Monday, June 3, 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒருமித்து தமது பதவிகளை ராஜனாமா செய்து கொண்டனர்.

பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஆளுனர்களான ஹிஸ்புல்லா , அஸாத் சாலியை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும், அந்தப் பதவிகளை இன்று மாலை கூட்டாக இராஜிநாமா செய்துள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று மாலை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் இந்தத் தகவலை அறிவித்தனர்.

இதற்கமைய நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் என 9 முஸ்லிம் அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசீம், எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோரும், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தமது பதவிகளைத் துறந்துள்ளனர்.

புதவியை துறந்த அவர்கள் „அரசைப் பலவீனப்படுத்த இடமளிக்கமாட்டோம் என்றம் நாடாளுமன்றத்தில் பின்னிலை எம்.பிக்களாகச் செயற்பட்டு அரசுக்கான ஆதரவை வழங்குவோம்.' என்றும் தெரிவித்துள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'முஸ்லிம் அரசியல்வாதிகளை மையப்படுத்தி நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இரத்தக்களரியை உருவாக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, நாட்டின் நலன், அமைதி உட்பட மேலும் பல காரணங்களைக் கருத்தில்கொண்டே நாம் அமைச்சுப் பதவிகளைத் துறக்கும் முடிவை எடுத்தோம். சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றோம்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பிரதமருடனும், அமைச்சர்களுடனும் கலந்துரையாடினோம்.

பிரதமருடன் பேசியதன் பின்னர் பதவிகளைக் கூட்டாக இராஜிநாமா செய்யும் முடிவை அறிவித்துள்ளோம்..

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.

புனித நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அப்பாவி முஸ்லிம் மக்களைக் கைதுசெய்ய வேண்டாம் எனவும், அவர்களை அச்சுறுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்

அதேவேளை, தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களும் வதைக்கப்படுகின்றனர். இவை நிறுத்தப்படவேண்டும். அனைத்துவித நடவடிக்கைகளும் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும். அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

தீவிரவாதத்துக்கு உதவியவர்கள் யாராவது இருப்பின் அவர்களுக்குரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இதற்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்' – என்றார்.

இங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம், 'நியாயமான விசாரணைகளுக்கு இடமளித்து அமைச்சுப் பதவிகளைத் துறக்கின்றோம்' – என்றார்.

இதேநேரம் இன்று மதியம் இரு ஆளுனர்களும் பதவி துறக்கின்றார்கள் என்ற செய்தி மத்திய மாகாண ஆளுனர் ஊடாக உண்ணாவிரம் இருந்து வந்த ரத்ன தேரருக்க தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனது உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com