Wednesday, June 26, 2019

‘மீண்டும் தாக்குதல்கள் நடக்கலாம்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மீண்டும் தாக்குதல் நடக்கலாம். பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்து விட்டது என கூற முடியாது. அந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது. என்று சிறிலங்கா இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்கும், தெரிவுக்குழு முன்னிலையில் இன்று பிற்பகல் ஊடகங்களின் முன்பாக அளித்த சாட்சியத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

கேள்வி:- இந்த தாக்குதலை அடுத்து நீங்கள் முன்னெடுத்த தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது, அவற்றை தடுக்கும் வகையில் எவரதும் எந்த அரசியல் தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுத்தனரா?

பதில்:- நீங்கள் கேட்கும் கேள்வி தெளிவானது, ஏப்ரல் 21 ஆம் நாள் சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவ தளபதி என்ற வகையில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தினேன். எனக்குரிய அதிகாரங்களுக்கமைய தேடுதல்கள் , விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

அந்த சந்தர்ப்பத்தின் போது ஏப்ரல் 26 ஆம் நாள் இசான் அஹமட் என்பவர் தெகிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது எனக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி அழைப்பை எடுத்தார். எனது தொலைபேசி இலகத்தை அனைவரும் அறிவார்கள்.

அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள். இதன்படி அவரும் கதைத்துள்ளார். குறித்த தினத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைது செய்தீர்களா என கேட்டார். அது பற்றி எனக்கு தெரியாது நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன்.

பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன். இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாரா என கேட்டேன். பின்னர் கேட்ட போது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பாக உறுதியாகியிருந்தது.

அப்போது இது பற்றி இன்னும் ஒன்றரை ஆண்டுகளின் பின்னரே இனி தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டுமென கூறியிருந்தேன். பயங்கரவாத தடுப்பு பிரிவில் அவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு விசாரணைக்காக வைத்திருக்க முடியும். என்ற காரணத்திற்காகவே நான் அவ்வாறு கூறியிருந்தேன். எவ்வாறாயினும் அவர் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை.

கோரிக்கையையே செய்திருந்தார். தனது அமைச்சில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் என்பதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறே கூறியிருந்தார், அதை தவிர்ந்து அமைச்சரோ அல்லது வேறு எந்த அதிகாரியோ எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை.

கேள்வி:- வேறு அமைச்சர்கள் எவராவது அழுத்தம் கொடுக்கவில்லையா?

பதில்:- இல்லை, விசாரணைகள் இடம்பெற்ற நேரங்களில் சிலர் குறித்து தேடிப் பார்ப்போம். ஆனால் அதனை தவிர எந்த தரப்பில் இருந்தும் அழுத்தம் வரவில்லை. குறிப்பாக இந்த அமைச்சர் (றிசாத் ) எக்காரணம் கொண்டும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

கேள்வி:- நீங்கள் உங்களின் விசாரணைகளை முன்னெடுக்க சகல சுதந்திரமும் இருந்தது அப்படித்தானே?

பதில்:- இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபரோ பிரதமரோ எந்தவொரு அமைச்சரோ எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இராணுவம் சுயாதீனமாக செயற்படவே முடிந்தது.

குழு:- பாதுகாப்பு விவகாரங்களில் சில முக்கிய அம்சங்கள் உள்ள காரணத்தினால் வேண்டுமென்றால் ஊடகங்களை நீக்கிவிட்டு விசாரணைகளை நடத்துவோம்.

சரத் பொன்சேகா:- முதல் கேள்வியுடன் தொடர்புபட்ட சில கேள்விகள் உள்ளன அவற்றை கேட்டுவிட்டு அனுப்பலாம்.

கேள்வி:- ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் என நீங்கள் ஏன் கூறினீர்கள்?

பதில்:- எனது அறிவுக்கு அமைய பயங்கரவாத தடுப்புசட்டமே அப்போது இருந்தது. அதன் பின்னர் அவசரகால சட்டம். இந்த காலத்தில் ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் தடுப்பில் தடுத்து விசாரணைகளை நடத்த முடியும் என்பது எனக்கு தெரியும். அண்மையில் இந்த சட்டம் ஒரு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

எனினும் அந்த தொலைபேசி அழைப்பிற்கு நான் யதார்த்தமாக ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் என பதில் தெரிவித்தேன். இதில் நான் ஆழமாக சிந்திக்கவில்லை. இவரை ஒன்றரை வருடங்கள் கைது செய்து தடுப்பில் வைத்திருப்பேன் என நான் வேண்டுமென்று கூறவில்லை.கேள்வி:- கைது செய்யப்பட்ட போது அவர் பயங்கரவாதியென எப்படி தெரியும்? தெரியாது தானே?

