Thursday, May 16, 2019

ISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவகங்களை மையப்படுத்தி இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல்கள் அதிகமான ஊடகங்களையும் தன்பால் ஈர்த்ததுடன், தற்சமயம் அதனுடைய வீரியம் ஊடகங்களில் சற்று ஓய்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. எனினும் தாக்குதல்களின் பின்னணிகளை ஆராயும் முகமாக நாட்டில் பல தேடுதல் நடவடிக்கைகளும், கைதுகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதும் குறிப்படத்தக்கதாகும்.

அத்துடன் குறித்த தாக்குதல்களில் மரணித்த சகோதர மத மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன், மேற்படி மிருகத்தனமான தாக்குதலானது மனிதம் வாழும் இதயங்களால் கண்டிக்ககூடிதோர் நிகழ்வு என்பதில் முஸ்லிம்கள் யாவரும் ஏக கருத்தை கொண்டுள்ளார்கள் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகின்றேன். அதுமாத்திரமின்றி தாக்குதல்களின் பிற்பாடு முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கண்மூடித்தனமான பாதுகாப்பு கெடுபிடிகளும், முஸ்லிம் சமூகத்தின் மீது கரிபூச முனைகின்ற பல இனவாத குழுக்களின் செயற்பாடுகளையும் இவ்விடத்தில் கண்டித்தே ஆக வேண்டும். இவற்றை விரிவாக நோக்க முடியும் எனினும் வேறு ஒரு ஆக்கத்தில் தனிப்பட அவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன்.


இவ்வாறான எமது நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த கசப்பான நிகழ்வொன்று நடந்தேறி முடிந்த கையோடு தாக்குதல்களுக்கான மூல காரணங்கள் பற்றிய வாதங்களும், பக்க நியாயங்களும் பலவாறு முன்வைக்கப்பட்டன. அந்தவரிசையில் குறித்த தாக்குதல்களின் பின்னணி இலங்கையின் உள்ளக அரசியல் குளறுபடிகளின் அரங்கேற்றமா?, மேற்கு அரசியலின் அசைபோடலா..?, இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கால்பதிப்பா..?, போதைப்பொருள் மாபியாக்களின் சூழ்ச்சிகளா?, அல்லது சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுறுவலா.? என்றெல்லாம் பலரும் பலவாறாக கருத்துக்களை ஊகித்துவரும் சந்தர்ப்பத்தில் அன்மையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதனோடு இணைந்த சாதகமான அரசியல் காரணிகள் பற்றி தெளிவடைய வேண்டிய ஒரு கட்டாயம் எம் மத்தியிலும், பிற சமூக மக்கள் மத்தியிலும் சமகாலத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

அந்தவகையில் மேற்படி தாக்குதல் இடம்பெற்று சில மணிநேரங்களிலே குறித்த தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது, அவற்றுள் ஆரம்பம் தொட்டே முஸ்லிம்கள் மீது பழியை போட வேண்டும் எனும் ஒருமித்த கொள்கையில் பல இனவாத்ததை கக்குகின்ற ஊடகங்களும், அரசியல் வாதிகளும் மற்றும் சில வெளிநாட்டு சக்திகளும் முனைப்புக் காட்டி வந்தன. எனினும் நடுநிலை சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் பலரும் அவற்றை நிராகரித்திருந்த நிலையில், தாக்குதல் இடம்பெற்று மூன்று தினங்கள் கடந்ததன் பிற்பாடே சர்வதேச பயங்கரவாத குழுவான ISIS எனும் இஸ்லாமிய வரையறைகளை மீறி செயற்படுகின்ற ஆயுத குழு அதற்கான முழு உரிமையை கோரியிருந்தது.

