Tuesday, May 21, 2019

சஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளின் மூலம் அவர்கள் யாவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விபரங்களை அவர் ஊடகங்களுக்கு அறிவிக்கையில் :

கொழும்பு சின்னமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் எனவும், ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் மொஹமட் இப்ராஹிம் ஹில்ஆம் அஹமட் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இப்ராஹிம் என்பவரின் மகன்மார்களாவர்.

இவர்கள் இருவருடைய மரபணு மாதிரிகளும் இப்ராஹிம் என்பவரின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியது அச்சி மொஹமது மொஹமது அஸ்துன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தற்கொலைக் குண்டுதாரியின் பெற்றோர்களின் குருதி மாதிரிகளைப் பெற்று மரபணு சோதனை நடத்தப்பட்டதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த அலாவுதீன் அஹமட் முவாதினின் மரபணுவும் அவருடைய பெற்றோர்களின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளன.

இதேவேளை, தெஹிவளையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய அப்துல் லதீப் ஜமில் மொஹமட் என்பவருடைய மரபணு சோதனை அவரின் பிள்ளையின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொஹமட் நசார் மொஹமட் அசாத் என்பவரே மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்குள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது அவரின் தாயாரின் மரபணு சோதனையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என்பது அவருடைய மனைவி மற்றும் பிள்ளையின் மரபணு சோதனையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தெமட்டகொட பகுதியில் தற்கொலை குண்டை வெடிக்கச்செய்த பெண், ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் ஹில்ஆம் என்பவரின் மனைவி மொஹமட் பாத்திமா ஜிப்ரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெமட்டகொட வீட்டில் தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்த மூன்று பிள்ளைகளும் இவர்களுடையவை என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான் என்பது மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் அவருடைய பிள்ளையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட குருதி மாதிரிகளூடாக மரபணு சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com