பதில்:- சாதாரணமான அறிவின் படி எம்மால் அதனை தெரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன் எமது புலனாய்வு துறையினருக்கு அப்போதே ஓரளவு உறுதியான தகவல்கள் வந்துவிட்டது. அதை வைத்தே கூறினேன். எமக்கு கிடைத்த தகவலின் படி இந்த நபர் குறித்த அமைப்புடன் தொடர்பில் உள்ளார் என்று நாம் அறிந்திருந்தோம். புலனாய்வு துறையும் அதனை எமக்கு உறுதிப்படுத்தியிருந்தது.

கேள்வி:- கடந்த 21ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் போதும் இப்போதும் உள்ள நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் எவ்வாறு உள்ளது? இந்த பயங்கரவாத செயற்பாடுகளை வெற்றி கொள்ள முடிந்துள்ளதா?

பதில்:- இந்த பயங்கரவாதம் என்பது சர்வதேச பயங்கரவாதமாகும். அதற்கே நாம் முகங்கொடுத்து வருகின்றோம்.தெரியாத எதிரியோடு நாம் போராடிக் கொண்டுள்ளோம். இந்த பயங்கரவாத தாக்குதல் இதற்கு முன்னர் இருந்த பயங்கரவாத தாக்குதலை விட மாறுபட்ட ஒன்றாகும். இப்போது இந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.

முப்படை மற்றும் காவல்துறை இணைந்து இந்த பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் இந்த பயங்கரவாதம் முடிந்து விட்டது என்ற வார்த்தையை எம்மால் கூற முடியாது. எவ்வாறு இருப்பினும் இறுதியை பார்க்கும் வரையில் போராடி கொன்றுள்ளோம்.

அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்தும் கைதுகளை மேற்கொண்டு விசாரணைகளை நடத்த எமக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு பின்னர் அரசாங்கமாக இணைந்து பேச்சு நடத்தி அடுத்த கட்டத்தை ஆராய வேண்டும்.

முன்னர் இருந்த நிலைமையை விட இப்போது முப்படை மற்றும் காவல்துறை இடையிலான தொடர்பு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு செயலர் ஒருவராக முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரை நியமித்துள்ள காரணத்தினாலும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரி யாக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாலும் நெருக்கம் அதிகரித்துள்ளது.

அனைவரும் ஒன்றாக இணைந்து பேச முடிகின்றது. ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புக் கூட்டம், புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அதுவும் அனைத்துலக நாடுகளுடன் உள்ள தொடர்பும் இந்தியாவின் ஒத்துழைப்பும் எமக்கு பலமாக இன்று அமைந்துள்ளது.

கேள்வி:- எமது புலனாய்வு துறை ஏனைய நாடுகளின் புலனாய்வு துறை போன்று அல்லது யுத்த காலகட்டத்தில் சரத் பொன்சேகாவிடம் இருந்த புலனாய்வு போன்று பலமாக உள்ளதா?

பதில்:- அந்த யுத்தம் வேறு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இருந்த அணி இன்று இல்லை. யுத்தத்தை ஆரம்பித்தத்தைப்போல அல்லாது முடிக்கும் போது மிகவும் பலமாகவும் சர்வதேசத்தினால் ஏற்றுகொள்ளக்கூடிய வகையிலும் அத்துடன் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்கும் வகையில் எமது புலனாய்வுத்துறை செயற்பட்டது.

பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் சில பின்னடைவுகள் இருக்கலாம். ஆனால் எவ்வாறு இருப்பினும் மீண்டும் ஒன்றிணைந்து பலமாக எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளை கட்டியெழுப்ப வேண்டிய தேவையே எமக்கு உள்ளது.

கேள்வி:- எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தினால் இது பலவீனமடைந்துள்ளது என கூற முடியாது தானே?

பதில்:- அவ்வாறு கூற முடியாது, ஒரு சிலர் கைது செய்யப்பட்டதால் அல்லது நீக்கப்பட்டதால் புலனாய்வுத்துறை பலவீனமாக மாறும் என நான் நினைக்கவில்லை. இதற்கு மாற்றீடுகள் கண்டறியப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபர்கள் இறந்திருந்தால் என்ன செய்வது-. புலனாய்வு துறையினர் இறந்துள்ளனர். அதனால் புலனாய்வு வீழ்ச்சி கண்டுள்ளது என கூற முடியாது.