இவ்வாறு ISIS எனும் தீவிரவாத சிந்தனை கொண்ட குழுவின் உரிமை கோரலின் பிற்பாடு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் சற்று பெருமூச்சு விட்டது என்றே கூற முடியும் காரணம், முஸ்லிம்கள் ISIS எனும் குழு மீது கொண்டிருந்த கருத்தியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த விடயங்கள் முற்றிலும் முஸ்லிம்களுக்கு சாதகமானதாகவே காணப்பட்டது. அதாவது ISIS இயக்கத்தின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் நிபந்தனைகளை மீறிய தீவிரவாத போக்குகள் என்பவற்றை கருத்திற்கொண்டு கடந்த காலங்களில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது. இவர்கள் முற்றிலும் மாறுபட்ட கொள்கையினை கொண்டவர்கள் என பகிரங்கமாக அறிவுறுத்தல்களை விடுத்திருந்தனர்.

மேலும் பெருமூச்சு விடுவதற்கான மற்றுமொரு காரணமே முஸ்லிம் சமூகம் மத்திய கிழக்கும், அதனை சார்ந்த இஸ்லாமிய நாடுகளினதும் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக அடிப்படை அறிவினை கொண்டவர்களாக திகழ்வதாகும். அதாவது ISIS பற்றிய தெளிவான எண்ணக்கரு முஸ்லிம்களின் உள்ளங்களில் தோலுரித்து வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ISIS எனும் குழுவானது மேற்கத்திய வல்லரசுகளின் கைக்கூலிகள் என்பதையும் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் விரல்காட்டி பொம்மைகள் என்பதையும் முஸ்லிம்களாகிய அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆனாலும் எமது நாட்டின் அரசியலில் கூட தெளிவில்லாத வேற்றுமத சகோதரர்கள் பலரும் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்று அலட்டிக்கொள்கின்றார்கள். இங்கு அவர்களை பொறுத்தவரை தப்பில்லை என்றே கூற வேண்டும் காரணம் அவர்களின் குறுகிய அறிவிற்கு எட்டியது போலும் அவர்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அடுத்து நான் மேற்குறிப்பிட்டது போன்று இந்த ISIS எனும் பயங்கரவாத குழு அமெரிக்காவின் கைக்கூலிகள் தான் என்பதற்கு பல ஆதாரங்களை முன்வைக்க முடியும் அது இங்கு என்னுடைய தலைப்பின் நோக்கமல்ல. ஆனாலும் நோக்கத்தை எடுத்தியம்ப சில ஆதாரங்களை முன்வைக்கின்றேன் அதாவது, எங்கெல்லாம் அமெரிக்காவிற்கு தேவைகள் எழுகிறதோ அங்கெல்லாம் ISIS இருப்பார்கள் இதனை கடந்த 10 வருடங்கள் பின்னோக்கிய மத்திய கிழக்கில் தெளிவாக அவதானிக்க முடிகிறது.

அத்துடன் சமகாலத்தில் அமெரிக்கா தனது அரசியல் கொள்கைகளின் நன்மை நாடி கையாளுகின்ற உத்திகளில் ஒன்றே இந்த ISIS ஆகும். மாறாக கடந்த 70 வருடங்கள் பின்னோக்கி அமெரிக்காவின் நரிக்கலைகளை பார்க்குமிடத்து அவை இவற்றை விடவும் விசித்திரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டதை கண்ணுற முடிகின்றது. அதாவது முடுக்கி விடப்பட்ட ஈராக்-ஈரான் யுத்தத்தில் ஈராக் செயற்பட்ட விதமானது காட்டை கலைத்து பருந்துக்கு இரையாக்கிய செயலாகவே பார்க்க முடிகிறது. ஆனாலும் இங்கு அமெரிக்கா தனது நரிக்கலையை பயன்படுத்திய விதமானது மிகவும் நுணுக்கமாகவும், ராஜதந்திர மகோன்னதத் தன்மை வாய்ந்ததாகவும் அமைந்திருந்தது. அதாவது அமெரிக்கா ஈராக்கை மூட்டிவிடும் பணியை முன்னெடுத்ததுடன், ஊடகங்களை தன்கையகப்படுத்தி ஊடக ராஜதந்திரத்தை மேற்கொண்டுவந்தது. இதன் போது செய்தித் தணிக்கை, செய்தித்திரிபு, வதந்திகளை பரப்பல், செய்திகளை சோடனை செய்தல் போன்ற உத்திகளை கையாண்டது. இவ்வாறு தனது அதிகாரத்தை வளம்பொருந்திய நாடுகளில் நிலைநாட்ட பல தந்திரோபாயங்களை கையாண்டு வந்த அமெரிக்கா சமகாலத்தில் ISIS இனை பயன்படுத்துவது ஆதார பூர்வமாக நிறுவப்பட்ட உண்மையாகும்.

