையை உருவாக்குவதற்காக, இந்த ஜி20 உச்சிமாநாடு கூட்டங்கள் 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் தொடங்கப்பட்டது.

பைனான்சியல் டைம்ஸ் பொருளாதாரப் பிரிவு கட்டுரையாளர் மார்ட்டீன் வொல்ஃப் குறிப்பிட்டதைப் போல, உலகளாவிய கூட்டுறவுக்கான அடித்தளத்தை விரிவாக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜி20 “பொதுவான ஒழுங்கு குலைவுக்குப் பலியாகி உள்ளது. ஜி20 உறுப்பினர்கள் தம்மைத்தாமே குணமாக்கிக் கொள்ள வேண்டிய மருத்துவர்கள் போலிருக்கின்றனர். அவர்களால் முடியுமா? இன்று முடியவில்லை என்பதே நிச்சயமான பதிலாக உள்ளது.” உண்மையில் என்றும் முடியாது.

ட்ரம்ப் நிர்வாகம் அதன் போட்டியாளர்களை, சீனாவை மட்டுமல்ல, மாறாக ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனியையும் இலக்கு வைத்து வருவதுடன், உலகமே அதன் "அமெரிக்கா முதலில்" திட்டநிரலுக்கு அடிபணிய வேண்டுமென கோருகின்ற நிலையில், அந்த உச்சிமாநாடு அதன் அடிப்படை தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற தவறியது.

அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஜப்பானின் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே, வர்த்தகம் சம்பந்தமான பதட்டங்கள் உலகளாவிய பொருளாதாரத்திற்கு அபாயம் என்றும், போருக்குப் பிந்தைய சுதந்திர வர்த்தக முறை "ஒருவேளை தள்ளாடுகிறதோ" என்ற கவலைகள் இருப்பதாகவும் எச்சரித்தார். இது இங்கே குறிப்பிடத்தக்களவில் குறைத்துக் காட்டப்படுகிறது.

ஆனால் "பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான" முந்தைய கடமைப்பாடுகள் கைவிடப்பட்டு, அந்த உச்சிமாநாட்டு அறிக்கை சுதந்திரம் மற்றும் நேர்மையின் அவசியம் குறித்து வெறுமனே தொடர்ச்சியாக மழுங்கலான கருத்துக்களையே கொண்டிருந்தது. அபே குறிப்பிட்டவாறு: “ஜி20 நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் கையாள்வதை விட, நாம் பொதுவான களத்தைக் காண செயல்பட வேண்டும்,” என்றார்.

அதாவது, வர்த்தக மற்றும் பொருளாதார மோதல்கள் —அவற்றின் பின்னால் இராணுவ மோதல்களுக்கான தயாரிப்புகள்—தீவிரமடைகின்ற நிலையில், அவற்றைக் கடந்து சென்றுவிட முடியாது.

பத்து நாட்களுக்கு முன்னர் ஈரான் மீதான தாக்குதல்களில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கிய நடவடிக்கை, சீனாவுக்கு எதிரான வர்த்தக போர் சம்பந்தமான முக்கிய பிரச்சினையில் நேரடியான சமாந்தரங்களைக் கொண்டிருந்தன. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு ஒன்றில், ட்ரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளுக்கு மேலே, கூடுதலாக 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான கூடுதல் வரிகள் விதிப்பதை, சாத்தியமானளவுக்கு 25 சதவீதத்திற்கு மிகாமல், நிறுத்தி வைத்தார்.

ஆனால் ஈரான் மற்றும் வட கொரியா உடனான மோதல்களில், எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதோடு, சீனாவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் "விறைப்பாக தயாராக" இருக்கின்றன.

அச்சுறுத்திய புதிய நடவடிக்கைகள், அமெரிக்காவுக்குள் நடைமுறையளவில் சீனாவின் அனைத்து இறக்குமதிகளையும் உள்ளடக்கும் இவை "இப்போதைக்கு" தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்க ட்ரம்ப் உடன்பட்டார், அதேவேளையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் தொடரும். ஆனால் இன்றிமையா கேள்விகள் மீது —அனைத்திற்கும் மேலாக இப்போதிருக்கும் வரிவிதிப்புகளை நீடித்து வைக்க அதற்கு உரிமை இருப்பதாகவும், எந்தவொரு உடன்படிக்கையிலும் சீனா விருப்பத்திற்கு இணங்க செயலாற்றுவதாக அது ஒருதலைபட்சமாக தீர்மானித்த பின்னர் தான் அவை நீக்கப்படும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தல் மீது— அங்கே எந்த அசைவும் இல்லை, இந்த கோரிக்கை பெய்ஜிங்கால் ஏற்க முடியாததாக கருதப்படுகிறது.

சீனத் தொலைத்தொடர்பு நிறுவனம் ஹூவாய்க்கு எதிரான தடைகளை நீக்க வேண்டுமென்ற அதன் கோரிக்கைகளை அமெரிக்கா பூர்த்தி செய்யாவிட்டால் விவாதங்களைத் தொடர முடியாது என்று அக்கூட்டத்திற்கு முன்னதாக சீனா வலியுறுத்தி இருந்தது.