கேள்வி:- ஆரம்பத்தில் சாட்சியத்துக்கு வந்த பாதுகாப்பு செயலர் கூறினார் பயங்கரவாதம் உடனடி அச்சுறுத்தல் மற்றும் நீண்டகால அச்சுறுத்தல் என்ற காரணிகளை கூறினார். பயங்கரவாதிகளுக்கு அவ்வாறு ஒன்று இருக்க வாய்ப்பில்லை. எனினும் அவசரகால அச்சுறுத்தல் 99 வீதம் முடிந்துள்ளது என அவர் கூறி இரண்டு வாரங்களில் கண்டியில் இருந்து தற்கொலை தாரி ஒருவரும், சவுதியில் இருந்ததாக சிலரும் கைதுசெய்யப்பட்டனர். அப்படியென்றால் 99 வீதம் முடிந்ததாக கூறிய பின்னர் இந்த கைதுகள் எல்லாம் 1 வீத அச்சுறுத்தலா?

பதில்:- அவர் கூறிய கருத்து குறித்து என்னால் ஒன்றும் கூற முடியாது. ஆனால் இன்று அச்சுறுத்தல் நிலைமைகள் குறைவாகவே உள்ளது. குறிப்பாக சாய்ந்தமருது சம்பவத்தின் பின்னர் நிலைமைகளை கட்டுப்படுத்த முடிந்தது.

எனினும் 100 வீதம் கட்டுப்பாட்டில் உள்ளது என கூற முடியாது. ஆனால் அதிகமாக நிலைமைகள் எமது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. வீதமாக கூறுவதை விட அவசரமாக ஏதும் நடக்கும் என்ற அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. இந்த நபர்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட பின்னர் இந்த நிலைமை நீங்கியுள்ளது.

கேள்வி:- அப்படியென்றால் நீங்கள் கூறுவது முதல் இரு நாட்களில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைப்புகளை கண்டறிந்து விட்டீர்கள், நபர்களை கைது செய்யவே காலதாமதம் அப்படியா?

பதில்:- அப்படித்தான்.

கேள்வி:- பயங்கரவாதத்துடன் நாம் நெருக்கமாக செயற்பட்டோம், பயங்கரவாத தாக்குதல் அடுத்தடுத்து நடக்காதே, ஒருதரம் குண்டு வெடித்து தேடுதல் நடந்தவுடன் இனி அச்சுறுத்தல் இல்லை என ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஆம், இவ்வாறான தாக்குதலுக்கு கால எல்லை இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நீண்டகால திட்டங்களில் இது நடக்கலாம்.

இனியும் எவருக்கும் தேவை இருப்பின் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். அதனால் தான் தேடுதலில் தொடர்ந்தும் இராணுவத்தை ஈடுபடுத்தி வைத்துள்ளோம். பலப்படுத்தியும் உள்ளோம். ஆனால் இந்த பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்துவிட்டது என நாம் கூற முடியாது. இந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது.

விடுதலைப் புலிகளை கூட நாம் இன்னமும் தேடிக்கொண்டு தான் உள்ளோம். அவர்களும் இன்றும் சில சில புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

ஆகவே இராணுவமாக நாம் இதனை கருத்தில் கொள்ளவேண்டும், விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அந்த அமைப்பின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட பின்னர் ஒரு சில தலைவர்கள் சரணடைந்த பின்னரும் மேலும் பலர் சரணடைந்த பின்னர் அந்த அமைப்பு அப்படியே வீழ்ச்சி கண்டு விட்டது. ஆனால் இது அவ்வாறு அல்ல.

கேள்வி:- இந்த தாக்குதல் ஒரு நேரத்தில் ஏழு எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றது, புலிகள் கூட அவ்வாறு ஒருநாளும் தாக்கியதில்லை. ஒரு நேரத்தில் ஒரு தாக்குதல் தான், இது அவ்வாறு அல்ல அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய நோக்கம் உள்ளது. இதில் பயங்கரவாத்தை கூறவேண்டியதை செய்து முடிக்க ஒரு நபர் இருந்தால் போதும்.

பதில்:- ஆம், இந்த தக்குதல் ஆயுதம் மூலமாக மட்டும் அல்ல வாகனம் மூலமாகவோ விமானம், வேறு ஏதேனும் ஒன்றின் மூலமாக தாக்குதல் நடத்த முடியும். எல்லா நாடுகளிலும் இது நடக்கலாம்.

இந்த கேள்விகளின் பின்னர் ஊடகங்களை வெளியே அனுப்பி விட்டு சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இராணுவத் தளபதியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

வழிமூலம் – வீரகேசரி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com