இப்போது எனது தலைப்பினுள் நேரடியாக நுழையலாம் என கருதுகின்றேன். அதாவது அமெரிக்காவின் கைக்கூலிகள் தான் இவர்கள் எனவும், இந்த ISIS இனாலே இலங்கையில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றது என்றும் வைத்துக்கொண்டால், அடுத்த கணம் இலங்கை மீது அமெரிக்காவின் பார்வை திருப்புவதற்கான காரணங்கள் தான் என்ன? மத்தியகிழக்கினுள் மாத்திரம் வரையறுக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்த இந்த ISIS இனை இலங்கைக்குள் உடபுகுத்துவதன் ஊடாக அமெரிக்க பிணம்தின்ணி கழுகுகள் அடைய விழையும் இலாபங்கள் தான் என்ன?? இந்து ஆசிய கடற்பரப்பில் அமெரிக்காவிற்கான தேவைகள் என்ன? மற்றும் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் முன்னெடுப்புகள் எவ்வாறு அமைந்திருந்தது என்றெல்லாம் ஆய வேண்டிய தேவை இயல்பாகவே எழுகின்றது. எனவே இது தொடர்பாக சற்று விரிவாக நோக்கலாம் என்று நினைக்கின்றேன்.

குறிப்பாக எமது நாட்டின் அரசியல் வாரலாற்றை ஒரு தடவை பின்னோக்கி பார்க்கும் போது கடந்த 70 வருட கால அரசியலில் மாறி மாறி ஆட்சி செய்த இந்த பச்சை, நீல அரசாங்கங்கள் கொள்கைரீதியாக உலக அரசியலை தழுவியே தங்களுடைய ஆட்சியை நகர்த்தி வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அதாவது பண்டாரநாயக அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுதந்திரக் கட்சியானது. வல்லரசுகளான சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை பின்பற்றி பொதுவுடமைப் பொருளாதார கொள்கைகளை கடைப்பிடித்து வந்துள்ளதுடன், டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட ஐக்கிய தேசிய கட்சியானது மேற்கத்திய வல்லரசான அமெரிக்காவின் முதலாளித்துவம் சார்ந்த கொள்கைகளை அடியொட்டியே செயல்பட்டு வந்துள்ளமையும் தெளிவாக வரலாறுகளின் ஊடாக அறியப்படுகின்றது.

மேலும் பன்னெடுங் காலமாக அமெரிக்கா ஆசிய பசுபிக் கடல் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் ஒரு வல்லமைபொருந்திய சக்தியாக தனது கால்களை அகலப் பதிக்கவேண்டும் எனும் கொள்கையில் திடமாக செயற்பட்டு வருவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதனை அமெரிக்காவின் தனது ஆதரவு நாடுகளையும், வளம் பொருந்திய நடுகளையும் தனது நட்பு நாட்களாக இணைத்துக்கொள்ளும் மேலதிக்க கொள்கைகளை ஆய்வதனூடாக தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதற்கு சிறந்த உதராணமாக மூண்டெழுந்த வியட்நாமிய யுத்தத்தை குறிப்பிட முடியும் இப்போரின் போதும் அமெரிக்கா தன்னையும் ஒரு பங்காளராக மாற்ற கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டும் இருந்தது.

