Sunday, May 19, 2019

ஐரோப்பிய ஒன்றிய இராணுவ திட்டங்கள் சம்பந்தமாக பென்டகன் ஐரோப்பாவை அச்சுறுத்துகிறது. By Alex Lantier

ஒரு சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான திட்டங்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கும் இடையிலான நேட்டோ கூட்டணியின் பொறிவுக்கு இட்டுச் செல்லும் என்று அச்சுறுத்தி, மே 1 அன்று, அமெரிக்க பாதுகாப்புத்துறை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியது. பாதுகாப்புத்துறைக்கான அமெரிக்க துணை-செயலர்கள் ஏலன் லார்ட் மற்றும் ஆண்ட்ரியா தாம்சனால் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கை தலைவி பெடிரிகா மொஹிரினிக்கு அனுப்பப்பட்ட அக்கடிதம் ஸ்பானிஷ் நாளிதழ் El Pais க்கு கசியவிடப்பட்டது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் நகர்வுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைக் கோருவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்படாமலேயே வந்திருந்த போதே, மே 13 இல் அக்கடிதத்தை El Pais வெளியிட்டது.

ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தின் தொழில்நுட்ப பெயரான நிரந்தர கூட்டுறவு கட்டமைப்பு (PESCO - Permanent Structured Cooperation) என்பதை மேற்கோளிட்டு, “ஐரோப்பிய பாதுகாப்பு நிதி அமைப்புக்கான விதிமுறைகள் மற்றும் PESCO இன் பொது நிபந்தனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதன் மீது அமெரிக்கா ஆழமாக கவலை கொள்கிறது,” என்று அக்கடிதம் குறிப்பிடுகிறது. அக்கடிதம் தொடர்ந்து குறிப்பிடுகையில், "மூன்று தசாப்தங்களாக அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொழில்துறையின் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பில் ஒரு வியத்தகு பின்னடைவுக்கு" ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் இட்டுச் செல்வதாக குறிப்பிடுகிறது. அது "நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான தேவையற்ற போட்டியின்" அபாயம் குறித்து எச்சரித்தது.

“அமெரிக்கா போன்ற வெளியிலுள்ள நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் ஐரோப்பிய ஆயுத திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உள்நோக்கங்களைப் புரூசெல்ஸ் தொடருமேயானால், அரசியல் அல்லது வர்த்தக பழிவாங்கும் நடவடிக்கைகள் உண்டாவதற்கான அச்சுறுத்தல்கள் அப்பட்டமாகவோ அல்லது சற்று மூடிமறைத்தோ" அந்த "மிகவும் கடுமையான" கடிதத்தில் இருப்பதாக El Pais குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஆயுத அமைப்புமுறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மீது ஐரோப்பிய நிறுவனங்களின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்ற ஐரோப்பிய பாதுகாப்பு நிதி அமைப்பின் வழிவகைகளை பென்டகன் கடிதம் ஆட்சேபிப்பதுடன், ஆயுத ஒப்பந்தங்களில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களை நீக்குவதற்கு அதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் பென்டகன் அச்சுறுத்துகிறது. “இதேபோன்று எதிர்முனையிலிருந்து அமெரிக்க கட்டுப்பாடுகள் திணிக்கப்படுவதை நமது ஐரோப்பிய பங்காளிகளும் கூட்டாளிகளும் வரவேற்க மாட்டார்கள் என்பது தெளிவானது, அவை குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று குறிப்பிட்டது.

அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத 2003 ஈராக் படையெடுப்பை பேர்லின் மற்றும் பாரீஸ் தலைமையிலான ஐரோப்பிய சக்திகள் எதிர்த்தபோது வெடித்த மோதல்களைச் சுட்டிக்காட்டி, அக்கடிதம் குறிப்பிடுகையில், தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய திட்டங்கள் "நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஆக்கபூர்வமான உறவுகளைப் பாதிக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக ஐரோப்பிய பாதுகாப்பு முன்முயற்சிகள் மீது 15 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட நமது ஒப்பந்தங்களில் மேலோங்கி இருந்த பதட்டமான விவாதங்களையும் சாத்தியமானளவில் மீட்டுயிர்ப்பிக்கக்கூடும்,” என்று குறிப்பிடுகிறது.

அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணியின் முறிவு குறித்த அச்சுறுத்தல்களை ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள் எந்தளவுக்கு தீவிரத்தன்மையுடன் எடுத்துக் கொண்டன என்பதை சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான இலண்டன் சிந்தனைக் குழாம் (International Institute of Strategic Studies – IISS) இவ்வாரம் வெளியிட்ட ஓர் ஆய்வில் பிரதிபலித்தது. “ஐரோப்பாவை பாதுகாப்பதில்: நேட்டோவின் ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ற தகைமை அவசியப்படுகிறது" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கை, அமெரிக்கா அந்த கூட்டணியை விட்டொழித்தால் நேட்டோவின் இராணுவ தகைமை அளவுக்கு மறுகட்டமைப்பு செய்ய ஐரோப்பாவுக்கு ஆகும் செலவுகளை மதிப்பீடு செய்திருந்தது. அந்த ஆவணம் பாரியளவில் 110 பில்லியன் டாலர் கடற்படை கட்டமைப்புக்கும் மற்றும் ரஷ்யாவுடன் ஒரு போருக்குத் தயாராக 357 பில்லியன் டாலருக்கும் அழைப்பு விடுத்தது.

இத்தகைய ஆவணங்கள் வெளியாவது, தசாப்தங்களாக உலக முதலாளித்துவத்தின் சர்வதேச உறவுகளை ஆட்கொண்டிருந்த கூட்டணிகள் மற்றும் ஏற்பாடுகளின் பொறிவு முன்னேறிய நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவ செலவுகள் மற்றும் நடவடிக்கைகளை பெரியளவில் தீவிரப்படுத்துவதற்கான அவற்றினது திட்டங்களை, நேட்டோவுக்கு உதவியாக உத்தேசிக்கப்பட்ட குறைநிரப்பும் நடவடிக்கையாக சித்தரிக்கும் அவற்றின் முயற்சிகளாக அந்த ஆவணம் முன்வைக்கிறது. பென்டகனோ அந்த திட்டங்களை, அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே நடந்த இரண்டு உலக போர்களுக்குப் பின்னர் 1949 இல் ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டணிக்கு போட்டியாக ஐரோப்பிய ஒன்றியத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறது.

ஈரான் உடனான போருக்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் துருப்புகளை நிலைநிறுத்துவதற்கு, அமெரிக்காவுக்கு ஈரானின் இராணுவ அச்சுறுத்தல் என்ற ஆதாரமற்ற மற்றும் நம்பவியலாத குற்றச்சாட்டுக்களை வாஷிங்டன் நியாயப்படுத்துகையில், அதன் அடியிலிருக்கும் மூலோபாய நோக்கம் அந்த எண்ணெய் வளம் மிகுந்த பிரதேசத்தையும் கடந்து செல்கிறது. வாஷிங்டன் மத்திய கிழக்கு மற்றும் யுரேஷியாவில் தேய்ந்து வரும் அதன் இராணுவ மேலாதிக்கத்திற்காக மட்டும் ஒரு வெறித்தனமான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கவில்லை. அதன் பெயரளவிலான ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட அதன் வல்லரசு போட்டியாளர்களிடம் இருந்து வரக்கூடிய சவாலின் அபாயத்தை நீக்குவதும் அதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

மாலியில் பிரெஞ்சு-ஜேர்மன் ஆக்கிரமிப்பு போன்ற இரத்தந்தோய்ந்த சூறையாடல் போர்களை நடத்துவதற்கும் மற்றும் அவற்றின் இராணுவங்களுக்கும் ஐரோப்பிய சக்திகள் பில்லியன் கணக்கான யூரோக்களைப் பாய்ச்சுகின்ற நிலையில், ஐரோப்பாவில் கட்டமைக்கப்படும் பாரியளவிலான இராணுவ ஆயத்தப்பாடானது, இத்தகைய மோதல்களின் வர்க்க இயல்பை அடிக்கோடிடுகின்றன. இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கு நிதி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு மத்தியில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே உலகப் பொருளாதார கொள்ளைகளை பங்கிட்டு கொள்வதன் மீதான போட்டாபோட்டி கடுமையாக உள்ளது.

