Saturday, July 27, 2019

ஏன் இந்த பாரபட்சமும் புறக்கணிப்பும்? மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வெளிவாரிப்பட்டதாரிகள்!

வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மகஜர் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை(26) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு சென்ற அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் முஹம்மட் ஜெஸீர் மகஜரை கையளித்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஒன்றிய தலைவர் முஹம்மட் ஜெஸீர் ,

அரசாங்கமானது எமது பட்டதாரிகள் விடயத்தில் பாரிய துரோகத்தை செய்துள்ளது.இந்த அநீதிக்கு நியாயம் கோரி மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தற்போது மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்.பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்வதாக கூறிய இந்த அரசாங்கம் வேலையற்ற பட்டதாரிகள் விடயத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பது வேதனை தருகிறது.கடந்த கால அரசாங்கங்கள் 70 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான வேலைவாய்ப்புகளை உள்வாரி வெளிவாரி என்ற பிரிவினை இன்றி வழங்கியுள்ளது.அந்த கால அரசாங்கத்தில் இல்லாத சிக்கல்கள் தற்போதுள்ள அரசாங்க நியமனங்களில் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள எம்மால் முடியாது.இந்த அரசாங்கம் பட்டதாரிகள் விடயத்தில் அலட்சிய போக்கில் நடக்கின்றது என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பட்டசான்றிதழை உடைய உள்வாரி வெளிவாரி வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் கடந்த கால அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பை பெற்றனர்.எனினும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் இன்று இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது.உள்வாரி பட்டதாரிகளை மாத்திரமே உள்வாங்கி வெளிவாரி பட்டதாரிகளை நிராகரித்துள்ளது.இவ்வாறான வேறுபடுத்தல்களை அரசாங்கம் மேற்கொண்டு எமக்குள் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்.எமது இந்த மகஜர் கையளிக்கப்பட்ட முயற்சி உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க கூடாது என்பதல்ல.எல்லோருக்கும் சமத்துவமாக வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.இந்த வேலைவாய்ப்பு நியமனத்தில் எல்லா பட்டதாரிகளுக்கும் சமவுரிமை உள்ளது.

ஆனால் வெளிவாரி பட்டதாரிகளுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே மனித உரிமை ஆணைக்குழுவின் உதவியை நாடி வந்துள்ளோம்.இந்த விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவும் உதவும் என்று நம்புகின்றோம்.எமக்கான அநீதியை ஏற்படுத்திய இந்த அரசாங்கத்தின் எதிர்கால இருப்பு தீர்மானிக்கும் சக்தி இந்த பட்டதாரிகள் என்பதை பிரதமர் ஜனாதிபதி விளங்கி கொள்ள வேண்டும்.நிச்சயமாக எமது உரிமை மறுக்கப்பட்டால் எதிர்கால தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை சிந்திக்க வேண்டி ஏற்படும்.


சுமார் 65 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் நாட்டில் உள்ள நிலையில் அம்பாறையில் 3 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர்.இதில் தற்போது உள்வாரி வேலையற்ற பட்டதாரிகள் 700க்கு குறைவானோரே இந்த வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு புறக்கணிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலை கேள்விக்குறியாக மாறி உள்ளது.வாழ்வாதாரம் மோசமடைந்துள்ளது.35 வயதிற்கு அதிகமானோரும் தற்போது எதுவித வேலைவாய்ப்பும் இன்றி உள்ளனர்.எனவே இந்த அரசாங்கம் இது குறித்து சுமூகமான தீர்வை காண முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் 3 நாட்கள் கடந்துள்ள போதிலும் எமது அரசியல் தலைமைகளுக்கு பல்வேறு வழிகளில் சுட்டிக்காட்டி இருந்தோம்.ஆனால் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.இவர்களால் எமது சமூகத்திற்கு எதுவித பிரயோசனமும் இல்லை என்பதே எண்ணத் தோன்றுகின்றது.

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் தாம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் நாடு பூராகவும் ஊடகங்கள் மூலமாக தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றுகூடி கலந்துரையாடி வருவதுடன் அந்த பகுதிகளில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டையும் பதிவுசெய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29 30ஆம் திகதிகளில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்கள் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பட்டியலில் வெளிவாரிப் பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த எந்தவொரு பட்டதாரிகளும் உள்வாங்கப்படவில்லை என பட்டியல்கள் மூலம் கண்டறியப்படுவதாக சுட்டிக்காட்டுறது.

தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் அண்மையில் மாகாண சபைகளில் நியமனம் வழங்கப்பட்ட சிலரின் பெயர்களும் உள்ளடங்குவதாகவும் இதன் காரணமாக புறக்கணிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதேச செயலகங்களில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு அதில் தோற்றிய உள்வாரியான 16000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கையை இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த பட்டதாரி நியமனத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற வெளிவாரிப்பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படவில்லை என்று வெளிவாரி பட்டதாரிகள் கவலையுடன் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.கடந்த அரசில் வழங்கப்பட்ட எந்த நியமானத்திலும் பட்டதாரிகளை உள்வாரி பட்டதாரிகள் வெளிவாரி பட்டதாரிகள் என வேறுபடுத்தாது அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புக்களை வழங்கினர். அதுபோன்று இந்த அரசும் சகல பட்டதாரிகளையும் வேற்றுமையில்லாத முறையில் கணித்து தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com