இவ்வாறான, அமெரிக்காவின் பிராந்திய அதிகார எல்லை விரிவாக்கம் மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் தன்னிகரற்ற ஆதிக்கத்தை கட்டுப்படுத்தல் போன்ற இன்னோரன்ன காரணங்களை மையப்படுத்தி, அமெரிக்கா ஆசிய பசுபிக் கடற்பரப்பில் தனக்கான ஒரு இடத்தினை காலா காலமாக தேடிவந்துள்ளது. அந்தவரிசையில் இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்குகின்ற இலங்கை மீதும் அமெரிக்காவுக்கு தீராத ஒரு ஆசை இருந்தே வந்துள்ளது. அந்த ஆசை எழுவதில் விசித்திரம் ஒன்றும் இல்லை தான், காரணம் அந்த ஆசை எழுவதற்கு இன்னும் பல ஏதுவான காரணங்களும் இல்லாமல் இல்லை. அதாவது போர்த்துக்கேயர் தொடக்கம் ஒல்லாந்தர் ஈராக ஆங்கிலேயர் வரை இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் பற்றி அறிந்து வைத்திருந்ததுடன், நாட்டை கைப்பற்றவும் செய்தார்கள். ஆகவே அமெரிக்காவும் ஆசைகொள்வதில் தப்பில்லையே! ஆனாலும் அமெரிக்கா அந்த ஆசையை ராஜதந்திர முறைகளினூடாக பெற்றுக்கொள்வதற்கு பலதடவைகளில் முனைந்துள்ளது. அதனை நான் மேலே கூறியது போன்று தங்களுடைய கொள்கைகள் சார்ந்த ஐக்கிய தேசிய கட்சியானது இலங்கையில் ஆட்சியை தக்கவைக்கும் போதெல்லாம் அமெரிக்காவும் தனது நோக்கத்தை அடைந்துகொள்ள முயற்சித்தே வந்துள்ளது.

அந்த முயற்சிகளையும், பிரயத்தனங்களையும் சுருக்கமாக விபரிக்கலாம் என்று நினைக்கின்றேன். அதாவது 90 பிந்திய காலப்பகுதிகளில் அமெரிக்கா இலங்கை மீதான கவனத்தை மிகவும் திட்டமிட்டபடியே செலுத்தி வந்துள்ளது. அதாவது இலங்கை மீதான கவனம் எனும் போது அதனை வரையறை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது, ஏனைய நாடுகளை போலல்லாது அமெரிக்காவின் இலங்கை தொடர்பான முன்னெடுப்புகள் ஆரம்பம் தொட்டே வேறுபட்டிருந்தது. அஃது பணம் மற்றும் பொருளாதாரம் சார் இதர காரணிகளை தாண்டி அமெரிக்கா இலங்கையின் இராணுவ மட்டத்தில் இருந்தே தனது நெருக்கத்தை அதிகரிக்க நாடுகின்றது..

அதாவது 90 க்களுக்கு பிற்பாடு அமெரிக்கா இலங்கையில் உள்ள பயங்கரவாத சூழ்நிலைகளை மேற்கோளிட்டு operation balanced style எனும் பெயரில் இராணுவத்தின் கொரில்லா போரை எதிர்கொள்ளும் திறமையை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சியளித்தது. இத்திட்டத்தின் கீழ் green beret எனும் பெயரில் அமெரிக்காவின் அதியுயர் கமாண்டோ அணி ஒன்று இலங்கை இராணுவத்திற்கு தீவிரவாத எதிர்ப்பு தொழிநுட்பம் சார்ந்த பயிற்சிகளை அளித்தது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க இராணுவம் தனது IMET எனும் அமைப்பின் ஊடாக பல பயிற்சிகளை இலங்கை இராணுவத்திற்கு வழங்கி வந்தது.