ஈராக்கில் இருந்திராத பாரிய பேரழிவு ஆயுதங்கள் (WMD) குறித்த பொய்களைக் கொண்டு நியாயப்படுத்தி ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான 2003 சட்டவிரோத படையெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையில் பேர்லின், பாரீஸ் மற்றும் மாஸ்கோ எதிர்த்த போதே, வாஷிங்டன் அவற்றுக்கு இடையே ஒரு தற்காலிக கூட்டணியைக் கண்டது. இப்போதோ வாஷிங்டனின் சார்பாக ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தைத் தடுப்பதற்கான வீட்டோ அதிகார சக்தியை பிரெக்ஸிட் இலண்டனிடம் இருந்து பறித்து விட்டிருக்கும் நிலையில், இந்த மோதல்கள் பரந்தளவில் தீவிரப்பட்டுள்ளது. இராணுவச் செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக அதிகரிக்க அனைத்து நேட்டோ அதிகாரங்களும் உடன்பட்டிருக்கின்றன என்ற மூடிமறைப்பின் கீழ், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கும் இடையே மூலோபாய மற்றும் வர்த்தக போட்டிகள் தொடர்ந்து அதிகரிக்க உள்ளன.

மே 13 இல், அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ் மற்றும் ஜெனி ஷாஹீன், ரஷ்யா மற்றும் ஜேர்மனியை இணைக்கும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டத்தில் செயல்பட்டு வருகின்ற ஐரோப்பிய மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் மீது தடைவிதிக்க இருகட்சிகள் சார்பாக சட்டமசோதா அறிமுகப்படுத்தினார்கள். ஐரோப்பிய அணுகுமுறைகளுக்கு விரோதமாக பயன்படுத்தி வாஷிங்டன் முன்னதாக ஈரான் மற்றும் ரஷ்யாவை இலக்கில் வைக்க பயன்படுத்திய அந்த மசோதா, அக்குழாய் அமைப்பு திட்டத்தைக் கட்டமைக்கும் நிறுவனங்களின் ஸ்தூலமான சொத்துக்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்கலாக அதன் மீதான நிதியியல் பரிவர்த்தனைகள் மற்றும் அதைச் சார்ந்த பயணங்கள் மீது தடை விதிக்கக்கூடியதாகும். அந்த குழாய் அமைப்பு திட்டத்தை ட்ரம்ப் கடந்தாண்டு சாடியிருந்தார். ஜேர்மனியின் BASF, பிரிட்டிஷ்-டச் ராயல் டச் ஷெல், மற்றும் பிரான்சின் ENGIE உள்ளடங்கிய நிறுவனங்கள் இலக்கில் வைக்கப்படலாம்.

ஒரு பரந்த யுரேஷிய உள்கட்டமைப்பு திட்டமான பெய்ஜிங்கின் பாதை ஒருங்கிணைப்பு திட்டத்தை (BRI) ஆமோதித்த இத்தாலி அமெரிக்காவின் ஆட்சேபணை இருந்த போதும் மார்ச்சில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திட்ட பின்னர், சீனா உடனான ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் சம்பந்தமாகவும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வாஷிங்டன், அப்போதிருந்து, ஜேர்மனி மற்றும் பிரிட்டன் அவற்றின் தொலைதொடர்பு வலையமைப்பைக் கட்டமைப்பதில் சீன நிறுவனமான ஹூவாயை அனுமதிப்பதற்காக உளவுத்தகவல் கூட்டுறவை நடவடிக்கைகளை நிறுத்தி அவற்றை அச்சுறுத்தி உள்ளது.

அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் நிர்வாகம் 2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகி ஈரான் மீது அமெரிக்க தடையாணைகளை மீண்டும் திணித்ததால், இது ஐரோப்பிய எண்ணெய் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் ஈரானில் கையெழுத்திட்டுள்ள பல பில்லியன் டாலர் உடன்படிக்கைகளைக் குறுக்காக வெட்டுகின்ற நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளால் அப்போதிருந்தே கடுமையான மோதல் தூண்டிவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ஈரானுக்கு எதிராக வாஷிங்டனுக்காக இலண்டனின் ஆதரவைக் கோர பொம்பியோ பிரிட்டனுக்கு விஜயம் செய்த பின்னர், "அதிஅவசர பிரச்சினைகளை" மேற்கோள்காட்டி, பேர்லினுக்கான விஜயத்தை திடீரென இரத்து செய்தார், அதற்கு பதிலாக அவர் பாக்தாத் விஜயம் செய்தார். அங்கே, அமெரிக்க எண்ணெய் உடன்படிக்கைகளை ஊக்குவித்ததுடன், 2003 போருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட ஈராக்கிய கைப்பாவை அரசிடம் குற்றஞ்சாட்டப்படும் ஈரானிய அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க நலன்களைப் பாதுகாக்குமாறு கோரினார். பொம்பியோ பேர்லினை அலட்சியம் செய்ததைக் குறித்து ஜேர்மனியின் Süddeutsche Zeitung குறிப்பிடுகையில், “நீண்டகாலமாக ஜேர்மன்-அமெரிக்க நட்புறவு என்று புகழப்பட்டு வந்ததில் பெரும்பகுதி இப்போது சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கிறது,” என்று எழுதியது.

அதேபோல, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை அமெரிக்கா முறித்ததைக் குறித்து குறைகூறினார். கடந்த வாரம் ரோமானியாவில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஒன்றில் மக்ரோன் கூறுகையில், “முதலாவதாக, இந்த உடன்படிக்கையில் இருந்து ஈரான் வெளியேறவில்லை. இரண்டாவதாக, ஈரான் இந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறினாலும், அதுவும் அமெரிக்காவின் பொறுப்பாக தான் இருக்கும்,” என்றார்.

ஈரானை அச்சுறுத்துவதற்காக பாரசீக வளைகுடாவுக்கு சென்று கொண்டிருக்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல் அப்ரகாம் லிங்கன் நங்கூரமிட்டிருந்த அமெரிக்க தலைமையிலான கப்பற்படை போர்க்குழுவில் இருந்து, நேற்று, ஸ்பெயின் அதன் சிறிய போர்க்கப்பலான Méndez Núñez விலக்கிக் கொண்டது. ஸ்பானிய பாதுகாப்புத்துறை அமைச்சர் Margarita Robles சாந்தமாக குறிப்பிட்டார்: “ஸ்பெயின் ஒருபோதும் உடன்பட்டிராத ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்காக விமானந்தாங்கி போர்க்கப்பல் அப்ரகாம் லிங்கனை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்ப வட அமெரிக்க அரசு உத்தேசிக்கிறது என்றால், நாங்கள் தற்காலிகமாக அந்த போர் குழுவிலிருந்து விலகிக் கொள்கிறோம்,” என்றார்.

ஈரானுக்கு எதிராக அந்த கடற்படை போர்க்குழு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் என்ற நிஜமான அச்சங்களைச் சுட்டிக்காட்டி மாட்ரிட் ஒரு நகர்வு எடுத்திருந்தாலும் கூட, அந்த முடிவை குறைத்துக் காட்டவும் மற்றும் மக்களிடம் இருந்து அதன் முக்கியத்துவத்தை மறைக்கவும் முனைந்தது. ஸ்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் பொரெல் கூறுகையில் இந்த சம்பவம் சம்பந்தமாக மாட்ரிட்டிடம் இருந்து வாஷிங்டனுக்கு "உத்தியோகபூர்வ குறைகூறல் எதுவும் இல்லை" என்று தெரிவித்ததுடன், “இது நிறைய கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை இல்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com