ஹூவாய் இறக்குமதி தடை பட்டியலில் (Entity List) வைக்கப்பட்டுள்ளது, இதன் அர்த்தம் ஹூவாயின் அத்தியாவசிய துணை பாகங்களை விற்பனை செய்ய விரும்புகின்ற அமெரிக்க நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். இந்நடவடிக்கை அந்நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளை முடக்க நோக்கம் கொண்டிருப்பதுடன், அது அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய வாரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பைக் கொண்டிருக்கிறது.

ஹூவாய் மீது தொங்கி கொண்டிருக்கும் இந்த அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது. வர்த்தகத்துறையின் முடிவை ட்ரம்ப் இன்னும் மாற்றவில்லை — பேச்சுவார்த்தைகளின் முடிவில் தான் பொருட்களின் பட்டியல் பிரச்சினை தீர்க்கப்படுமென கூறிவிட்டார். அமெரிக்க நிறுவனங்கள் ஹூவாய்க்கு பண்டங்களை அனுப்புவதற்கு அனுமதிப்பது மீதான ஒரு வெற்று பொறுப்புறுதியை மட்டுமே அவர் வழங்கினார். இதன் அர்த்தம் என்ன என்பது சிறிதும் தெளிவாக இல்லை, ஏனென்றால் ட்ரம்ப் அவரே கூறுவதைப் போல "மிகப் பெரியளவில் ஒரு தேசிய அவசரகாலநிலை பிரச்சினையை தன்னுள் கொண்டிருக்காத சாதனங்களை குறித்து பேசி வருகிறோம்” என்றார்.

ஆனால் உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்தைப் பொறுத்த வரையில், அத்துடன் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டு கட்சிகளிலும் உள்ள அதன் செய்தி தொடர்பாளர்களைப் பொறுத்த வரையிலும் கூட, ஹூவாயின் இருப்பும் மற்றும் சீனாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை விரிவாக்குவதற்கான அதன் முன்நகர்வுக்கு அது என்ன முக்கியத்துவம் கொண்டுள்ளதோ அதைக் குறித்தும், அமெரிக்கா அதற்கு அவசியமான அனைத்து வழிவகைகளையும் பூர்த்தி செய்ய தீர்மானமாக இருக்க வேண்டிய "ஒரு மிகப்பெரிய தேசிய அவசரகாலநிலையில்" இருப்பதாக அவை கவலை கொண்டுள்ளன.

ஹூவாய் மீதான ட்ரம்பின் "விட்டுக்கொடுப்பு" அரசியல் வட்டாரத்தின் இருதரப்பில் இருந்தும் உடனடியாக தாக்கப்பட்டது.

“வர்த்தகத்தில் சீனாவை நியாயமாக செயல்படச் செய்வதற்கான ஒருசில ஆற்றல்வாய்ந்த நிறைவேற்று சாதனங்களில் ஒன்று ஹூவாய். ட்ரம்ப் பின்வாங்கினால், அவர் அவ்வாறு செய்வதாக தான் தோன்றுகிறது, அது சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மாற்றுவதற்கான நமது திறமையைக் கடுமையாக குறைத்துவிடும்,” என்று செனட் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவர் சார்லஸ் சூமர் தெரிவித்தார்.

செனட் சபையின் பிரபல குடியரசு கட்சியாளரும் சீன-விரோத போர்வெறியருமான மார்க்கோ ரூபியோ இன்னும் ஒருபடி மேலே சென்றார். “ஜனாதிபதி ட்ரம்ப் உண்மையில் ஹூவாய் மீதான சமீபத்திய தடைகளை நீக்குவதற்குப் பேரம்பேசி இருந்தால், பின்னர் நாங்கள் அந்த தடைகளை சட்டமசோதா மூலமாக மீண்டும் கொண்டு வர வேண்டியிருக்கும். மேலும் அது வீட்டோ தடுப்பதிகாரத்தாலும் தடுக்க முடியாதவாறு மிகப்பெரும் பெரும்பான்மையில் நிறைவேற்றப்படும்,” என்று ட்வீட் செய்தார்.

ஜி20 கூட்டம், சர்வதேச உறவுகளில் முழுமையான ஸ்திரமின்மை, உடன்படிக்கைகள் செய்வதும் பின்னர் முறித்து கொள்வதும், இத்துடன் சேர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார மோதல்கள் ஆகியவை உலக மக்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை வழங்குகின்றன: ஒரு புதிய உலக போருக்கான நிலைமைகள் வேகமாக முதிர்ந்து வருகின்றன என்பதோடு அது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில், இந்த முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையையும் மற்றும் எதிர்விரோத தேசிய-அரசு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளாக உலகம் பிளவுபட்டிருப்பதையும் முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக அதன் மூலாதாரத்தில் உள்ள பிரச்சினையை கையாள, உலகத் தொழிலாள வர்க்கத்தினது ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே தற்போதைய இந்த மிகத் தெளிவான அபாயத்தைத் தோற்கடிக்க முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com