மேலும் 2000 ஆண்டு காலப்பகுதியில் operation flash style எனும் பெயரில் அமெரிக்க-இலங்கை இருநாட்டு முப்படைகளும் கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இதன் போது அமெரிக்க கடற்படை சீல் அணி மற்றும் special operations squadron என்ற அமெரிக்காவின் முக்கிய இராணுவ அணிகள் பலவும் இந்த கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றன. இதன் போது இராணுவ பயிற்சிகள் மாத்திரமன்றி இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு உளவியல் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இவ்வாறு இலங்கை மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்த சந்தர்ப்பத்தில் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக பதவியேற்கின்றார். இது அமெரிக்காவிற்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலவே இருந்தது. இச்சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த அமெரிக்கா முனைந்தது. இக்காலத்தில் அமெரிக்காவின் வழிகாட்டலிலோ அல்லது அதிஷ்டவசமாகவோ புலிகளுடன் சமாதான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. ஆனாலும் திரைமறைவில் புலிகளை பலவீனப்படுத்தவும், இலங்கை இராணுவத்தை வலுப்படுத்தவும் அமெரிக்கா இலங்கை அரசுக்கு முழு அனுசரணையாக இருந்து வந்தது. இதனை 2002 இல் அக்கால அமெரிக்க தூதுவர் உறுதிப்படுத்தியும் இருந்தார். இதன் போது இராணுவ பயிற்சி மட்டுமல்ல இராணுவ ஆயுதங்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கபட்டதை அவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும் இலங்கை விவகாரத்தில் எல்லைமீறி மூக்கை நுழைத்த அமெரிக்கா அமைதி உடன்படிக்கை இலங்கையில் நடைமுறையில் இருந்த வேளையிலும் கூட தனது அதிசிறப்பு பசுபிக் கமாண்டோ படையணியை இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் புலிகளின் பலம் பலவீனம் போன்ற காரணிகளை ஆயவுக்குற்படுத்தியது. ஆய்வு முடிவில் திருகோணமலையின் தென் கடற்பிராந்தியமானது( மூதூர் பிரதேசம்) புலிகளின் பிடியில் இருப்பதாகவும் இது புலிகளை திருகோணமலை மட்டுமல்லாது நாட்டின் பல பிரதேசங்களைக் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஏதுவாக அமையும் என்றும் அறிக்கையிட்டதுடன், சமாதான ஒப்பந்தத்தையும் மீறி புலிகளுடன் போரிட்டு அதனை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மேலும் அதனை மீட்க வேண்டுமாயின் இலங்கை கடற்படையானது வலிமை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படை தமது பலவீனமான நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூறி தன்னையும் உள்நுழைக்கும் வித்தயை சூட்சுமமாக அரசிடம் கூறிச்சென்றது. ஆனாலும் 2005 இற்கு பிந்திய காலப்பகுதி அமெரிக்காவின் இலங்கை தொடர்பான காய் நகர்த்தல்களுக்க முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக மாறியதை அமெரிக்காவின் துரதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். கைக்கெட்டியது வாயக்கெட்டாத நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. இதற்கான காரணம் 2005 இல் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச அவர்களின் தீவிர பொதுவுடமை சார்பு கொள்கைகள் தான் என்பதை மறுத்துரைக்க முடியாது. மகிந்த பதிவியேற்ற பின்னர் அமெரிக்காவுக்கு இலங்கை பக்கம் தலைவைத்தும் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் போது சீனாவின் பேராதரவுடன் தனது குடும்ப அரசியலை சடுதியாக பிரயோகித்த மகிந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதில் 30 வருடகால கொடும் பயங்கரவாத்ததை நாட்டில் இருந்து துடைத்தெறிந்தார். இதன் போதெல்லாம் மாற்றான் வீட்டுக்குக்காரன் போலும் பார்வையாளராக மாத்திரமே அமெரிக்காவால் இருக்க முடிந்தது. ஆனாலும் அமெரிக்காவிற்கு இலங்கை மீதான தனது தீராத ஆசை முடிந்தபாடில்லை.

அத்துடன் பயங்கரவாத ஒழிப்பை தொடர்ந்து இலங்கையின் மகிந்த தரப்பு அரசனாது சீனாவின், அரச மற்றும் தனியார் துறையினரை கொண்டு அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அத்துடன், இக்காலப்பகுதியில் மற்றுமொரு இலங்கையின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வகையிலான ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுதான் நீண்ட காலமாக இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் ஆய்வு செய்யப்பட்டு வந்த பெற்றோலிய படிவுகள் தொடர்பான அறிக்கையாகும். அந்த ஆய்வினை மேற்கொண்ட இந்திய கெய்ரன் நிறுவனத்தின் அறிக்கையில், 9 ட்ரில்லியன் கன அடிக்கும் அதிகமான இயற்கை எரிவாயுவும் மற்றும் 2 பில்லியன் பீப்பாய்களுக்கு அதிகமான உறைபொருற்களும், கச்சா எண்ணையும் மன்னாரை அண்டிய கடற்பரப்பில் உள்ளதாக 2011 ஆம் ஆண்டளவில் கூறப்பட்டிருந்தது.

இதனை அறிந்த அமெரிக்காவோ நிம்மதி இழந்தது. காரணம் அவர்களின் பார்வையில் இலங்கையின் அமைவிடமும் அதிலும் குறிப்பாக திருகோணமலை துறைமுகமும் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது பிராந்திய இருப்பினை உறுதிசெய்வது ஆகிய இரு பிரதான காரணிகளே மேலோங்கியிருந்தது. ஆனாலும், இவ்வாறான பிரதான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு அண்மையில் சகல வளங்களும் கொண்ட அதாவது இயற்கை துறைமுகம், பெற்றோலியம் போன்ற உலக வல்லரசை தீர்மானிக்கும் காரணிகளை ஒருமிக்க கொண்ட தனித்துவமானதும், தன்னிகரற்றதுமான அனுகூலமிக்க நாடு ஒன்றின் கைநழுவல் நிம்மதி இழக்க செய்வதில் சந்தேகம் ஒன்றும் இல்லை தான்.

ஆனாலும் அமெரிக்காவின் பக்கம் அதிஷ்டக் காற்று அடிக்காமலும் இல்லை. அந்த அதிஷ்டக்காற்று 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துடன் ஆரம்பிக்கின்றது. அதனடிப்படையில் நாட்டில் ஏற்பட்ட சிறுபான்மை மக்களின் அதிருப்தியால் மகிந்த அரசு வீட்டுக்கு செல்ல தொடர்ந்தும் ஆட்சியை கைப்பற்றிய கலப்பு அரசாங்கத்தில் அதிகாரமிக்கவராகவும், ஆட்சி மாற்றத்தில் பெரும்பங்கு வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவர்களின், ஜனாதிபதியை விஞ்சிய அதிகார வல்லமை பெறுதலுடன், பேரதிஷ்டக் காற்றாக உருவெடுத்தது அமெரிக்காவிற்கு. அது அதிஷ்டக்காற்றா இல்லை அமெரிக்காவின் சூழ்ச்சிகள் பலித்த நாளா என்று ஊகிக்க முடியாதுள்ளது. எனினும் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது எனவும் மேலும் ஆட்சி மாற்றத்திற்காக 73 மில்லியன் வரையில் அமெரிக்க அரசு செலவிட்டது என்றும் ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டது. எது எப்படியோ வெகு விரைவாக இலங்கை விடயத்தில் தன்னை உள்நுழைக்க விழைந்தது அமெரிக்கா.

அதாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சில சரச்சைக்குரிய சட்டமூலங்களை உருவாக்கி அதிகாரங்களை கையகப்படுத்தியதும் மிக வேகமாக தனது உறவுப்பாலத்தை மீள் கட்டுமானம் செய்ய முற்பட்ட அமெரிக்கா, முதற்கட்டமாக 2015.04.17 அன்று தனது நாட்டின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான USS Carl Vinson எனும் கப்பலை இலங்கையின் தென் கடற்பரப்பில் நிறுத்தியதுடன், அன்றய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர, அமைச்சர் பெளசி, பாதுகாப்பு செயலாளர் பஸ்நாயக்க மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் விமானம் மூலம் அக்கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

இந் நிகழ்வானது ஊடகங்களுக்கு கூட அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்படத்தக்கதாகும். அத்துடன் முன்னைய காலங்களில் ஒருபோதும் இலங்கை அமைச்சர்கள் அமெரிக்க கப்பல்களில் நுழைய அனுமதிக்கப்படவும் இல்லை. மொத்ததில் அது முழுவதும் இரகசியம் பேணப்பட்ட ஒரு பயணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து திருகோணமலை துறைமுகத்தில் பல்வேறுபட்ட இருதரப்பு இராணுவப் பயிற்சிகள் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் பல பயிற்சிகள் இரகசியமாகவே இடம்பெற்றது.

மேலும் இலங்கை கடற்படையை வலுவூட்ட பல கருவிகளையும் திருகோணமலை கடற்படையினருக்கு வழங்கியும் இருந்தது அவற்றில் அதிகமானவை கடற்கன்னிவெடிகளை அகற்றும் உபகரணங்களாகும் அத்துடன் இவை கரும்புலிகளின் அட்டகாசம் அதிகரித்த நேரங்களில் அல்லாது யுத்தம் முடிந்த பிற்பாடு வழங்கப்பட்டமையானது கேளிக்கையாகவும் சந்தேகத்திற்குரியதாகவுமே இருந்தது. மேலும் கடற் கன்னிவெடிகள் சமகாலத்தில் இலங்கையில் பாரிய பிரச்சினையாகவும் இருக்கவில்லை. அத்துடன் ஏக காலத்தில் கடற்படை கூட்டுப் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தின் போது ஒரு சிப்பாய் இறந்த பின்னரே அமெரிக்க- இலங்கை கூட்டுப்பயிறசிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறியக்கிடைத்தது. ஏன் இந்த ரகசியம் பேணப்படுகிறது எனும் சந்தேகம் இன்று வரை வினாக்குறியுடனே தொடர்கின்றது.

அன்று ஆரம்பித்த கப்பல்களின் வருகை இன்றுவரை அடிக்கடி வந்து செல்வதுடன் அவை பல நூறு மடங்குகளில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. நான் முன்னர் கூறியது போன்று இலங்கையின் உறவு தொடர்பில் சிந்திக்கும் அமெரிக்கா அது இராணுவ மயப்படுத்தப்பட்ட நட்புறவாக இருக்க வேண்டும் என்பதில் ஒரே இலக்காக இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக கடற்படை பயிற்சிகள், இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் நோக்கில் விமானப்படையின் கண்காணிப்பு விமானத்தில் நிகழ்நேர கண்காணிப்பு கருவிகளை பொருத்தல், கடலுக்கடியில் உள்ள வெடிபொருட்களை அகற்றும் தன்னியக்க கருவிகளை வழங்கள் மற்றும் திருகோணமலை கடற்பிராந்தியத்தின் நிலைகளில் அக்கறை கொள்ளல் போன்றவை எம்மை ஆழமாக சிந்திக்கவே தோன்றுகிறது.

இதற்கான காரணமும் இல்லாமல் இல்லை அதாவது இந்து சமுத்திர கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்தலும், அவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுவதற்கான முன்நகர்வுகளுமே இவை என்பதை தெளிவாக புலப்படுத்துகிறது.மேலும் 2014 களில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நிகழ்வுகளை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பகிரங்க முடிவாகவே பார்க்க முடிகிறது

இவ்வாறான உள் நோக்கங்களை தன்னகத்தே கொண்டு செயற்பட்ட அமெரிக்கா 2015 பிற்பட்ட காலங்களில் இடைவிடாது இலங்கைக்கு போர்க்கப்பல்களையும், நட்புறவு பயிற்சிக் கப்பல்களையும் சாரை சரையாக அனுப்பி வருவதை அவதானிக்க முடிகிறது அவற்றுள் 2016 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தில் மட்டும் USS Hopper எனும் ஏவுகணை கப்பல் உட்பட மூன்று நாசகார போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது. அத்துடன் குறித்த ஆண்டில் பல இரகசிய இராணுவ பயிற்சிகளையும் திருகோணமலையை அண்டிய காட்டுப்பகுதிகளில் அரங்கேற்றியது. அப்பயிற்சிக்காகவென 95 கப்பல்கள் இலங்கை வந்திருந்தன. அத்துடன் 2017 ஆம் ஆண்டில் ஏறத்தாள 32 வருடங்களுக்கு பின்னால் கொழும்பு துறைமுகத்திற்கு USS Nimitz எனும் விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் இணைந்து பல போர்க்கப்பல்கள் இலங்கை வந்திருந்தன. அவை யுத்த பயிற்சிகள் மாத்திரமன்றி நாட்டின் பல துறைகளிலும் தங்களை ஈடுபடுத்தி சென்றிருந்தாரகள். அதன் பிற்பாடு அதே ஆண்டில் USS Comstock எனும் கப்பல் கொழும்பு வந்தது. இவ்வாறு பல பயிற்சிகளை மேற்கொண்ட அமெரிக்கா 2018 ஆம் ஆண்டு USS John c stennis எனும் விமானந்தாங்கிக் கப்பல் இலங்கையில் தற்காலிக விநியோக தளம் ஒன்றை நிறுவியதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது. மற்றும் நடப்பு ஆண்டிலும் கூட கடந்த மாதம் USS Millinocket எனும் கப்பலானது கடல் சார் ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கை வந்துருந்தது.

எப்படியாயினும் கடல்சார் நட்புறவுகளையும் தாண்டி சமகாலத்தில் இலங்கையின் உள்ளக ராஜதந்திர நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்த வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு எழுந்துள்ளதை தர்க்க ரீதியாக நிரூபனம் செய்ய முடியும். அதாவது முன்னர் கூறியது போன்று மன்னார் பெற்றோலிய அகழ்வுகளுக்காக எமது நாட்டின் வளப்பற்றாக்குறையினை கருத்திற் கொண்டு ஏனைய நாடுகளிடம் இருந்து விலை மனுக்கள் கோரப்பட்டிருந்தது. அவற்றை இம்மாதத்துடன் முடிவுறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அண்மையில் அமைச்சர் கபீர் காசிம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அப்படியாயின் இன்னொரு நாட்டின் தலையீடு இலங்கைக்குள் உள்நுழையும் பட்சத்தில் அமெரிக்காவின் நிலை ஒரு உறைக்குள் இரு கத்திகளுக்கு இடமில்லை எனும் நிலையை ஒத்ததாக மாறும் அபாயம் உள்ளது.

ஆனாலும் இலங்கையின் அரசியல் நிலவரமோ சற்று திடகாத்திரமானது காரணம் பலம்பொருந்ததிய பொதுவுடமை சார்ந்த மகிந்த தரப்பு எதிர்கட்சி மற்றும் அமெரிக்காவை தமிழின எதிரியாக நோக்குகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளை தாண்டி ஒரு நாட்டின் இறைமைக்குள் தன்னை உட்புகுத்தல் என்பது சிறிதும் சாத்தியம் இல்லை என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.

எனவே தான் சடுதியாக இலங்கையின் சுயம் சார் விடயங்களில் தன்னை உட் புகுத்த சில சாதகமான உடனடிக் காரணிகளின் தேவை மேலெழுந்துள்ளது. எனவே இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை ISIS குழுவினர் தான் செய்தார்கள் எனும் கருத்து உண்மையாயின், நிச்சயமாக அங்கு அமெரிக்காவின் கைவரிசை இருக்கவே செய்யும். அத்தாக்குதல்களே, அவர்கள் நாட்டினுள் நுழைவதற்கான உடனடிக் காரணிகள். இக்கருத்தை வலுப்படுத்த குண்டுகள் வெடித்த கையோடு அமெரிக்காவின் அறிக்கைகளை ஒப்பிடும் பட்சத்தில் நன்குணர்ந்துகொள்ள முடியும்.

அதாவது குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற மறுகனமே அமெரிக்காவின் கருத்துக்களை பார்த்தால் அவை இரங்கள்களாகவும், அனுதாபங்களாகவும் அன்றி, FBI இனரை அனுப்ப நாங்கள் தயார், அமெரிக்க இராணுவம் இலங்கைக்கு விரைய தயார் நிலையில் உள்ளது இன்னும் CBI உறுப்பினர்களை இலங்கைக்கு உதவிக்காக அனுப்பி வைக்க தயார் என்ற பாணியில் தான் அவைகள் அமைந்திருந்தன. அத்துடன் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற கையோடு இலங்கைக்கு பெருந்தொகையாக பண உதவியையும் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்தது. இலங்கை புலிகளை அடக்கும் போது பார்வையாளராக இருந்த அமெரிக்கா இந்த விடயத்தில் முந்தியடித்துக் கொண்டதை மேற்கூறிய தர்க்கரீதியான காரணங்களுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து இந்த வெடிப்பு சம்பவங்களுடன் அமெரிக்காவின் நரிக்கலையின் பிரதிபலிப்பு 100% இருப்பதை தெளிவாக ஊகிக்க முடியும்.


முற்றும்.

ஹப்லுல்லாஹ் புஹாரி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com